மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பொறியியல் கல்லூரிகளை இவ்வுலகம் காப்பாற்றுமா?

ஆச்சாரி

Jul 26, 2014

poriyiyal2இன்றைய கல்வி யுகத்தில் தற்போது ஒரு படிப்பிற்கு எவ்வளவு செலவு செய்து படிக்கலாம்? படித்து முடித்த பின் எவ்வளவு சம்பாதிக்கலாம்? என்ற தொலைநோக்குச் சிந்தனையுடன் மட்டுமே இன்று பிள்ளைகளை பெற்றோர் படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். இன்று இங்கு எந்த மாணவர்களையும் அவர்கள் விருப்பத்திற்கேற்ப படிக்க வைப்பதே கிடையாது. பெற்றோர்கள் தங்களின் சொந்த விருப்பத்தை, எதிர்கால கனவுகளை தங்களின் பிள்ளைகள் தலையில் சுமத்தி அழகு பார்ப்பதே அன்றாட வாழ்க்கையாக்கிக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில் இன்று சாதாரணமாக உள்ள பெற்றோர்கள் கூட “என் பிள்ளைகள் கலெக்டராக வேண்டும்,மருத்துவராக வேண்டும்,பொறியியல் வல்லுனராக ஆக வேண்டும்” என்று கூறுகிறார்களே ஒழிய நல்ல மனிதனாக வேண்டும் என்று எவரும் விரும்புவதில்லை. அதனால் அன்று பொறியியல், மருத்துவம் படிப்பதற்கு மாணவர்கள் அலைமோதிய காலம் போய் பொறியியல் படிப்பைத் தவிர்த்து மருத்துவத்தில் மாணவர்கள் சேர்க்கை அதிகம் நடக்கிறது. இதற்கு என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை பெருகியும்,மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கை சுருங்கியும் இருப்பது ஒரு காரணம். மேலும் பொறியியல் படித்தவர்களுக்கு இங்கு போதிய வேலைவாய்ப்பு இல்லாததும் ஒரு காரணமாகும்.

poriyiyal3பொறியியல் அறிவால்தான் நாடு வளர்ச்சி பெறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் பொறியியல் படிப்பில் குவிந்த மாணவர் கூட்டம், இந்த கல்வியாண்டில் இல்லை. இதற்கு சான்றாக கடந்த 23-ஆம் தேதி பி.இ கலந்தாய்வுக்கு 15 நாட்களில் 23 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை. இதனால் 1,25,000 இடங்கள் காலியாக வாய்ப்பு இருக்கிறது. இதில் 100க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட வந்து சேரவில்லை என்ற திடுக்கிடும் உண்மைச் செய்தி நடப்பு நிலவரத்தை நமக்கு எடுத்துக் கூறுகிறது. தற்போது பொறியியல் படிப்பில் 2 லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதற்கு ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர். கல்லூரிகளில் உள்ள இடங்களை விட 43 ஆயிரம் பேர் குறைவாகவே விண்ணப்பித்து இருக்கின்றனர். மேலும் பொறியியல் கல்லூரிகளின் மோகம் குறைந்து வருவதால் பெரும்பாலான மாணவர்கள் அறிவியல் கல்லூரிகளின் பக்கம் திரும்பி விட்டனர்.

பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ்,பி.சி.ஏ போன்ற பட்டப்படிப்புகள் 3 ஆண்டுகள் படிப்பதற்கு ஒரு லட்சத்திற்கு குறைவாகவே செலவாகிறது. ஆனால் பொறியியல் கல்லூரிகளில் 4 ஆண்டுகள் படித்து முடிக்க குறைந்தது ரூ 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை செலவாகிறது. அப்படியே அதிகச் செலவு பிடித்தாலும் வேலையும் கிடைப்பதில்லை.

