மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வருங்கால தலைமுறையின் வாழ்வு முறைகள் எப்படி இருக்கும் தெரியுமா?

சித்திர சேனன்

Jun 6, 2015

varungaala thalaimurai4

  • ஆண் துணை இல்லாமலே குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலை இன்றே உருவாகியுள்ளதால் வரும் காலத்தில் பெண்கள் ஆண் துணை இல்லாமலே வாழ்வர்.
  • கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை சிதைந்து இன்று தனிக்குடித்தனமானது. நாளை தனிக்குடித்தன முறை ஒழிந்து தனித்தனியாக வாழ்வர்.
  • வீட்டு விசேசத்திற்கு பத்திரிக்கை நேரில் வந்து தருவது குறைந்து குறுஞ்செய்தியாக அழைப்பிதழ் வந்து சேரும். இந்த அழைப்பிதழில் விசேச வீட்டார் வங்கி கணக்கு எண் இருக்கும். வர முடியாதவர்கள் மொய்ப் பணத்தை நேரடியாக அவர்கள் கணக்கில் செலுத்த நேரும். தரவேண்டிய அன்பளிப்புகள்(Gift) கொரியரில் வந்து சேரும்.
  • பாடத்தை மாணவர்கள் பள்ளி சென்று படிக்கும் நிலை மாறி, தன் வீட்டிலேயே உள்ள கணினியில் எங்கோ இருக்கும் ஆசிரியர் பாடம் நடத்த இங்கேயே படித்துக் கொள்வர். புத்தகங்கள் எல்லாம் குறுவட்டுகளாகவும், பென்டிரைவாகவும் மாறிவிடும். தேர்வை தனது கணினியிலேயே எழுதி உரிய ஆசிரியருக்கு மின்னஞ்சல் அனுப்புவர்.
  • நேர்முகத்தேர்வு ஒழிந்து கணினியிலேயே நேர்முகத்தேர்வு நடக்கும்.
  • அலைபேசியை அதிகம் காதில் வைத்துப் பேசுவதால் இனி பன்றி காது, மலேரியா காது, காது குனியா போன்ற புதுப்புது நோய்கள் வரலாம்.
  • அலைபேசி கதிர்கள் மூளையைத் தாக்குவதால் சிந்திக்கும் திறன் குறைந்து, பழுதுபட்ட மூளையை வைத்துக்கொண்டு மருத்துவரிடம் சென்று மொத்த சொத்தையும் இழக்கும் நிலை உருவாகும்.
  • படிக்கும் (வாசிக்கும்) கலாச்சாரம் குறைந்து, பார்க்கும் கலாச்சாரம் பெருகி விட்டதால் கண் சம்பந்தப்பட்ட புதுப்புது நோய்கள் உண்டாகி கண் மருத்துவர்கள் கல்லா கட்டும் வழி பிறக்கும்.
  • ஓடி செய்யும் வேலைகள் குறைந்து இயந்திரத்தின் வருகையால் உட்கார்ந்து செய்யும் வேலைகள் பெருகும். அப்போது கண், கழுத்து, வயிற்றுப் பிரச்சனை, இடுப்பு வலி. மூலம், மூட்டுவலி என உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நோய்கள் பெருகி முழு நோயாளியாய் மாறி விடுவர். அப்போது தான் உழைத்து சேர்த்த பணமெல்லாம் மருத்துவச் செலவுக்கே கொட்டித் தீர்ப்பர்.varungaala thalaimurai1
  • நேராகச் சென்று பெண் பார்த்த காலம் மாறி இணையம், அலைபேசி மூலம் பெண் பார்க்கும் படலம் துவங்கும்.
  • சாப்பிட ஒட்டலுக்கோ, வீட்டுக்குத் தேவையான பொருள் வாங்கவோ எவரும் வெளியெ செல்ல சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டு அனைத்தையும் இணையத்திலேயே செய்து கொள்வர். ஆதலால் உணவகமும், சிறப்பங்காடிகளும் கூட்டம் இல்லாமல் காற்று வாங்கும்.
  • இன்றே காய்கறிகள் எல்லாம் மரபணு, ரசாயன காய்கறி என நச்சு தோய்த்த உணமாக மாறிவிட்ட நிலையில், எதிர்காலத்தில் இதை விட மோசமான நிலை உருவாகி நச்சே மூன்று நேர முழு உணவாகிவிடும். ஆனால் இது நச்சு என்று மக்களுக்குத் தெரியாதவாறு கடை முதலாளிகள் பார்த்துக்கொள்வர்.
  • 1 கிலோ சுத்தமான ஆக்சிஜன் ரூ.1000 வாங்கய்யா, வாங்கம்மா என நல்ல காற்றை தெருவில் கூவிக்கூவி விற்பர். அப்போது எவன் வீட்டில் அதிக ஆக்சிஜன் மூட்டை இருக்கிறதோ அவன் உலகப் பணக்காரனாய் அறியப்படுவான். இதிலும் பல ஊழல் நடக்கும்.
  • தியேட்டரில் புதுப்படத்தை வெளியீடு செய்த நிலை மாறி, நேரடியாக அலைபேசியிலேயே பட வெளியீடு செய்து கொள்வர்.
  • இன்று பாலியல் ரீதியாக எதுவெல்லாம் நம் பிள்ளைகளுக்கு தெரியக்கூடாது என பொத்திப் பொத்தி வளர்த்தோமோ அந்த விசயங்கள் எல்லாம் சாதாரண ஒன்றாக மாறிவிடும். “ப்பூ.. இவ்ளோ தானா” என அந்தத் தலைமுறை அலுத்துக் கொள்ளும்.
  • சாலைப் போக்குவரத்து குறைந்து ஆகாயப் போக்குவரத்து கொடிகட்டிப் பறக்கும். தமிழ்நாட்டில் ஒருவர் விமானம் ஏறி டெல்லியில் வேலை செய்துவிட்டு மாலை தமிழ்நாட்டில் உள்ள தன் வீட்டுக்கு வந்து விடுவார்.
  • நிலவிற்கு நேரடியாக ஆகாயப் போக்குவரத்து தொடங்கும். 1 மாத தேன் நிலவுச் சுற்றுலா என ஆகாயப் போக்குவரத்து நிறுவனங்களின் விளம்பரங்கள் வீதி தோறும் பறக்கும்.

