இட ஒதுக்கீட்டினால் இந்தியாவுக்கு ஏற்றமா? இறக்கமா?
ஆச்சாரிJun 30, 2012
இந்தியாவின் அடையாளங்களில் இட ஒதுக்கீடும் ஒன்றாகிவிட்டது. இதைப் பெருமை யாகக் கருதுபவர்களும் உண்டு, அவமானமாகக் கருதுபவர்களும் உண்டு. இந்திய செய்தித் தாள்களின் தலைப்புச் செய்திகளில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டை இட ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கி வைத்தது போன்று இட ஒதுக்கீடு பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கின்றன. இஸ்லாமியர்களுக்கான உள் ஒதுக் கீடு நீதிமன்றத்தின் கண்டனத்திற்குள்ளாகி இருக்கும் செய்திகள் தற்போது செய்தித் தாள்களில் அப்பகுதிகளை நிரப்பிக்கொண்டிருக்கின்றன. இன்றைய சூழ்நிலைகளில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தேவையில்லை என்றும் அதற்கு பதிலாக என்னென்ன மாற்று வழிமுறைகளை பின்பற்றலாம் என்றும் பல கருத்துக்கள் ஊடகங்களில்விவாதிக்கப்படுகின்றன.
அரசியல்வாதிகள் இட ஒதுக்கீட்டை வாக்குகளைக் கவரும் கருவியாக பயன்படுத்து கின்றனர். ஏதேனும் ஒரு சாதியை இட ஒதுக்கீடு படிகளில் மாற்றி அமைப்பதற்கோ, அல்லது உள் ஒதுக்கீடு கொடுப்பதற்கோ இன்றைய அரசியல்வாதிகள் எந்த சமூக விளைவுகளையும் ஆராய்வதில்லை, தன் கட்சிக்கு அதனால் வாக்கு கிடைக்குமா என்ற ஒரே கேள்வியை மையமாக வைத்துதான் முடிவெடுக்கின்றனர். இன்றைய அரசியல்வாதிகளின் இந்த குறுகிய மனப்பான்மையால் மக்கள் இட ஒதுக்கீடு கொள்கையை விமர்சிக்கிறார்கள். இட ஒதுக்கீடு இன்றைய அரசியல்வாதிகள் உருவாக்கிய மலிவான திட்டமல்ல. இந்தியாவை ஆண்ட ஒரு சில நல்ல அரசியல் தலைவர்கள் உன்னதமான நோக்கத்தோடு இட ஒதுகீட்டைக் கொண்டுவந்தனர்.
இட ஒதுக்கீடு முறை நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வெவ்வேறு வடிவத்தில் இருந்து வருகின்றது. 1891 ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் தேவையான திறமை இருந்தாலும் உயர்சாதி அல்லாதவர்கள் அரசுப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்பதைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. வழக்கம்போல் ஆங்கிலேயர்களின் உதவி உடன் போராட்டம் ஒடுக்கப்பட்டது. பின்னர் 1902 ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கோல்ஹாபூர் மகாராஜா சத்ரபதி ஷாஜி மகாராஜ் அவரது ராஜ்ஜியத்தின் அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கென்று ஐம்பது விழுக்காடு இடத்தை ஒதுக்கி அரசானை வெளியிட்டார். இது இந்திய வரலாற்றில் சட்டப்படியான முதல் இட ஒதுக்கீடுஆகும்.
1909 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய சட்டம் இட ஒதுக்கீட்டிற்கான அடித்தளத்தை அமைத்தது. 1921 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி அரசு இட ஒதுக் கீடு முறையைக் கொண்டுவந்தது. இதன்படி பிராமணர்களுக்கு 16 விழுக்காடும், இஸ் லாமியர்களுக்கு 16 விழுக்காடும், ஆங்கிலோ இந்தியர்களுக்கு 16 விழுக்காடும், ஒடுக்கப் பட்டவர்களுக்கு 8 விழுக்காடும், மற்றவர்களுக்கு மீதி 44 விழுக்காடும் ஒதுக்கப்பட்டது. ஆனால் உயர் அதிகாரிகளின் ஒப்புதல்கள் இல்லாததால் இதை சரியாக நடைமுறைப் படுத்தமுடியவில்லை.
