மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நலம் பயக்கும் நகைச்சுவை உணர்வு

ஆச்சாரி

Aug 2, 2014

nagaichchuvai3

இது கலியுகம் என்பதை விட இயந்திரயுகம் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். காரணம் இன்று மனிதர்கள் செய்ய வேண்டிய வேலைகளை இயந்திரங்கள் செய்கின்றன. இயந்திரங்கள் செய்ய வேண்டிய வேலைகளை மனிதர்கள் செய்கின்றனர். இன்றைய மனிதர்கள், மனிதர்களோடு பழகுவதை விட இயந்திரங்களோடே இல்லறம் செய்ததின் விளைவு ‘சிரிப்பு’என்ற உணர்வே இல்லாத இயந்திரமாய் மனிதர்கள் மாறிப்போனார்கள்.

இடுக்கண் வருங்கால் நகுக (துன்பம் வரும்போது சிரியுங்கள்), வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்ற பழமொழிகளை எல்லாம் மறந்த இனமாய் தமிழினம் வாழ பழக்கப்பட்டு வருகிறது.

“நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப”

-என பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர்,தனது தொல்காப்பியத்தில் மனிதர்களின் எட்டு வகையான உணர்வுகளை பதிவு செய்ததில், நகை(சிரிப்பு) இதற்கே முதலிடம் வகுத்துள்ளார் என்றால் சிரிப்பின் மகத்துவத்தை நாம் அறிய வேண்டும்.

இன்றைய இயந்திர உலகில் மனிதன் தன் சுயத்தை, மனிதன் தன் அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழப்பதும் ஓய்வற்ற உழைப்பு,போதிய ஊதியமின்மை,பணத்தேவை,பேராசை போன்ற காரணங்களே மனிதன் உண்மையாக சிரிக்க மறந்ததற்கு காரணம் எனலாம்.

nagaichchuvai1நன்கு சிரித்துப் பழகுபவனுக்கு அதிக நண்பர்கள் இருப்பர். சிரிக்காத சிடுமூஞ்சிகளுக்கு நண்பர்கள் குறைவாகவே இருப்பர். நாம் சிரித்தால் நம்மோடு சேர்ந்து அனைவரும் சிரிப்பர், நாம் அழுதால் எவரும் நம்மோடு அழுவதில்லை. அதனால்தான் நகைச்சுவை அறிஞர் சார்லி சாப்ளின் கூட “நான் அழுதாலும் மழையில் அழவே ஆசைப்படுகிறேன்”என்றார்.

உறவுகளை இணைக்கும் ஆயுதமாக இருக்கும் சிரிப்பு பற்றிய விவரத்தை நாம் இனி காண்போம்.

சிலருக்கு சிரிப்பு என்பது வாழ்க்கையின் முக்கிய பகுதியாக மாறும்பொழுது, வேறு சிலருக்கோ சிரிப்பதற்கே நேரம் கிடைப்பதில்லை. ஆனால் சிரிப்பின் மகிமையை உணர்ந்தால் அறிமுகமில்லாத நபர்களைப் பார்த்தும் நாம் புன்னகைப்போம். சிரிப்பு வெறும் முகபாவம் அல்ல. உடல் உறுப்புகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கான பல்வேறு என்சைம்களும்,ஹார்மோன்களும் சிரிப்பின் மூலம் உற்பத்தியாகின்றன.

நாம் நலமாக இருக்க ஒன்று, நாம் நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும் அல்லது நகைச்சுவை உணர்வு உள்ளவர்களை நண்பர்களாகப் பெற்றிருக்க வேண்டும். இவ்விரண்டும் இல்லாதவர்கள் கடமைக்கு வாழ்ந்து மறைபவர்கள் பெயர் பட்டியலில் இடம் பெறுபவர்களாகவே இருப்பார்கள்.

சிரிப்பின் பயன்கள்:

nagaichchuvai4

நாம் காலை முதல்; இரவு வரை பரபரப்பான வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் மன அழுத்தம்,மன உளைச்சல்,பொருளாதார போராட்டம் என பல நெருக்கடிகளை சந்திக்கிறோம். இதற்கு இடையில் சிரிப்பதையே மறந்து விடுகிறோம். சிரிப்பு தான் பல பிரச்சனைகளுக்கு மருந்தாய் விளங்குகிறது. சிரிப்பினால் விளையும் பயன்களாவன.

