மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தென்னாட்டுப் போர்க்களங்கள் -7

ஆச்சாரி

May 1, 2012

கோசர் நன்னனைப் போரில் முறியடித்து, அவனைக் காடுகளுக்குத் துரத்தினர். அவன் பட்டத்து யானையைக் கொன்றனர். துளுவ நாட்டைக் கைப்பற்றி அங்கேயே தங்கினர். அந்நாட்டின் சிறந்த கோட்டை நகராகிய ‘பாழி’யை அரணாக்கி வலிமைப்படுத்திக் கொண்டு, அதையே தம் அடுத்த படை எடுப்புக்குரிய மூலதளமாக்கிக் கொண்டனர். பின் அவர்கள் சேரனையும் அதிய மரபினனாகிய எழினியையும், சோழ நாட்டு எல்லையில் உள்ள அழுந்தூர்வேள் திதியனையும், பாண்டிய நாட்டு எல்லையிலுள்ள மோகூர்த் தலைவனையும் படிப்படியாகத் தாக்கினர்.

சேரர் படைத் தலைவன் குதிரை மலைக் கோமானாகிய பிட்டங் கொற்றன் மோரியருடன் பல தடவை போர் புரிந்தான். இவற்றில் எப்பக்கம் வெற்றியடைந்தது என்பது தெரியவில்லை. ஆனால் மோரியர் கை வலுத்திருந்தது என்றே கூறவேண்டும். ஏனெனில் அவர்கள் எழினியைத் தாக்கி வாட்டாறு என்ற இடத்திலும் செல்லூர் என்ற நகரின் கீழ் திசையிலும் பெரும் போர் உடற்றினார்கள். செல்லூர்க் கீழ்த் திசைப் போரில் எழினி மார்பில் வேல் பாய்வுற்று மாண்டான்

சோழ நாட்டு எல்லையிலுள்ள அழுந்தூர்வேள் ஆகிய திதியனிடத்திலும் பாண்டி நாட்டு எல்லையிலுள்ள மோகூர்த் தலைவனிடத்திலும் மோரியர் கைவரிசை சாயவில்லை. திதியன் அவர்களை முறியடித்துத் துரத்தினான். மோகூர் பணியாமல் நிமிர்ந்து நின்றது. பாண்டி நாட்டுக்குள் மோரியர் அடியெடுத்து வைக்க முடியாமல் தடுத்து நிறுத்திற்று

இச்சமயம் வரை மோரியப் பேரரசன், பேரரசுப் படை தமிழகம் புகழவில்லை. எல்லைப் படைகளே ஈடுபட்டிருந்தன. துளுவ நாட்டு முதல் வெற்றியின் பின் சிறு சிறு தலைவர்களிடம் ஏற்பட்ட தோல்விகள் அவனைத் தட்டி எழுப்பின. அவன் இப்போது பேரரசின் பெரும் படையையே திரட்டினான். துளுவ நாடு அல்லது குடகையும் மைசூர் அல்லது எருமை நாட்டையும் கடந்து தமிழகத்துக்குள் வரும் வழியிலுள்ள மலைகளை ஆற்றூர்க் கணவாய்ப் பக்கம் வெட்டிச் செப்பனிட்டுத் தேர் செல்லும் பாதை உண்டு பண்ணினான். இவ்வேலை சில ஆண்டுகள் பிடித்திருக்கவேண்டும். ஏனெனில் அம்முயற்சி சங்க ஏடுகளில் பல இடங்களில் சுட்டி உரைக்கப்படுகிறது.

பாதை முற்றுப் பெற்ற பின் கடலெனப் பரந்த மோரியப் பேரரசின் பெரும் படைகள் பேரேரியில் வந்து தேங்குவது போலத் துளுவ நாட்டில் வந்து குழுமிப் பேராறுகளாகத் தமிழகத்துக்குள் வந்து பாய்ந்தன.

செருப்பாழிப் போர்: சோழப் பேரரசன் பெருவெற்றி

தமிழகத்துக்கு வந்துற்ற பேரிடையூற்றைச் சோழப் பேரரசன் இளஞ்சேட் சென்னி உணர்ந்து கொண்டான். இனித் தமிழக வேளிர் கைகளிலும் சிற்றரசர் மீதும் பொறுப்பை விட்டுவிட்டு ஒதுங்கியிருப்பது தகாது என்று எண்ணினான். அவனும் தன் பேரரசப் பெரும் படைகளைத் திரட்டினான். அந்நாளில் சேரரும் பாண்டியரும் அவன் ஆணையின் கீழ்பட்ட துணையரசுகளாய் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் போர் தமிழகப் போர் ஆயினும் வெற்றிகள் சோழப் பேரரசன் வெற்றியாகவே குறிக்கப்படுகின்றன. வடவர் புராண மரபில் சேர பாண்டியரைவிடச் சோழருக்கே பேரிடம் ஏற்பட்டது. இப்பெரும் போரின் புகழ் காரணமாகவே எனலாம்.