செப்டம்பர் 1931 இல் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கார் ஒடுக்கப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமை கோரிக்கையை முன்வைத்து வாதாடினார். இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களின் நிலையை நன்குணர்ந்த பிரிட்டிஷ் அதிகாரிகளும், பிரதம மந்திரியும் அக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர். இதன்படி பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் ஒடுக்கப்பட்ட இன வேட்பாளரை தேர்ந்தெடுக்க இன்னொரு வாக்கும் என ஒடுக்கப்பட்ட இன மக்க ளுக்கு இரண்டு வாக்குகள் அளிக்கும் உரிமை நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆனால் காந்தி இந்த இரட்டை வாக்குரிமை இந்து மதத்தினருக்குள் பிளவை ஏற்படுத்திவிடும் என்று கடுமையாக எதிர்த்தார். செப்டம்பர் 20, 1932 -ல் புனேவில் இருக்கும் யேர்வதா சிறைச்சாலையில் இரட்டை வாக்குரிமையை கைவிடக் கோரி சாகும் வரை உண்ணாவிரத்ததை தொடங்கினார் காந்தி. இது நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நெருக்கடியை ஏற்படுத்தினர். வேறு வழியின்றி கடும் நிர்ப்பந்தத்தில் அம்பேத்கார் செப்டம்பர் 24, 1932 இல் காந்தியுடன் புனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தத்தின்படி பதினெட்டு விழுக்காடு தொகுதிகள் அதாவது 148 தொகுதிகள் ஒடுக்கப்பட்ட இனத்தினருக்கென்று ஒதுக்கப்பட்டது. இந்த தனித் தொகுதிகளில் இருந்து ஒடுக்கப்பட்ட இனத்தினர்களே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரட்டை வாக்குரிமை கைவிடப்பட்டு தனித்தொகுதி இட ஒதுக்கீடு மட்டும் அமல்படுத்தப்பட்டது.
பின்னர் 1947 இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர் அம்பேத்கார் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதன் மூலம் இட ஒதுக்கீடு சுதந்திர இந்தியாவின் சட்ட பூர்வமாக்கப்பட்டது. தேர்தலில் தொடங்கிய இட ஒதுக்கீடு படிப்படியாக அரசு வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு, கல்வியில் ஒதுக்கீடு என்று விரிவுபடுத்தப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பழங்குடியினருக்கும் மட்டுமே முதலில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பின்னர் இவர்களுக்கான இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவர்களுக்கு 15 விழுக்காடு என்றும், பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடு என்றும் விதியாக்கப்பட்டது.
தொடக்கத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எந்த இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. 1953 ஆம் ஆண்டு கலேல்கர் தலைமையில் பிற்படுத்தட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு இந்தியா முழுவதும் ஆராய்ந்து 2399 சாதி மக்களை பிற்படுத்தப்பட்ட இனத்தவராக குறிப்பிட்டது. இதில் 837 சாதியினரை மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியாகக் குறிப்பிட்டது. 1955 இல் இக்குழு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தது. 1956 இல் பாராளுமன்ற விவாதத்தில் வைக்கப்பட்ட இவ்வறிக்கை எந்த செயல் திட்டத்திற்கும் எடுத்துச் செல்லப்படாமல் முடங்கிப் போனது.
இது நடந்து 23 ஆண்டுகளுக்கு பின்னர் மொரார்ஜி தேசாய் பிரதமாராக இருந்தபோது 1978 இல் மண்டல் அவர்களின் தலைமையில் ஐவர் கொண்ட குழு மீண்டும் பிற்படுத்தப்பட்டவர்களை பற்றி ஆராய அமைக்கப்பட்டது. இக்குழு 3743 சாதிகளை பிற்படுத்தப்பட்டவர்களாக பட்டியலிட்டு 1980 இல் அறிக்கை சமர்ப்பித்தது. நாட்டின் 52 விழுக்காடு மக்களை இக்குழு பிற்படுத்தப்பட்டவர்களாக அறிவித்தது. நீதிமன்றம் 1963 ஆம் ஆண்டு எந்நிலையிலும் இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டை தாண்டக் கூடாது என்று தடை