மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 20

ஆச்சாரி

Aug 2, 2014

bosu19-2போசு தனது வாழ்நாட்களில் தமிழ்நாட்டையும், சென்னையையும் மறக்கவே மாட்டார். 1927 டிசம்பர் மாதம் சென்னை மாநகரில் 42வது காங்கிரசு மகாசபைக் கூட்டம், டாக்டர் எம்.ஏ.அன்சாரி தலைமையில் நடந்தது. அந்த மாநாட்டிற்கு வங்க மாநில காங்கிரசு பிரதிநிதிகள் குழுவுக்குத் தலைமை தாங்கி, சுபாசு சந்திரபோசு சென்னைக்கு வருகை தந்தார். மாண்டலே சிறையில் வாடி நிபந்தனையில்லாமல் விடுதலையாகி உடல்நலம் தேறி சென்னைக்கு வந்த சுபாசு சந்திரபோசுக்கு தமிழ்நாட்டு மக்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். காங்கிரசு மாநாட்டில், இளைஞர் கூட்டம் அவரை எந்தநேரமும் சூழ்ந்து கொண்டிருந்தது. அவர் மேடைக்கு வந்தபோதும், போனபோதும் இளைஞர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த மாநாட்டில்தான் “இந்தியாவின் லட்சியம் பூரண சுதந்திரம்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் செயலாளர்களாக சுபாசு சந்திரபோசு, ஜவஹர்லால் நேரு, சாகிப்குர்ஷிஆகிய மூன்று இளம் தலைவர்களை நியமித்தது காங்கிரசு மகாசபை. அகில இந்திய காங்கிரசில் சுபாசு சந்திரபோசுக்குக் கிடைத்த முதல் பதவி அதுதான்.

bosu4இம்மாநாட்டில்தான் பிற்காலத்தில் தனது காங்கிரசு தலைவர் தேர்தலில் போட்டி ஏற்படும்பொழுது தனது வெற்றிக்கு உழைக்கவிருக்கும் தென்பாண்டி சிங்கம் என்று அறியாமல் அந்த வங்காளப் புலி போசும், தென்பாண்டி சிங்கம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் இருவரும் சந்தித்தனர். இந்த சந்திப்பை ஏற்படுத்தியவர் வழக்கறிஞர் சீனிவாச ஐயங்கார் ஆவார். முத்துராமலிங்கத்தேவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் ஊரில் பிறந்தார். இந்த பசும்பொன் கிராமமானது முற்காலத்தில் இது பழம்பது என்றும் பசும்பொன் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. தலையாலங் கானத்துச்செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி புலவர்கள் குறிப்பிடும் பொழுது பசும்பூன் பாண்டியன் என்றும்

“வில் கெழு தானைப் பசும் பூன் பாண்டியன்”என்று பாணர் அகநானூறு 162 வது பாடலிலும், “விசும்பு இவர் வெண்குடைப், பசும்பூன் பாண்டியன்” என்று ஈழத்து பதன் தேவனார் அகநானூற்றில் 231 வது பாடலிலும், “நாடு பல தந்த பசும்பூன் பாண்டியன்” என்ற நக்கீரர் அகநானூற்றில் 253-வது பாடலிலும், “பலர் புகழ்திருவிற் பசும்பூன் பாண்டியன்” என்று மதுரை கணக்காயனார் அகநானூற்றில் 338-ஆம் பாடலிலும் பாடியிருப்பதன் அடிப்படையில் மதுரையை ஆண்ட சங்ககால பாண்டியன் நெடுஞ்செழியன் இந்த மண்ணில் பிறந்தவன். இது போன்ற சிறப்பு மிக்க பசும்பொன் மண்ணில் மன்னர் குலத்தில் உக்கிரபாண்டியத்தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் முத்துராமலிங்கத் தேவர் 30.10.1908ல் மகனாகப் பிறந்தார். ஒரு முறை வழக்கு ஒன்றிற்காக எஸ்.சீனிவாச ஐயங்கார் அவர்களை தம் இளம் வயதில் சந்திக்கச் சென்றார் முத்துராமலிங்கத் தேவர். அந்த சந்திப்பில் சீனிவாச ஐயங்காரின் பேச்சில் கவரப்பட்டு காங்கிரசில் இணைந்து தனது 19-வது வயதில் சீனிவாச ஐயங்காருடன் சென்னை காங்கிரசு மாநாட்டில் கலந்துகொண்டார். அப்பொழுது முத்துராமலிங்கத் தேவரை தனது அறையில் தங்கவைத்துக் கொள்ளாமல் போசின் அறையில் தங்கவைத்து இருவருக்கும் நட்பு ஏற்பட காரணமாக இருந்தார் சீனிவாச ஐயங்கார். பின் போசின் பேச்சிலும் அவரின் விடுதலை போராட்ட உணர்விலும் கவரப்பட்ட தேவர் அன்று முதல் தனது அரசியல் தலைவர் நேதாஜி சுபாசு சந்திரபோசு என்று ஏற்றுக்கொண்டார். சீனிவாச ஐயங்காரை அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார் தேவர்.