சோழ நாட்டு எல்லையிலேயே மோரியர் படைகள் பல தடவை நையப் புடைக்கப்பெற்றன, மோரியர் மீண்டும் மீண்டும் புதுப் புதுப் படைகள் அனுப்பினர். வடதிசைப் பேரரசின் முழு ஆற்றலும் இதில் ஈடுபடுத்தப்பட்டது. ஆயினும் சோழப் பெரும் படையும் பிற தமிழகப் படைகளும் அவர்களை சிதறடித்தன. உயிரிழந்தவரும் உறுப்பிழந்தவரும் போக மீந்தவர் சோழ நாட்டின் எல்லையிலிருந்து துளுவ நாடு வரை தப்பினோம் பிழைத்தோம் என்றோடினர்.

திதியனைப் போல இளஞ்சேட் சென்னி மோரியரை முறியடித்ததுடன் அமையவில்லை. அவர்கள் மறுபடி தமிழகப் பக்கம் திரும்பாதிருக்கும்படி செய்ய அவன் எண்ணினான். ஆகவே தோற்றோடிய படைகளைத் துளுவ நாட்டுக்கே துரத்திக்கொண்டு சென்றான். மோரியர் மூலதளமாகிய பாழிக் கோட்டையையே முற்றுகையிட்டான்.

தாக்கியவர் இப்போது திருப்பித் தாக்கப்பட்டனர். பாழிக் கோட்டையிலுள்ள தங்கள் பிடியையேனும் காப்பாற்றிக்கொள்ள மோரியர் அரும்பாடுபட்டனர். ஆனால் சென்னி தமிழகத்தின் அன்றைய சென்னியாகிய துளுவ நாட்டிலேயே மோரியர் தடம் அழியும்வரை போரிட்டான். பாழிக்கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது.

செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியின் பெரும் புகழ் இடையன் சேந்தன் கொற்றனாரால் இனிது பாடப்பட்டுள்ளது.

“எழூஉத்திணிதோள் சோழர்பெருமகன்

விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி

குடிக் கடனாகலின் குறைவினை மூடிமார்

செம்புறழ் புரிசைப் பாழி நூறி

வம்பவடுகர் பைந்தலை சவட்டிக்

கொன்றயானை…………………………………” (அகம் 375)

தமிழகத்தைப் பேரரசால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை அசோகனுக்குத் தகர்ந்த பின்னரே, சமயப் போர்வையில் ஆட்சிப் புகழ் பரப்ப அவன் முனைந்திருக்க வேண்டும் எனலாம். அங்க காலத்திலேயே தமிழகம் ஆரியமயமாகத் தொடங்கியதற்கு அசோகனும் புத்த சமண சமயங்களின் இனிப்பான தலையீடுகளுமே காரணம் ஆயின எனலாம்.

செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிணன் என்றும், சிபி, முகுந்தன், காந்தன், தூங்கெயில் எறிந்த தொடித்தோட் சென்னியன் ஆகியோர் அவனுக்கு முற்பட்ட சோழர் என்றும் முனைவர் இராச மாணிக்கனார் கருதுகிறார். அவனுக்குப் பின் மனுநீதிச் சோழனும் முதற் கரிகாலனும் கி.மு.இரண்டாம் நூற்றாண்டினர் என்றும், பெரும் புகழ் வாய்ந்த இரண்டாம் கரிகாலன் கி.மு. முதல் நூற்றாண்டிணன் என்றும் அவர் வகுத்துள்ளார். தமிழரசர் வரிசை முறையும் கால வரையறையும் முற்றிலும் நிறைவுற ஒழுங்குபடும் வரை இவ்வரிசை முறையையே நாம் தற்காலிகமாக ஏற்றுக் கொள்ளலாகும்.

முதல் இலங்கை வெற்றி: மனுச்சோழன்

மனுநீதிச் சோழனே இலங்கையை ஆண்ட தமிழ்ச் சோழ அரசன் ஏலாரன் என்று முனைவர் இராசமாணிக்கனார் முடிவு செய்கின்றார். ஆவின் கன்றுக்குப் பதிலாக மைந்தனைத் தேர்க் காலிலிட்டரைத்த கதை இரு அரசர்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது என்பதே இதன் காரணம். முதற் கரிகாலனை கி.மு. இரண்டாம் நூற்றாண்டினினனாக அவர் கொள்வதற்கும் இதுவே வழிவகுத்தது எனலாம். திருவள்ளுவர் கதை மரபில் அவர் மாணவராகவும் புரவலராகவும் கூறப்படும் கடல் வணிகன் ஏலேல சிங்கனே ஏலாரா என்று கருதுபவரும் உண்டு.

