மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கூடங்குளத்தில் கூடுவோம்

ஆச்சாரி

Dec 11, 2011

கூடங்குளத்தில் அணு உலைத் திட்டத்தை நிறுத்துவதற்கு அப்பகுதி மக்கள் அரசுடன் 23 ஆண்டுகளாக போராடிவருகிறார்கள். கூடங்குளம் அணு உலை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை முன்னாள் பிரதமர் ராசீவ் காந்தி இரசிய அதிபர் கோர்பசேவ் உடன் 1988 நவம்பர் 20 ஆம் தேதி கையொப்பமிட்டார். இந்த ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளாகவே கூடங்குளப் பகுதி மக்கள் இத்திட்டத்தை கைவிடக்கோரி போராட்டத்தை தொடங்கினர். 1989 மே தினம் அன்று இத்திட்டத்தை எதிர்த்து மீனவர்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிர் இழந்தார், இருவர் படுகாயமடைந்தனர். மக்கள் தொடர்ந்து 23 ஆண்டுகளாக போராடி வந்தாலும் அரசு இத்திட்டத்தை கைவிடுவதாக இதுவரை இறங்கி வரவில்லை.

இதே போன்ற ஒரு நெடிய போராட்டத்தை பல ஆண்டுகளாக நடத்தி வெற்றிகரமாக ஒரு அணு உலை திட்டத்தை நிறுத்தி இருக்கிறார்கள் ஜெர்மனியில் ஒரு கிராமத்தினர். அவர்களின் போராட்ட வரலாறு நமக்கு ஒரு நல்ல வழிகாட்டி.

ஜெர்மனியின் தென்மேற்கு மூலையில் திராட்சைத் தோட்டங்கள் நிறைந்த மலைச்சரிவிற்கு அருகில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் வைல் (Whyl). 1971 ஆம் ஆண்டில் அணு உலை கட்டுவதற்கு வைல் சிறந்த பகுதியாக இருக்கும் என்றொரு செய்தி வைல் மக்களின் வாழ்வில் இடியாக இறங்கியது. அப்பகுதி விவசாயிகளும் இளைஞர்களும் சிறு சிறு குழுக்களாக அமைத்து அணு உலை எதிர்ப்பு பரப்புரைகளை தொடங்கினர். 1974 ஜூலையில் அரசு முறைப்படி கருத்து கேட்கத் தொடங்கும் முன்னதாகவே திட்டத்தை கைவிடக்கோரும் மனுவில் 90,000 மக்கள் கையொப்பமிட்டு அரசிடம் சமர்பித்தனர். 1974 ஆம் ஆண்டு இறுதியில் அப்பகுதி மக்களில் 75 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் அணு உலையை கடுமையாக எதிர்த்தனர். அரசு தரப்பினரோ நேர்மாறான நிலைப்பாட்டில் இருந்தனர். பொருளாதார அமைச்சர் ருடால்ப் எபெர்லே நாட்டின் மின் துறை கொள்கைகளின் வாழ்வும் வீழ்வும் வைல் மக்களின் கைகளில் இருப்பதாக அறிவித்தார். மற்றொரு அமைச்சர் ஹான்ஸ் பில்பிங்கேர் வைல் அணு உலை கட்டப்படாவிட்டால் பத்து வருடங்களில் நமது விளக்குகள் அனைத்தும் அணைந்துவிடும் என்று மக்களை அச்சமூட்டினார். அணு விஞ்ஞானிகளும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நாட்டின் நலனிற்காக வைல் அணு உலை அவசியம் தொடங்கப்பட வேண்டும் என்று கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

போராட்டத்தின் தொடக்க காலங்களில் மக்கள் நீதிமன்றத்தை பெருமளவில் நம்பி சட்டப் போராட்டங்களில் கவனம் செலுத்தினர். அணு உலை பாதுகாப்பு, நீர் தேவைகள், சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் பாதிப்பு என்று பல கோணங்களில் அரசிடம் கேள்விக்கணைகளை தொடுத்தனர் மக்கள். நீதி மன்றங்களில் மக்களின் கோரிக்கைகள் தள்ளுபடி செய்யப்பட்டன. 1974 ஜூலை மாதம் அரசு மக்களிடம் கருத்துக் கேட்பை நடத்தியது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து எதிர்ப்புக் கருத்துக்களை கொட்டினர். அரசு தரப்பிலோ இந்த கருத்துக் கேட்பு நிகழ்வு ஒரு சடங்கை போன்று தான் நடத்தப்பட்டது. கருத்துக் கேட்பு நிகழ்வின் இரண்டாம் நாளில் “ஜனநாயகம் மரணமடைந்து விட்டது” என்று எழுதிய சவப்பெட்டியை மக்கள் ஊர்வலமாக கொண்டுவந்ததில் கோபமடைந்து கருத்து கேட்பு நிகழ்வை பாதியில் நிறுத்தியது அரசு.

