மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மூலிகைகளின் முதல்வன்

சா.சின்னதுரை

Jun 27, 2015

mooligaigalin3புதர்மண்டி, பொதுமக்களின் திறந்தவெளி  கழிப்பிடமாக இருந்த ஒருஇடத்தை சீரமைத்து, 1,000க்கும் மேற்பட்ட அரிய மூலிகைகளை வளர்த்துள்ளார் சித்தமருத்துவர் ஒருவர்!

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நெல்லை மாவட்டம் பாபநாசத்தில், பாபநாசசாமி திருக்கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தைச் சுற்றி, புதர்கள்மண்டியும், பொதுமக்களின் கழிப்பிடமாகவும், துர்நாற்றம் வீசக்கூடிய இடமாகவும் இருந்து வந்தது. இன்று அதை அடியோடு மாற்றியமைத்து, மூலிகை மணம் வீசிக்கொண்டிருக்கும்படியாக, 1.5ஏக்கர் பரப்பளவில் மூலிகைத் தோட்டம் அமைத்துள்ளார் சித்தமருத்துவரும், உலகத் தமிழ் மருத்துவக்கழகத் தலைவருமான மைக்கேல் ஜெயராஜ். தமிழ் மருத்துவத்தின் நிறுவனர்களான சித்தர் பெருமக்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, ‘பதினெண் சித்தர் மூலிகைப் பொழில்’ என இதற்குப் பெயரிட்டுள்ளார். இத்தோட்டத்தை உருவாக்க மைக்கேல் ஜெயராஜ் எடுத்த முயற்சிகளும், பிரயாசங்களும் நம்மை வியக்க வைக்கின்றன.

mooligaigalin1”இது காட்டு உருத்திராட்சம்,நெஞ்சுசளியை அகற்றிப் போடும். இது சீமையத்தி, இருதயத்திற்கு நல்லது. இது செவ்வரளி, தொழுநோயை குணமாக்கும். இது சிவப்பு அம்மன் பச்சரிசி, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். இது இலுப்பை, நீரிழிவு நோயை குணமாக்கும்…’’ இதைப் போல் மைக்கேல் ஜெயராஜ் நம்மிடம் விளக்கிய மூலிகைகள் ஆயிரக்கணக்கானவை. அரியவகை மூலிகைகளின் பெயர்களையும் அதன் மருத்துவப் பயன்களையும் அங்குப் பார்க்க முடிகிறது. பெரும்பாலான மூலிகைகளின் பெயர்கள்நாம் இதுவரை கேள்விப்பட்டிராதவை.   எந்த சீதோஷ்ண நிலையில் வளரும் தாவரங்களாக இருந்தாலும், தனது தோட்டத்தில் செழிப்பாக வளரவைத்துள்ளார் இவர்.  அதிகப் படியான மழையளவு பெறும் வனத்தில் மட்டுமே வளரக்கூடிய மலைப்பூவரசு, காட்டுஅழிஞ்சில்,  கல்வாழை, மலைசவுக்கு போன்ற பல்வேறு வகையான அரிய மரங்கள், தாவரங்கள் இவரது தோட்டத்தில் செழித்து வளர்ந்துள்ளன.

”பாழடைந்து கிடந்த இந்த இடத்தை சீரமைப்பதற்காக பலஆண்டுகளாக அலைந்து திரிந்தேன். ஒரு சமயத்தில், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமிருந்து முறையான அனுமதி கிடைத்தது. பின்பு, பொதிகைமலை, கொல்லிமலை, ஜவ்வாதுமலை, ஏற்காடு மலை மற்றும் வயல் வெளிகளில் 20 ஆண்டுகளாக தேடித்தேடி சேகரித்த மூலிகைக் கன்றுகளைக் கொண்டு, சுமார் 3 வருட உழைப்பால் இம்மூலிகைத் தோட்டத்தை உருவாக்கி முடித்தேன்.

