ஆடு-புலி ஆட்டம் :மத்திய மாநில அரசுகளின் உரசல்கள்
ஆச்சாரிApr 1, 2012
மாநில சுயாட்சி என்பது தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் கோரிக்கையாக பல காலமாக இருந்து வந்திருக்கிறது. இந்தக் குரல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சகட்டமாக இருந்த கால கட்டத்தில் உண்மையான உணர்வோடு எழுப்பப்பட்டது. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக திராவிடக் கட்சிகள் சில தனி நபர்களின் கையில் சிக்கிய பின்னர் மிகவும் பலவீனமான குரலில் எழுப்பப்பட்டது. இடைப்பட்ட கால கட்டத்தில் இந்தியாவின் மத்திய அரசு, தமிழகத்தில் ஆட்சியில் இல்லாமலே தான் நினைத்ததை சாதித்துக் கொள்ளும் கலையை நன்றாகக் கற்றுக் கொண்டது. மாநில உரிமைகளைப் பறிக்கும் சட்டங்கள் பல பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ளன. கல்வி , சுகாதாரம் போன்ற மாநிலப் பட்டியலில் தெளிவாக இருந்த அதிகாரங்கள் பல இன்று மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் படிப்படியாக செல்லும்படியான சட்டங்கள் உருவாக்கப்பட்டு விட்டன. மாநில அரசுகளை மிகவும் பலவீனமாக்கி அவைகளை மத்திய அரசிடம் கடிதம் மூலமாக கோரிக்கை வைக்கும் அமைப்புக்களாக மட்டும் மத்திய அரசு இன்று மாற்றி வருகிறது.
இதற்கு மற்றுமொரு முக்கிய காரணம் மத்திய அரசு சிக்கலான சட்டங்களை இயற்றும் போது அதைப் பற்றி விவாதங்களை மக்களிடம் கொண்டு செல்வதில்லை. அவசர அவசரமாக சட்டங்களை நிறைவேற்றி எப்படியாவது அனைத்து அதிகாரங்களையும் மத்தியில் குவிப்பதில் இதுவரை மத்தியில் அமைந்த எல்லா மத்திய அரசுகளுமே தீவிரம் காட்டி வந்து இருக்கின்றன. மாநில கட்சிகளுக்கு இதுபோன்ற சிக்கலான எளிதில் மக்களால் புரிந்து கொள்ளப்படாத சட்ட விடயங்களை எதிர்த்து மத்திய அரசை எதிர்ப்பதற்கு உண்மையான கொள்கை பற்றும் இல்லை. தமிழக மக்களுக்கும் மாநில அரசின் உரிமைகள் பறிபோவதால் அவர்களுக்கு வரும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கட்சிகளும் தவறி விட்டன.
கடந்த தி.மு.க ஆட்சியில் நடுவண் அரசு நினைத்ததை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை நிறைவேற்றுவதை விட எளிதாக மத்திய அரசால் நிறைவேற்ற முடிந்தது. தமிழகமெங்கும் தி.மு.க அரசால் மத்திய அரசின் திட்டங்களுக்கு தேவைக்கு மிக அதிகமாக அள்ளிக் கொடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஒரு சிறிய உதாரணம். முள்ளிவாய்க்காலில் மத்திய அரசின் விருப்பத்துக்கிணங்க அன்றைய தி.மு.க அரசு கடைப்பிடித்த கொடூரமான மௌனம் இன்று வரை தமிழர் யாராலும் மறக்க முடியாதது.
கல்வித் துறையிலும் மாநில அரசுகளின் கருத்தைக் கேட்காமல் தன் விருப்பம் போல் சட்டங்களை மத்திய அரசு மாற்றுகிறது, இயற்றுகிறது. இந்திய மருத்துவக் குழுமம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு 2011-2012ம் ஆண்டு முதல் அகில இந்திய பொது நுழைவுத் தேர்வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது.
அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு முறை மாநிலங்கள் கல்வித் துறையை நிர்வாகம் செய்வதில் உள்ள உரிமையில் குறுக்கிடுவதாகக் கருதப்படுகிறது என்று தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதேபோல் மாநில அரசிடம் கேட்காமலேயே இந்த இந்த மாநிலங்களில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கப்படும் என்று முடிவெடுத்து அறிவித்தது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து பின்வாங்கியது .
இப்படி நினைத்ததை எல்லாம் மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் செய்தே பழக்கப்பட்டு விட்டது மத்திய அரசு. இனியாவது மாநில உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, இந்திய அரசியலின் தற்போதைய மாநிலம் சார்ந்த அரசியலை புரிந்து கொண்டு மத்திய அரசு செயல்படுவது இந்தியாவின் ஒற்றுமைக்கும் , ஒருமைப்பாட்டுக்கும் வழி கோலும். மாறாக மத்திய அரசு தொடர்ந்து மாநிலங்களை அதிகாரம் செய்யும் போக்கில் நடந்து கொள்வது மிகப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநில சுயாட்சிக்கு பங்கம் விளைவிக்கும் எந்த ஒரு பிரச்சினையிலும் மாநில அரசுடன் இணைந்து தமிழகத்தின் உரிமைகளை காத்திட வேண்டும். இன்று அனைத்து தமிழக மக்களின் உண்மையான எதிர்பார்ப்பும் இதுவே யாகும்.
மத்திய அரசும் , இன்று உண்மையான அதிகாரத்தை எந்த தேர்தலையும் சந்திக்காமல் கையில் வைத்து தங்கள் விருப்பம் போல ஆட்சி செய்யும் புது டில்லியின் மேல்தட்டு அதிகாரிகள் ( ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் ) வர்க்கமும் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க, அ.தி.மு.க மோதல்களையும், இந்த கட்சிகள் செய்த ஊழல்களையும் பயன்படுத்தி மாநில நலன்களை அவர்களை அடகு வைக்க நடுவண் அரசு நிர்ப்பந்தம் செய்து வந்தது இனி வரும் காலத்தில் எளிதாக இருக்கப் போவதில்லை. தமிழக மக்கள் இன்று ஓரளவு விழிப்புணர்வு அடைந்து விட்டனர். தி.மு.க வாக இருந்தாலும் சரி அ.தி.மு.க வாக இருந்தாலும் சரி இனி மாநில நலன்களை இவர்கள் கைவிட தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்க போவதில்லை.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
சிறைப்பான கட்டுரை