மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திரைகடலோடிய தமிழ்ச்செல்வங்கள்

ஆச்சாரி

Jul 26, 2014

இந்தியக் கலைப்பொருட்களும் சிற்பங்களும் பல வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் இடம் பெற்றுள்ளன. பின்னர் அவற்றில் சில அத்துமீறி சட்டத்திற்குப் புறம்பாக கடத்தப்பட்டவை என்பதும் தெரிய வருகிறது. பிறகு இரு அரசுகளும் பேச்வார்த்தைகளின் மூலம் தீர்வு கண்டு சிலை முறையற்ற வழியில் கடத்தப்பட்டதே என்பது ஆதாரபூர்வமாக உறுதியானால், சர்ச்சைக்குள்ளான அக்கலைப்பொருள் காட்சியில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது.

பிற நாட்டு அருங்காட்சியகங்களில் நம் நாட்டு கலைப்பொருட்கள் இருந்தாலும் அதை நாம் சென்று பார்த்து மகிழும் வாய்ப்புகள் நமக்குக் குறைவு. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியும், தொலைத்தொடர்பு முறையும் முன்னேறிவிட்ட இக்காலத்தில் இக்குறை நீக்கப்பட்டுள்ளது. பல உலகப்ப்புகழ் பெற்ற அருங்காட்சியகங்கள் தங்களிடம் உள்ள கலைப்பொருட்களை மிகத் தெளிவான படங்களாக எடுத்து, அந்த கலைப்பொருட்களைப் பற்றிய தகவலையும் இணைத்து தரவுகளாக உருவாக்கி வைத்துள்ளன. நாமும் நம் கணினி மூலம் இணைய வழியாக அந்த அருங்காட்சியகத்தின் இணையதளத்தில் தேடி அவைகளைக் கண்டு மகிழலாம். ஒருவகையில் இது சற்றே குறைதீர்க்கும் வழிதான் என்றாலும் நேரில் காண்பது போல இருக்காது.

நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டெர்டாம் நகரில் உள்ள தேசிய அருங்காட்சியகமான “ரைய்க்ஸ் மியுசியம்” [டச்சு மொழி உச்சரிப்பு] (Rijksmuseum of Netherlands in Amsterdam, Netherlands; in English Rijksmuseum means State Museum) பல இந்தியக் கலைப்பொருட்களை பார்வைக்கு வைத்துள்ளது. இவைகளைப் பற்றிய தகவல்களும் அருங்காட்சியகத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது (https://www.rijksmuseum.nl/).

நெதர்லாந்து நாட்டின் தேசிய அருங்காட்சியகங்கள் பல உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் வகையில் சிறப்பு பெற்றவை. ஆம்ஸ்டெர்டாம் நகரில் “ரைய்க்ஸ் மியுசியம்” கலைக்கும் வரலாற்றிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவ்வகைப் பொருட்களை உள்ளடக்கியது. பிரெஞ்சு நாட்டின் “லூர்வ்” (The Louvre) என்ற அரச அருங்காட்சிகத்தைப் போலவே தங்கள் நாட்டிற்கும் ஒரு தேசிய அருங்காட்சியகம் உருவாக்க விரும்பிய நெதர்லாந்து அரசு, 18 ஆம் நூற்றாண்டு வாக்கில் திட்டமிட்டு, 1800 ஆம் ஆண்டில் துவக்கபட்டது இந்த அருங்காட்சியகம். முதலில் ஓவியங்கள் மட்டுமே கொண்டிருந்த இந்த அருங்காட்சியகம் பிற்காலத்தில் பலவகை கலைப் பொருட்களையும் சேகரிக்கத் தொடங்கியது. பல மன்னர்கள் இதன் வளர்ச்சிக்கு ஏற்ப பல கட்டடங்களுக்கு அருங்காட்சியகத்தை மாற்றிய பின்னர், தேவையின் பொருட்டு ஒரு தனிக்கட்டட்டம் கட்டப்பட்டு, தற்பொழுது இருக்கும் இடத்தில் 1885ஆம் ஆண்டு முதல் இயங்கி வருக்கிறது.