bosu1தேவருக்கும் போசுக்கும் விடுதலை போராட்டம் குறித்த சிந்தனை ஓட்டங்கள் அனைத்தும் ஒன்றாக இருந்தது. போசு இளம் வயதில் விவேகானந்தரின் சிந்தனைகளில் ஈர்க்கப்பட்டு ஆன்மீகத்தில் இருந்தது போலவே, முத்துராமலிங்கத் தேவரும் விவேகானந்தரின் சிந்தனைகளில் ஈர்க்கப்பட்டு ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவராக திகழ்ந்தார். போசு எப்படி காந்தியின் அகிம்சையில் நம்பிக்கை இல்லாமல் இருந்தாரோ அது போன்று, முத்துராமலிங்கத் தேவரும் காந்தியின் அகிம்சையை நம்பவில்லை. ஆனால் காந்தியின் ஆன்மீகமும் அரசியலும் இணைந்த இயக்கத்தை தேவர் ஆதரித்தார். எனவேதான் தேசியமும் தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்றார். தேசியம்- உடல், தெய்வீகம்- உயிர் எனப் போற்றினர் தேவர். இந்த “தேசியமும் தெய்வீகமும் உயிர்” என்ற இந்த வார்த்தையை இன்றைய அரசியல்வாதிகள் கடைபிடித்தால் புனிதமான அரசியலில் ஒரு குற்றமும் நடக்காது, நாடு சிறப்பாக இருக்கும். அனைத்தையும் அந்த ஒரு வரியில் கூறிய சிறப்பு தேவரையே சேரும். இது போன்ற சிறப்புமிக்க தேவரின் நட்பு, போசுக்கும் சிறப்பை தேடித் தந்தது. இருவருக்கும் உள்ள நட்பு வளர்ந்து வந்த பிறகுதான், 1939-ல் காங்கிரசு தலைவர் தேர்தலில் போசு போட்டியிட்ட பொழுது அவரை எதிர்த்து நின்ற பட்டாபி சீத்தாராமையாவிற்கு ஆதரவாக காந்தியடிகளின் ஆதரவாளர்கள் பலர் மிகவும் கடுமையான பிரச்சாரம் செய்தனர். ஆனால் போசுக்கு தேர்தலில் பிரச்சாரம் செய்தவர் முத்துராமலிங்கத்தேவர்.

bosu21939 சனவரி 30-ம் தேதி நடைபெற்றத் தேர்தலில் போசு 1580-வாக்குகளும், பட்டாபி சீத்தாராமையா 1375-வாக்குகளும் பெற்றனர். போசு சிறப்பான வெற்றி பெற்றார். போசின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்தது, வங்காளமும் சென்னை மாகாணமுமேயாகும். தமிழகத்தின் சார்பில் 110-வாக்குகள் போசுக்கு கிடைத்தது. இந்த வெற்றியைக் கண்டு காந்தியடிகள், மௌலானா அபுல்கலாம் ஆசாத், தலைமைப் பதவிக்கான போட்டியிலிருந்து விலகிக் கொண்டபோது பட்டாபி சீத்தாராமையாவை போட்டியிடும்படி வற்புறுத்தியதில் நான் முக்கியமானவன், ஆகவே பட்டாபியின் தோல்வி என் தோல்வி என அறிக்கை வெளியிட்டார். காந்தியின் ஆதரவு பெற்ற ஒருவர் கட்சித் தேர்தலில் தோல்விக்கு உள்ளானது காங்கிரசின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும். இந்தத் தேர்தலில் போசு பெற்ற வெற்றிக்குப் பின் காந்தியின் அறிக்கை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1927-ல் சென்னையில் கிடைத்த போசின் சந்திப்பில் இருந்து முத்துராமலிங்கத்தேவர் தனது இறுதிமூச்சுவரை போசின் சீடராகவே இருந்தார். வங்காளத்தில் பிறந்த விவேகானந்தரின் சிறப்பு எப்படி உலகறிந்தது. அன்று பாஸ்கர சேதுபதி அவர்களுக்கு உலக சமய மாநாட்டில் கலந்து கொள்ள வந்த வாய்ப்பை விவேகானந்தருக்கு வழங்கினார். எனவேதான் விவேகானந்தர் சிக்காகோ மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி அதன்பின் உலகில் சிறப்பான புகழ் பெற்றார். இதற்கு எப்படி ஒரு தமிழன் உதவினானோ, அதே போன்று ஒரு வங்காளத்தில் ஒரு சிறப்பான தலைவரின் புகழ் வளர்வதற்கும் தமிழர்கள்தான் பெரும் உதவி செய்திருக்கிறார்கள்.

