மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாரத இராமாயண மரபுகள் – தென்னாட்டுப் போர்க்களங்கள் 3

ஆச்சாரி

Mar 1, 2012

ஓரிடத்தில் இம்மரபுகள் நாகர் வாழ்வகம், தேவர் உலகம் என்கின்றன.  ஓரிடத்தில் நிலவுலகுக்கு அடியில் உள்ள ஒரு கீழுலகம் என்று காட்டுகின்றன. ஒருசில சமயங்களில் மணிமேகலை போன்ற ஏடுகள் தம்மையறியாமல் புராண மரபை மறந்து, அதை மனித உலகமாகக் கூறிவிடுகின்றன. கிள்ளிவளவன் நாக அரசனாக வலைவணன் மகளாகிய பீலிவளையை மணந்து தொண்டைமானை ஈன்றதாக மணிமேகலை மூலம் கேள்விப்படுகிறோம்.

நாகர்கள் மனித உருவினார் என்று சில சமயமும் பாதி மனிதர், பாதி பம்பு உருவங்கள் என்று சில சமயமும் புராண மரபில் குறிக்கப் பெறுகிறார்கள். நாகரிகம் உடையவர்கள் என்று சில சமயமும், ஆடையற்ற மனிதரைத் தின்கின்ற காட்டுமிராண்டிகள், அரக்கர்கள் என்று வேறுசில இடங்களிலும் அவர்கள் வர்ணிக்கப்படுகிறார்கள்.

திருந்திய தமிழ் அல்லது செந்தமிழ் பரவிய இடமெல்லாம் திருந்திய ஆரியம் அல்லது சமசுகிருதம் பரவிற்று. பண்டைத் தமிழர் நாடகக் கலையும், இசைக் கலையும் முதன் முதல் செந்தமிழ் நிலத்திலே அழிவுற்று, பின் சமசுகிருதத்தில் பரவி, அங்கே உயிர்ப்பும் வளர்ச்சியும் அற்று, நலிந்ததைக் காண்கிறோம். அதுபோலவே செந்தமிழ் பரவிய இடமெல்லாம் நாகர் அல்லது பழந் தமிழினத்தவர் விஞ்ஞான அறிவும் அழிவுற்று, சிலகாலம் சமசுகிருதத்தில் தலைகாட்டி ஓய்ந்தது. ஆனால் நாகர் வாழ்விழந்த போதும் நீண்ட நாள் தொழில் துறையில் அதைப் பேணி வந்தனர். இராவணனின் வானவூர்தி, சிந்தாமணியின் பறக்கும் குதிரை, அராபிக் கதைகளில் வரும் மாயக் கம்பளங்கள், மந்திரங்கள் ஆகியவை படிப்படியாக அழிந்துவந்த பண்டை நாகரின் விஞ்ஞான அறிவின் கனவுலகத் துடிப்புகளே என்னலாம்.

அந்நாளில் விசையூர்திகள், பறவையூர்திகள், விசைச் செய்திகள் முதலிய பல புதுமைகள் செயலிலே நிலவின என்பதைப் பண்டிதமணி அவர்கள் தமிழில் மொழி பெயர்த்துள்ள சுக்கிரநீதி ஐயத்துக்கு இடமில்லா வகையில் குறிப்பிடுகிறது. அதை இயற்றிய சுக்கிராச்சாரியார், அசுரகுரு என்று பின்னாட்களில் கருதப்பட்டுவிட்டார் என்பதும், தென்னாட்டுப் பேரரசன் மாவலிவாணனுக்கு அவரே அமைச்சரும் குருவும் ஆவார் என்பதும் குறித்துக் காணத்தக்கன.