அருங்காட்சியகம் கொண்டுள்ள கலைப்பொருட்களில் உலகின் பல்வேறு நாடுகளின் கலைப்பொருட்களும் அடங்கும். “ரெம்பிரான்ட்” (Rembrandt), ஃபிரான்ஸ் ஹால்ஸ் (Frans Hals), and “யோஹான்னெஸ் வெர்மீர்”Johannes Vermeer” போன்ற புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. சேகரிப்பில் உள்ள ஒரு மில்லியன் கலைப்பொருட்களின் காலம் பொது ஆண்டு 1200 – 2000 வரை ஆகும். இவற்றில் 8,000 கலைப்பொருட்கள் அரங்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. “ஏஷியன் பெவிலியன்” (Asian pavilion) என்ற தனிப்பகுதியில் ஆசிய கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

“ரைஸக்ஸ் மியுசியம்”இணையதளத்தின் தேடுபொறியில் “தமிழ்” (Tamil) என்ற சொல்லில் தேடினால் (https://www.rijksmuseum.nl/en/search?q=tamil&f=1&p=1&ps=12&imgonly=True) கிடைக்கும் ஒன்பது கலைப்பொருட்களைப் பற்றிய படங்களும் தகவல்களும் தொகுத்து இங்கே வழங்கப்படுகிறது. இவற்றில் எட்டு உலோகம், கல் மற்றும் மரம் கொண்டு படைக்கப்பட்ட   தமிழகச் சிலைகள். மரப்பலகையில் செதுக்கப்பட்ட இலங்கையில் இருந்து பெறப்பட்ட சிற்பம் ஒன்றும் இணையத்தேடல் வழியாகக் கிடைக்கிறது. இந்த இலங்கையின் மரச் சிற்பத்தில் தமிழ் எழுத்துக்களில் “சங்கரமூர்த்தி ஆசாரி” என்று சிற்பத்தினைச் செதுக்கிய சிற்பியின் பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பு: சிலைகளைப் பற்றிய தகவலாக இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டக் குறிப்புகள் அருங்காட்சியகத்தின் அதிகாரபூர்வமான குறிப்புகளின் மொழிபெயர்ப்பு.

0-rijksmuseum tamil

[1] சிவா நடராஜன்:

ஆக்கவும் அழிக்கவும் திறன் கொண்ட, சக்திவாய்ந்த சிவன் ஆனந்தத் தாண்டவமாடும் நடராஜர் உருவில் தோற்றமளிக்கிறார். அழகிய வேலைப்பாடுகளுடன் வெண்கலத்தில் வடிக்கப்பட்ட இந்த நடராஜர் சிலை விழாக்காலங்களில் உலா செல்லும் உற்சவமூர்த்தியாகும். இச்சிலையைச் சுமந்து செல்ல சிலையின் அடியில் உள்ளபீடத்தில் உள்ள வளையங்களின் வழியே கழிகளை நுழைக்கத் துளைகள் உள்ளன. நடராஜரின் காலடியில் அவர் அறியாமையை அழிப்பதை உணர்த்த அறியாமையின் குறியீடான குள்ள அரக்கனை மிதித்து நடனமாடுவதாகக் காட்டப்பட்டிருக்கிறது. அழல் சூழ்ந்த அண்டத்தில் நடனமாடுவதைக் குறிக்கும் வகையில், நான்கு கைகளையும், விரிந்து பரந்த சிகையலங்காரத்துடன் ஒற்றைக்காலைத் தூக்கி சிவன் நடனமாடுவதாகக் காட்டினாலும்   சமநிலையில் இருக்கும் வகையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

1-rijksmuseum tamil

தலைப்பு: சிவா நடராஜன் (Shiva Nataraja)

அடையாள எண்: AK-MAK-187

ஆக்கப் பொருள்: வெண்கலம்

அளவுகள்: h 153.0cm × w 114.5cm.