bosu3தென்னகத்தில் முத்துராமலிங்கத்தேவர் பெற்றிருந்த புகழ் எவ்வாறிருந்தது எனில், 1935ம் ஆண்டு இந்திய சட்டத்தின்படி, இந்திய வரலாற்றில் முதன் முறையாக விரிவுபடுத்தப்பட்ட சட்டமன்றத்திற்கான தேர்தல் 1937ல் நடைபெற்றது. சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை நீதிக்கட்சி, பெரிய பணக்காரர்கள் மற்றும் ஜமீன்தார்கள் ஆதரவு பெற்ற கட்சியாக இருந்ததால் அது காங்கிரசு கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கியது. இந்தத் தேர்தலில் இராமநாதபுர மன்னர் சண்முகராஜேஸ்வர நாகநாத சேதுபதி, இராமநாதபுர சட்டமன்ற நீதிக்கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். சர்தார் வல்லபாய் பட்டேலின் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த காங்கிரசு கட்சியின் அட்ஹாக்(Adhoc) கமிட்டி, சேதுபதி மன்னருக்கு இணையான வேட்பாளரைத் தேடியது. முத்துராமலிங்கத்தேவர் தேர்தலில் போட்டியிட மனுசெய்யவுமில்லை, தேர்தலில் போட்டியிட வேண்டுமென்ற எண்ணமும் அவருக்கில்லை. இருப்பினும் காங்கிரசு கட்சி மேலிடம், இராமநாதபுரம் மன்னரை எதிர்த்து நிற்க தேவரே சரியான வேட்பாளர் என்று முடிவு செய்து அதன்படி வேட்பாளருக்கான வைப்புத் தொகையை காங்கிரசு கட்சியே செலுத்தி தேர்தல் களத்தில் தேவரை போட்டியிடச் செய்தது. இதுதான் தேவரின் முதல் சட்டமன்றத் தேர்தல், இந்த தேர்தலில் தேவர் எதிர்த்தது மன்னரை மட்டும் இல்லை தன் தந்தையையும் கூட. மன்னருக்கு ஆதரவாக தேவரின் தந்தை தேர்தல் வேலை செய்தார். தேவரே அவரின் தொகுதியில் பிரச்சாரம் செய்யவில்லை.

காங்கிரசு தன் மீது வைத்த நம்பிக்கைக்கு உழைக்கும் பொருட்டு பிற காங்கிரசு வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிக்குத்தான் அதிக கவனம் செலுத்தினார். போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலத்தில் இராஜாஜியுடன் இணைந்து மாடு பூட்டிய கூட்டுவண்டியை கட்டிக்கொண்டு இராஜாஜி அதில் அமர்ந்துகொள்ள தேவரே மாட்டுவண்டியை ஓட்ட ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்துள்ளார். இந்த செய்தியை ‘இதயநாதம்’ புத்தக வெளியீட்டு விழாவில் இராஜாஜியே நினைவு கூர்ந்துள்ளார். இந்தத் தேர்தலில் தொடங்கி தன் வாழ்நாளில் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி மட்டுமே கண்டவர் என்ற பெருமைக்குரியவர் தேவர்.

-தொடரும்

You will get to grips with online essay the key issues that shaped the regions past and will shape its future

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 20”

அதிகம் படித்தது