விதித்திருந்ததால் மண்டல் குழுவால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிக பட்சமாக 27.5 விழுக்காட்டிற்கு மேல் பரிந்துரைக்க முடியவில்லை. இதன் உடன் ஏற் கனவே தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பழங்குடியினருக்கும் ஒதுக்கிய 22.5 விழுக்காடை சேர்க்கும்பொழுது மொத்தம் 50 விழுக்காடாகி விடுகின்றது. மண்டல் குழுவின் அறிக்கை கடும் எதிர்ப்புக்குள்ளானது. மண்டல் தேர்தலில் நின்ற பொழுது பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 60 விழுக்காடு இட ஒதுக்கீடு பெற்றுத் தருவேன் என்று ஏற்கனவே வாக்களித்திருந்ததும், அவர் மண்டல் குழு பொறுப்பை ஏற்கும் பொழுதே மூவாயிரத் திற்கும் மேலான பிற்படுத்தப்பட்ட சாதியினர் இருப்பதாக கருத்து தெரிவித் திருந்த தும் அவர் நடுநிலைமையோடு செயல்படவில்லை என்பதை நிரூபிப்பதாக எதிர்ப் பாளர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
மண்டல் குழுவின் அறிக்கை பத்தாண்டுகளுக்கு கிடப்பில் போடப்பட்டது. பின்னர் வி.பி.சிங் பிரதமரானபோது 13 ஆகஸ்டு 1990 இல் மண்டல் குழு பரிந்துரையை ஏற்று அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுகீட்டை அறிவித்தார். இந்த அரசாணை பலரால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. உயர் வகுப்பினரால் நாடெங்கும் போராட்டங்களும் தீக்குளிப்பு சம்பவங்களும் நடத்தப்பட்டன. உச்ச நீதி மன்றம் இந்த அரசாணைக்கு தடை விதித்தது. பின்னர் பிற்படுத்தப்பட்டவர்களில் வசதி குறைந்தவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு கொடுக்கும் வகையில் கிரிமிலேயர் விதியை அறிமுகப்படுத்தி பிற்படுத்தப் பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுகீட்டை அறிமுகப்படுத்தினர். தற்போது கிரீமி லேயர் விதிப்படி ஆண்டு வருமானம் நான்கரை இலட்சத்திற்கு குறைவான பிற்படுத்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டை பெறலாம். இந்த இட ஒதுக்கீடு அரசுப் பணிகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களின் தொடர் கோரிக்கைகளால் 2008 -ல் உயர் கல்வியிலும் இதே 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
அம்பேத்கார், காந்தி, மொரார்ஜி தேசாய், வி.பி.சிங். போன்ற சில தன்னலமற்ற ஆட்சியாளர்களால் இந்தியா முன்னேற அனைத்து தரப்பினரும் வளம்பெற வேண்டும் என்ற சிறந்த நோக்கோடு கொண்டுவரப்பட்டது இட ஒதுக்கீடு. இன்று ஊழல் அரசியல்வாதிகள் தங்களின் சுயலாபத்திற்காக இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தப் பார்க்கின்றனர்.
நாளைய வல்லரசான இந்தியாவிற்கு தேவை சிறந்த மருத்துவர்களும், பொறியாளர் களும், ஆராய்ச்சியாளர்களும். உயர் கல்வியில் இட ஒதுக்கீடு கொடுப்பதன் மூலம் தரம் குறைந்த, தகுதியற்ற மருத்துவர்களையும், வல்லுனர்களையும் உருவாக்கி விடமாட்டோமா? இந்தியாவின் சிற்பி பண்டித நேரு ஜூன் 27 , 1961 இல் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் எழுதிய கடித்தத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:- “பட்டியல் இனத்தினருக்கும், பழங்குடியினருக்கும் உதவி பெறுவதற்கு தகுதி உடைய வர்கள்தான், இருப்பினும் எந்தவிதமான இட ஒதுக்கீடையும் நான் விரும்பவில்லை. தரம் குறைந்த, இரண்டாம் தரமாக உருவாகும் எதையும் நான் கடுமையாக எதிர்க் கிறேன். எனது நாடு அனைத்திலும் முதன்மையானதாக இருக்கவே நான் விரும்பு கின்றேன். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அனைத்து வழியிலும் உதவலாம் ஆனால் அதற்கு விலையாக தரக் குறைவை ஏற்றுக்கொள்ள முடியாது…” நேருவின் இந்த கடிதத்தை சுட்டிக்காட்டி இட ஒதுக்கீட்டின் மூலம் இன்று உருவாகும் தரம் குறைந்த மருத்துவரிடம் தெரிந்தே நீங்கள் உங்கள் குழந்தையை சிகிச்சைக்கு அழைத்து செல்லத் தயாரா? என்ற கேள்வி பல விவாதங்களில் முன்வைக்கப்படுகின்றது.
மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் இடஒதுக்கீட்டு முறையில் சேரும் மாணவர் களுக்கும் திறந்த போட்டியில் சேரும் மாணவர்களுக்கும் மதிப்பெண்கள் வித்தியாசம் இருப்பது உண்மையே. ஆனால் அந்த மதிப்பெண்கள் வித்தியாசம் பெரிய அளவில் ஆனதல்ல. சென்ற ஆண்டும் தமிழகத்தின் மருத்துவப் படிப்பில் சேர்க்கப்பட்ட மாண வர்களின் மதிப்பெண்களைப் (cut-off marks) பாருங்கள்.
- OC : திறந்த போட்டி : 198.50
- BC : பிற்படுத்தப்பட்டவர்கள்: 197.75
- BCM : பிற்படுத்தப்பட்டவர்கள் – இஸ்லாமியர்கள் உள் ஒதுக்கீடு : 196.5
- MBC / DC : மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்: 196.25
- SC : பட்டியலினத்தினர் : 192.25
- ST : பட்டியலினத்தினர் – பழங்குடியினர் : 189.25
- SCA : பட்டியலினத்தினர் – அருந்ததியர் உள் ஒதுக்கீடு : 188.25
இதில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்கள் அருந்ததி யினரே. அவர்களுக்கும் திறந்த போட்டியில் சேர்ந்தவர்களுக்கும் உள்ள மதிப்பெண் வித்தியாசம் ஐந்து விழுக்காட்டிற்கும் (பத்து மதிப்பெண்கள்) குறைவே. இந்தியாவை வல்லரசாக்கப் பார்க்கும்பொழுது இந்த மதிப்பெண் வித்தியாசம் பெரிதாக தோன்ற லாம். ஆனால் அருந்ததியினரின் வாழ்க்கையை அறிந்தவர்கள் இந்த மதிப்பெண் வித்தியாசத்தை அவ்வாறு பார்க்க மாட்டார்கள். தமிழகம் முழுவதும் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பாலானோர்தான் இந்த அருந்ததியினர். அவர்களின் பணி தெருக் கூட்டல், வீடுகளில் இருந்து குப்பை சேகரித்தல், குப்பைத் தொட்டிகளில் இருந்து கழிவுகளை வண்டியில் ஏற்றுதல், சாக்கடை அள்ளுதல், கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்தல் (septic tank), பாதாள சாக்கடைக்குள் இறங்கி அடைப்பெடுத்தல் போன்ற பணிகள். அதிகாலையில் கிளம்பிச் செல்லும் ஆண்கள் கிடைக்கும் வேலையை முடித்துவிட்டு முழுப் போதையுடன் நள்ளிரவில்தான் வீடு திரும்புவர். காலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் ஏதேனும் பழைய உணவுகளைப் பெற்று மாலையில் வீடு வந்து குழந்தைகளுக்கு கொடுத்து தான் வளர்க்கின்றனர். 96 விழுக்காடு அருந்ததியின குழந்தைகள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கப்படுவதாக அன்னை தெரஸா கிராமப்புற வளர்ச்சி அறக்கட்டளை ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த எண்ணிக்கை ஐந்தாம் வகுப்பில் 60 விழுக்காடாகவும், எட்டாம் வகுப்பில் 45 விழுக்காடாகவும் குறைகிறது. 20 விழுக்காட்டிற்கு மேல் அருந்ததியர் குழந்தைகள் பத்தாம் வகுப்பைத் தாண்டுவதில்லை. மிகச் சிறிய அளவினரே இந்த சமூகத்தில் மேற்கொண்டு படிக்கின்றனர். இவ்வளவு சிரமத்திற்கிடையில் 188.25 மதிப்பெண்கள் பெரும் அருந்ததிய மாணவர்கள் கடினமான சூழ்நிலைகளை சமாளிக்கும் திறன் உடையவர்களாகவும், படிப்பில் சிறப்பு திறமை உடையவர்களாகவும் இருப்பார்கள். இதுபோன்ற மாணவர்கள் திறமையான மருத்துவர் களாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
மருத்துவர் பட்டம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மறுநாளே அனைவருக்கும் கொடுக்கப்படுவதில்லை. மாணவர்களை மருத்துவர்களாக்கும் பொறுப்பு மருத்துவக் கல்வித்துறைக்கு உடையது. ஐந்தரை ஆண்டு படிப்பில் சிறந்த மருத்துவரை உருவாக்கும் அறிவையும் பயிற்சியையும் மருத்துவக் கல்லூரிகள் செய்கின்றன. ஒவ்வொரு ஆண்டுகளும் எழுத்துத் தேர்வும், செய்முறை தேர்வுகளும் வைத்து அதில் தேர்ச்சி அடையும் மாணவர்களுக்குத்தானே இறுதியில் பட்டம் கொடுக்கின்றனர். அவ்வாறு பட்டம் பெறுபவர்கள் மருத்துவராக பணி செய்யலாம் என்ற உத்திர வாதத்தை மருத்துவக் கல்வித் துறை அளிக்கின்றது. தேர்ச்சி அடையாத மாணவர் களுக்கு பட்டமும், பணி செய்யும் உரிமமும் கொடுக்கப்படுவதில்லையே. இந்நிலை யில் இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் பின்னாளில் தரம் குறைந்த மருத்துவர் களாக வருவார்கள் என்பது எப்படி உண்மையாக முடியும்? தரம் குறைந்த மருத்துவர்கள் வெளி வருகிறார்கள் என்றால் அது மருத்துவக் கல்வித் துறையின் மீதான குற்றச்சாட்டாகத்தானே இருக்க முடியும்? எவ்வாறு இட ஒதுக்கீட்டை இதற்கு காரணமாக்க முடியும்? பழி ஓரிடம் பாவம் ஓரிடமா?
