மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பிரிவதற்கல்ல திருமணம்

ஆச்சாரி

Jul 26, 2014

thirumanam4பெருகிவரும் விவாகரத்து வழக்குகளும்,நிரம்பி வழியும் குடும்ப நல வழக்காடு மன்றங்களும் தான் இந்த கட்டுரையை என்னை எழுத வைக்கிறது. திருமணம் நடந்த பின்புதான் விவாகரத்து தேவை என்கிறது. எனவே முதலில் திருமணம் என்றால் என்ன என்பதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

ஆண்,பெண் இருவரும் பிறந்து வளர்ந்த சூழ்நிலை வேறுவேறு. குடும்பப் பழக்கங்கள் வேறுவேறு. இவ்வாறான இரண்டு குடும்பங்களிலிருந்து இருவர் இணைந்து மணவாழ்வு தொடங்கி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதைப் பார்த்து அந்த இரு குடும்பத்தினரும் குறைந்த பட்சம் இருவரின் பெற்றோரும் மகிழ வேண்டும். எவ்வளவு பெரிய பொறுப்புள்ள நிகழ்வு இது. இந்த நிகழ்வை மிகவும் எளிதாக நினைக்கும் எண்ணம்தான் விவாகரத்துக்கான அடிப்படையே.

thirumanam8ஒரு நாட்டினுடைய நாகரிக வளர்ச்சி அந்த நாட்டில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது பொறுத்தே அமையும் என்று சொல்லலாம். உன் குழந்தையும்,என் குழந்தையும் நம் குழந்தையுடன் விளையாட்டும் என்று சொல்லும் கலாச்சாரம் நம்முடையது அல்ல. ஒருவனுக்கு ஒருத்தி என்றுதான் நம் முன்னோர்கள் ஒரு பண்பாட்டினை உருவாக்கி இருக்கிறார்கள். முன்னாட்களில் பெண்கள் வேலைக்குச் செல்லாமல் கணவனை நம்பி இருந்தார்கள் என்பதை அடிமைத்தனம் என்று நினைத்தால் அது நிச்சயமாக முட்டாள்தனம் என்பது உண்மை. யோசித்துப் பார்த்தால் தெரியும் அது ஒரு பாதுகாப்பு வளையம் என்பது. அங்கு வேலைப் பங்கீடு (division of labour) இருந்தது. பொருளீட்டுதல், மனைவிக்கும், குழந்தைகளுக்கும் தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து அவர்களை நலமாக வைத்துக்கொள்வது கணவனின் வேலை. கணவன் கொண்டு வரும் பொருளை சீராகவும் சிக்கனமாகவும் செலவு செய்து கணவன், குழந்தைகளின் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளை (உணவு, நல்ல பழக்கங்களை சொல்லித்தருதல்) போன்றவை மனைவியின் கடமையாக இருந்தது. இருவரும் சேர்ந்து சுற்றுலா, பூங்கா, உணவு விடுதி என்று போகாவிட்டாலும் ஒருவர் மேல் ஒருவருக்கு புரிதல், அன்பு பரிமாற்றம் ஆகியவை நன்றாகவே இருந்தது.

பாரதியார் சொன்னது போல் நிமிர்ந்த நன்னடை,நேர்கொண்ட பார்வை எல்லாவற்றையும் பெண்கள் எடுத்துக் கொண்டாகிவிட்டது. இவையெல்லாம் பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் விசயங்களாக சொல்லப்பட்டன. தன்னம்பிக்கை இழந்து அவநம்பிக்கை வரும்போதுதான் விவாகரத்து என்ற வேண்டாத செயல் இருவருக்கும் இடையே வருகிறது. இன்றைய கல்விமுறை வெறும் ஏட்டு படிப்புதான்.,படிப்புக்கு ஏற்றவாறு வேலை,வேலைக்கு ஏற்றவாறு சம்பளம் என்று கிடைத்தால் நம் வாழ்க்கையை நாமே தீர்மானிக்க முடியும் என்ற எண்ணம் சற்று தவறானதுதான்.

