தென்னாட்டுப் போர்க்களங்கள் – 6- வடதிசைத் தொடர்புகள்
ஆச்சாரிApr 15, 2012
தமிழகத்தின் மிகப் பழமை வாய்ந்த தொடர்புகள் கிழக்கு, மேற்குத் தொடர்புகளே. உயிர்த் தொடர்புகளாகவும் வளமான தொடர்புகளாகவும் அமைந்துள்ளன இது இயல்பே. ஏனெனில் பண்டை நாகரிக உலகம் கிழக்கு மேற்காகவே நெடுந்தொலை பரவியிருந்தது. அதன் தெற்கு- வடக்கு அகலம் கிழக்கு மேற்கு நீளத்தை நோக்க இன்றுகூட மிகுதியன்று. இதற்கு இயற்கையான நில இயல் காரணங்களும் வரலாற்றுக் காரணங்களும் உண்டு.
முதலாவதாக உலகின் வட கோடியும், தேன் கோடியும் இன்றளவும் உயிரின் வாழ்வுக்கே, புல் பூண்டுகளுக்கே இடம் தராதவை. தவிர மனித நாகரிகம் மலையில் பிறந்ததாயினும் அங்கே சிறு வாழ்வே வாழ்ந்தது. ஆற்றோரங்களில் ஓரளவு தழைத்ததாயினும், அவ்வழி உலகில் பரவவில்லை. கடலோரமாகவே, கடல் கடந்தே, அது உலகில் பரவ முடிந்தது. இவ்வகையில் தேன் ஆசியா, நடு நிலக் கடல் சூழ்ந்த நிலம், நடு அமெரிக்கா ஆகியவற்றின் வாய்ப்புப் பெரிது. ஏனெனில் உலகின் வடபாதி கடலற்ற முழு நிலப்பரப்பு. தென்பாதியோ நிலமற்ற கடல் பரப்பு, அல்லது தொடர்பற்றுத் துண்டுப்பட்டுக் கிடக்கும் நிலத் தொகுதி. இவற்றுக்கு மாறாக நடு உலகு, சிறப்பாக உலக நடுவரைக்குச் சற்று வடக்கிலுள்ள நடு உலக வளையம் கடலுடன் நிலமும், நிலத்துடன் கடலும் கலந்து உறவாடும் திருநலம் உடையது.
தமிழகம் நாகரிக உலகின் நடுமையம், நாகரிக உயிர் மையமும் அதுவே. உலகின் கடல் வழி உயிர்ப் பாதைகள் அனைத்தின் நடு இணைப்பாகவும் அது அமைந்துள்ளது. மனித இன நாகரிகக் கொடியும் அதனின்றே பல திசைகளிலும் கிளைத்துச் செல்வது காண்கிறோம். ஆனால் இந்த நாகரிக ஒளி உலகில் பரவுவதற்கும் பரவி வளர்ந்து நீடிப்பதற்கும் தடையாய் அமைந்த திசை வடதிசையே. பண்டை மேலை நாகரிகங்களில் பெரும்பாலானவையும், கீழை நாகரிகங்களில் பலவும் இவ் வடதிசை வாடைக்கு இலக்காகியே அழிவெய்தியுள்ளன. கீழ் கோடியில் சீனமும் மேல் கோடியில் தற்கால மேலை ஐரோப்பாவும் தமிழகமும் மட்டுமே அவ்வாடைக்கு முற்றிலும் ஆட்படாமல் உயிர் வளர்ச்சி பெறுகின்றன.
தமிழக- வடதிசைத் தொடர்புகளும், தமிழக- உலகத் தொடர்புகளும் சரிவர உணரப்படாமலும் சரிவரப் பயன்படுத்தப் பெறாமலும் தடை செய்து வருவதும் இவ் வாடையே.