ஆனால் பி.ஏ,பி.எஸ்.சி,பி.காம் போன்ற கலை அறிவியல் பாடப் பிரிவுகளை தேர்வு செய்து குறைந்த செலவில் படித்தால் ஏதாவது ஒரு போட்டித் தேர்வு எழுதி அரசுப் பணிகளுக்கு செல்ல முடியும். பட்டப்படிப்பு பி.எட் ஆசிரியர் பயிற்சி ஓராண்டு படித்தால் ஆசிரியர் பணிக்கு தேர்வு வாரியம் மூலம் செல்லலாம். குறைந்த செலவில் எளிதாக வேலை வாய்ப்பினை பெரும் சூழல் இருக்கும் நிலை இருப்பதால் பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் தயக்கம் காட்டுகிறார்கள். அதனால் இந்த வருடம் காலி இடங்கள் அதிகளவு ஏற்படும் நிலை உள்ளது.

poriyiyal4இதுவரை பொறியியல் படிப்பிற்கென நடந்த கலந்தாய்வு மூலம் 100க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் ஒருவர் கூட சேரவில்லை. இதனால் ஒரு சில தனியார் கல்லூரி நிர்வாகம் கவலை அடைந்துள்ளது. சிறந்த கட்டமைப்பு,தகுதியான ஆசிரியர்கள்,பரிசோதனைக் கூடங்கள் இருக்கும் கல்லூரிகளில் மட்டுமே சில மாணவர்கள் சேருகின்றனர். 150 கல்லூரிகளில் 10க்கும் குறைவான மாணவர்களை சேர்த்துள்ளனர். தனியார் பொறியியல் கல்லூரிகளில் தங்கும் விடுதி மற்றும் சாப்பாட்டுக் கட்டணம் என அதிகளவு வசூலிக்கப்படுகிறது. இதனால் கிராமப்புற மாணவ- மாணவிகள் தங்களுக்கு அருகில் உள்ள கல்லூரிகளை தேர்வு செய்கின்றனர். தினமும் கல்லூரிக்குச் சென்று வீடு திரும்புவதை விரும்புகின்றனர். தற்போது தமிழகத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை குறைந்து வரும் இந்த நேரத்தில் நம் அரசு இன்னும் இரண்டு ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள் உட்பட 54 அரசு கல்லூரிகள் தொடங்க முதல்வர் ஏற்பாடு செய்து 214 கோடி இதற்கு நிதி ஒதுக்கியுள்ளார். இங்கு இருக்கின்ற கல்லூரிகளிலேயே ஈ ஆடும் போது இனி வரப்போகும் கல்லூரிகளில் என்ன ஆடப்போகிறது என்றே தெரியவில்லை.

இந்தியாவில் மொத்தமாக இருக்கும் பொறியில் கல்லூரிகளில் சுமார் 15% தமிழகத்தில் இருக்கின்றனர். இந்தியா முழுவதும் 3241 பொறியியல் கல்லூரிகளில் தமிழகத்தில் மட்டும் 486 கல்லூரிகள் உள்ளன. தற்போதைய கல்வியாண்டில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் சில பிரபலமான கல்லூரிகளைத் தவிர பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டும் வருகின்றன.

பொறியியல் படிப்பிற்கு மாற்றாக இன்றைய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதை அதிக ஆர்வம் கொண்டு படிப்பில் இணைந்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் எம்.பி.பி.எஸ்,பி.டி.எஸ் படிப்பிற்கு கலந்தாய்வு நடந்தது.

poriyiyal7சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருந்த 150 எம்.பி.பி.எஸ் இடங்கள்,சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 44 பி.டி.எஸ் காலியிடங்கள்,சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் 148 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ் இடங்கள் என மொத்தம் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் மாணவர்கள் இணைந்துள்ளனர். எனவே தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள்,சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ் இடங்கள் என அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டன.

இதற்கு மாறாக போதிய மாணவர் சேர்க்கை இல்லாத கல்லூரி நிர்வாகங்கள் புலி வாலைப் பிடித்த கதையாக இதைச் சமாளிக்க என்ன செய்வது என்ற இக்கட்டான நிலையில் தவித்து வருகின்றது. இச்சூழலில் பொறியியல் கல்வி உலகத்தைக் காப்பாற்றும் என்பது உண்மைதான். ஆனால் பொறியியல் கல்லூரிகளை இந்த உலகம் காப்பாற்றுமா என்பதுதான் தெரியவில்லை.

Even so, this book, it should be clear, is about much more than order essay getting the right words and grammatical forms into the right places

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பொறியியல் கல்லூரிகளை இவ்வுலகம் காப்பாற்றுமா?”

அதிகம் படித்தது