மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -15

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Mar 4, 2017

siragu-panjathandhira-kadhaigal

பின்னொரு நாள், சண்டை மூண்டதால், ஒரு பணியாளன் தன் கையிலிருந்த ஒரு தடியை சமையல்காரன்மீது வீசி எறிந்தான். சமையல்காரன், தன் கையிலிருந்த கொள்ளிக்கட்டையினால் அவனைத் திருப்பி அடித்தான். அது அருகிலிருந்த வைக்கோல் குவியல்மீது விழுந்ததால் அது தீப்பற்றி எரிந்தது. அந்தத் தீ குதிரை லாயத்திற்கும் பரவியது. சில குதிரைகள் தீயினால் இறந்தன. பல குதிரைகளுக்குப் பலவித தீக்காயங்கள் ஏற்பட்டன. உடனே அரசன் விலங்கு மருத்துவரை வரவழைத்தான்.

அரசன்: காயம் பட்ட குதிரைகள் பிழைப்பதற்கு என்ன வழி?

மருத்துவர்கள்: குரங்குக் கொழுப்பிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயைத் தடவி வந்தால் இந்தக் காயங்கள் பூரண குணமாகும்.

அரசன்: நமது தோட்டத்திலிருக்கும் குரங்குகளைக் கொன்று இந்த வைத்தியத்தை உடனே செய்யுங்கள்.

வைத்தியர்களும் அவ்விதமே குரங்குக் கூட்டத்தை முற்றிலுமாகப் பிடித்துக் கொன்று குதிரைகளின் தீப்புண்களை ஆற்றினர். இந்தச் செய்தி அறிந்த முதுகுரங்கு, இதற்குப் பழிவாங்கவேண்டும் என்று முடிவுசெய்தது. அது காட்டிலிருந்து நகர்ப்புறம் வரும் வழியில், ஒரு ஏரியைக் கண்டது. அதில் மனிதர்கள் வந்துசெல்வதற்கான அறிகுறி எதுவுமே இல்லை. ஆகவே இந்த ஏரியில் ஏதாவது பேய் இருக்கலாம் என்று கருதித் தயங்கியது குரங்கு. ஆனால் தாகம் அதிகமாக இருந்ததால், ஒரு தாமரைத் தண்டினை எடுத்து அதன் தூம்புவழியாக ஏரியின் நீரை உறிஞ்சிக் குடிக்கலாயிற்று. குளத்திலிருந்த பேய் அந்தக் குரங்கின் முன் தோன்றியது.

பேய்: உன் புத்திசாலித்தனத்தை மெச்சினேன். அதனால்தான் உன் முன் தோன்றினேன். இதோ இந்த இரத்தினத்தை நீ என் பரிசாக வைத்துக்கொள்.

இவ்விதம்கூறி, தன் கழுத்திலிருந்த மாலையை எடுத்து அதிலிருந்த இரத்தினத்தைக் குரங்குக்கு அளித்தது.

குரங்கு: நன்றி. உனக்கு இந்த நீருக்குள் எவ்வளவு சக்தி உண்டு?

pancha-thanthira-kadhaigal15-1

பேய்: ஆயிரக்கணக்கான மனிதர்கள் இதில் இறங்கினாலும் ஒருவரும் வெளியே வரவொட்டாமல் அவர்களைத் தடுத்துவிடுவேன்.

குரங்கு: அப்படியா? உனக்கு நான் நிறைய உணவைக் கொண்டு வருகிறேன்.
பிறகு குரங்கு இரத்தினத்தை எடுத்துக்கொண்டு அரசனிடம் சென்றது.

அரசன்: உனக்கு இந்த இரத்தினம் எப்படிக் கிடைத்தது?

குரங்கு: காட்டு வழியில் ஒரு பெரிய ஏரி இருக்கிறது. விடியற்காலையில் அதில் மூழ்கி நீராடுபவர்களுக்கு இத்தகைய இரத்தினங்கள் கிடைக்கின்றன.

இதைக் கேட்ட அரசன், பெரிய படையொன்றைத் திரட்டிக்கொண்டு, இரவின் இறுதிச் சாமத்தில் அந்த ஏரிக்கு வந்து சேர்ந்தான். விடியற்காலையில், அரசனிடம் சென்று,

குரங்கு: உங்களுக்கு இரத்தினங்கள் வேண்டுமானால் இதுதான் சரியான நேரம்.

இதைக் கேட்ட அரசன் வீரர்கள் பலருடன் ஏரிக்கரைக்குச் சென்றான்.

குரங்கு: முதலில் பத்துப் பதினைந்து மனிதர்களை முழுகச் சொல்லி இரத்தினங்களைப் பெறுவோம். பிறகு விருப்பமுடையவர்கள் எல்லாம் முழுகலாம்.

pancha-thanthira-kadhaigal15-2

அரசன்: சரி அப்படியே ஆகட்டும்.