தமிழக- உலகத் தொடர்புகளில் மேலையுலகத் தொடர்புக்கே நமக்கு இதுவரை பழமையான சான்றுகள் மிகுதியாகக் கிட்டியுள்ளன. ஆனால் மேல் திசையில் எந்த நாகரிகமும் தொடர்ச்சியான நீடித்த வாழ்வுடையதாயில்லை. நாகரிகங்கள் அத்திசையில் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி அழிந்து, புதுப்புது நாகரிகங்கள் எழுந்து வளர்ந்து வந்துள்ளன. ஆகவே தமிழகத்தின் மேலைத் தொடர்புகள் ஒரு தலைமுறைத் தொடர்பாயிராமல், பல மேல்திசைத் தலைமுறைகளின் தொடர்பாக இருந்து வருகிறது. ஆனால் கீழ்த் திசைத் தொடர்புகள் மேல் திசையுடன் ஒத்த பழமையுடையவை மட்டுமல்ல, அவற்றைவிடப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்த தொடர்ச்சியுமுடையவை. அவற்றுள், பல சீன, ஜப்பானிய, தென்கிழக்காசிய நாகரிகங்கள்- தமிழகத்துடன் ஒத்த நீடித்த ஒரே தலைமுறைத் தொடர்பாய், தமிழகத்தின் உயிர்த் துணை நாகரிகங்களாக நிலவுகின்றன. தமிழகத்துடன் அவை மூவாயிரமாண்டு தொடர்ந்த உறவுடையவை.
வடதிசை, தென்திசை வண்ணங்கள்
வடதிசையில், கங்கை இமய எல்லைகள் பற்றியவரை, தமிழகத் தொடர்பு பழமையில் குறைந்ததன்று. குறைந்த அளவில் நெடியோன் காலமுதல், ஒருவேளை அதற்கும் முற்பட்டே தமிழக வாழ்வும், நாகரிக ஒளியும் அவ்வெல்லை வரை படர்ந்து, பல சமயம் அது கடந்து பரவியதுண்டு. அத்துடன் இது பண்டை மேலை உலகத் தொடர்புகள் போல இடையிடையே அறுபட்டுவிடாமல், கிட்டத்தட்ட சீனத் தொடர்பு போலவே இடையறாது நீடித்துள்ளது. ஆயினும் சீனம், சிறப்பாகத் தென்சீனம், வடதிசை வாடைக்குப் பெரிதும் ஒதுங்கி வாழ்ந்ததனால், கலை, நாகரிகத் தொடர்ச்சியுடையதாய் இருக்க முடிகிறது. ஆனால் சீன, ஜப்பானிய உலகுகளுக்குப் புத்த நெறி அளித்த சிந்து கங்கை சமவெளியிலே அந்தப் புத்தர் கால மொழியோ, இலக்கியமோ, சமய வாழ்வோகூட நீடித்து நிலவவில்லை. மொழி இலக்கியத் துறையில் புத்தர் கால முதல் இன்று வரை பாளி பாகத நாகரிகம், சமசுகிருத நாகரிகம், அபபிரும்ச மொழி வாழ்வு, தற்காலத் தாய்மொழி வாழ்வு என்ற நான்கு தலைமுறைகள் ஆகியுள்ளன. இவற்றிடையேகூட ஒன்றுபட்ட வாழ்வு இல்லாது, இடத்துக்கிட வேறுபாடும், ஓரிடத்துக்குள்ளேயே வகுப்புக்கு வகுப்பு வேறுபாடும் மிகுதி. தமிழகத்தின் தனிப் பெரு வாழ்வைக் கூட இவை அவ்வப்போது தாக்க நேர்கின்றது.
தமிழக வடதிசைத் தொடர்புகள் தெற்கிநின்றும் வடதிசை செல்லும்போதெல்லாம் நாகரிக ஒளித் தொடர்பாகவும் வடக்கிநின்று தெற்கே வரும்போதெல்லாம் நாகரிகச் சீற்குளைவுத் தொடர்பாகவுமே இருந்து வந்திருக்கின்றன. இது தமிழகத்தின் குற்றமன்று. சிந்து கங்கை சமவெளியின் குற்றமுமன்று. ஏனெனில் மிகப் பழமையான அடிப்படைத் தொடர்பில், இரண்டும் தெற்கிநின்று பரவிய ஒரே பேரின நாகரிகமேயாகும். குற்றம்; சிந்து கங்கைச் சமவெளி, வட ஆசியப் பரப்புடன் நிலத் தொடர்பு பட்டு, வாடையின் நடுநேர் வழியில் கிடப்பதேயாகும். இதனால் புத்தர் காலக் கங்கை வெளியுடன் தமிழகத்துக்கு இருந்த நற்தொடர்புகள் புத்தருக்குப் பிற்பட்ட காலத்தில் சீர்குலைந்தும், இஸ்லாமிய காலங்களில் இன்னும் இடர்ப்பட்டும், அதன்பின் முற்றிலும் இடக்குற்றும் வந்துள்ளன
இந்திய மாநிலத்திலே வடக்கு நின்றும் தெற்கு, மேற்குனின்றும் கிழக்கு நோக்கிய வெற்றிகள் குறைவு. தெற்கினின்றும் வடக்கு, கிழக்கினின்றும் மேற்கு நோக்கிய வெற்றிகளே தொகையில் பல. அத்துடன் முந்தியவை அயல் தொடர்புகளாகவும், அழிவுத் தொடர்புகளாகவுமே உள்ளன. பிந்தியவையோ மாநில வாழ்வுக்கு ஒற்றுமையும் ஆக்கமும் பீடும் தரும் தேசியத் தொடர்புகளாக உள்ளன. ஆயினும் இந்திய மாநில வரலாறு எழுதியவர்கள் பெரும்பாலும் அயலினத்தவர் அல்லது அயலின நோக்குடையவர்கள். அத்துடன் அவர்கள் உலக நாகரிக அலைகளைத் தவறாகப் புரிந்துகொண்டவர்கள். இக் காரணங்களால் அவர்கள் அழிவுத் தொடர்புகளையே நுணுகி நுணுகி விரித்து ஆராய்ந்துள்ளனர். ஆக்கத் தொடர்புகளைப் புறக்கணித்தும் இருட்டடித்துமே வந்துள்ளனர்.