மருத்துவக் கல்வியின் தரத்தில் கவலை கொண்டு இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள், முதலில் நிர்வாகமுறை இட ஒதுக்கீட்டை (management quota) அல்லவா எதிர்த்திருக்க வேண்டும்? சமூகத்தால் மதிக்கப்படும் வசதியான குடும்பத்தில் பிறந்து, நல்ல கல்விக்கான வாய்ப்பிருந்தும் மதிப்பெண்கள் மிகக் குறைவாகப் பெற்று இலட்சக் கணக்கான ரூபாய்களை அள்ளி வீசி மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களை பற்றி அல்லவா அவர்கள் கவலைப்பட்டிருக்க வேண்டும்? தேவையான அடிப்படை கட்டுமானப் பணிகளைக் கூட முடிக்காமல், நாள் வாடகைக்கு மருத்துவர்களை அமர்த்தி, கோடிக்கணக்கான ரூபாய்களை லஞ்சமாகக் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெறுகின்றார்களே அந்தக் கல்லூரிகளைப் பற்றி அல்லவா கவலைப்பட்டிருக்கவேண்டும்.
நேரு இன்று உயிரோடு இருந்திருந்தால் இட ஒதுக்கீடு இரண்டாம் தர மருத்துவர் களை உருவாக்கவில்லை என்பதை தமிழகத்தைப் பார்த்து தெரிந்துகொண்டிருப்பார். தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகின்றது. இருப்பினும் தமிழகம் மருத்துவத் துறையில் சிறப்பாக முன்னேற்றமடைந்திருக்கின்றது. இரு மாதங்களுக்கு முன்னர் சட்டமன்றத்தில் தமிழக முதல்வர், இந்தியாவின் மருத்துவத் தலைநகராக சென்னை விளங்குவதாக அறிவித்திருந்தார். அக்கூற்று உண்மை என்பதை நாள்தோறும் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் சிகிச்சை பெற சென்னை வருபவர்களின் எண்ணிக்கை வளர்வதைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். புள்ளி விவரப்படி வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு சிகிச்சை பெற வருபவர்களில் 45 விழுக்காடு மக்கள் சென்னைக்கு வருகின்றனர். தமிழகத்தின் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு இரண்டாம் தர மருத்துவர்களை உருவாக்கி இருந்தால் இன்று இந்நிலை எப்படி வந்திருக்கும்? தமிழகம் மருத்துவத் துறையில் மற்ற மாநிலங்களை விட முன்னேறி இருப்பதைப் பார்க்கும்பொழுது ஒன்று (i) இட ஒதுக்கீட்டிற்கும் தரத்திற்கும் தொடர்பில்லை எனபதைக் காட்டுகின்றது அல்லது (ii) இட ஒதுக்கீட்டீன் மூலம் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து திறமை மிக்கவர்கள் மருத்துவராக்கப்படுவதால் இந்த முன்னேற்றம் அடைந்திருக்கின்றோம் என்பதைக் காட்டுகின்றது. இந்த இரண்டில் எது உண்மையாக இருந்தாலும் இட ஒதுக்கீட்டால் தரம் குறைந்துவிடும் என்ற கூற்று பொய்யாக்கப்பட்டு விடுகின்றது.