varungaala thalaimurai2

  • விவசாய நிலங்கள் மிக மிக குறைந்து, உணவுக்காக அயல் நாட்டில் கையேந்தும் நிலை ஏற்படும். உணவுகள் குறுகி மாத்திரை வடிவங்களாய் மாறிவிடும். அப்போது மூன்று நேர உணவை ஒரு தீப்பெட்டிக்குள் அடைத்துச் செல்வர்.
  • நிலத்தடி நீர் குறைந்து விடும். ஆதலால் எந்த நாடு நீர் அதிகம் பெற்ற நாடோ அதுவே உலக பணக்கார நாடாக மாறும். அப்போது நீருக்காக உலகப் போர் துவங்கும்.
  • ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் சாதாரணமாக திருமணம் செய்து கொண்டு வாழும் நிலை உருவாகும். இவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கூட அளிக்கலாம். காரணம் இவர்களால் மக்கள் தொகை பெருகாது அல்லவா.
  • ஆகாயப் போக்குவரத்து அதிகரிப்பால் ஆகாயத்தில் அதிக விபத்து நடக்கும். சாவு எண்ணிக்கை கொத்துக் கொத்தாக உயரும்.
  • நிலத்தில் உள்ள கனிம வளங்களை எல்லாம் சுரண்டி சுரண்டி வரும் நிலையால் ஒரு கட்டத்தில் பூமியெங்கும் எலிப் பொந்துகளாகவும், குகைகளாகவும் காட்சி தரும். அதிக மக்கள் தொகை பெருக்கத்தால் வீடு இல்லாதவர்கள் அந்த குகைகளில் குடி இருக்கும் நிலை ஏற்படும். அந்த குகையையே வாடகைக்கு விட்டுப் பிழைக்கும், முதலாளிக் கூட்டங்கள் முளைக்கும்.
  • விவசாயத்திற்கு நிலம் இருக்காது, குடிக்க நீர் இருக்காது, உண்ண உணவும், உறங்க இடமும் இருக்காது. அப்போது எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே பெருகுவதன் தொடர்ச்சியாக கொள்ளை, கொலை, திருட்டு, உணவு அபகரிப்பு, நீர் அபகரிப்பு என கொடுஞ்செயல்களின் கூடாரமாக பூமி மாறும்.
  • நிலத்தில் மக்கள் தொகை பெருகிவிட்டதால் கடலில் சிறு சிறு கப்பல் வீடுகள் முளைக்கும். அதில் குடியேறி குடும்பம் நடத்தும் நிலை உருவாகும்.
  • ஒரு புறம் துன்பங்கள், துயரங்கள் அதிகம் பெருகப் பெருக, மறுபுறம் வழிபாடுகள், வேண்டுதல்களால், நேத்திக்கடன்கள் பெருகும். 24 மணி நேரமும் மக்கள் வந்து போகும் இடமாக கோயில்கள் மாறும்.
  • நீரில்லாமல் விவசாயம் பண்ண முடியாத நிலை உருவானதின் காரணமாக மண்ணில் சாதாரண ஆடை உடுத்தியவர் கோடீஸ்வரராகவும், இலை தழைகளை உடுத்தியவர்கள் ஏழைகளாகவும் கணக்கிடப்படுவர்.
  • இன்று மெட்ரோ பாலிடன் நகரங்கள் என உலகளவில் எந்தெந்த நகரை எல்லாம் கூறுகிறோமோ அந்த நகரங்களில் எல்லாம் மோசமான நில நடுக்கமோ, பூமி அதிர்வோ ஏற்பட்டு பெரும் சீரழிவு ஏற்படும். காரணம் வளர்ந்த நகரங்களின் பிரதான சாலைகளுக்கு அடியில் கழிவுநீர் கால்வாய் ஓடுவதின் விளைவாக மண்ணின் கெட்டித்தன்மை குறைந்து உயர்ந்த வீடு, கட்டிடங்கள் எல்லாம் சரிந்து விழும்.
  • இவ்வாறாக இயற்கையை அழித்து அழித்து வரும் மனிதனின் செயல்பாடுகளால் இந்த உலகமே நீரால் அழியும் நிலை உருவாகும்.


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வருங்கால தலைமுறையின் வாழ்வு முறைகள் எப்படி இருக்கும் தெரியுமா?”

அதிகம் படித்தது