நெடியோனுக்குப் பின் கங்கையிலும், இமயத்திலும் தம் ஆட்சி அல்லது புகழ்த் தடம் பொறிக்க முயன்ற தமிழரசர் மிகப்பலர். அதன் எதிர் விளைவாக ஒரே ஒரு சமயம் வடதிசைப் பேரரசுகளும் தெற்கே ஆதிக்கம் பரப்ப முயன்றதுண்டு. ஆயினும் இத்தெற்கு வடக்குத் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஒரு தனிப் பண்பு காணலாம். அது பெரிதும் வடகிழக்குத் தெற்குத் தொடர்பாக இருந்தது. அதில் தமிழகத்துடன் கங்கை வெளியே போட்டியிட்டது. சிந்துவெளி அதில் மிகுதி கலக்கவில்லை. நாலாயிர ஆண்டுகளுக்கு முன்பு சிந்து வெளியும் பண்டை மாநில நாகரிகத்தில் உயிர்ப் பங்கு கொண்டிருந்தது. ஆனால் ஆரியர் வரவால் அது மாநிலத்தின் உயிர்த் தொடர்பற்ற பகுதி ஆயிற்று. அப் பகுதியும் அதற்கு வாயிலாய் அமைந்த வட மதுரை, தில்லிப் பகுதியும் அயல் நில வாடகைக்கு வழிவிட்டு, அதற்கு மூலதனமாய் அமைந்ததன்றி வேறுஉயிர் நாகரிகத் தொடர்புடையதாய் இல்லை.
வடதிசை மகதப் பேரரசர்: சிசு நாகர், நந்தர்
பண்டைத் தமிழ் ஏடுகள், பண்டைத் தமிழக வரலாற்றுக் குறிப்புகள் மட்டும் உடையனவல்ல, பண்டைக் கங்கை வெளிக் குறிப்புகளும் அவற்றில் மிகுதி. எடுத்துக்காட்டாக, காஞ்சியும் புகாரும், மதுரையும் வஞ்சியும்குறிப்பிடப்படுவது போலவே வடதிசைப் பண்டைப் பெருநகரமான பாடலிபுரமும் குறிப்பிடப்படுகிறது. இந்நகரம் கி.மு.500 முதல் 475 வரை ஆண்ட அஜாத சத்ரு என்ற சிசு நாக மரபுப் பேரரசுகளுக்குத் தலைநகராயிருந்து கி.பி. 6 –ம் நூற்றாண்டில் அழிவுற்றது. இதன் மிகப் பழமையான சமகால இலக்கியக் குறிப்புகள் தமிழ் ஏடுகளிலேயே உள்ளன.
“வேண்கோட்டியானை சோனை படியும்
பொன்மலி பாடலி பெறீ இயர்” (குறுந்.75)
என்ற படுமரத்து மோசிக்கீரனாரின் பாடல் சோனையாற்றங் கரையிலுள்ள பாடலி நகரத்தையும், அதன் செல்வத்தையும் குறிப்பது காணலாம். இந்தச் செல்வத்துக்குப் பெரிதும் காரணாமாயிருந்தவர் பேரரசர் அசோகனுக்கு முன் ஆண்ட நந்தர்கள் ஆவார்கள். அவர்கள் தம் பெருஞ் செல்வத்தைக் கங்கை ஆற்றின் நடுவே புதைத்து வைத்திருந்தனர். 2500 ஆண்டுகட்கு முற்பட்ட இச்செய்தியைக் கடைச் சங்க காலத்துப் பழம்பெரும் புலவர் மாமூலனார் குறித்துள்ளார்.
