மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தெற்கில் ஒளிவீசும் நம்பிக்கை

ஆச்சாரி

Aug 1, 2012

தான் அநீதி இழைத்து விட்டோமே என்றறிந்து உயிர்நீத்த தென்னவன் ஆண்ட மண் தமிழக மண். தவறிழைத்தவன் தன் குலக்கொழுந்தாக இருந்தாலும் நீதியளித்தவன் சோனாடன். வாடிய முல்லைக்கு தேர் தந்தவன் ஆண்ட மண் நம் தமிழ் மண். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய மனம் படைத்தவர் வாழ்ந்த மண் நம் தமிழ்மண். அன்பிற்கும், வீரத்திற்கும், அறத்திற்கும், ஒழுக்கத்திற்கும் புகழ் பெற்ற நம் இனம், இன்று மாற்றான் கேலிச் சிரிப்பிற்கும், வக்ரத்தாண்டவத்திற்கும் ஆளாகியுள்ள அவல நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

மண்ணின் மேலும், மொழியின் மேலும், மனிதத்தின் மேலும் பற்றுள்ள பெரியவர்கள் காலம் காலமாகக் கேட்டுவரும் கேள்வியிது. பதில் தெரிந்தும், வழி அறிந்தும் தவறுகளைத் திருத்திக்கொள்ளாமல் இருட்டிலும், அடிமைத்தனத்திலும் உழலும் தமிழனின் நிலை குறித்து எத்தனைக் காலம்தான் வருந்திக் கொண்டிருக்க முடியும்? பல்லாண்டு காலமாக உயர் சாதியினருக்கும், ஆதிக்க சக்திகளுக்கும் அடிமைகளாகவே உழைக்கும் வர்க்கத்தினர் இருந்து விட்டனர். அவர்களின் உழைப்பினால் உயர்ந்த சாதி வெறிபிடித்த சுயநலவாதிகள் இன்று தம் சொகுசு வாழ்விற்காக, அந்த ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கொள்ளையடித்தது போதாதென்று அவர்கள் உயிரையும் விலை கேட்கத் துவங்கியுள்ளனர். ‘எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?’ என்று இதுநாள்வரை புலம்பித் திரிந்த ஒடுக்கப்பட்ட இனம், இனி நெஞ்சு பொறுக்குதில்லையே என்கிற நிலைக்கு வந்துள்ளனர். வீரத்தை இழந்து அயலானின் சூழ்ச்சிக்குள் வீழ்ந்திருந்த புலிக் கூட்டம் இன்று வீறு கொண்டு எழுந்துள்ளது.

உலக நாடுகளின் சூழ்ச்சிக்கும், வஞ்சனைக்கும் ஆளாகி ஆண்ட நாட்டை இழந்தாலும் தமிழன் மானத்தையும், வீரத்தையும் இழக்கமாட்டோம் என்று சூளுரைத்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழினத்தைக் கண்டு தென் தமிழகத்தினர் எழுந்திருப்பதை காண முடிகிறது. ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கு வீரத்தையும், மன உறுதியையும் மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்துகொண்டிருக்கின்றனர் இடிந்தகரை மக்கள். அவர்களிடம் பொன்னும், வைரமும் இல்லை. ஆனால் நேர்மையான, மனித நேயமும், வீரமும், மன உறுதியுமுள்ள தலைவன் உள்ளான். ஆம், அந்த உன்னதமான தலைவன் பெயர் உதயகுமார். வலிமை மிக்க இந்திய அரசையும், மாநில அரசையும், தன்னலத்தை மட்டும் பேணும் நகர் வாழ் மக்களையும், நாடு அழிந்தாலும், மக்கள் செத்தாலும் பணத்தை ஈட்டுவதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களையும் எதிர்த்து 340 நாட்களுக்கும் மேலாக ஓர் உன்னத உணர்வுப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி வரும்  உதயகுமார் அவர்களைக் காணக் கண்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவரிடம் கதைப்பதும், அவர் தம் சொல் கேட்பதும் மறக்க முடியா ஓர் இன்ப நிகழ்வு.

அமெரிக்காவிலிருந்து ஒரு திங்கள் விடுமுறையில் தமிழகம் செல்லத் திட்டமிட்ட நாளிலிலேயே இடிந்தகரை செல்ல வேண்டும் என்கிற எண்ணம் தோன்றிவிட்டது. எனது துணைவியார் குமரிமுனை சென்று அய்யன் வள்ளுவனைத் தரிசிக்க விரும்பியது அறிந்தவுடனே, இடிந்தகரை செல்லும் நாளுக்காகக் காத்திருந்தேன். அந்த நன்னாள் ஜுலை 23. அன்று மதியம் குமரியிலிருந்து என் மகன் அறிவனுடன் இடிந்தகரை நகரை நோக்கிப் புறப்பட்டோம்.