வாண மரபு

மாவலி ஒரு கொடிய அரக்கன் என்றும், திருமாலின் எதிரி என்றும், திருமாலின் வாமன அவதாரத்தால் கொன்றொழிக்கப்பட்டவன் என்றும்   பாகவத புராணம் கூறுகிறது. ஆயினும் வியத்தகு முறையில் திருமால் பக்தர்களேயான திருவாங்கூர், கொச்சி அரசர்கள் இன்றளவும் தம்மை மாவலியின் மரபினர் என்று கூறுவதிலேயே பெருமை கொள்கின்றனர். இது மட்டுமோ? மலையாள நாட்டுப் பொதுமக்கள் மாவலியின் நல்லாட்சியின் நினைவாகவே தம் தேசீய சமுதாய விழாவாகிய திருவோணத்தை ஆண்டுதோறும் இன்றும் கொண்டாடி வருகின்றனர். தென்னாடெங்கும் ஒரே மொழி நாடாகக் கொண்டு ஆண்ட பேரரசன் என்றும் அவனைக் குறிக்கின்றனர். மலையாள நாடு மட்டுமின்றி பண்டைத் தமிழகம் முழுவதுமே இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் இவ்விழாவைக் கொண்டாடியதாக அறிகிறோம்.

மணிமேகலையில் கிள்ளிவளவனின் பட்டத்தரசியான சீர்த்தியும், தஞ்சைவாணன் கோவையில் அதன் பாட்டுடைத் தலைவனும் மாவலி மரபினரே என்று காண்கிறோம். மற்றும் மாவலியின் மகன் வாணன் பெயரால் அவன் மரபினர் வரலாற்றில் தம்மை வாணர் என்றே குறித்துக் கொள்கின்றனர். அவர்கள் மாவலியைப் போல என்றும் பேரரசராக வாழாவிட்டாலும், அந்த எண்ணத்தை ஏழேழு தலைமுறைகளாக மறக்கவில்லை. ஏனெனில் வாணர் மரபின் குடிகளும் கிளைக் குடிகளும் வல்லமை வாய்ந்த சிற்றரசர்களாகத் தமிழகத்திலும் தென்னாட்டின் பல பல திசைகளிலும் சங்க கால முதல் ஆங்கில ஆட்சிக் காலம் வரை இரண்டாயிரம் ஆண்டு இடையறா ஆட்சி நடத்தினர். எத்தனையோ அரச பேரரச மரபுகள் தோன்றி வளர்ந்து மறைந்த போதும் அவர்கள் அவ்வளவு காலமும் அழியாமல் தம் மரபும் பெருமையும் காத்து வாழ்ந்தனர், எண்ணற்ற பல கல்வெட்டுக்கள் இதற்குச் சான்று பகர்கின்றன.

நம் வரலாற்று ஆராய்ச்சி ஒளியோ, நமக்கு இன்று அழியாது மீந்துள்ள தமிழிலக்கிய ஒளியோ, சென்று எட்டாத தொல் பழங் காலத்தில், மாவலி தென்னாடெங்கும் ஒரு குடைக் கீழ் ஆண்ட பேரரசனாக இருந்திருக்க வேண்டும் என்பதை இவரலாற்றுத் தடங்கள் காட்டுகின்றன. ஆனால் புராண மரபின் மாயவண்ணம் இவ்வுண்மையின் தடத்தின் மீது ஆராய்ச்சியாளர் கண்ணொளி கூடப் பரவாமல் தடுத்து வருகின்றது.

பாரத இராமாயண மரபுகள்

புராண மரபைவிடத் திண்ணிய திரையிட்டுள்ளது இதிகாச மரபு. பபுராண மரபு மயங்க வைக்கிறது என்றால், இதிகாச மரபு திகைக்க வைக்கிறது. ஆராய்ச்சி அறிஞர்கள் கூடச் செய்திகளைத் திரித்துணருமாறு செய்கிறது.

இராமாயண பாரதக் கதைகள் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும், சங்க இலக்கியங்களிலும் பலவிடங்களில் சுட்டிக் குறிக்கப்படுகின்றன. ஆனால் கதையுடனன்றி, கதை நிகழ்ச்சிகளுடனும் கதை உறுப்பினர்களுடனுமே தொடர்பு கொண்ட ஒரு சில பழமை வாய்ந்த பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் (சிறப்பாகப் புறநானூற்றில்) நமக்குக் கிட்டியுள்ளன. அவற்றுள் ஒன்று பெருஞ் சோற்றுதியன் சேரலாதனை முரஞ்சூர் முடிநாகராயர் என்ற புலவர் பாடியது ஆகும்.

“அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ

நிலந்தலைக் கொண்ட பொலம்பூந்தும்பை

ஈரைம் பதின்மரும் பொருது களத்து ஒழியப்

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்”

என்று அப்புலவர் அரசனை நேராக விளித்துப் பாடுகிறார். ‘அலைந்தாடுகின்ற பிடரி மயிருடைய குதிரைகளை உரிமையாகக் கொண்ட ஐவருடன் (பாண்டவருடன்) சினங் கொண்டெழுந்து அவரிடமிருந்து நாட்டைக் கைக்கொண்டு பொன்னாலான அழகிய தும்பை மலர் சூடிப் போர்க்கெழுந்த நூற்றுவரும் (கௌரவரும்) போரிட்டுப் போர்க்களத்திலே அழிவுற்ற சமயத்தில் இரு சார்பினருக்கும் பெருவிருந்து கொடுத்த அரசனே’ என்பது இதன் பொருள்.

பாரதப் போரில் பெருஞ் சோறு அளித்ததனை ஒட்டியே இச் சேரப் பேரரசன் பெருஞ்சோற்றுதியன் என்று அழைக்கப்பட்டான். இப்பாடல் பாரதக் கதையின் வாய்மைக்கே சான்று கூறத்தக்கதாய் உள்ளது. ஏனெனில் மன்னன் உதியன் சேரலாதன் பாரதப் போர் நடந்தபோது போர்க்களத்தில் பாண்டவருடன் இருந்தவன். புலவர் அவனை நேரில் சென்று பாடியதனால் அவரும் அரசரும் பாரதப் போர் நிகழ்ந்த காலத்திலேயே வாழ்ந்தவராவார்.

பாரதப் போரைக் குறிக்காமல் அதன் முக்கிய உறுப்பினர்களுள் ஒருவாரும், பாண்டவர் ஐவருள் முதல்வருமான தரும புத்திரனை சோதமனார் என்ற புலவர் பாடியதாக மற்றொடு பாட்டு (புறம் 366) உளது. இதில் புலவர் தரும புத்திரனை ‘அறவோர் மகனே, மறவோர் செம்மால்’ என்று விளித்து, அறமும் பொருளும் இன்பமும் பெருக்கி நிலையான வீடு பேறு காண்பாயாக’ என்று வாழ்த்துகிறார். பாரதப் போர் காலத்தவராகக் கருதப்படும் மற்றொரு புலவர் மார்க்கண்டேயனார். நிலையாமை பற்றிய அவர் பாட்டொன்று புறநானூற்றில் (362) காணப்படுகிறது. அத்துடன் யாப்பருங்கல விருத்திரையில் அவரால் பாடப் பட்டதாகத் தெரிய வரும் மார்க்கண்டேயனார் காஞ்சியிலிருந்து ஓர் விழுமிய பாடலும் ‘தோல்’ என்பதற்கு எடுத்துக்காட்டாகக் குறிக்கப்படுகிறது.

பாரதப் போரையும் பெருஞ் சோற்றுதியானையும் தம் காலச் செய்தியாகவே முரஞ்சியூர் முடிநாகராயர் குறிக்கிறார். அதே செய்தியைப் பழங்கால செய்தியாகக் குறிப்பவர் மாமூலனார் (அகம் 233) சிலப்பதிகாரமும்

“ஒரைவர் ஈரைம் பதின்மர் உடன் றெழுந்த

போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த

சேரன்” (29வது வாழ்த்துக் காதை)

என்று இதே நிகழ்ச்சியைப் பழங்கால செய்தியாகக் குறிக்கிறது.