பத்துப் பதினைந்துபேர் ஏரியில் முழுகினார்கள். பேய் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டது. வெகுநேரம் அவர்கள் வெளியே வராமல் போகவே அரசன் தன் படையினர் மொத்தப் பேரையும் முழுகித் தேடுமாறு கூறினான்.
ஆயிரக்கணக்கான படைவீரர்களும் முழுகியபோது, பேய் அவர்களை வழக்கம்போல் பிடித்து அமுக்கிக் கொன்று தின்றுவிட்டது. அருகிலுள்ள மரத்தின் உச்சிக் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்துகொண்டு,

குரங்கு: அரசே, நீ என் குரங்குக் குடும்பம் முழுவதையும் அழித்துவிட்டாய். அதனால் நான் இந்த முறையில் பழிவாங்கினேன். நீ எனக்குப் பல ஆண்டுகள் உணவளித்திருக்கிறாய். ஆகவே உன்னை மட்டும் விட்டுவிடுகிறேன். சோகத்தில் மூழ்கிய அரசன், பேராசையின் தூண்டுதலினால் செய்கின்ற எந்த ஒரு காரியமும் தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று தனக்குள் சொல்லியவாறு அரண்மனைக்குச் சென்று சேர்ந்தான்.
இப்படித்தான் நீயும் செய்து மாட்டிக் கொண்டாய் என்று பொன்பெற்ற பிராமணன் கூறினான். பிறகு நான் சென்று வருகிறேன் என்று புறப்பட்டான்.

சக்கரத் தலையன்: நண்பர்கள் கஷ்டகாலத்தில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். அப்படியிருக்க நீ போகிறேன் என்கிறாயே?

பொன் பெற்றவன்: கள்ளன் ராட்சஸனைப் பிடித்தபோது, குரங்கு பேசியதால் அதுவும் பிடிபட்டது. இந்தச் சக்கரத்தைக் கண்டால் எனக்கு பயமாக இருக்கிறது.

சக்கரத் தலையன்: அது என்ன கதை?

பொன்பெற்றவன்: மதுரையின் அரசன் பத்ரசேனன். அவனுக்கு ரத்னாவதி என்ற அழகிய மகள் இருந்தாள். ஓர் இராட்சஸனுக்கு அவள்மீது ஆசை ஏற்பட்டது. அதனால் அரண்மனை அருகிலேயே தக்கசமயத்தைப் பார்த்துப் பல நாட்களாகச் சுற்றிக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் அரசகுமாரியும் அவள் தோழிகளும் அவனைக் கண்டனர்.

அரசகுமாரி: இந்த ராட்சஸன் பல நாட்களாக இங்கே சுற்றிக் கொண்டிருக்கிறான். இவனை விரட்ட ஏதாவது வழிசெய்ய வேண்டும்.

இதைக் கேட்ட அரக்கன், (தனக்குள்): இந்த மங்கையைத் தூக்கிச் செல்ல அல்லவா வந்திருக்கிறேன். வேறு எவனாவது என்னைவிட பலசாலி, இவளைத் தேடி வந்துவிட்டால் என்ன ஆவது? இவள் தனியாகக் கிடைக்கும் வரை ஒளிந்து வாழ்வதே நல்லது.

எனவே அவன் தன் உருவத்தை ஒரு குதிரையாக மாற்றிக்கொண்டு அரசனது லாயத்தில் இருந்தான். ஒரு நாள் இரவு குதிரையைத் திருட ஒரு திருடன் வந்தான். இந்தக் குதிரை பிறவற்றைவிடக் கொழுத்தும் திரண்டும் இருந்ததால், அதன் வாயில் கடிவாளத்தை மாட்டி, அதன்மீது ஏறிச் சென்றான். குதிரை அங்குமிங்குமாக சாரிசென்று கடைசியில் ஒரு ஆலமரத்தின் விழுதில் திருடனை மோதிவிட்டு ஓடியது. இதைப் பார்த்தது ஒரு குரங்கு.

குரங்கு: நீ ஒரு இராட்சஸன். இவன் வெறும் மனிதன், ஏன் இவனைப் பார்த்து இப்படி பயந்து ஓடுகிறாய்?
என்று கத்தியது. அதைக் கேட்ட திருடன் அந்தக் குரங்கைப் பிடித்துக் கொண்டான். இராட்சஸனோ, இந்தக் குரங்கு வஞ்சகமுள்ளது என்று நினைத்து ஓடிப் போனான். ஆகவே அந்தக் குரங்குக்கு நேர்ந்தவாறு எனக்கும் நேரலாம் என்று எண்ணி, இந்தச் சக்கரத்தைக் கண்டு பயப்படுகிறேன்.