அமெரிக்காவில் கருப்பு இன மக்கள் ஒடுக்கப்பட்டவர்களாக, அடிமைகளாகத்தான் நடத்தப்பட்டார்கள். இன்று அமெரிக்காவில் இட ஒதுக்கீடு இல்லாமலே மற்ற சலுகைகளின் மூலம் அவர்கள் முன்னேற்றம் அடைந்து விடவில்லையா? அமெரிக்காவில் பின்பற்றப்படும் முறையை இந்தியாவில் அமல்படுத்தலாமே?
-அடுத்த இதழில் பார்ப்போம்
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
i am also belongs to general category . . . . .
so i so much suffered depends upon that partiality of govt reservation….
i have a question
i am also indian…i dnt had other mother land…then my mother land neglect me ?
pls give a answer
ஒவ்வொரு வசதி படைத்த இடஒதுக்கிடு மூலம் வாய்ப்பு பெற்று முன்னேறும் ஒவ்வொருவரும் அதே சமுகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள ஒவ்வொருவரது வாய்ப்பையும் தட்டி பறித்து செல்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.எல்லோரும் முழு மதிப்பெண் பெற்றால் எப்படி இடஒதுக்கிடு?
இட ஒதுக்கிடு தூக்கி பிடிப்பது சாதியத்தை அல்லவா? பிறகு எப்படி சாதிகளற்ற சமுதாயம் உண்டாகும் ?.
ஒருசில வலிமையான சாதிகளை ஓட்டுக்காக இட ஒதுக்கிடு வளையத்திற்குள் கொண்டு வந்ததையும் எழுதி இருக்கலாம்.
இந்த இட ஒதுக்கிட்டினால் பெரும்பான்மையான வசதி படைத்தவர்களே பலன் அடைகின்றனர். அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் இதில் எத்தனை
பேர்? கிரீமி லேயர் என்ற வார்த்தை மறைந்து விட்டதோ?
இட ஒதுக்கீடு பற்றிய கட்டுரை அருமை. இந்தக் கட்டுரையை விமர்சிக்கும் பதிவுகளுக்கு கட்டுரையே பதில் வைத்திருக்கின்றது. எனினும், பொறியியல் தரம் குறித்த கவலை என்பது சமூக ஒழுக்கம் குறித்த கவலையாக இருக்க வேண்டும். அது தான் பொறியியல் தரத்தை உறுதி செய்யும். மறுபடியும் பண்டித நேருவின் நயம் பட கருவறுக்கும் கருத்துரைத்தலை இதிலும் கண் கொண்டு பார்த்தால் அது( உயர்- ரா) சாதி வக்கிரமே.கீழ்வெண்மனி,பரமக்குடி படுகொலைகள்,முதுகுளத்தூர் இன( சாதிய )க்கலவரம், மலம் திண்ண வைத்த திண்ணீயம், கோவை மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட பள்ளி மாணவன் பிள்ளையார் கோவிலில் திருனீறு தொட்டதினால் அந்தக் கோவில் குருக்களால் அடித்து கசக்கப்பட்ட பின் பதிவுகள் எதுவும் இல்லாத போலிஸ் நடவடிக்கை என்று போவதெல்லாம் பண்டிதர்களும் உயர் சாதி சண்டியர்களும் வேண்டி விரும்பியவையே. ஆகவே இட ஒதுக்கீடு சனாதனத்தின் பல ஆயிரம் ஆண்டு அமுலில் உள்ள கயமை, அதாவது அனாதனம் என்பதே நிர்ணயிக்கப்பட்ட சாதிவாரி சமூகவியல் இட ஒதுக்கீடே. இதில் வழி வழியாய் அடிமைகளாய் சேவகம் செய்யவே பிரம்மாக்கள் சூத்திரர்களையும், பஞ்சமர்களையும் அதி சூத்திரர்களையும் படைக்கின்றார். இரண்டாம் தரம் குறித்து வெந்து வேகும் காஷ்மீர் பண்டிதர்கள் பிரமாவிற்கு கடிதம் எழுதுவார்களா…??? மனித உரிமை குறித்து ???? இப்படிப்பட்ட கயமையும் கள்ளமும் தான் இந்தீயம் மலட்டு இறையாண்மை கொண்ட வல்லரசு கனவு காங்கின்றது. இருக்கட்டும், இந்தக் கட்டுரை இந்தியா முழுவதும் காவல் துறை,ரானுவம்,துணை ரானுவம், எல்லை ரானுவம், கடலோரக் காவற்படைப்பிரிவு என்று அங்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு அவசியம் குறித்தும் ஆய்வு தடரட்டும். தற்போதைய இட ஒதுக்கீட்டை தகர்த்து தவிடுபொடியாக்கிவருவது பண்டிதர்கள் கனவு கண்ட முதல் தர வக்கிரத்தை முன் நிறுத்துவதே. ஆகவே வேலைவாய்ப்பு என்பதில் இனி இயட ஒதுக்கீடு இல்லாது ஒழிந்து போகும். இப்போது உயிரோடு வாழ்ந்து வரும் பல நேரு பிரான்கள் இதனைத்தான் விரும்புகின்றனர்.