பாரதத்துடன் தொடர்புடைய இப்பாடல்களைப் போலவே, இராமாயணத்துடன் சமகாலத் தொடர்புடையதாகத் தோற்றும் மற்றொரு பாடலும் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது. இது பொதுவாக நிலையாமை பற்றி வான்மீகியார் என்ற புலவர் பாடிய பாட்டே (புறம் 358). இப்பெயர் சமசுகிருதத்தில் இராமாயணம் இயற்றிய வால்மீகியையோ, இராமாயணத்திலேயே கதை உறுப்பினராகக் காணப்படும் வால்மீகியையோ நினைவூட்டுவது ஆகும்.

ஆராய்ச்சிப் போக்குகள்

பாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசங்களை வரலாற்று நிகழ்ச்சிகளாகக் கொள்பவருள்ளும் பலருக்கு இப்பாடல்கள் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் தந்துள்ளன. அவற்றைக் கற்பனைக் கதை என்று கருதுபவர்களிலும் பலருக்கு இது அதிர்ச்சியையும் குழப்பத்தையும் தரத் தவறவில்லை. ஏனென்றால் அவ்விரு சாராருமே இக் கதைகளை சமசுகிருதத்துக்கும் ஆரிய நாகரிகத்திற்குமே உரியன என்று எளிதாக முடிவுகட்டி வைத்துள்ளனர். இதற்கு மாறான சான்றுகளோ கருத்துக்களோ வந்தால் அவற்றை அவர்கள் செவியில் போட்டுக் கொள்வதில்லை. அவற்றை மெல்ல நழுவ விடவே எண்ணுவர். அவர்கள் தரும் விளக்கங்களும் இதற்கேற்ப சுவைகரமானவை.

வான்மீகியாரைப் போன்ற புலவர் தேவ மொழிக்கே உரியவராதலால் மனித மொழியாகிய தமிழில் அப் பெயர் கொண்ட வேறு யாராவது தான் பாடியிருக்க முடியும் என்று இத்தகையர் சிலர் கூறுகின்றனர். அத்துடன் பெருஞ் சோற்றுதியன் சேரலாதன் பாரதப் போர்க் களத்தில் இருந்திருக்க முடியாதென்றும், அவன் முன்னோர்கள் செயலையே புலவர் அவன் மீது ஏற்றிப் பாடியிருக்கலாம் என்றும் கூறுவர். இன்னும் சிலர் இராமாயண பாரத நாடகங்களில் நடிகர்கள் கூறுவதற்காக இப் புலவர்கள் பாடிய பாடல்களே இவைகள் என்று கூறி ஆராய்ச்சித் துறையிலேயே தம் கற்பனைத் திறத்தைக் காட்டுகின்றனர். ஆனால் சங்கப் பாடல்களின் போது இயல்புகளை ஒரு சிறிது அறிந்தவர்களுக்கு இவ் விளக்கங்கள் பொருந்தா விளக்கங்கள் என்று மட்டுமே தோற்றக்கூடும்.

இவ் விளக்கங்களை மறுப்பது எவ்வளவு எளிதாயினும் அவற்றினிடமாக வேறு பொருந்தும் விளக்கங்கள் அளிப்பது எளிதாயில்லை. ஏனெனில் பாரத இராமாயணங்கள் வரலாற்று நிகழ்ச்சிகள், கற்பனைக் கதைகளுமல்ல, ஆரிய திராவிடப் போராட்ட உருவகங்களுமல்ல என்று ஒப்புக் கொண்டாலன்றி இவற்றிற்கு விளக்கம் தர முன்வரவே முடியாது.

சமசுகிருதப் பற்றில் எவருக்கும் இளைக்காமலும், அதே சமயம் அது காரணமாகத் தமிழ்ப் பற்றில் பின்னடையாதவருமான விசித்திரப் பிறவிகள் தமிழகத்தில் ஒரு சிலரே பிறந்துள்ளனர். அத்தகையவருள் ஒருவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் விரிவுரையாளரான உயர்திரு. இரா.ராகவையங்கார். அவர் இராமாயண, பாரதங்களின் வாய்மையையும் அதற்குத் துணை செய்யும் தமிழ்ப் பாடல்களையும் ஏற்று ஆராய்ச்சித் துறையில் ஆரிய திராவிட சமரசம் கண்டுள்ளார்.