கலைஞர்: அறியக்கூடவில்லை

காலம்: 1100 – 1200

இடம்: தமிழ்நாடு

உரிமம்: பொதுவுடமை (Public domain)

மாறா இணையச்சுட்டி: http://hdl.handle.net/10934/RM0001.COLLECT.677

[2] அரக்கனைக் கொல்லும் துர்க்கை:

மரத்தேரின் ஒரு பகுதியான இருக்ககூடும் என நம்பப்படும் அரக்கனைக் கொல்லும் துர்க்கை கடவுளின் புடைப்புச் சிற்பம்

2-rijksmuseum tamil

தலைப்பு: அரக்கனைக் கொல்லும் துர்க்கை (Durga killing a demon)

அடையாள எண்: AK-RAK-1987-9

ஆக்கப் பொருள்: மரம்

அளவுகள்: w 25.5 cm × d 15 cm

கலைஞர்: அறியக்கூடவில்லை

காலம்: c. 1750 – c. 1800

இடம்: தமிழ்நாடு

உரிமம்: பொதுவுடமை (Public domain)

மாறா இணையச்சுட்டி: http://hdl.handle.net/10934/RM0001.COLLECT.914

 

[3] பிறைசூடிய சிவன்:

வலது கையினால் ‘அச்சம் தவிற்க’ என்ற அபய முத்திரையையும், இடது கரத்தினால் ‘அருள் வழங்கும்’ வரத முத்திரையையும் காட்டும் சிவன், மற்ற இரு பின்கரங்களிலும் மானையும் மைழுவையும் ஏந்தி இருப்பதாக இச்சிலை வடிக்கப்பட்டுள்ளது. மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருக்கும் ஈசனின் சிலைகள் தென்னிந்தியாவில் மட்டுமே காணப்படும்.

3-rijksmuseum tamil

தலைப்பு: பிறைசூடிய சிவன் (Shiva with the Moon in his Hair)

அடையாள எண்: AK-MAK-1291

ஆக்கப் பொருள்: வெண்கலம்

அளவுகள்: h 40 cm × w 24 cm × d 10.5 cm

கலைஞர்: அறியக்கூடவில்லை

காலம்: c. 1000 – c. 1200

இடம்: தமிழ்நாடு

உரிமம்: பொதுவுடமை (Public domain)

மாறா இணையச்சுட்டி: http://hdl.handle.net/10934/RM0001.COLLECT.910

 

[4] நந்தி:

பலதெய்வ வழிபாடுடைய இந்து மதத்தில் தெய்வங்கள் தங்கள் பண்புகளை ஒத்த விலங்குகளை ஊர்திகளாகக் கொண்டிருப்பர். சிவனின் ஊர்தியான காளை சிவனின் ஆற்றலையும் ஆண்மையையும் குறிக்கும் ஊர்தியாகும். கடவுளை சுமக்கும் நந்தி அந்த தகுதியைக் காட்டும் வகையில் மிக அழகாக அலங்கரிக்கப் பட்டிருப்பதாக இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. சாம்பல் வண்ண மணற்பாறையில் செதுக்கப்பட்ட இந்த நந்தி, கோயிலில் மூலவரை நோக்கி சிறுமண்டபத்தில் இருப்பதாக அமைக்கப்பட்டிருந்திருக்கலாம்.

4-rijksmuseum tamil

தலைப்பு: நந்தி (Recumbent bull)

அடையாள எண்: AK-MAK-520

ஆக்கப் பொருள்: மணற்பாறை (sandstone)

அளவுகள்: h 63.0cm × w 64.0cm × d 29.0cm × w 140kg.