சக்கரத் தலையன்: கடவுள் கருதினால் எல்லாருக்கும் இப்படித் துன்பம் ஏற்படத்தான் செய்யும். திரிகூட மலையை அரணாகவும், கடலைப் பாதுகாப்பாகவும் கொண்ட இலங்கை அரக்கன் இராவணன் இராமனை விட அதிகமான படையை வைத்திருந்தான். சுக்கிரன் அவனுக்கு குல குரு. ஆனால் ஒரு குரங்கு அவன் ஊரில் புகுந்து அவனை அவமானப்படுத்தி விட்டது. ஆகவே விதிக்கு அப்பால் நாம் என்ன செய்ய முடியும்? ஆகின்ற விதியாக இருந்தால் எல்லாம் நன்மையாக முடிகிறது. குருடன், கூனன், மூன்று கண்கொண்ட பெண் ஆகியோருக்கு முன்பு என்ன நடந்தது என்று உனக்குத் தெரியாதா?

பொன் பெற்றவன்: எனக்கு அந்தக் கதை தெரியாது, நீதான் சொல்.
மதுபுரம் என்ற ஊரில் ஓர் அரசன் இருந்தான். தன் ஜோசியர்களைக் கூப்பிட்ட அவன், எனக்கு ஏதாவது நல்லுரை சொல்லுங்கள் என்றான்.

ஜோசியர்கள்:சர்வ வல்லமை கொண்ட அரசனே, கேள். யாராக இருந்தாலும், நன்கு மனத்தில் ஆராய்ந்த பின்னரே பிறகு பேசவேண்டும். அவ்விதம் நடக்காவிட்டால் சண்டகருமனுக்கு நேர்ந்தது போலாகும்.

அரசன்: அப்படி என்ன அவன் கூறிவிட்டான்?
ஒரு காட்டில் சண்டகருமன் என்ற அரக்கன் இருந்தான். ஒருநாள் ஒரு பார்ப்பனனை அவன் பிடித்து, அவன் தோள்மீது ஏறி உட்கார்ந்துகொண்டு அவனை நடத்தலானான். பார்ப்பனன், அவன் கால்கள் மிக மென்மையாக இருப்பதைக் கண்டான்.

பார்ப்பனன்: ஏன் உன் கால்கள் மிக மென்மையாக இருக்கின்றன?

அரக்கன்: நீராடிய பிறகு நான் கால்கள் உலரும் வரை நடப்பதில்லை.

அச்சமயத்தில் ஒரு குளம் தென்பட்டது. அதில் இறங்கிய

அரக்கன்: நான் நீராடி என் தினசரி வழிபாட்டை முடித்துவரும் வரை இங்கேயே இரு.
இவ்வாறு கூறி அரக்கன் நீரில் மூழ்கினான். அதுதான் சமயம் என்று நினைத்த பார்ப்பனன் அங்கிருந்து ஓட்டம் எடுத்தான்.

அதைக் கண்ட அரக்கன்: இவனிடம் அவசரப்பட்டு உண்மையைச் சொல்லிவிட்டேன். கையில் கிடைத்ததை வாயில் இடும் முன்பு போய்விட்டது. இப்போது ஓடினாலும் அவனைப் பிடித்துத் தின்னலாம். ஆனால் எனது உறுதிமொழி தவறாகிப் போய்விடும்.

இவ்வாறு கருதி அரக்கன் பேசாமல் இருந்துவிட்டான்.

இவ்விதிம் கூறிய ஜோசியன், ஆகவே, நம் மனத்தில் எது ஒன்றையும் சீர் தூக்கிப் பார்க்காமல் எதைச் செய்வதும் தவறு.

பிறகு ஜோசியன் அரசனிடம்: மூன்று கண்ணுள்ள உன் குழந்தையை நீ காணலாகாது. அது மிகுந்த துரதிருஷ்டத்தை விளைவிக்கும். அரசர்கள் உடல் ஊனமுற்றோரைக் காணலாகாது என்றொரு வழக்காறும் உண்டு.

அரசன் அவன் சொல்லைக்கேட்டுத் தன் மகளைத் தனி ஒரு அரண்மனையில் சிறைவைத்தான்.

அவள் பருவம் எய்தினாள். அப்போது அரசன், இவள் மனத்திற்குப் பிடித்தவன் யாராக இருந்தாலும் இவளை மணப்பவனுக்குப் பெரும் பொருளைத் தருவேன் என்று தேசந்தோறும் மண ஓலை அனுப்பினான்.


பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -15”

அதிகம் படித்தது