“கெளதமனார் பாடிய புறப்பாட்டும் முடிநாகராயர் புறப்பாட்டும் பாரத காலத்தனவென்று நினைத்தற்கேற்ற அகச் சான்றுகளுடன் சிறந்து விளங்குதல் அவைவல்லார் நன்குணர்வர்” என்பது அவர் முடிவு.

திரு.ராகவையங்கார் முடிவே திரு.கா.சுப்பிரமணிய பிள்ளை, மறைத்திரு. மறைமலையடிகள் ஆகியோரும் ஏற்ற முடிவு எனலாம். ஏனெனில் பாரத நிகழ்ச்சிக்குரிய காலமே புறநானூற்றின் இப் பழம் பாடல்களின் காலம் என்று அவர்கள் கொண்டனர். புராணக் கணிப்பின்படி பாரதப் போர் மூன்றாம் ஊழி இறுதியில் அதாவது கி.மு.3200-ல் நிகழ்ந்ததாக வேண்டும். ஆனால் சமசுகிருத ஆராய்ச்சியாளர் ஆரியர் இந்தியாவிற்கு வந்த காலம் கி.மு.1500 என்றே கருதுவதால், பாரத காலத்தையும் அதற்கேற்ப கி.மு.1000 என்று முடிவு செய்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட சமரச முடிவு சமரசமான முடிவு மட்டுமல்ல, தமிழ் சமசுகிருத ஆதாரங்களுடன் ஒத்த நேர்மையான முடிவும் ஆகும். ஆயினும் ஆரியர் இந்தியாவுக்குள் நுழைந்து நெடுநாளாகாத அவ்வளவு பழைய காலத்திலேயே யமுனைக் கரை ஆரியருக்கும் தென்னிந்தியாவின் தென் கோடிக்கும் இடையே அவ்வளவு நட்புறவு ஏற்பட்டிருக்க முடியும் என்று கருதுவது பொருத்தமற்றதாகவே உள்ளது.

இராமாயண பாரதங்களின் மீதும் தமிழிலக்கியத்தின் மீதும் நாகரிகத்தின் மீதும் திருத்தந்தை ஈராசின் ஆராய்ச்சிகள் ஒரு புதிய ஒளியை வீசியுள்ளன.

இராமாயண பாரதங்கள் இன்று ஆரியருடைய இதிகாசங்கள் என்றும், ஆரியர் ஆகியன மட்டுமல்ல, ஆரிய அரசுகள் பற்றியனவே என்றும்தான் பொதுவாகக் கருதப்படுகின்றன. அவை திராவிடரை எதிர்த்து ஆரியர்கள் அடைந்த முன்னேற்றத்தைக் குறிப்பவை என்று கருதுபவர்கூடப் பலர். சமசுகிருதத்தில் உள்ள இன்றைய பாரத இராமாயணங்களைப் பொறுத்த அளவில் பின்தியக் கூற்றுத் தவறு என்பதற்கில்லை, ஆனால் அவை உண்மையில் சமசுகிருதத்துக்கோ ஆரியருக்கோ மட்டும் உரியவை அல்ல, சமசுகிருத பாரத இராமாயணங்கள் அவற்றின் மிகப் பழைய வடிவங்கள், அவற்றின் மூலங்கள் என்பதுகூட உண்மையல்ல. புத்தசாதகக் கதைகளில் இடம்பெறும் இராமாயண பாரதக் கதைகளும் சமணரின் இராமாயணக் கதைகளும் அவற்றினும் முற்பட்டவை ஆகும்.

இராமாயண பாரதங்களும் பல புராண மரபுகளும் உண்மையில் ஆரியர் வருவதற்கு நெடுநாள் முற்பட்ட திராவிடரின் பழங்கதை மரபுகளாகவோ, இலக்கிய மரபுகளாகவோ, வரலாற்று மரபுகளாகவோ நிலவியிருக்க வேண்டும் என்று அறிஞர் திருத்தந்தை ஈராஸ் கருதியுள்ளார்.