8 ஆம் தேதி மார்ச் 12 அன்று நான் எழுதிய இட ஒதுக்கீடும் ஜாதிய ஒழிப்பும் குறித்த எனது பார்வையையும், எனது பார்வையில் அதற்கான தீர்வையும் முன் வைத்திருக்கிறேன். அதற்கான பிணையை இணைக்கிறேன்.
http://lakshmanaperumal.com/2012/03/08/%e0%ae%87%e0%ae%9f-%e0%ae%92%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf/
சாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு முன்னதாக பொருளாதார அடிப்படையிலான மேலாண்மை இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தோடு எனது கேள்விகளை வைக்கிறேன்.
சில கேள்விகள்:
மருத்துவப் படிப்பில் தரம் குறைவதில்லை என்ற உதாரணத்தோடு விளக்கிய நீங்கள் ஏன் பொறியாளர் படிப்பு குறித்து கருத்து தெரிவிக்கவில்லை?
சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கான கட் ஆப் விவரத்தை தாங்கள் வெளிப்படுத்தி, இன்றைய பொறியாளர்கள் தரத்தோடு வெளிவருகிறார்கள் என்று எப்படி விளக்கப் போகிறீர்கள்?
மக்கள் தொகை படி இட ஒதுக்கீடு மற்றும் வருவாயையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
உதாரணம் 50 % பொதுப்பிரிவு. மித்த 50%த்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் சத்வீத அளவுக்கு இட ஒதுக்கீடு
For Ex.
IF SC ST is 40%, OBC is 50% and FC is 10% in TN population means give 20% to SC ST, 25% to OBC and 5% FC. and annual income must be considered.
மீதம் 50% மதிப்பெண் அடிப்படையில் பொதுப்பிரிவுக்கு அனைத்து மாணவர்களும் பயிலும் வண்ணம் அமைய வேண்டும்.
உதாரணத்திற்கு தாழ்த்தப்பட்ட குடம்பங்களில் 40%, பி.ப.ப. 50% மற்றும் மு.ப. 10% குழந்தைகள் தானே பிறக்கின்றன. அதனால் மேலுள்ள நடைமுறை சரியென எனக்கு படுகிறது.
இட ஒதுக்கீட்டை கல்விக்கு அமல்படுத்துவதில் ஒரு பெரும் சிக்கல் இருந்து வருகிறது… எடுத்துக்காட்டாக, பொறியியல் சேர்க்கைக்கு, 100 இடங்கள் கொண்ட ஒரு கல்லூரிக்கு கீழ்கண்டவாறு இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது என கொள்வோம்:
ஓச் – 40
ப்ச் – 20
ஸ்ச் – 20
ஸ்ட் – 20
என்ன நடக்கிறது என்றால், ஓச் என்பது அனைவருக்கும் பொதுவானது. அதாவது முதல் நாற்பது மாணவர்கள், அவர்கள் எந்த பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் (ஸ்ட் / ஸ்ச் / ப்ச் / ஓச்), அவரது சேர்க்கை ஓச் பிரிவில்தான் கணக்கில் கொள்ளப்படும். இதனால் ஓச் வகுப்பைச் சார்ந்த மாணவன் முதல் 40 இடங்களுக்குள் வந்தால்தான் அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு உண்டு.
