21-ஆம் நூற்றாண்டில் பெண்ணியம்
ஆச்சாரிMar 15, 2012
உலகம்தோறும் மார்ச் எட்டாம் தினம் சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளை மகளிர் முன்னேற்ற நாளாகவும், பெண்களுக்கு உலகெங்கிலும் சம உரிமை வழங்க வேண்டும் என்கின்ற முற்போக்குவாத கருத்தை உணர்த்தும் நாளாகவும் கொண்டாடப் படவேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா சபை 1977-இல் முன் வைத்தது. அதன் பொருட்டு, ஐ.நா சபை சார்பு நாடுகள் மார்ச் 8-ந் தேதியை மகளிர் தினமாக பெரும்பாலும் கொண்டாடுகின்றன.
ஐ.நா. சபையின் அறிக்கைக்கு முன்பே முற்போக்குவாத சிந்தனையுள்ள நாடுகளில் இந்த தினம் மகளிர் தினமாக அங்கீகரிக்கப்பட்டு கோலாகலமாக கொண்டடாடப்பட்டே வந்தது. மகளிர் முன்னேற்றத்தையும் ஆண் பெண் சமத்துவத்தையும் வலியுறுத்தும் விதமாக ஆண்டு தோறும் ஒரு நாளை மகளிர் தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற கருத்தை சோசலிச சிந்தனைக்கொண்ட பெண் சிந்தனையாளர்கள் இருபதாம் நுற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வந்துள்ளனர்.
வாக்களிக்கும் உரிமை
இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதி, பெண்கள் உரிமை போராட்டத்தில் ஒரு முக்கிய காலக்கட்டம். 19ஆம் நூற்றாண்டின் முற்போக்குவாத கருத்துக்களின் தாக்கத்தினால் ஒடுக்கப்பட்டோர் ஒன்றிணைந்து உரிமைப் போராட்டத்தில் முழு மூச்சாக இறங்கியது இந்த சமயத்தில்தான். குறிப்பாக, முதலாம் உலகப்போருக்கு முன்பு, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வேண்டும் என்ற போராட்டம் உச்ச கட்டத்தில் நடந்து கொண்டிருந்தது. 1871-ஆம் ஆண்டே, பாரீஸ் நகரத்தில் நடந்த ‘கம்முன்’ என்ற கூட்டத்தில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டம் ஒரு முற்போக்குவாத கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், பிரிட்டன், அமெரிக்கா போன்ற ஆங்கிலோ-சாக்சன் நாடுகளில், ஆண்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமை கொண்டிருந்தனர். இந்நிலை மாற வேண்டும்; பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வேண்டும் என்ற போராட்டத்தில், ‘சப்ப்ரஜெத்ஸ்’ என்ற இயக்கத்தினர் ஈடுபட்டனர். அறிக்கைகளும், கூட்டங்களுமாகவே ஆரம்பித்த இந்த போராட்டம், நாளடைவில் தீவிரமடைந்து மக்கள் திரள் போராட்டமாக மாறியது. எமிலி டேவிசன் என்ற பெண் ‘சப்ப்ரஜெட்’ உயிர் தியாகம் செய்த பின்னர் தான் அரசாங்கம் ‘சப்ப்ரஜெத்ஸ்’ இயக்கத்தின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது.
சம உரிமை
கல்வி, வாக்களிப்பு போன்ற உரிமைகளை படிப்படியாக போராடி வென்ற பெண்ணினம், ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் வேலை செய்ய வேண்டும் என்ற முயற்சியில், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இறங்கியது. பல துறைகளில் ஆண்கள் பெண்களை வர விடாமல் தடுத்தி நிறுத்தி வைத்தனர். காவல் துறை, இராணுவம் போன்ற துறைகளில் ஆண்கள் மட்டும் தான் பணியாற்ற முடியும் என்ற கருத்து பரவலாக மட்டும் இல்லாமல் சட்டத்திலும் இயற்றப்பட்டிருந்தது. இந்த கருத்தையும் சட்டத்தையையும் மாற்ற பெண்ணிய போராளிகள் களமிறங்கினர்.