“நளியிறு முந்நீர் நாவாய் ஓட்டி

வளி தொழிலாண்ட உரவோன்மருக” (புறம் 66)

என்று வெண்ணிக் குயத்தியார் சோழன் கரிகாலனைப் பாடும் பாட்டில் கரிகாலன் முன்னோனாகக் குறிப்பது இந்த மனுச் சோழனையே என்று கருத இடமுண்டு. ஏனெனில் இவ்வடிகள் அம்முன்னோன் கடலில் கப்பலில் சென்று போராற்றியதையும் அச்சமயம் காற்றையே ஆட்கொண்டதையும் குறிப்பிடுகின்றன.

இமயத்தில் வில், புலி, கயல் பொறிப்பு

தமிழ் மூவேந்தரும் ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டு இமயத்தில் வில், புலிக் கொடிகள் பொறித்தனர் என்று சங்க நூல்கள் பலகாலும் பகர்கின்றன. இவை வெறும் புனைந்துரைகள் என்று பல புலவரும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்களும் கொள்கின்றனர். வரலாற்று வான விளிம்பில் உள்ள தெற்கு வடக்குத் தொடர்புகளையும் தமிழிலக்கியத்தில் தமிழர் கடற் போர், தொலைவடவர் பற்றியும் ஆரியருடன் போர் செய்து பெற்ற வெற்றிகள் பற்றியும்  வரும் மிகப் பலவான குறிப்புகள் புனைந்துரைகளாகக் கொள்ளுதற்கு இடந்தராதவை. இவற்றுள் பல புறத்துறையில் அரசரைப் புகழும் பாட்டுக்கள் மட்டுமல்ல; அகத்துறையில் காதலி கூற்றிலும் காதலன் கூற்றிலும், பாங்கி கூற்றிலும் பாங்கன் கூற்றிலும் உவமை நயம், அடைமொழி நயம்படப் பெரும் புலவர் இடைப்பெய்து கூறும் குறிப்புகள் எத்தனையோ உண்டு. நாடறிந்தவனாக மட்டுமின்றி வீடறிந்தவனாகக் கூறப்படும் இவ்வெற்றிகள் இன்று தமிழர் கனவு காணாத ஓர் உயரிய தேசிய வாழ்வையும் அதனூடாகப் பல வரலாற்று நிகழச்சிகளையும் காட்டுகின்றன என்பதில் ஐயமில்லை.

தென்திசை வடதிசைப் போட்டி பெரும்பாலும் கங்கைப் பேரரசுகளும் தமிழகப் பேரரசுகளும் இவற்றுடனே ஆந்திர கலிங்கப் பேரரசுகளும் மட்டுமே ஈடுபட்ட ஒன்றாகும். இதில் தொடக்கக் காலத்தில் ஆந்திரப் பேரரசும் அதன் பின் ஆந்திர கங்கைப் பேரரசுகளும் ஆரிய அரசுகள் என்று கூறப்பட்டிருத்தல் கூடும். இங்கே ஆரிய என்ற சொல் இன அடிப்படையான உணர்ச்சி காட்டும் சொல் அல்ல. நாட்டடிப்பையாகவும் திசையடிப்படியாகவும் வழங்கிய சொல்லேயாகும். புத்தர் காலங்களில், கங்கை நாட்டினரே தம்மை மிகப் பெருமையுடன் ஆரியர் என்று கூறிக்கொண்டனர். ஆனால் இக்காலம் ஆரிய இன அடிப்படை ஒரு தேசிய அடிப்படையில் வளர்ந்த காலம் ஆகும்.

தமிழக நாகரிகமே கங்கை நாட்டில் இப்புதிய ஆரிய தேசியத்தை உருவாக்கக் காரணமாய் இருந்தது. ஆந்திரர் கலிங்க நாடு முழுவதும் வென்று இமயம்  பரவிய காலத்தில் இந்தத் தேசிய ஆரியர் புகழ் உச்ச நிலையடைந்தது. ஆந்திரர் வங்கத்தை வென்றதுடன் அமையாது பர்மாவின் பெரும் பகுதியையும் கைக்கொண்ட பின் ஆந்திர- மகதப் பேரரசு ‘முக்கலிங்கம்’ என்று அழைக்கப்பட்டது. முக்கலிங்கம் என்பது தெலுங்க கலிங்கம், வங்கம், பர்மா ஆகிய மூன்றுமே. இம் முக்கலிங்கப் பேரரசர் காலத்தில் தமிழர்- கங்கை ஆரியர் போட்டி மறைந்தது. கங்கை ஆரியர், ஆந்திரர், தமிழர் ஒரே நாகரிகத்தின் அடிப்படையில் இணைந்து, பண்படா ஆரியரும் அயலாருமான சிந்து ஆரிய மன்னரை எதிர்க்கத் தொடங்கினர். இதுவே சேரன் செங்குட்டுவன் காலம். (கி.பி. 150-200)

எனவே மூவேந்தர் வட திசைப் படையெடுப்புகள் நடந்த காலம் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னிக்கும் (கி.மு. 3 ம் நூற்றாண்டு) செங்குட்டுவனுக்கும் (கி.பி. 150) இடைப்பட்ட காலமாய் இருத்தல் வேண்டும். இக்காலத்தில் மூவேந்தர் வடதிசைக்கேதிராக வடதிசைக்கெதிராக நீண்ட நாள் ஒன்றுபட்டிருந்த செய்தியைக் கலிங்கப் பேரரசன் காரவேலன் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.

கலிங்கப் பேரரசன் காரவேலன் படையெடுப்பும் தோல்வியும்

காரவேலன் கலிங்கப் பேரரசனாக ஆண்ட காலத்தை நம்மால் வரையறுக்க முடியவில்லை. ஆனால் அவன் ஆந்திரரை அடக்கி மகத நாட்டையும் வென்று புகழச்சி அடைந்திருந்த நாட்கள் கி.மு. 163-க்கும் கி.மு. 153- க்கும் இடைப்பட்ட பத்தாண்டுகளே என்று அறிகிறோம். அவன் சமண சமயம் சார்ந்தவன். அசோகன் தன் ஆட்சிப் பரப்புடனே புத்த சமயமும் பரப்பியது போல, தன் ஆட்சிப் பரப்புடன் சமண சமயமும் பரப்ப வேண்டும் என எண்ணம் கொண்டவன் அவன். இக் காரணத்தினாலேயே அவன் சமண சமய அசோகன் என்று குரிக்கப்படுகிறான். ஆந்திரப் பேரரசின் நீடித்த ஆச்சிக்கு வழி வகுத்துக் கொடுத்தவன் அவனே.

வடதிசையில் பரப்பிய ஆட்சியையும் சமயத்தையும் தென்திசையிலும் பரப்பி, அசோகனையும் தாண்டிப் புகழ் பெற்றுவிட வேண்டுமென்று காரவேலன் துடித்தான். ஆந்திரப் பேரரசு தற்காலிகமாக அவன் கீழ்ப்பட்டிருந்ததனால் அவன் பேரரசின் எல்லையும் அசோகன் பேரரசன் எல்லையைப் போலவே தமிழக எல்லையை அளாவியிருந்தது. மோரியர் என்றும் தலைப்படாத அளவில் அவன் தமிழகத்தில் இடம்கொள்ள பல போர்கள் ஆற்றினான். தமிழகத்தில் மூவேந்தர்கள், வேளிர்கள் ஆகிய யாவரும் செருப்பாழி கடந்த இளஞ்சேட் சென்னி கால முதல் வடதிசையை எதிர்த்து ஒரே கூட்டு முன்னணி அமைத்திருந்தனர். இதைச் சூழ்ச்சிகளால் உடைக்கவும் காரவேலன் அரும் பெரும் முயற்சிகள் செய்தான். இவற்றில் வெற்றி பெற்றதாகவும் அவன் தற்காலிகமாக எண்ணினான் என்று தோற்றுகிறது. ஏனென்றால் அவன் கல்வெட்டுக்களில் ஒன்றில் அவன் இதுபற்றித் தற்பெருமை கொள்கிறான். 113 ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவி வந்த தமிழக அரசர்களின் கூட்டணியைச் சிதைத்து விட்டதாக அவன் அதில் குறிக்கின்றான்.

கூட்டணி அமைந்த காலம் செருப்பாழி எறிந்த காலமானால் அதன் ஆண்டு கி.மு.276 அல்லது கி.மு. 266 ஆக இருக்க வேண்டும் எனலாம்.

By following the above suggestions and ideas I hope it will be possible for you to finish your graduate degree program in a most timely and enjoyable manner

By following the above http://justdomyhomework.com suggestions and ideas I hope it will be possible for you to finish your graduate degree program in a most timely and enjoyable manner


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தென்னாட்டுப் போர்க்களங்கள் -7”

அதிகம் படித்தது