கலைஞர்: அறியக்கூடவில்லை

காலம்: 1000 – 1100

இடம்: தமிழ்நாடு

உரிமம்: பொதுவுடமை (Public domain)

மாறா இணையச்சுட்டி: http://hdl.handle.net/10934/RM0001.COLLECT.2190

[5] கணேசா :

வெற்றியைத்தரும் கணேசர் மிகவும் புகழ் பெற்ற இந்துக்கடவுளும், கோயிலில் நுழையும் பொழுது முதலில் வணங்கப்படும் கடவுளுமாவார். எச்செயலையும் செய்யும் முன்னர் அவர் வணங்கப்படுவார், காட்டாக பயணம் அல்லது வணிகம் போன்றவைகளைத் துவக்கும் பொழுது அவரை வணங்கிவிட்டே அவை தொடங்கப்பெறும். கணேசரின் கையில் உள்ள மோதகம் அவரது அடங்காப்பசியையும் நல்வாய்ப்பையும் குறிக்கும். அவரது வலது காலடியில் அவரது ஊர்தியான மூஞ்சுறு காட்டப்பட்டுள்ளது. ஒரு சதுர மேடையில் இரட்டைத்தாமரை இருக்கையில் அமர்ந்திருக்கும் கணேசர், தனது நான்கு கரங்களில் அவரது வழக்கமான கொழுக்கட்டை, அவருடைய உடைந்த தந்தம், பாசக்கயிறு, மழுஆயுதத்துடனும் அவருக்கே உரிய சிறப்புமிக்க மகுடமணிந்த யானைத் தலையுடனும், அவரது வழக்கமான அணிகலங்களுடனும் காட்சி அளிக்கிறார்.

5-rijksmuseum tamil

தலைப்பு: கணேசா (Ganesha)

அடையாள எண்: AK-RAK-2013-1

ஆக்கப் பொருள்: வெண்கலம்

அளவுகள்: h 9.5cm.

கலைஞர்: அறியக்கூடவில்லை

காலம்: c. 1600 – c. 1699

இடம்: தமிழ்நாடு

உரிமம்: பொதுவுடமை (Public domain)

மாறா இணையச்சுட்டி: http://hdl.handle.net/10934/RM0001.COLLECT.519080

 

[6] இராமருக்கு முடிசூட்டும் விழா :

[குறிப்பு: இச்சிலையைப் பற்றிய குறிப்புகள் எதையும் அருங்காட்சியகம் வழங்கவில்லை. ]

6-rijksmuseum tamil

தலைப்பு: இராமருக்கு முடிசூட்டும் விழா (Relief with a depiction of the enthroned King Rama)

அடையாள எண்: BK-VBR-530

ஆக்கப் பொருள்: No details

அளவுகள்: h 15.4cm × w 10.1cm × d 3.2cm

கலைஞர்: அறியக்கூடவில்லை

காலம்: c. 1700

இடம்: தமிழ்நாடு

உரிமம்: பொதுவுடமை (Public domain)

மாறா இணையச்சுட்டி: http://hdl.handle.net/10934/RM0001.COLLECT.368110

 

[7] கருப்பண்ணசாமி:

இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்டு வணங்கப்படும் சிவன், திருமால் போன்ற இந்துக்கடவுள்களுடன், பற்பல வட்டாரங்களில் வணங்கப்படும் நாட்டுப்புற தெய்வங்களும், சிறுதெய்வங்களும் பலதெய்வ வழிபாட்டில் அடங்குவர். கருப்பு, கருப்பர் அல்லது கருப்பண்ணசாமி என அழைக்கப்படும் நாட்டார் குலதெய்வமான கருப்பண்ணசாமி தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கிராமப்புறத்தில் வாழும் மக்களால் வணங்கப்படுபவர். ஐயனாரின் உதவியாளராகக் கருதப்படும் கருப்பண்ணசாமி, கிராமங்களின் காவல் தெய்வமாவார். நிமிர்ந்து நிற்கும் இவர் தனது வலது முழங்காலை சற்றே வளைத்து நின்று, வலது கையில் உயர்த்திப் பிடித்த அரிவாளுடனும், இடது கையில் ஊன்றிய கோலுடனும், இடைக்கச்சையில் வாளின் உறையுடனும், அதனருகில் அதைக் கண்காணிக்கும் கிளியுடனும் காட்சி அளிக்கிறார். அச்சமூட்டும் கருப்பண்ணசாமிக்கு குருதியும் இறைச்சியும் பலிகொடுக்கப்பட்டுச் சமாதானப்படுத்தப்படுவார். அதற்குப் பதிலாக அவர் வயல்வெளிகளுக்குப் பாதுகாப்பாக இருப்பார். கருப்பண்ணசாமி தனது வலது கையில் ஏந்தியிருக்கும் அரிவாள் அவர் பாதுகாப்பளிப்பவர் என்பதையே குறிக்கிறது.