thirumanam6பெரியவர்கள் நிச்சயித்து நடந்த திருமணங்களில் உள்ள வேத,மந்திரங்களையெல்லாம் விட்டுவிடுங்கள். அந்த நிகழ்வுகளை மட்டும் பாருங்கள். பெற்றோரும் உற்றாரும் உடனிருக்க ஒரு திருமணமாகப்போகும் ஆண்,தன் மனைவியாக வரப்போகும் பெண்ணின் கையைப் பற்றுகிறான். இது இருவருக்குமே முதல் தொடுதல் ஆகும். பின்பு நலங்கு என்னும் சடங்கின் மூலம் ஒருவரை ஒருவர் (தேங்காய் உருட்டுதல்,பூப்பந்து உருட்டுதல்,ஒருவருக்கொருவர் திலகமிட்டுக் கொள்வது) போன்ற செய்கைகளால் மேலும் ஒருவரை ஒருவர் தொடுவது அனுமதிக்கப்படுகிறது. வயதுக்கு வந்துவிட்ட பெண்களை தந்தையும்,தனயனும் கூட தொட்டு பேசமாட்டார்கள். ஆனால் இன்று ஆணை தொட்டுப்பேசாத பெண்ணும்,பெண்ணைத் தொட்டுப்பேசாத ஆணும் (புத்தர்,சாவைக் கண்டு அஞ்சிய ஒரு சீடனை ஒருவருமே சாகாத வீட்டில் ஒரு பிடி கடுகு வாங்கிவா என்று அனுப்பினாராம். அப்படியொரு வீடு இருக்காது,எனவே சாவு என்பது மனிதனாய் பிறக்கும் ஒவ்வொருவனும் எதிர்கொள்ள வேண்டிய நிகழ்வுதான் என்று தன் சீடன் புரிந்து கொள்ளட்டும் என்று) இன்று கிடையாது. சீடனுக்குக் கூட கடுகு கிடைத்துவிடும். ஆனால் தொட்டுப்பேசாத ஆண்பெண் நிச்சயமாகக் கிடையாது,கிடைக்காது. இந்தப் பழக்கத்தினாலேயே திருமணத்தின் முதற்படியான “ஒருவருக்கொருவர் புது உறவு”என்கிற நிலை அடிபட்டு போகிறது.

இரண்டாவதாக “உனக்கு நான்,எனக்கு நீ”என்ற நிலை இன்று இல்லை. நான் சம்பாதிக்கிறேன் அதனால் நான் தனியாக வாழமுடியும் என்று நினைப்பது தன்னம்பிக்கை அல்ல. வெறும் அசட்டுத் துணிவுதான் என்று முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அலுவலகத்தில் தவறு செய்துவிட்டால் மேலாளர் திட்டுகிறார்,அதற்காக வேலையை அன்றே விட்டுவிட்டு வந்துவிடுகிறோமா. ஆனால் குடும்பத்தில் மட்டும் ஏன் உடனே விவாகரத்து கேட்டு ஒடுகிறோம். எதில் நிலைத்து இருக்க வேண்டுமோ அதை விட்டுவிட்டு எது வேண்டாமோ அதைத் தேடி ஓடுகிறோம்.

பெண் சுதந்திரம் என்று நாம் நினைக்கும் (வேலைக்குப் போய் நாம் சம்பாதிப்பது) செயல் உண்மையிலேயே சுதந்திரம் அல்ல. உண்மையிலேயே இது நாமாக சேர்த்துக் கொண்ட சுமைதான்.

