மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செய்யுள்களை எளிதில் புரிந்து கொள்வது எப்படி?

ஆச்சாரி

Mar 15, 2012

செய்யுள்களை நேரடியாகப் புரிந்து கொள்ளச் சில சீரான நெறிமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் எல்லோராலும் எளிதில் செய்யுள்களை ஐயமின்றிப் புரிந்துகொள்ளமுடியும். செய்யுள்களைத் தெளிவாக நேரடியாகப் புரிந்து கொள்வது கலையன்று; அது புதிர் தீர்க்கும் விறுவிறுப்புக்கொண்ட முறையான அறிவியல் ஆகும்.
செய்யுள்களின் பொருளை விளங்கிக்கொள்ளச் செய்யவேண்டியன வருமாறு: (1) வாக்கியக்கோப்பு: பாடலின் வாக்கியங்களை அடையாளங் கண்டுகொண்டு சொற்களை வழக்கமான வரிசையில் கோத்தல்; (2) சொற்பொருள் அறிதல்: கேட்டிராத புதுச்சொற்களின் பொருளை அறிதல், பழகின சொற்கள்போல் ஒலித்துக் குழப்பும் அருஞ்சொற்களைக் கவனித்தல்; (3) சொல்லமைப்பு அறிதல்:  சொல்வகையையும் சொற்கள் ஏற்றுள்ள குறிப்பிட்ட இலக்கணத் தையும் அறிதல். சொற்பொருள், சொல்லமைப்பு என்னும் இரண்டும் முதலில் தெளிந்தால்தான் இறுதிக் குறிக்கோளான வாக்கியக்கோப்பினைக் கோக்க முடியும். எனவே அந்தச் சார்பு வரிசையில் ஒவ்வொன்றையும் விரிவாக இனிக்காண்போம்.

1. சொற்பொருள் அறிதல்: செய்யுள்களின் சொற்களைப் பற்றி இரண்டு வகையான கவனம் தேவை. கேட்டிராத அருஞ்சொற்கள், பழக்கப்போலி அருஞ்சொற்கள் என்ற இரண்டு உண்டு.  பின்னவைதாம் மிகவும் இடைஞ்சலானவை.

சான்றாக நிம்பிரி, விசும்பு, இவறல் போன்ற ஒலிகொண்ட சொற்கள் அன்றாடம் கேட்பதில்லை; எனவே நாம் உடனே பொருளை அகராதியிலோ உரையிலோ பார்த்துத் தெரிந்துகொள்வோம்: நிம்பிரி = பொறாமை, விசும்பு = வானம், இவறல் = பற்று, கருமித்தனம்.

ஆனால் விடை, வலி, நீர், கண், சூழ்க போன்ற சொற்கள் கேட்டால் பழகினவைபோல் ஒலிப்பதால் நாம் தெரிந்ததுதானே என்று நினைத்துக்கொண்டு வழக்கமான பொருளில் செய்யுளைத் தெளியப் பார்ப்போம். அங்கேதான் குழப்பமே!

விடை என்றால் தேவாரத்திலே காளைமாடு என்றே பெரும்பாலும் பொருள்: “விடையேறி ஓர் தூவெண்மதிசூடி” என்று சம்பந்தர்சொல்; மற்றபடி இலக்கியங்களில் விடுத்தல் என்றும் பொருளுண்டு.

இலக்கியத்திலே வலி என்றால் பெரும்பாலும் வலிமை என்றுதான் பொருள்! கம்பன் “இராமன் தோள்வலி” என்றால் “இராமனின் கைவலிமை” என்று பொருள்; “தோளின் நோவு” அல்ல! திருக்குறளிலும் “வினைவலியும் தன்வலியும்” என்றால் “வினைக்குத் தேவையான வலிமையும் தன்னிடம் உள்ள வலிமையும்” என்று பொருள்.