“பல் புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர் முதல்கரந்த நிதியங்கொல்லவோ” (அகம்-265)
இந்நகரை நிறுவிய பேரரசான அஜாதசத்ருவின் பெயரன் உதயணன் என்று கூறப்படுகிறது. இன்று மரபிழந்து மறக்கப்பட்டுவிட்ட ஏதோ வடதிசைத் தாய்மொழியில் அவன் குடிமரபின் வரலாறு ஒரு பெருங் காவியாமாக எழுதப்பட்டதென்று அறிகிறோம். அதன் பெரும் பகுதி தமிழிலும் பெருங்கதை என்ற பெயருடன் சிதைவுற்ற ஓர் ஏடாக நிலவுகிறது. பாடலிபுர நகரம் பொன்னுக்கு பொன்னில் நல்ல கலை வேலைப்பாடு உடையவர்களுக்கும் பேர் போனதென்று அது குறிக்கிறது.
“பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞர்” (பெருங் கதை உஞ்சைக் காண்டம்) என்பது அந்நூலின் ஆசிரியரான கொங்குவேள் தரும் தகவல் ஆகும்.
இக் குறிப்புகள் அசோகனுக்கு முற்பட்ட புத்தர் பிரான் காலத்தைச் சார்ந்தவை. இவற்றின் இறுதிக் குறிப்பு நீங்கலாக ஏனையவை கி.மு. 6 முதல் 4- ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த புலவரின் சமகாலக் குறிப்புகள் என்பதும் கவனிக்கத்தக்கது.
மோரியர் தொடர்பு: சோழப் பேரரசன் இளஞ்சேட் சென்னி
அசோகன் மரபினர் ‘மோரியர்’ ஆவர். இவர்கள் கி.மு. நாலாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஆண்டவர்கள். அவர்களைப் பற்றிய சமகாலக் குறிப்புகளும் சங்க இலக்கியத்தில் நிரம்ப உள்ளன. இவர்கள் அசோகன் காலத்தவர்களல்லர். பிற்காலத்தில் அதாவது கி.மு.இரண்டாம் நூற்றாண்டினர் அல்லது கி.பி. இரண்டாம் நூற்றாண்டினர் என்று கொள்ள ஆதாரஉண்மைம் தேடுபவர் உண்டு. ஆனால் அசோகனைப் பற்றியே வரலாற்றாசிரியர்கள் கொண்ட ஒரு தவறான கருத்துத்தான் இதற்குக் காரணம். அசோகன் பேரரசின் தென் எல்லை மைசூர் என்று அறிகிறோம். ஆனால் அசோகன் கலிங்கத்தை மட்டுமே வென்றான். தென்னாட்டின் வடபகுதியை வெல்லவில்லை. ஆகவே பிந்துசாரனே பண்டைத் தமிழகம் நீங்கிய தென்னாட்டை வென்றிருக்க வேண்டும் என்று பலர் கருதியுள்ளனர். மிக அண்மைக் கால வரலாற்றாசிரியர் தார நாதர் குறிப்பை இதற்கு ஆதரவாகக் கொள்கின்றனர்.
உண்மை என்னவெனில் கலிங்கம், மோரியர் காலத்தில் ஒரு பேரரசு. சிறிய நாடு அல்ல. அது அசோகன் பேரரசைவிடப் பரப்பிலோ ஆற்றலிலோ குறைந்ததல்ல. பின்னாளைய ஆந்திரப் பேரரசைப் போலவே அதுவும் கங்கை முதல் வடபெண்ணை வரை பரவியிருந்தது. மோரியருக்கு முற்பட்ட கலிங்கரும் அவருக்கு முற்பட்ட நந்தரும் சிசுநாகரும் கூடத் தம் பேரரசெல்லையை மைசூர் வட எல்லை வரை பரப்பி இருந்தனர் என்றும் இப்போது தெரியவருகிறது. இப்பேரரசின் விரிவு அஜாதசத்ருவின் காலத்திலேயே நடைபெற்றதாகலாம். தமிழகத்திற்கும் அப் பேரரசிற்கும் இடையிலுள்ள வடுசுகர் கோசர் என்ற முரட்டு வகுப்பினரே அதன் எல்லையில் வாழ்ந்தனர். அசோகன் கலிங்கத்தை வெல்லாவிட்டால், கலிங்கர்களே அசோகனை வென்றிருப்பர். மோரியர் வீழ்ச்சிக்குப் பின் கலிங்கப் பேரரசன் காரவேலனும், ஆந்திரப் பேரரசரும் அவ்வாறே வென்றனர். ஆகவே தமிழக எல்லை வரை அசோகன் பேரரசு பரவியது அவன் முன்னோர் காலத்திலல்ல. கலிங்கப் பேரரசின் வெற்றியே அவனை அப்பேரரசின் எல்லையாகிய தமிழக எல்லைக்குக் கொண்டுவந்தது. அது கடந்தும் அவன் சேர, சோழ, பாண்டிய அரசர்களை வெல்ல முயன்றான். அது முடியாததனாலேயே அவர்களுடன் நேசத் தொடர்பு வைத்துக் கொண்டான். பிற்கால வரலாற்றுச் செய்திகள் பல இதனைத் தெளிவுபடுத்தும்.