ஜெர்மானிய சட்டப்படி நிலத்தை அணு உலை நிறுவனத்திற்கு ஒதுக்குவதற்கு உள்ளூர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்த வாக்கெடுப்பை மலை போல் நம்பியிருந்தனர் வைல் மக்கள். இந்த வாக்கெடுப்பில் தோல்வியடைந்து விடக்கூடாது என்று முழுத் தீவிரமாக களமிறங்கியது அரசு. அணு உலை திட்டத்தால் வைல் பகுதிக்கு சாலைகள், மருத்துவமனைகள், பூங்காக்கள், அரசு அலுவலங்கள் போன்ற பல வசதிகள் கிடைக்கும் என்று அரசு தரப்பில் இருந்து வலுவான பரப்புரைகள் செய்யப்பட்டன. மேலும் அதிக சம்பளத்துடன் உள்ளூர் மக்களுக்கு வேலைகள், நீச்சல் குளம் போன்ற கவர்ச்சித் திட்டங்களையும் அறிவித்தது அரசு. அனைத்திற்கும் மேலாக வாக்கெடுப்பு முடிவு அணு உலை திட்டத்திற்கு எதிராக அமைந்தால் வைல் மக்களிடம் இருந்து நிலம் பறிக்கப்பட்டு கொடுக்கப்படும் என்று அச்சுறுத்தல் செய்தியையும் பரப்பியது அரசு. பரபரப்பான நிலையில் நடந்த வாக்கெடுப்பில் குறைந்த அளவு வித்தியாசத்தில் அணு உலை திட்டத்திற்கு ஆதரவு கிடைத்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த எதிர்பாராத தோல்வியில் நிலைகுலைந்து விட்டனர் வைல் மக்கள். அரசு போராடும் மக்களை பைத்தியக்காரர்கள் என்று கிண்டலடித்தது.

1975 பிப்ரவரி 17 ஆம் தேதி அரசு ஆரவாரத்துடன் அணு உலை கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது. அனைத்து போராட்டங்களும் தோல்வியடைந்த நிலையில் நேரடி செயலில் இறங்க முடிவு செய்தனர் மக்கள். மறுநாளே பிப்ரவரி 18 ஆம் தேதி குடும்பம் குடும்பமாக சென்று அணு உலை கட்டுமானப் பகுதியில் கூடாரம் அடித்து தங்கினர். இரண்டு நாட்கள் பொறுத்து பார்த்த அரசு பொறுமை இழந்து காவல் துறையினரை வைத்து வலுக்கட்டாயமாக மக்களை அப்புறப்படுத்தியது. விவசாயிகளையும், அவர்களது குடும்பப் பெண்களையும் காவல் துறையினர் புழுதியில் இழுத்து செல்வதை தொலைக்காட்சியில் பார்த்த மக்கள் நாடு முழுவதும் வைல் மக்களுக்காக ஆதரவு குரல் கொடுக்கத் தொடங்கினர். பல உள்ளூர் காவல் துறையினர் இந்த அரசு பயங்கரவாதத்தில் ஈடுபட மறுத்து பணியிலிருந்து விடுப்பில் சென்றனர். போராட்டத்திற்கு ஆதரவளிக்காத அனைத்து அரசியல் கட்சிகளையும் கண்டித்து வைல் பகுதியை சுற்றி இருந்த கட்சி கிளைகளை தொண்டர்களே கலைத்தனர்.