mooligaigalin2தேவதாரு, கற்பூரம், அகில், நீர்க்கடம்பு என 300 க்கும் மேற்பட்ட மரங்களும், சீந்தில், கோவை சிறுகுறிஞ்சான், பெருங்குறிஞ்சான் என 100க்கும் மேற்பட்ட கொடிகளும், நீலக்கொடுவேலி, செம்பரத்தை வெள்ளை என 300 க்கும் மேற்பட்ட புதர்தாவரங்களும், மஞ்சள்கரிசாலை, கொட்டைகரந்தை, யானைநெருஞ்சில் என 250 க்கும் மேற்பட்ட ஒருபருவத் தாவரங்களும் கருமஞ்சள், கஸ்தூரிமஞ்சள் என 50க்கும் மேற்பட்ட கிழங்கு வகைகளும், பதினெண் சித்தர் மூலிகைப் பொழிலில் உள்ளன. இப்போது நாம் சமையலுக்கு பயன்படுத்தும் புளி, அரபுநாட்டை பிறப்பிடமாக கொண்டது. நம் மண்ணிற்குரிய குடம்புளி,பிணர்புளி, ராஜபுளி, புளிச்சங்காய் போன்ற புளிவகை மரங்களை இங்கு வளர்த்து வருகிறேன். இதற்கென தானியங்கி நீர்பாய்ச்சும் கருவிகளும் வைத்துள்ளேன். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன்.

இன்றைக்கு தமிழ்மொழி பல வழிகளில் அழிந்து வருகிறது. ஆனால் மூலிகைகளின் பெயர்களில் தான், எந்த மொழிக்கலப்பும் இல்லாமல் தமிழ்வாழ்ந்து வருகிறது. ‘வெயில் நுழைவறியா குயில் நுழைபொதும்பர்’ என்ற சங்கக்காலப்பாடலின் படி, வெயில் நுழைய முடியாத அளவிற்கு பசுமையான அடர்த்தியை இந்த இடத்தில் உருவாக்குவதுதான் என்கனவு. தற்போது, 1000க்கும் மேற்பட்டமரங்கள், தாவரங்கள் இங்கு காணப்படுகின்றன. இப்பொழில் மூலம் சுத்தமான நறுமணக் காற்று கிடைக்கிறது. அரியவகை பறவையினங்களை காலை, மாலை வேளைகளில் இங்கு காணமுடிகிறது. ஏராளமான வண்டுகள், வண்ணத்துப்பூச்சிகள், தட்டான்கள் சுற்றி வருகின்றன. ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்கள் வளர்ச்சி பெற்றுள்ளன. பாபநாச மக்கள் காலையில் நடைப்பயிற்சிக்காக இங்கு வந்துசெல்கிறார்கள். இதன் மூலம் அவர்களது உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்வு கிடைக்கிறது. மூலிகைத் தோட்டத்தை சுற்றி நடப்பதற்கு வசதியாக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலமாற்றத்தின் கோலம், இன்று மூலிகைகளின் பெயர்கள் கூட பலரும் அறியாநிலை உள்ளது. நம் அருகே பரவிக்கிடக்கும் மூலிகைகளை, களை என்று எண்ணி அழித்த நாம் இன்று அவற்றின் பயன்களை உணர்ந்து தேடும்போது அவை நம் கண்ணில் அகப்படுவதில்லை. மூலிகை வளங்களையும்,அவற்றின் பயனையும் இளைய சமுதாயத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் பதினெண் சித்தர் மூலிகைப் பொழிலை உருவாக்கியுள்ளேன். பள்ளி,கல்லூரி மாணவர்கள் எங்கள் மூலிகைத் தோட்டத்தை சுற்றிப் பார்க்க வரலாம். மூலிகைச் செடிகள், மரக்கன்றுகள் தேவைப்படுவோர் மற்றும் பள்ளியில் மூலிகைத் தோட்டம் அமைக்க விரும்புவோர் எங்களை தொடர்பு கொள்ளலாம். பணம்எதுவும் தேவையில்லை” என்கிறார், மைக்கேல் ஜெயராஜ்.

பதினெண் சித்தர் மூலிகைப் பொழிலில் மூலிகைகள் வளர்கிறது என்பதைவிட மூலிகைகள் வாழ்கிறது என்றே சொல்லலாம்.

தொடர்புக்கு: 98421 66097


சா.சின்னதுரை

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மூலிகைகளின் முதல்வன்”

அதிகம் படித்தது