7-rijksmuseum tamil

தலைப்பு: கருப்பண்ணசாமி (Karuppannasamy)

அடையாள எண்: AK-MAK-1736

ஆக்கப் பொருள்: வெண்கலம்

அளவுகள்: h 14cm.

கலைஞர்: அறியக்கூடவில்லை

காலம்: 1600 – 1700

இடம்: தமிழ்நாடு

உரிமம்: பொதுவுடமை (Public domain)

இணையச்சுட்டி: https://www.rijksmuseum.nl/en/collection/AK-MAK-1736

 

[8] சிவா நடராஜா:

நடனமாடும் நாட்டிய அரசர் நடராஜனின் திருவுருவம் சிவனின் புகழ் பெற்ற ஒரு திருவடிவம். தமிழகத்தின் 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, அளவில் சிறிய இந்த வெண்கலச் சிலை, அருங்காட்சியகக் காட்சியில் மையமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பெரிய சிலையைப் போல ஒரு கோயிலில் வைத்து வணங்கப் பாடாது, வீடொன்றின் தனி வழிபாட்டறையில் வைத்து வணங்கப் பெற்றிருகலாம். ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை தமழகத்தை ஆட்சி செய்த புகழ்பெற்ற சோழப் பேரரசின் காலத்தில் உருவாக்கப்பட்டச் சிலை இது.

8-rijksmuseum tamil

தலைப்பு: சிவா நடராஜா (Shiva Nataraja)

அடையாள எண்: AK-MAK-189

ஆக்கப் பொருள்: வெண்கலம்

அளவுகள்: h 10.8cm × w 7.0cm × d 3.9cm.

கலைஞர்: அறியக்கூடவில்லை

காலம்: c. 1200 – c. 1300

இடம்: தமிழ்நாடு

உரிமம்: பொதுவுடமை (Public domain)

மாறா இணையச்சுட்டி: http://hdl.handle.net/10934/RM0001.COLLECT.679

 

[9] ரதி மன்மதனின் மரச்சிற்பம்:

இது செவ்வக மரப்பலகையில் செதுக்கப்பட்டுள்ள ரதி மன்மதனின் புடைப்புச் சிற்பம்.   இரு சதுர தளங்களில் இடது பக்கம் காதலின் கடவுளான மன்மதனும், வலது பக்கத்தில் சிற்றின்ப தெய்வமான ரதியும் முறையே தங்களது கிளி மற்றும் அன்ன வாகனகங்களில் காட்சி அளிக்கிறார்கள். சிற்பத்தின் விளிம்புகள் கோர்த்த மணிச்சரம் பாதிக்கப்பட்டுள்ளது போன்று அமைக்கப் பட்டிருக்கிறது. மேற்பகுதியில் “சங்கரமூர்த்தி ஆசாரி” என்ற பெயர் பொறிக்கப் பட்டுக்ள்ளது. இதுபோலப் படைப்புகளில் தங்கள் பெயரைப் பொறிக்கும் வழக்கம் தமிழத்தில் மிகவும் அரிது, தென்னிந்திய வழக்கத்தில் இல்லாத ஒன்று.

(குறிப்பு: இது ஸ்ரீலங்கா பகுதியில் இருந்து பெறப்பட்ட தமிழர் படைப்பு என்பது இக்கட்டுரையில் முன்னரே குறிபிடப்பட்டுள்ளது)

9-rijksmuseum tamil

9-rijksmuseum tamil-1

தலைப்பு: ரதி மன்மதனின் மரச்சிற்பம் (Panel with Kama and Rati)

அடையாள எண்: AK-MAK-1730

ஆக்கப் பொருள்: மரப்பலகை

அளவுகள்: h 5cm × w 12cm.