சமூக ஆய்வின்பாலும், சட்ட திருத்த முயற்சிகளினாலும் பெண்ணிய போராளிகள் இந்த கருத்துக்களை மாற்றத் துவங்கினர். கடந்த ஐம்பதாண்டு காலமாக அயரா முயற்சியினாலும், கடும் போராட்டத்தினாலும், பெண்களுக்கு எதிரான சட்டங்களை திருத்தி மற்றும் பெண்கள் பல துறைகளிலும் பணி புரிவதை தடுக்கும் விதம் இருந்த தடைகளை விளக்கி, பெண்களுக்கு சம உரிமையினை பெற்றுக் கொடுத்துள்ளனர். ஜனநாயக நாடுகள் அனைத்திலும் இன்று பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரிய முன்னேற்றம்.
இந்த நூற்றாண்டின் சவால்கள்
உரிமைப் போராட்டங்களின் மூலம் பெண்கள் பெரும் முன்னேற்றம் அடைந்து, பல துறைகளில் பெருமை சேர்த்திருந்தாலும், உலகத்தின் பல்வேறு இடங்களில் பெண்கள் இன்னும் பின்தங்கியே உள்ளனர் என்பது கவலைக்குரிய விடயம்தான். பொருளாதார நிலையில் பின்தங்கிய இடங்களில் பெண்கள் வறுமையினாலும் ஆணாதிக்கத்தினாலும் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். வறுமையினால் வாடும் பெண்களுக்கு உரிமைகளை மட்டும் வழங்கினால் போறாது – அதனுடன் பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாக கல்வி, தொழில் பயிற்சி போன்றவைகளும் வழங்கப்படவேண்டும். சில சமூகங்களில், இனம், மதம், சாதி போன்ற காரணங்களினாலும் பெண்கள் முன்னேற்றம் அடையாமல் இருக்கின்றனர். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பண்டைய மரபு என்ற பெயரில் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூக பெண்கள், ஆதிக்க சமூக ஆண்களினால் சொல்லொண்ணா பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர் என்பது வளர்ந்து வரும் வல்லரசு என்று பறைசாற்றி கொள்ளும் இந்திய அரசாங்கம் கவனிக்க வேண்டிய விடயம்.
கடந்த இருபது வருடங்களில் உலகெங்கிலும் இனம்-மதவாத போர்கள் மூண்டுள்ளன. இத்தகைய போர்களில் சிறுவர்களும் பெண்களும் பல்வேறு வகைகளில் தாக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பெண்களின் உயிருக்கும் உடலுக்கும் உத்திரவாதம் இன்றி போய்விட்டது. ஜெனீவாவின் போர் முறை கட்டுப்பாடுகளுக்குப் புறம்பாக இன்றைய போர்களை ஆதிக்க வெறி கொண்ட அரசாங்கங்கள் நடத்துகின்றன. இச்சூழலில் போர்க்குற்றங்களினால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பவர்கள் பெண்களும் சிறுவர்களும்தான். இதில் மிகவும் வருத்தப்பட வேண்டிய விடயம், இத்தகைய போர்க் குற்றம் புரியும் அரசாங்கங்களை ஐ.நா சபை தகுந்த முறையில் தட்டிக்கேட்காமலும் தண்டிக்காமலும் விடுவதுதான். போர்க் குற்றங்களில் இருந்து பெண்களையும் சிறுவர்களையும் பாதுகாக்க வேண்டுமெனில், ஐ.நா மனித உரிமை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ள உலக நாடுகளும், ஐ.நா சபையும் இணைந்து செயல்பட்டு ஒரு போர்க்குற்ற தடுப்பு தீர்மானத்தை உருவாக்கி, அதை மீறும் நாடுகளை தண்டிக்கும் பொறுப்பையும் மேற்கொண்டால் தான் முடியும். இது நடக்கும்வரை, ஆண்களுக்கு நிகராக உரிமைகளைப் பெற்ற பெண்கள், அந்த உரிமைகளை உணர முடியாமல் அசுர அரசாங்கங்களின் ஆயுதங்களினால் மாண்டு போகும் அவல நிலையைத் தான் காண நேரிடும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “21-ஆம் நூற்றாண்டில் பெண்ணியம்”