நீர் என்றால் திருக்குறளில் பெரும்பாலும் இயல்பு என்றும் சில குறள்களில்தான் தண்ணீர் என்றும் பொருள்படும்! “நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்” என்றால் “நெடிய கடலும் தன் இயல்பு குன்றும்” என்றே பொருள்; “தமர்நீர்” என்றால் “தம்மவர்களின் இயல்பு”.

“கண்” என்பது திருக்குறளில் காணும் உறுப்பு என்று பொருள்படுவதோடு பல இடங்களில் இடம் என்ற பொருள்படும் உருபும் ஆகும். “அதனை அவன்கண் விடல்” என்றால் “அதனை அவனிடம் விடுக”.

எனவே இந்தப் பழக்கப்போலிச் சொற்களைக் கண்குத்திப்பாம்புபோல் உற்றுக் கவனிக்கவேண்டும். பழைய உரைகள் இதிலே மிகவும் உதவியானவை.

தாள்வடிவத்தில் வாங்கத் தேவையின்றி இணையத்திலேயே சென்னைத் தமிழ்ப்பேரகராதி என்ற உயர்ந்த கருவி கிடைக்கிறது: http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

2. சொல்லமைப்பு அறிதல்: செய்யுளின் சொற்களின்  வகையையும் பொது அமைப்பையும் அறிந்துகொள்ளல் தேவை. சான்றாக “அகர முதல”, “பகவன் முதற்று” என்பவற்றில் முதல, முதற்று என்பவற்றில் முதல் என்ற சொல்லுள்ளதை அறிவோம்; ஆனால் முதல, முதற்று என்றால் என்ன? முதல என்பது முதற்று என்ற சொல்லின் பன்மை. திருக்குறளில் இவைபோல் நீர்த்து, நீர என்ற இணையையும் காணலாம்.

ஒரு பெயர்ச்சொல்லோடு து என்ற சொற்சேர்த்தால் அந்தப் பொருளை, இயல்பை உடையது அல்லது தொடர்புடையது என்றாகும்; அகரம் சேர்த்தால் அதனை உடையன/உடையவை என்று பன்மை. து-அ என்ற விகுதிகள் இரண்டும் ஒருமை-பன்மைக்கு ஆவதைப் புரிந்துகொள்ளச் “சென்றது – சென்றன” என்பவற்றை ஒப்பிடவும்.

முதல் + து: முதற்று  = முதலாக உடையது

சான்று: ஒவ்வொரு குடும்பமும் பெற்றோர்முதற்று = ஒவ்வொரு குடும்பமும் பெற்றோரை முதலாக உடையது

முதல் +அ:  முதல =  முதலாக உடையவை

சான்று: குடும்பங்கள் எல்லாம் பெற்றோர்முதல = குடும்பங்கள் எல்லாம் பெற்றோரை முதலாக உடையவை

இப்படியே காதற்று, காதல என்றும் குறளில் வழங்கும்: விருப்பமானது, விருப்பமானவை என்று பொருள்.

“தள்ளாமை நீர்த்து” என்றால் “தள்ளாமைப் பண்பை உடையது = தள்ளக்கூடாதது” (நீர் = இயல்பு); “நிறைநீர நீரவர் கேண்மை” என்றால் “பண்புள்ளவர்களின் நட்புக்கள் நிறைகின்ற பண்புகொண்டவை”.

“பறம்பு முந்நூறு ஊர்த்து” என்றால் “பறம்பு முந்நூறு ஊர்கள் கொண்டது” என்று பொருள்.  இப்படியே சில அமைப்புக்கள் மீண்டும் மீண்டும் செய்யுள்களிற் பயிலும். அவற்றை முதலில் கவனித்துத் தேற்றமாகக் கற்றுக்கொண்டால் செய்யுள்கள் எளிதில் விளங்கும்.

3. வாக்கியக்கோப்பு: செய்யுளில் உள்ள வாக்கியங்களை அடையாளங் கண்டுகொண்டு சொற்களை வழக்கமான வாக்கிய வரிசையில் கோக்கவேண்டும். செய்யுள்களும் நம் அன்றாடப் பேச்சுப்போலவே பாடுவோர் உணர்ச்சிகள் குறிப்புக்களைப் பொறுத்துச் சொற்களை முந்திப் பிந்திச் சொல்லும். சான்றாக, உணர்ச்சியோடு சொல்வது: “போட்டான் பாரவன் ஒருபோடு தலையிலேயே நச்சென்று!”. ஆனால் வழக்கமான உணர்ச்சியற்ற வாக்கிய அமைப்பில் “அவன் ஒருபோடு தலையிலேயே நச்சென்று போட்டான்; பார்!” என்றுதான் அமையும். இதுவேதான் செய்யுளுக்கும் பொருந்தும்!

ஒவ்வொரு வாக்கியமும் எந்தச் சொல்லிலே தொடங்கி எந்தச் சொல்லிலே முடிகின்றது என்பதை அறிந்து கோக்கவேண்டும். இதனைப் பொருள்கோள் என்றும் வினைமுடிப்பு என்றும் உரைப்பது வழக்கம்.   ஆனால் இதனைத் திறம்படச் செய்ய முதலில் சொற்களின் பொருளும் சொற்களின் அமைப்பும் தெரிந்தாகவேண்டும்.  ஏற்கெனெவே சொற்பொருள் உணர்தல், சொல்லமைப்பு உணர்தல் முறைகளைக் கண்டோம். எனவே நாம் வாக்கியக்கோப்புக்கு அணியமாக உள்ளோம்.

இப்பொழுது முதலாவது திருக்குறளைப் பொருள்கோள் கொள்ள முயல்வோம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

என்ற பாடலில் எத்தனை வாக்கியங்கள் உள்ளன?

முதலில் சொற்பொருள் காண்போம்: அகரம் = அ என்ற ஒலி; முதல = (முதல் +அ) முதலாகக்கொண்டவை;  முதற்று = முதற்று = முதலாகக்கொண்டது. மற்ற சொற்களை மேலும் ஆராயும் அளவு இந்தக் கட்டுரையில் தேவையில்லை. அவற்றையே அப்படியே ஏற்றுப் பொருள்கொள்வோம்.

அடுத்து நாம் சொற்பொருளை செய்யுளில் நேரடியே இட்டு முதலில் பேசிப்பார்ப்போம்: “அ என்ற ஒலியை முதலாகக்கொண்டன எழுத்தெல்லாம் ஆதிபகவனை முதலாகக் கொண்டதே உலகு”. பேசப்பேசவே இரண்டு வாக்கியங்களை உணரலாம்! அவை: (1) “அகர முதல எழுத்தெல்லாம்” (2) “ஆதிபகவன் முதற்றே உலகு” என்பவை. ஆனாலும் அவற்றை இன்னும் வழக்கமான வாக்கிய வரிசையில் அமைக்கவேண்டும். அதற்கு வாக்கியத் தொடக்கமும் முடிவும் தெரியவேண்டும்.

முதல் வாக்கியத்தின் தொடக்கம் “எழுத்தெல்லாம்”, முடிவு “முதல”: எனவே வழக்கமான வரிசையில் அமைத்தால் “எழுத்தெல்லாம் அகர முதல”: “எழுத்தெல்லாம் அ என்னும் ஒலியை முதலாகக் கொண்டன” என்று பன்மையாகக் குறளில் பாடியுள்ளது. இன்றும் நாம் பேச்சிலே பன்மையை ஒருமைச்சொல் கொண்டே பேசுவது வழக்கம்: “நூறு வடை சுட்டான்” என்றுதான் வழங்குகிறோம்; நூறுவடைகள் என்று பேசுவதில்லை; அது பழைய மொழிமரபாகும்.

இரண்டாவது வாக்கியத்தின் தொடக்கம் “உலகு”, முடிவு “முதற்று”: அவற்றை வழக்கமான வரிசையில் அமைத்தால் “உலகு ஆதிபகவன் முதற்றே”: “உலகு ஆதிபகவனை முதலாகக்கொண்டதே”. ஆதிபகவன் என்றால் என்ன என்கிற ஆராய்ச்சி வேறு; அதற்கும் செய்யுட் பொருள்கோளுக்கும் தொடர்பில்லை.

முடிவுரை:

இது வெறும் அறிமுகமே. மேலும் சங்க இலக்கியங்களுக்கென்றே சிறப்பான விளக்கந்தேவை. மற்றபடிச் செய்யுள்கள் நன்கு பழகப் பாடல்களை மனப்பாடம் செய்துகொண்டே இருக்கவேண்டும்; இங்கு விளக்கியபடிப் பொருளுணர்ந்து மனப்பாடமாக ஓதிப்பழகினால் செய்யுள்களின் மொழி நமக்கு இயல்பாகிவிடும்.

செய்யுளைப் புரிந்துகொள்வதைத் தட்டுத் தடுமாறிச் செய்யும் கலைபோல் ஆக்கியமைக்குக் காரணம் தமிழ்மொழிக் கல்விமுறையில் நிகழ்ந்துவருகிற ஒரு கோளாறுதான்: செய்யுள்களைப் புரிந்துகொள்ள வைக்குமாறு பாடங்கள் இல்லை; தேர்வுகளும் செய்யுளின் பொருளைமட்டும் மனப்பாடம் செய்யும் திறனையே ஆய்கின்றன. அதனால் செய்யுள்களைச் சுமையாக்கிவிட்டனர். செய்யுளின் சொற்களும் அமைப்புகளும் மெய்யாலுமே விளங்கியுள்ளதா என்று மதிப்பிடுமாறு தேர்வுநெறி மாறவேண்டும்.  கல்விநிறுவன ஆளுநர்கள் இதனை மாற்ற வேண்டும். இது தமிழ்மொழியும் பண்பாடும் அழியாமற் காக்கத் தேவையானதாகும்.

Isbn — this www.writemypaper4me.org book is printed on acid-free paper

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

7 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “செய்யுள்களை எளிதில் புரிந்து கொள்வது எப்படி?”
  1. [...] முதற் கட்டுரை செய்யுள்களைப் புரிந்துகொள்வதன் [...]

  2. kondraivendhan says:

    மிக அருமையான விளக்கக்கட்டுரை . திரு.பெரியண்ணன் சந்திரசேகர் அவர்கள் தரும் விளக்கம், இன்று காலத்தால் இன்றியமையாதது. அவர் கூறுவது போல் இன்னும் பல சங்க இலக்கியங்களை பொருள் விளக்கி சான்று கூறி விளக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பொருளாதார அமைச்சர், கோவையயைச் சேர்ந்த தோழர்.ஆர்.கே. சன்முகனார் ( இவர் தமிழ் இசைச் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர்/ கொச்சி சமஸ்தானத்தின் பிரதமராகவும் இருந்தவர்) என்பாரே தமிழகத்தில் முதன் முதலில் பெருங்காப்பியங்களையும், சங்க இலக்கியங்களையும் சந்தி பிரித்து வெளியிட்டவர், வலியுறுத்தியவர். இது போல் தாங்களும் சந்தி பிரித்து உணரும் கலையினையும் விளக்கம் கூறின் எழுதுங்கள். தமிழ் கூறும் நல்லுலகம் நன்றி சொல்லும். மிக்க நன்றி.

  3. கோ கோ செந்தில் says:

    மேலும் சில எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி இருந்தால் எளிதாக இருக்கும்,புரிந்து கொள்ள சிரமமாக உள்ளது.

    • பெரியண்ணன் சந்திரசேகரன் says:

      எங்கே கூடுதல் விளக்கம் தேவையென்று தெரிவித்தால் அடுத்துவரும் கட்டுரைகளில் விளக்க உதவும்.
      நன்றி.
      பெரியண்ணன் சந்திரசேகரன்

  4. priya says:

    அருமை

    • Padmanabhan says:

      கட்டுரை மிகவும் அருமை. எளிமையாகவும் சுருக்கமாகவும் அமைந்துள்ளது. மேலும் இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை எதிர்பார்க்கிறோம்.

அதிகம் படித்தது