கலைஞர்: அறியக்கூடவில்லை

காலம்: 1700 – 1800

இடம்: ஸ்ரீலங்கா

உரிமம்: பொதுவுடமை (Public domain)

மாறா இணையச்சுட்டி: http://hdl.handle.net/10934/RM0001.COLLECT.475009

இச்சிற்பங்களைப் பற்றி அருங்காட்சியகம் கொடுத்துள்ள தகவலைத் தவிர மேலதிகத் தகவல் தெரிந்தோர் அதனை அருங்காட்சியகத்தின் கவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் (inform more details: collectieinfo@rijksmuseum.nl), குறிப்பாகப் பட எண் 6 இல், ராமரின் மகுடம் சூட்டும் விழா குறிப்பற்றுபார்வைக்கு வைக்கப்பட்டு இருப்பதாகத் இருக்கிறது, விவரம் தெரிந்தோர் கொடுத்து உதவலாம். அச்சிலையில் கடவுளின் அவதாரமாக அறியப்படும் அயோத்தியின் அரசர் ராமர், அரசியார் சீதையுடனும், தனது மூன்று இளவல்களில் இருவர் சாமரம் வீச, மற்றொரு இளவல் வெண்குடை ஏந்த, அவருடைய குருக்களான வசிட்டர், மற்றும் விசுவாமித்திரர் முன்னியிலையில் பட்டமேற்று அருள் புரிகிறார். அவரது வலது காலை அவரது தீவிர பக்தன் அனுமன் தாங்க, பிற வானரப்படைகளும், பக்தர்களும் வணங்குவதாகக் காட்டப்பட்டுள்ளது. படத்தில் பார்வைக்கு சலவைக்கல்லில் செதுக்கப்பட்ட சிலையாகவும் தெரிகிறது, ஆனால் உறுதியாகக் கூற இயலவில்லை .

“ரைய்க்ஸ் மியுசியம்” கொண்டிருக்கும் கலைப்பொருட்களின் சிறப்பு என்னவெனில், இந்த அருங்காட்சியின் கலைப்பொருட்கள் யாவும் காப்புரிமை நீக்கி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கலையார்வலர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் அருங்காட்சியகத்தின் “ரைய்க்ஸ் ஸ்டூடியோ” (Rijksstudio) என்ற அமைப்பில் தங்களை உறுப்பினர்களாக ஆக்கிக்கொள்பவர்கள் அருங்காட்சியகம் வழங்கும் மேன்மையுடன் மிகத்தெளிவான படப்பிடிப்புடன் சேகரிக்கப்பட்டுள்ள படங்களை மற்றவர்களுடன் தடையின்றிப் பகிர்ந்து கொள்ளலாம், தங்களுக்கும் தரவிறக்க்கிக் கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் கலைப்பொருட்களை ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழே தொகுத்து ஆராயலாம். எடுத்துக்காட்டாக, இக்கட்டுரையில் தமிழகத்தின் தொடர்பான கலைப்பொருட்கள் எனத் தொகுக்கப்பட்டுள்ளது போலவே, இந்தியக் கலைப்பொருட்கள், ஆசியச் சிற்பங்கள், வெண்கலச் சிற்பங்கள், சிவன், பார்வதி, திருமால், துர்க்கை, புத்தர், இந்துக் கடவுள்கள், குறிப்பிட ஓர் ஓவியரின் ஓவியங்கள், தாமரை, சிங்கம், விலங்குகள், பறவைகள் எனக் கற்பனையின் எல்லையைத் தொடும் வரை வகைபிரித்து ரைஸக்ஸ் ஸ்டூடியோ தளத்திலும் தொகுக்கலாம். மற்ற “ஃபேஸ்புக்”, “ட்விட்டர்”, “பின்ட்டெரெஸ்ட்” (Facebook, Twitter, Pinterest ) போன்ற சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம்.