சுமைகள் சுகமாக மாறும்:

thirumanam11

நாமாக சேர்த்துக் கொண்ட சுமையை நாம் தான் சுகமாக மாற்ற வேண்டும். இதற்கு கணவன்,மனைவி இருவரும் ஒருமனதாக செயல்படவேண்டும். கொஞ்சம் முயன்றால் வளமான வாழ்க்கை கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முதலில் கணவன் சார்பாக செயல்பட விசயங்களைப் பார்ப்போம். கணவனுக்கு மனைவி என்ற இடத்தில் வந்திருக்கும் பெண் முழுவதுமாக தன்னை நம்பித்தான் வந்திருக்கிறாள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திருமணம் வரை சாதாரணமான செயல்பாடுகளுடன் இருந்துவிட்டு திருமணமானதும் அம்மாவின் மீது அதீதமான பாசம் வரும். இது கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டும். மனைவியின் இடத்தை அவளுக்கு அளித்து, தாயின் மரியாதையை அவளுக்கு தருவதை மிகவும் கவனமாக கையாள வேண்டும். புதிதாக வரும் பெண்ணுக்கென்ற ஆசைகள் சில இருக்கும். நிறைவேற்ற கூடிய ஆசைகளை செய்தும், முடியாதவற்றிற்கு தகுந்த காரணமும் கூறி விட வேண்டும். எந்த விசயத்திலும் ஒளிவு, மறைவு அறவே கூடாது. மனைவி தன் குடும்பத்தினரை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது போல் அவளுடைய உறவினர்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். இருவரும் பணி செய்பவர்களானால் குடும்பத்தின் வேலைகளை பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும். உடல்நலக்குறைவு ஏற்படும் பொழுது,பொறுமையோடும்,அன்போடும் கவனித்துக் கொள்ள வேண்டும். சுடுசொற்களையும், தேவையில்லாத அநாகரீகமான செயல்களையும் தவிர்க்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்ய பெரிய அளவில் முயற்சி செய்ய அவசியமில்லை இயல்பாக இருந்தாலே போதும்.

மனைவியின் சார்பாகவும் பல செயல்கள் உண்டு. கணவனை மதிப்பதுடன் அவன் வீட்டாரையும் மதிக்க வேண்டும். இருவரும் பணிக்கு செல்பவர்களாயின் இந்தந்த வேலைகளை நீங்களும் செய்தால் இருவரும் பணிக்கு செல்வது எளிதாக இருக்கும் என்பதை புரியவைத்து அவர்கள் செய்யக்கூடிய வேலைகளாக கொடுக்க வேண்டும். இவருடைய வருவாயை ஒன்றாக கணக்கிட்டு அதன் பிறகு மாதத்திற்கான செலவுக் கணக்கை சரிசெய்ய வேண்டும். அத்தியாவசியம்,அவசியம் தேவையற்றது என்று பிரித்து செலவு செய்து மாதாமாதம் ஒரு சேமிப்பும் செய்ய வழி செய்ய வேண்டும். கணவனுடைய உடல் நலத்தில் அக்கறை காட்டி தேவையற்ற பழக்கங்களை மெதுவாக எடுத்துச் சொல்லி மாற்ற வேண்டும்.

இருவருமே கட்டாயமாக ஒரு வீட்டாரை மற்றவர் அவமதிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். அது மாதிரியான சமயங்களில் மௌனம்காப்பது நலம். அவரவர்களின் விருப்பங்களை அடுத்தவருக்கு இடையூறு இல்லாமல் நிறைவேற்றிக் கொள்ள முயல்வது மிகவும் சிறப்பான குணமாகும். விட்டுகொடுத்து போவது என்ற மனப்பான்மையை இருவருமே வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மிகவும் சிறிய செயல்கள்தாம் இவை அனைத்துமே. முயன்று பார்ப்பதல் தவறொன்றும் இல்லையே. மணவாழ்க்கை மலர்ந்து வாசம் வீச வேண்டுமே தவிர மணமுறிவுக்கான செயல்களில் ஈடுபடக்கூடாது. சேர்ந்து வாழத்தான் திருமணம். பிரிந்து போவதற்கல்ல. எனவே முயலுங்கள்,முடிவு உங்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும்.

That doesn’t mean you have trackingapps.org to agree with them, but by considering what they have to say seriously, you are validating them and making them feel like they have a voice that will be heard

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பிரிவதற்கல்ல திருமணம்”

அதிகம் படித்தது