இந்த நெருக்கடியான நேரத்தில் அருகில் இருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மக்களுக்கு ஆதரவாக களமிறங்கினர். ஒரு சில தினங்களில் பிப்ரவரி 23 ஆம் தேதி மீண்டும் மக்கள் அணு உலை கட்டப்படும் இடத்தை ஆக்கிரமித்தனர். இந்த முறை மாணவர்களின் பலமான ஆதரவும் இருந்ததால் 30,000 மக்களுக்கு மேலானவர்கள் களம் இறங்கி ஆக்கிரமித்தனர். அரசு செய்வதறியாமல் திகைத்தது. முப்பதாயிரம் மக்களை பலவந்தமாக அப்புறப்படுத்த இயலாது என்பதை உணர்ந்த அரசு அவர்களாகவே கலைந்து போகும் வரை காத்திருப்பது என்று முடிவு செய்தது. ஆனால் மக்களோ பத்து மாதத்திற்கும் மேலாக அதே இடத்தில் கூடாரங்களை குடிசைகளாக மாற்றி வாழத்தொடங்கி விட்டனர். வேறு வழியின்றி அரசு பத்து மாதத்திற்கு பின்னர் பேச்சு வார்த்தையில் இறங்கியது. ஒரு குழு அமைத்து மக்களின் கோரிக்கைளை ஆராய்வதாக உறுதி அளித்து மக்களின் ஆக்கிரமிப்பை கைவிடச் செய்தது. இந்த கண் துடைப்பு ஆய்வுகளை அரசு செய்து கொண்டு இருக்கும் நிலையிலே, 1977 மார்ச்சில் ஒரு நீதிமன்றம் அணு உலை கட்டட அனுமதியை ரத்து செய்தது. பின்னர் வழக்கம் போல் உயர் நீதி மன்றம் இந்த தீர்ப்பை தள்ளுபடி செய்து மீண்டும் கட்டட அனுமதியை வழங்கியது. மக்களின் போராட்டத்தை தணிக்க அரசு சில வருடங்கள் திட்டத்தை ஆறப்போட்டது. மீண்டும் 1982 இல் அணு உலை கட்டத் தொடங்கப் போவதாக அறிவித்தது அரசு. இந்த முறை மக்கள் மிகப் பெரிய அளவிலான ஒத்துழையாமை நடவடிக்கையில் இறங்கப்போவதாக அறிவித்தனர். மக்களின் தொடர்ந்த எதிர்ப்பிற்கு அஞ்சி அரசு முழுமையாக அணு உலை திட்டத்தை கைவிட்டது. உறுதியுடன் இறுதிவரை போராடி அணு உலை திட்டத்தை வெற்றிகரமாக நிறுத்தி விட்டனர் வைல் மக்கள்.

வைல் மக்களின் போராட்டங்களை எவ்வாறு ஜெர்மானிய அரசு ஒடுக்க முயன்றதோ அதே போன்று தான் நமது அரசும் கூடங்குள மக்களின் போராட்டங்களை ஒடுக்கி வருகிறது. மேலும் இங்கு ஊடகங்களும் கூடங்குள மக்களின் போராட்டத்திற்கு எதிராக கடுமையான பரப்புரைகளை செய்துவருகின்றன. வைல் மக்கள் தொடக்கத்தில் செய்ததைப் போன்ற பரப்புரைகள், அரசிடம் கேள்விகனைகளைத் தொடுத்தல், பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுதல் போன்ற போராட்ட வழிகளில் தான் கூடங்குள மக்களும் போராடி வருகின்றனர். வைல் மக்களின் போராட்ட வெற்றிக்கு இரண்டு முக்கிய காரணங்களைக் கூறலாம். ஒன்று மாணவர்களின் பங்களிப்பு, இரண்டாவது அவர்கள் அணு உலை இடத்தினை ஆக்கிரமிப்பு செய்தது. இந்த இரண்டு செயல்களும் கூடங்குள மக்களின் போராட்டத்திற்கு வெற்றியைத் தேடித்தரும்.

உலக அளவில் மாணவர்கள் பங்கேற்கும் எந்த போராட்டமும் தோல்வி அடைவதில்லை. தமிழக வரலாற்றில் நடந்த பெரிய போராட்டமான இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் வெற்றியில் மாணவர்களின் பங்கு அளப்பெரியது. ஆனால் அதற்கு பின்னர் தமிழகத்தில் மாணவர்கள் எந்த போராட்டங்களிலும் தீவிரமாக களம் இறங்குவதில்லை. மாணவர்கள் நாட்டிற்காக உழைப்பதற்கு முன் வரவேண்டும். நாட்டிற்கு உழைப்பது என்றால் இராணுவத்தில் சேர்ந்து போர்க்களத்தில் நின்று சண்டையிடுவது மட்டுமில்லை. மக்களுக்கு ஆதரவாக எந்த களத்தில் நின்றாலும் அது நாட்டிற்கான உழைப்பே, போராட்டமே. ஊழலுக்கு எதிராக நிற்பவர்களும், சாதியக்கொடுமைகளுக்கு எதிராய் நிற்பவர்களும், முல்லை பெரியாரில் புதிய அணை கட்டுவதற்கு எதிராக நிற்பவர்களும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நிற்பவர்களும் அனைவருமே நாட்டிற்காக உழைப்பவர்களே. இவர்களைப் போன்ற சமூக போராளிகள் இராணுவத்தில் சம்பளத்திற்காக போராடும் பெரும்பாலான வீரர்களை விட மிகச் சிறந்த வீரர்கள். இந்த சமூகப் போராளிகளைப் போற்றி புதிய புறநானூறு எழுதினாலும் தகும். இது போன்று போராட்டங்களில் மாணவர்கள் தங்களை இணைத்து நாட்டிற்கு பங்களிக்க வேண்டும். குறிப்பாக தற்போது கூடங்குள போராட்டத்திற்கு மாணவர்கள் முன்வர வேண்டும். கூடங்குளம் இடிந்தகரை மக்களை அரசும், ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் கைவிட்டு விட்ட நிலையில் மாணவர்களால் மக்களுக்கு பெரிய அளவில் உதவ முடியும். இடிந்தகரையை விடிந்தகரையாக ஆக்கும் மந்திரம் மாணவர்களிடம் இருக்கிறது.