get rijks museum

get rijks museum2

தரவிறக்கிய படங்களை நமது விருப்பம் போல அவற்றை முழுமையாகவோ, அல்லது அவற்றில் ஒரு சில பகுதிகளை மட்டும் தெரிவு செய்தோ எப்படியும் பயன்படுத்தலாம். நமது ஆடைகளிலும், சுவரொட்டிகளும், கைபேசி மேலுரைகளிலும் அச்சிட்டுக் கொள்ளலாம் இப்படங்களைக் கொண்டு உருவாக்கும் பொருட்களை ரைய்க்ஸ் ஸ்டூடியோ தளத்திலும் காட்சிப்படுத்தலாம்.

மற்றொரு குறிப்பிடத்தக்க தமிழக வரலாற்று ஆவணங்கள் இருப்பதும் நெதர்லாந்தின் அருங்காட்சியகத்தில்தான். *நெதர்லாந்தின் தேசிய நூலகங்களில் ஒன்றான லெய்டன் ( Leiden) நகரத்தில் அமைந்திருக்கும் அருங்காட்சியகத்தில் இரு தமிழகச்செப்பேடுகள் உள்ளன. இவை புகழ்பெற்ற சோழர்கால “ஆனைமங்கல செப்பேடுகள்” ஆகும். லெய்டன் நகர அருங்காட்சியகத்தில் இருப்பதால் இவை லெய்டன் செப்பேடு என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றில் அளவில் பெரியசெப்பேடு முதலாம் இராஜராஜனது காலத்தில் வெளியிடப்பட்டது. இராஜராஜ சோழ மன்னர் ஆனைமங்கலம் என்ற ஊரை, நாகப்பட்டினத்தில் பௌத்தவிகாரம் எடுப்பதற்காகக் கடாரத்து மன்னன் சூளாமணிபன்மனுக்குத் தானமாகக் கொடுத்ததால் இது ஆனைமங்கலம் செப்பேடு என்று அழைக்கப்படுகிறது. அளவில் சிறிய செப்பேடு முதலாம் குலோத்துங்கனால் வெளியிடப்பட்டுள்ளது. இச்செப்பேடு மொத்தம் 3 ஏடுகளையும் 52 வரிகளையும் கொண்டுள்ளது. [2] இச்செப்பேட்டில் உள்ள செய்திகள் தன்னார்வத் தொடர்கள் தட்டச்சி வழங்க, அவை ப்ராஜெக்ட் மதுரை வலைதளத்தில் (http://www.projectmadurai.org.vt.edu/pm_etexts/utf8/pmuni0329.html) பதிவேற்றப் பட்டுள்ளது. முன்னாள் அரசு தொல்லியல் துறை இயக்குனர், நடன காசிநாதன் அவர்களின் நூலும் ஆனைமங்கல செப்பேடுகளின் செய்திகளைத் தொகுத்து வழங்குகின்றது.

சான்றுகளும் குறிப்புகளும் :

[1] National Gallery of Australia removes statue after smuggling scandal, Andrew Taylor

Arts reporter, The Sydney Morning Herald March 27, 2014,

http://www.smh.com.au/entertainment/art-and-design/national-gallery-of-australia-removes-statue-after-smuggling-scandal-20140326-35iuv.html

[2] http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/leighton.html

*ஹாலண்டு நாடு என்று பொது வழக்கில் குறிப்பிடுவதும் உண்டு, ஆனால் ஹாலண்டு என்பது நெதர்லாந்து நாட்டின் ஒரு பகுதியே, இந்தியாவில் என்பதற்கும் தமிழகத்தில் என்று சொல்லுவதற்கும் உள்ள வேறுபாடு போன்றது இது.

Christophe maturation http://essaydragon.com/ and learning of language in the first year of life

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திரைகடலோடிய தமிழ்ச்செல்வங்கள்”

அதிகம் படித்தது