  • சிரிக்கும் போது முகத்தின் தசை நார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது. இது முகத்தின் அழகு அதிகரிக்க காரணமாகிறது.
  • மன அழுத்தத்தை குறைக்கிறது.
  • உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
  • தசை நார்களின் இறுக்கத்தை குறைக்கவும்,ரத்த அழுத்தம் போன்ற நோய்களை விரட்டவும் பயன்படுகிறது.
  • நீண்ட சிரிப்பு, உடலில் உள்ள அதிக கலோரிகளைஎரிக்கப்பயன்படுகிறது.
  • சிரிக்கும் பொழுது உடலில் ஜீரணிக்கும் நீர் சுரக்கிறது, இதனால் உணவுகள் எளிதாக ஜீரணமாகிறது.
  • சிரிக்கும் பொழுது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
  • சிரிக்கும்பொழுது மூளையில் அதில எண்டோர்ஃபின் ஹார்மோன் சுரக்கிறது. இது சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்.
  • இதயத்துடிப்பை சாதாரண நிலைக்கு கொண்டுவர சிரிப்பு உதவுகிறது.
  • சிரிக்கும் பொழுது உடல் வலியைக் குறைக்கும் ஹார்மோன் உற்பத்தியாகிறது.

சிரிப்பு யோகா:

nagaichchuvai2

சென்னை மெரினா கடற்கரையில் நான் அதிகாலை செல்லும் போது எண்ணற்றோர் நடந்தனர். இதற்கு மத்தியில் ஒரு குழுவினர் மணல் மேலே வட்டமாக நின்றுகொண்டு எல்லோரும் வாய்விட்டு வம்படியாக சிரித்தனர். என்னவென்று நான் கேட்க ஒருவர் கூறினார் “இது சிரிப்பு யோகா பயிற்சி”என்றார். உண்மையில் சிரிக்கும் அவர்களை வேடிக்கை பார்த்த எனக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. நானும் அவர்களோடு அந்த யோகா பயிற்சியை மேற்கொண்டேன்.

சிரிப்பு யோகாவின் நன்மைகள்:

  • நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
  • சர்க்கரை நோய்,மூட்டுவலி,இதயநோய்,முதுகுவலி,அழுத்தம்,கவலை,ஆஸ்துமா,தலைவலி,மாதவிடாய் கோளாறுகள்,புற்றுநோய் ஆகிய பற்பல நோய்களை குணமாக்கவும் முடியும்.
  • அதிகாலை சிரிக்கும் போது மூளையில் உள்ள திசுக்கள் எண்டோர்பின் என்ற சுரப்பியை வெளியிடுகின்றன. இது உங்கள் மனநிலையை மகிழ்ச்சியாக மாற்றும். அதுமட்டுமில்லாமல் நாள் முழுவதும் சிரிப்பதை விட அதிகமாக சிரிக்கவும் செய்வீர்கள்.

இவ்வளவு நன்மை பயக்கும் சிரிப்பில் பல வகை உண்டு. என்.எஸ்.கிருஷ்ணன் கூட கூறுவார்  “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்திற்கே சொந்தமான கை இருப்பு,வேறு எந்த ஜீவராசிகளும் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு” எனப் பாடி ஒவ்வொருவரின் சிரிப்பையும் வகைப்படுத்தி சிரித்துக் காட்டுவார்.

அதுபோல மனிதனின் சிரிப்பின் வகைகளான…ஓடவிட்டு சிரிப்பவன் வஞ்சகன், ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்,இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன், கற்பனையில் சிரிப்பவன் கவிஞன், தெரியாது என்று சிரிப்பவன் நடிகன்,சண்டையில் சிரிப்பவன் வன்முறையாளன், துன்பத்தில் சிரிப்பவன் மனிதன், இதில் நீங்கள் எந்தவகை என்று உங்களுக்கே அறிந்த ஒன்று.

எது எப்படியோ உங்கள் கவலைகளை விரட்டி வாழ்வில் கலகலப்பு சேர்க்கும் அருமருந்தான நகைச்சுவை அனுதினமும் சுவைத்து வாழ்ந்தால் அனைவரும் மகிழ்வதோடு உங்கள் ஆயுளும் பெருகும் என்பதை மனதில் இருந்தி இனியாவது சிரித்து வாழ்வீர்களேயானால் அதுவே எனக்கு இன்பம் பயக்கும் செய்தியாகும்.

Many teens might balk at the idea of being monitored, and for your conversation to topspying.com go well, you need to listen to their arguments

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நலம் பயக்கும் நகைச்சுவை உணர்வு”

அதிகம் படித்தது