மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கையிலே கலைவண்ணம் கண்டான்

ஆச்சாரி

Aug 2, 2014

kayile kalaivannam4கண் பார்த்ததை கை செய்யும்” என்ற பழமொழி அமர்நீதியைப் பார்த்துத்தான் வந்திருக்க வேண்டும். அமர்நீதி அழகான பெயர். சைவப்பற்று மிகுந்த தந்தை, அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஏழாவதான அமர்நீதி நாயனாரின் பெயரை தன் மகனுக்கு வைத்தார். பள்ளியில் படிக்கும் பொழுது கைவினை ஆசிரியர் (Craft teacher) திரு.பாலன் அவர்களின் பென்சில் ஓவியங்களைப் பார்த்து அதன் நேர்த்திக்கும்,அழகுக்கும் அடிமையானது அமர்நீதியின் மனது.

வீட்டிலும் அப்பா,அம்மா எந்தவித தடையும் சொல்லாததால் தன் ஓவியத்திறமையை நன்றாக வளர்த்துக் கொள்ளமுடிந்தது. தொடர்ந்து 5 வருடங்கள் பள்ளியில் ஓவியப் போட்டியில் முதற்பரிசு அமர்நீதிக்குத்தான் கிடைத்தது. பாலன், விஞ்ஞான பாடத்திற்கான, திட்டம்(project) செய்யும் பொழுது கண் இமைக்காது பார்த்து, தன் வீட்டில் வந்து செய்து பார்ப்பது பழக்கமாகிவிட்டது.

“ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும்”என்று நினைத்தாரோ என்னவோ அமர்நீதியின் தந்தை. தன் வீட்டருகே உள்ள இரண்டு பேருக்கு, தான் வேலை செய்த அரசுத் துறையிலேயே வேலை வாங்கிக் கொடுத்தார். ஆனால் அமர்நீதிக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைக்கவில்லை (நல்லவேளை ஒரு கலைஞனை, கணக்கனாக ஆக்கிய பாவத்திற்கு அமர்நீதியின் அப்பா ஆளாகவில்லை).

அமர்நீதியின் பலமெல்லாம் அவரது கையும்,காலும்தான். சிறந்த கலைஞனாக மட்டுமின்றி, மாநில அளவில் சிறந்த ஹாக்கி விளையாட்டு வீரரும் கூட. வருமான வரி,வணிகவரி,துறைமுகம் ஆகிய துறைகளின் ஹாக்கி அணியிலும்,தென்னிந்திய ரயில்வே துறையின் அணியிலும் இவர் விளையாடி இருக்கிறார்.

கல்லூரி படிப்பு முடிந்து கால் சென்டரில் வேலை. வேலையில் மனம் ஒன்றவில்லை. மனைவியின் உதவியுடன் Browsing Centre ஆரம்பித்தார். வழக்கமாக இணைய உபயோகத்திற்காக வரும் ஒருவர் தன் பையனின் பள்ளி திட்டத்திற்காக (School Project) வீடு ஒன்று செய்யவேண்டுமாம், என்ன பண்ணுவது என்று அமர்நீதியிடம் புலம்ப அமர்நீதி நான் வேண்டுமானால் செய்து தரவா என்று கேட்டார். அந்த வீடு நன்றாக அமையவே அந்த பள்ளிக் குழந்தைகள் எல்லோரும் அமர்நீதியிடம் வந்து தங்கள் பள்ளி திட்டங்களை (School Projects) கொடுத்தனர். இப்படியே தஞ்சாவூர்,சீர்காழி,சிதம்பரம் என்று பல்வேறு ஊர்களில் இருந்தும் மொத்தமாக ஆர்டர்கள் வர ஆரம்பித்தன.

9 அடி நீளம், 5 ½அடி உயரம் உள்ள இவர் செய்த டைனாசர், இவர் யார்?,என்ன திறமை இவருடையது? என எல்லா பள்ளிகளுக்கும் தெரியப்படுத்தியது. இவர் செய்து வைத்திருக்கும் மாதிரிகளை பார்ப்பவர்கள் என்ன!அமர் இது கூடங்குளம் திட்டமா?(Project),தஞ்சை பெரிய கோவிலா? என்று கேட்க வேண்டுமே தவிர, இது என்ன என்று கேட்கக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக இருக்கிறார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பள்ளிகள், கல்லூரிகள், ஐ.டி. நிறுவனங்கள், விழாக்கள்(Parties), பி.எட் ஆசிரியர்களுக்கான திட்டங்கள்(Projects), பொறியியல், கலை கல்லூரிகள், திரைப்படத் தொகுப்பு(cinema sets), உருவப்படங்கள்(Cinema Cutout) என இவர் கை படாத இடமே கிடையாது என்று தாராளமாக சொல்லலாம். நவராத்திரி கொலுக்களிலும் இவர் கைவண்ணம் கட்டாயம் இருக்கும்.

தெர்மோகோல், அட்டை (cardboard),போம்போர்டு, பாரிஸ்சாந்து (plaster of paris),வெள்ளை சிமெண்ட், மரம், நெகிழி பொருட்கள் (Plastic things) இவற்றை வைத்து, வேண்டியவர்களுக்கு விரும்பும் பொருட்களை வடிவமைத்துக் கொடுக்கும் கலையுலக வித்தகர் என்று அமர்நீதியை சொல்லலாம். சலியாத உழைப்பு, தன் கை, தன்னம்பிக்கை இவைமூன்றும் இவரது பலமாகும்.

பெற்றோரும், மனைவியும் ஒரு புறம் என்றால் வாடிக்கையாளர்கள் ஒருபுறம் என்று அமர்நீதியின் ஆதரவு பட்டியல் நீளுகிறது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்கும் இந்த கவின் மிகு கலைப்பொருட்களை செய்ய தயாராக இருக்கும் அமர்நீதிக்கு, உலகெங்கும் வாடிக்கையாளர்கள் அமைய நாமும் வாழ்த்துவோம். மகளிர் பொருட்காட்சிகள் மற்றும் இவரது கைத்திறனை கற்றுக்கொள்ள வரும் எல்லோருக்கும் இவர் கற்றுத்தரவும் தயாராக இருக்கிறார்.

 


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கையிலே கலைவண்ணம் கண்டான்”

அதிகம் படித்தது