அசோகன் காலத்து மோரியப் படைகளைத் தமிழகப் பேரரசனான சோழன் இளஞ்சேட் சென்னி செருப்பாழி என்ற பெரும்போரில் வென்றான். தமிழக வரலாற்றில் நாம் காணும் முதற் பெரும் நிலப்போர் இதுவேயாகும். இதனைப் பற்றிய முழு விவரங்களும் சங்க இலக்கியப் பாடல்களில் சிதறிக் கிடக்கின்றன. முனைவர் எம்.இராசமாணிக்கனார் இவற்றை நமக்குத் திரட்டிக் கொவைப்படுத்தித் தந்துள்ளார். இலஞ்சேட் சென்னியின் காலம் ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண்டு ஆகும்.
மோரியர் படையெடுப்பு: வட்டாற்றுப் போர்; செல்லூர்ப் போர்
சங்க காலத்தின் பின்னாட்களில் கல்வெட்டுக்களில் நாம் வடுகவழி என்ற கீழ் கடற்கரையோரப் பாதை பற்றிக் கேள்விப்படுகிறோம். பல்லவ சோழ காலங்களில் தமிழகத்தையும் ஆந்திரத்தையும் வட இந்தியாவையும் இது இணைத்தது. ஆனால் சங்க காலத்தில் இவ்வழி காடுகள் நிறைந்ததாகவும் எளிதில் கடக்கக் கூடாததாகவுமே இருந்தது. ஏனெனில் நீலகிரி வழியாகவும் குடகு வழியாகவுமே பயணம் செய்வோரும் படைஎடுப்போரும் சென்று வந்தனர். துளுவ நாடே தமிழகத்தின் வடக்கு வெளியாய் இலங்கிற்று. அந்நாளில் அது பொன் விளையும் திருநாடாக விளங்கிற்று. படை எடுப்பாளர்களை இந்தப் பொன் வேட்கையும் கவர்ந்திருந்தன என்பதில் ஐயமில்லை.
மோரியர் முதற்கண் தம் எல்லைப் புறத்திலிருந்த கோசர்களைத் துளுவ நாட்டின் மீது ஏவினர். இக் கோசர் கோவா அருகிலுள்ள தற்காலக் கோலாப்பூரைச் சார்ந்தவர்கள். சங்க காலத்தில் தமிழர் நிலப் படைகளில் அவர்கள் வீரராகச் சேர்ந்து பணியாற்றியதுண்டு. அவர்கள் சொன்ன சொல் காப்பவர்கள் என்று அந்நாளில் புகழ் பெற்றிருந்தனர். சங்க ஏடுகள் இது காரணமாக அவர்களை ‘வாய்மொழிக் கோசர்’ என்றும் அசோகர் கல்வெட்டுக்கள் ‘சத்தியபுத்திரர்’ என்றும் பராவுகின்றன.
துளுவ நாட்டை அந்நாளில் ஆண்டவன் நன்னன் என்பவன். சங்கப் பாடல்களில் பின்னாட்களில் சேரர் போர்களில் மிகுதி ஈடுபட்ட நன்னன் இவன் மரபினன் ஆகலாம். இடைக்காலங்களிலும் இவன் பெயர் மரபை, நன்னிச் சோடர் முதலான பெயர்களின் முதல் பகுதியில் காணலாம்.
தொடரும் …
முந்தைய பகுதிகளை பார்க்க இங்கே சொடுக்குங்கள்
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தென்னாட்டுப் போர்க்களங்கள் – 6- வடதிசைத் தொடர்புகள்”