தமிழகமெங்கும் இருந்தும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூடங்குளத்தை நோக்கி கூட்டம் கூட்டமாக வரவேண்டும். “கூடங்குளத்தில் கூடுவோம்” என்கிற கோசம் தமிழகமெங்கும் ஒலிக்க வேண்டும். இலட்சக்கணக்கான மக்கள் கூடங்குளத்தை முற்றுகையிட்டால் அரசு இறங்கி வந்தேயாக வேண்டும். அந்நிலையில் அரசிற்கு திட்டத்தை கைவிடுவதைத் தவிர்த்து வேறு வழி இருக்காது. அரசிடம் மக்கள் கையேந்தும் நிலை சென்று அரசு மக்களிடம் அரசு மன்றாடும் நிலை வர கூடங்குள மக்களுக்கு மாணவர்கள் கைகொடுக்க வேண்டும்.

Exercise on a separate sheet of paper, practice summarizing by writing a onesentence summary of the same passage http://www.writemypaper4me.org that jorge already summarized

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

8 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “கூடங்குளத்தில் கூடுவோம்”
  1. வேல் says:

    உரிமை இழந்தால் வாழ்வு இழப்பாய் தமிழா…. உரிமைக்கு இன்று உழைக்க மறுத்தால் நாளை வாழ்வே இழக்க நேரும். ஓன்றுசேர்வோம் , போராடுவோம்….. உரிமை காப்போம்!

  2. Prem says:

    சிறப்பான கட்டுரை.மிகவும் பயனுள்ளது. ஒரு சிறிய வேண்டுகோள்.கூடங்குளம் பகுதியில் உள்ள மீனவர்கள்,விவசாயிகள்,கூலி தொழிலாளிகள் என அனைவரும் சாதி,மதம்,இனத்தை கடந்து இணைந்து போராடுகிறார்கள். ஆகவே கடைசி வரியில் உள்ள மீனவர்கள் என்பதோடு விவசாயிகள்,கூலி தொழிலாளிகள் என்பதையும் இணைத்து “கூடங்குளம் பகுதி மீனவர்கள்,விவசாயிகள்,கூலி தொழிலாளிகளுக்கு மாணவர்கள் கைகொடுக்க வேண்டும்” என எழுதினால் அது உண்மை நிலையை பிரதிபலிக்கும்.( மத்திய அரசு ஏற்கனவே இதை மீனவர்கள் போராட்டம் என குறுக்க பார்த்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். நன்றி.

    • admin says:

      கடைசி வரியில் மீனவர்கள் என்று எழுதியிருந்ததை தாங்கள் பரிந்துரைத்தன்படி பொதுவாக மக்கள் என்று மாற்றியிருக்கிறோம். உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.

  3. Navaneetha Thangamani says:

    நன்றி நண்பா. சரியான தருணத்தில் உங்களுடைய கட்டுரையை படித்தேன். இன்று முதல் நானும் போரட்டத்தில் கலந்து கொள்வேன.

  4. தில்லைக்குமரன் says:

    அருமையான கட்டுரை. அனைவரும் படிக்க வேண்டியது. தொடர்ந்து போராடினால் மக்களே வெற்றியடைவார்கள் என்பது தெளிவு.

  5. Anbarasan says:

    அருமயான கட்டுரை…..வாழ்த்துக்கள்…..

  6. kasi visvanathan says:

    வரலாறு நெடுக சொந்த மக்களை ஏய்க்கும் அரசாங்கங்களை மக்கள் நீண்ட போராட்டத்தில் தான் முறியடிக்கின்றனர். ஆவர்களுக்கு அஙுகு கிடைத்த ஆதரவு இங்கும் கிடைத்தால் அது நாம் மனிதனாக வாழ்ந்ததாக உணர்த்தலாம்.

  7. ஜேம்ஸ் says:

    அருமையான கட்டுரை. அடுத்த கட்ட போராட்டத்திற்கான யுக்தியை வகுக்க நிச்சயமாக உதவும்.

அதிகம் படித்தது