198.2/200 எடுத்த பிற்படுத்தப்பட்ட மாணவன் மருத்துவம் படிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண் 35% ஆக இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை (மற்றவர்களுக்கு 60%). அப்படி 35% மதிப்பெண் பெற்ற ஒருவன் மருத்துவராகி மருத்துவம் பார்த்தால் நோயாளிகள் என்ன ஆவது? மேலும், அப்படி 35% மதிப்பெண் பெற்று எந்த பிற்படுத்தப்பட்ட மாணவனும் அரசு கல்லூரியில் படிக்கப் போவதில்லை, எதோ ஒரு தனியார் கல்லூரியில் அதுவும் சேர ஆளே இல்லாத ஒரு தரமற்ற கல்லூரியில்தான் சேர வாய்ப்புண்டு. வெறும் 35% மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு, மருத்துவர் சேர்க்கைக்கு இப்படி ஆசை காட்டி, பணம் பறிக்கும் ஒரு தனியார் கல்லூரிக்குள் அவனைத் தள்ளி, ஏற்கனவே வறுமையில் இருக்கும் அந்த மாணவனின் பெற்றோரை மாபெரும் கடன்காரர்களாக்கி வைக்கிறார்கள். அவன் எப்படி மருத்துவம் படித்து முடிப்பது, எப்படி வைத்தியம் பார்ப்பது? (நன்றி தினமணி)
இந்த தலைமுறையிடம் பணம் இருக்கும் அடுத்த தலைமுறையிடம் பணம் இருக்காது அதனால் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு இட ஒதுக்கீடு செய்யக்கூடாது என்பது மிகவும் மோசமான வாதம். பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒருவருக்கு படிப்பறிவும் வேலை வாய்ப்பும் அளித்தும் அதை வைத்து தன் குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வர இயலாத அவரின் குடும்பத்தினைப் பற்றி சிந்திக்கச் சொல்லும் வேலையில், பிற்படுத்தபட்டோரல்லாத ஆனால் பொருளாதரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் குடும்பத்தில் இருந்து வரும் மாணவனைப் பற்றி ஏன் சிந்திக்கக் கூடாது?
எடுத்துக்காட்டாக, நம் முன்னாள் முதல்வர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்… நாளை அவரின் கொள்ளு பேரன், கல்விக்கும் வேலை வாய்ப்புக்கும் இட ஒதுக்கீடு பெற முடியும்; அதே நேரத்தில் அவரைவிட கற்க ஆர்வமுள்ள, பிற்படுத்தப்பட்டோரல்லாத ஆனால் ஏழ்மையில் இருக்கும் மாணவன் அந்தக் கல்வியையோ அல்லது அந்த வேலையையோ பெற முடியாத நிலையில் இருப்பான். இதை நியாயப்படுத்த முடியுமா?
நல்ல நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இப்படிப்பட்ட சில சட்டங்களை ஓட்டுக்காகவும் கூட்டணிக்காகவும் மாபெரும் ஓட்டைகளுடன் மாற்றி, அச்சட்டங்கள் யாருக்காக & எதற்காக உருவாக்கப்பட்டதோ அது அல்லாமல் அந்த ஓட்டைகளை பயன்படுத்தி தகுதியில்லாத பலரும் பயன்பெறுகிறார்கள் என்பதுதான் உண்மை.
இன்னொரு பார்வையில் அலசினால்…. முன்பிருந்த அதே ஜாதி அடிப்படையிலான ஒடுக்குமுறை, இப்போது இருக்கும் இட ஒதுக்கீட்டின் மூலம் ஒரு இனத்திடமிருந்து இன்னொரு இனத்திற்கு மாற்றி அமைத்திருக்கிறது.
இதனை பொருளாதரத்தில் மிகவும் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடாக மாற்றாத வரை இந்த இட ஒதுக்கீட்டால் (தகுதியே இல்லாமல்) பயன் பெறுவோரைவிட (தகுதி இருந்தும்) பாதிக்கப்படுவோர் அதிகமாகவே இருப்பார்கள்…
–> ஒரு குடும்பத்தில் அதிக பட்சம் இருவர் மட்டுமே இட ஒதுக்கீடு பெற முடியும் (அதன் பின் 100 வருடங்கள் கழித்துதான் அந்த குடும்பத்திலிருந்து மூன்றாவது நபர் இட ஒதுக்கீட்டுக்கு தகுதி பெற முடிய வேண்டும்) என இச்சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்
–> தன் பெயரிலோ, அல்லது தன் குடுபத்தில் யாருடைய பெயரிலோ அசையா சொத்துக்கள் இருந்தால் (அல்லது கடந்த 2 ஆண்டுகளுக்குள் சொத்துக்கள் இருந்திருந்தாலோ) இட ஒதுக்கீடு பெற முடியாத நிலை வேண்டும்
–> தன் குடும்பத்தில் யாரும் அரசு வேலையில் இருந்தாலோ (அல்லது கடந்த 5 ஆண்டுகளுக்குள் அரசு வேலையில் இருந்திருந்தாலோ) இட ஒதுக்கீடு பெற முடியாத நிலை வேண்டும்
–> சமமான தகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் போட்டியிடும்போது பொருளாதாரத்தில் பின் தங்கியவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
அருமையான கட்டுரை. என்னுடைய பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது.