மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மின்வெட்டின் மீதேறி பிழைத்த கூடங்குளம்!

ஆச்சாரி

Apr 1, 2012

கடந்த எட்டு மாதங்களாக கூடங்குளம் அணு உலையை  எதிர்த்து  நடைபெற்று வந்த மக்கள் போராட்டத்தை பல வழிகளில், பல உத்திகளைக் கையாண்டு கிட்டத்தட்ட முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டனர் அதிகார மையத்தினர். மிரட்டல் வழக்குகள், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவோர் என்று கூப்பாடு போட்டு- நக்சலைட்டுகள், வெளிநாட்டுக் கைக்கூலிகள் என்று பல பட்டங்கள்  சூட்டி, போராட்டக்காரர்கள் மீது தமிழக மக்கள் இடையே வெறுப்புணர்ச்சியை உண்டாக்கி விட்டனர்.

இந்தப் பிரச்சினையில் தமது நிலைப்பாட்டைத் தெரிவிக்காமல்  ஆரம்பம் முதல் மௌனமாக இருந்த தமிழக அரசு,  ஒரு கட்டத்தில் அரசின் சார்பில் நிபுணர் குழு அமைத்தது, போராட்டக்காரர்களை அழைத்துப் பேசியது பின்னர் மத்திய அரசின் ஆணைக்கு இணங்கி ‘அணு உலை செயல்பட ஆதரவு’ என்று  அறிவித்து விட்டது.

தமிழக அரசின் ஆரம்பக்கட்ட மௌன நிலைக்குக் கூட, சங்கரன்கோயில் இடைத் தேர்தல்தான் காரணம் என்பது- இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளுக்கு முன் நாளில் அணு உலைக்கு ஆதரவான முடிவை அறிவித்ததில் இருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. எது எப்படியோ மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து போராட்டக்காரர்களை தங்கள் வழிக்குக் கொண்டு வந்துவிட்டன. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க இந்த அரசுகள் தயாராக இல்லை என்பது இதிலிருந்து அறியமுடிகிறது.

கூடங்குளம் மக்கள் கேட்பது என்ன? இந்த அணு உலையால் எங்களுக்கு ஆபத்து. எங்கள் வருங்கால சந்ததியினருக்கு இந்த அணு உலையால் பெரும் ஆபத்து நிகழ வாய்ப்புள்ளது. எனவே பாதுகாப்புக்கு உத்திரவாதம் தாருங்கள் என்பதுதான். இதற்கு விளக்கம் அளிக்காமல்  – கூடங்குளம் மக்களுக்கு சில நூறு கோடி ரூபாய்களில் திட்டங்கள் தருகிறோம் என்று மத்திய மாநில அரசுகள் கூறுகின்றன. மக்கள் கேட்பது பாதுகாப்பு, இவர்கள் தருவது வாழ்வாதாரத்திற்குத் திட்டங்கள். பாதுகாப்பு இருந்தால்தானே நிம்மதியாக வாழ முடியும்?

இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு- ‘கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை’ என்ற ரீதியில் செயல்படுவது எவ்வகை நியாயம்? இந்தியா வல்லரசு ஆவதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமைதான். ஆனால் இந்தியாவின் ஒரு மாநிலத்தில் வாழும் மக்களைப் பற்றி கவலைகொள்ளாமல்- அவர்களின் நியாயமான உணர்வுகளை அலட்சியம் செய்வது சரியா? 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். அறவழியில் பல போராட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டங்களை சில தமிழ் நாளிதழ்கள் கொச்சைப்படுத்தி விமர்சித்தன.

இந்தக் கூடங்குளம் பிரச்சினையை எதிர்காலத்தை எண்ணி அணுகாமல் இப்போதுள்ள மின்வெட்டுக் காரணத்தைக் கொண்டு – அணு உலை இயங்கினால் மின்வெட்டு இருக்காது என்று நம்புகிறது தமிழக அரசு- தமிழகத்தின் பெரும்பாலான மக்களும் இப்படி நம்புகின்றனர்.

தமிழகத்தின் மொத்த மின் தேவையில் 30 சதவிகிதம் மட்டுமே மாநில அரசால் மின் உற்பத்தி செய்யப்படுகிறது என்று தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் (2012-2013) தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதம் தேவைப்படும் மின்சாரம் வெளி மாநிலங்களிலிருந்தும் மற்ற வழிகளில் பெறப்படுவதாகவும் கூறுகிறது. கூடங்குளம் அணு உலையால் 2000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படும். இந்த 2000 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே தந்து விடுவார்களா? அதன் மூலம் மின்சாரத் தேவை முழுதும் கிடைத்துவிடுமா என்பது போகபோகத்தான் தெரியும். ஏற்கனவே நெய்வேலியில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தில் பெரும் பகுதி கர்நாடகத்துக்கும் கேரளத்துக்கும் கொடுக்கப்படுகிறது. கல்பாக்கத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் ஆந்திர மாநிலம் கடப்பாவிற்குப் போகிறது.

எனவே கூடங்குளம் அணு உலை செயல்பட்டால் மின் தேவை குறையும் என்பது எந்த அளவு உண்மையாகப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்நிலையில் போராட்டக்காரர்கள் சில நிபந்தனைகளை முன்வைத்து உண்ணாவிரதத்தை திரும்பப் பெற்றுள்ளனர். அவற்றில் முக்கியமான நிபந்தனையாக, “அணு விபத்து காப்பீடு தொடர்பாக ரஷியாவுடனான ஒப்பந்த நகலை வெளியிட வேண்டும்; அணு உலையைச் சுற்றி 30 கி.மீ. தொலைவில் உள்ள மக்களுக்கு முறையான பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்க வேண்டும்; அணுக் கழிவு மேலாண்மை குறித்த தகவல்களை முழுமையாகத் தர வேண்டும்; நீரியல், நிலவியல், கடலியல் தொடர்பான ஆய்வறிக்கை விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும்; இவற்றை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும்” என்பதே அது.

இந்த நிபந்தனைகளை மத்திய அரசு நிறைவேற்றி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும், இதற்கு மாநில அரசும் துணை நின்று கூடங்குளம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு.  இந்தக் கட்டுரை எழுதி முடிக்கும்போது அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ‘உதயகுமார் இல்லத்தில் மத்திய அரசு அதிகாரிகள் சோதனை’ என்ற செய்தி வந்தது. இப்படிப்பட்ட மிரட்டல்களால்தான் அணு உலையை செயல்பட வைக்க முடிகிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

Robust institutional data is needed at the entry and progression level, and after graduation of students see knowing your students to monitor, https://justbuyessay.com evaluate and improve teaching and learning practices

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “மின்வெட்டின் மீதேறி பிழைத்த கூடங்குளம்!”
  1. Vaaimai says:

    மக்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்ககாமல் கமிஷன் வாங்கி கொண்டு முடிவு எடுக்கும் அரசியல்வாதிகள். அவர்களுக்கு துணை போகும் நீதிமன்றம். நாடு உருப்பட்டமாதிரிதான்.

அதிகம் படித்தது