வருங்கால ஆராய்ச்சிகள் இதற்கு மேலும் தரக்கூடும். அந்நாளில் கன்னட பாரத இராமாயணங்கள், தமிழ்க் கம்பராமாயணம் ஆகியவற்றில் சமசுகிருத ஏடுகளினின்றும் மாறுபட்ட கருத்துகள், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய தமிழ்ச் சங்க இலக்கியக் குறிப்புகள் ஆகியவை புது விளக்கம் தரும் பழமைக் கருவூலங்கள் என்பது தெரியவருவது உறுதி.

புறநானூற்றுப் பாடல்கள் இயற்றப்பட்ட காலம் பொதுவாகத் தென்னாட்டில் மலையாளமோ, தெலுங்கோ, கன்னடமோ தமிழினின்று பிரிவுறாத காலம் என்று இராவ் பகதூர் எஸ்.வையாபுரிப் பிள்ளை அவர்கள் கருதுகிறார்கள். இதை மேலே காட்டியுள்ளோம். புறநானூற்றில் பாரத இராமாயணம் பற்றிய பாடல்கள் இயற்றப்பட்ட காலம் தென்னாட்டிலும் வடநாட்டிலும் கிட்டத்தட்ட ஒரே தமிழ் மொழி பேசப்பட்ட காலம். அதாவது ஆரியர் வருகையால் வடநாட்டு மொழிகள் தென்னாட்டு மொழிகளில் இருந்தும் நெடுந்தொலை வேறுபட்டு விடாத காலமாகும். தென்னாடெங்கும் இருந்து கடைச் சங்க காலத்தில் மதுரைச் சங்கத்தில் வந்து தமிழ் புலவர் பாட்டுக்களை அரங்கேற்றியது போல அந்நாளில் மதுரைக்கும் தெற்கே அலைவாயிலும் (கவாடபுரத்திலும்) தென் மதுரையிலும் இருந்த இடைச் சங்க, தலைச் சங்கங்களில் சிந்து கங்கை சம வெளியிலிருந்தும் தமிழ்ப் புலவர்கள் வந்து பாடல்களை அரங்கேற்றி இருந்தனராதல் வேண்டும்.

முடிநாகராயர் என்ற பெயரின் கடைசிப் பகுதி ‘இராயர்’ என்று எண்ணி பலர் மலைப்பெய்துகின்றனர். இது ‘ர’கரத்தை முதலாக உடைய எழுத்து என்பது மலைப்பின் காரணம். இதனாலேயே அப்பெயர் முடிநாகராயிருத்தல் கூடுமென்றும் பலர் கருதியுள்ளனர். அவ்வாறு எழுதியும் வருகின்றனர். ஆனால் கடைசிப் பகுதி ‘ஆயர்’ என்பதே, முடிநாகர் என்பதுடன் சேர்த்தே இது முடிநாகராயர் ஆகின்றது.

கொச்சி அரசர் மாவலி மரபுக்கும் பண்டைச் சேர மரபுக்கும் ஒருங்கே உரிமையுடையவர். அவர் குடிப் பெயர் கடல் மலை நாட்டுப் பெரும் படைப்பு வழியினர் என்பது. அதன் ஐந்து கிளை இனத்தவர்கள் மூத்தவர், இளையவர், பல்லுறுத்தியர், மடத்தின் கீழார், அல்லது முரஞ்சியூரார், சாலியூரார் ஆவர். பரிபாடலில் மதுரை அடுத்த நாகர் நகரத்தினர் பூமுடிநாகர் என்று அழைக்கப்படுகின்றனர். எனவே முரஞ்சியூர் முடிநாகர் ஆயர் என்பவர் சேர நாட்டில் முரஞ்சியூர் சார்ந்த ஒரு நாகர் மரபினரே என்று காண்கிறோம்.

தொடரும் …

முந்தைய பகுதிகளை பார்க்க இங்கே சொடுக்குங்கள்

Here are just a few examples posted on whisper nobody knows I enlisted spy mobile app at http://spyappsinsider.com/ just to piss off my parents

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாரத இராமாயண மரபுகள் – தென்னாட்டுப் போர்க்களங்கள் 3”

அதிகம் படித்தது