வழியெல்லாம் காற்றாலைகள் எங்களை வரவேற்றது. காற்றாலைகளைக் கண்டு மகிழ்ந்த என் மனம் கூடங்குளம் அணுமின் ஆலையைக் கண்டவுடன் சோகத்தில் துவண்டு விட்டது. ஆலையைச் சுற்றி 100-க்கும் மேலான காவலர்களைக் கண்டவுடன் வண்டியை நிறுத்தச் சொல்வார்கள் என்று எதிர்பார்ப்புடன் இடிந்தகரையை நோக்கி ஓட்டுநர் வண்டியைச் செலுத்தினார். காவலர்கள் எங்கள் அனைவரையும் உற்றுக் கவனித்ததுடன் விட்டுவிட்டனர். அணுமின் ஆலையைக் கண்ட என் கண்களின் துக்கம் இடிந்தகரையைக் கண்டவுடன் காணாமல் போனது.

இடிந்தகரை மிகச்சிறியதொரு மீனவக் கிராமம். எளிமையான, அன்பான, மனிதத்தைப் போற்றும் மக்கள் வாழும் மண் அது. தேவாலயத்தை அடைந்தவுடன் தோழர் ஒருவர் எங்களை அடையாளம் கண்டு, மேடையில் அமருங்கள், அண்ணனிடம் தங்கள் வருகையை தெரிவிக்கிறேன் என்று அன்புடன் எங்களை போராட்ட மேடைக்கு அழைத்துச் சென்று இருக்கையில் அமரவைத்தார். பலருடன் அமர்ந்து நிலைமையைக் கதைத்துக் கொண்டிருக்கும் வேலையில் உண்மையும், எளிமையும், அன்பும் உருவான எங்கள் அண்ணன் முனைவர் உதயகுமார் அவர்கள் வந்து எங்களை வரவேற்று திரு. புட்பராயன், திரு யேசுதாசன் உட்பட போராட்டக் குழுவிலுள்ள அனைவரையும் அறிமுகப்படுத்தினார்.

அண்ணனிடம் கதைத்த அந்த இரு மணிநேரங்கள் போனதே எங்களுக்குத் தெரியவில்லை. அண்ணனிடம் நேர்காணல் எடுத்த முடிந்தவுடன் 340 நாட்களாகத் தொடர் உண்ணாநோன்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போராளிகளுடன் நானும் எனது மகன் அறிவனும் நிழற்படமொன்று எடுத்துக்கொண்டோம். அந்த வீராங்கனைகளுடன் படம் எடுத்துக்கொண்டது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை.

திரு புட்பராயன் தற்போதைய நிலையை எடுத்துக் கூறினார். தானும் அண்ணனும் குடும்பத்தினரை விட்டு நான்கு திங்கள்கள் விலகியிருப்பது ஒன்றுதான் மனதை வருத்துகிறது என்று இருவரும் கூறியபோது துக்கம் நெஞ்சை அடைத்தது. ஆளும் வர்க்கதினர் என்றாலே கல்மனம் கொண்ட இராக்கதர்களோ என்று ஆத்திரம் வந்தது. மார்ச்சுத் திங்கள் முதல்வர் மனம் மாறி அணுமின் உலைக்கு ஆதரவுத் தெரிவித்தவுடன் அண்ணன் உதயகுமார் மற்றும் போராளிகள் பலர் மீது பொய் வழக்குகளைப் போட்டு வாட்டி வருவது மனதை வேகவைத்தது. பலர் சிறைக்குச் சென்று நீதிமன்றத்தின் உதவியுடன் வெளிவந்துள்ளனர். அண்ணனும், திரு. புட்பராயன் அவர்களும் முதல்வரது அறிவிப்புக்குப் பின் இடிந்தகரை கிராமத்தை விட்டு வேறெங்கும் செல்லவில்லை. கிராம மக்களின் பாதுகாப்புடன் இருக்கும் இவர்கள் வெளியில் சென்றால் கைது செய்ய ஆயத்தமாகவுள்ளது காவல்துறை. அண்ணனைக் கைது செய்துவிட்டு போராட்டத்தை அடக்க முயலும் அரசின் ஆணவத்தனம் எடுபடாது என்று அம்மக்களின் மன உறுதியைக் கண்டபோது வெட்டவெளிச்சமாகத் தெரிந்தது.

தமிழக மற்றும் கேரள மக்கள் இந்த ஆலையினால் விளையவிருக்கிற கேடுகளை உணர்ந்து அணுமின் ஆலைக்கு எதிராக போராட வேண்டும். நகர மக்களின் வசதியான வாழ்விற்குத் தேவையான மின்சாரத்திற்காக இடிந்தகரை மற்றும் சுற்றுவட்டாரத்தில் வாழும் மக்கள் தங்கள் உயிரை கொடுக்க வேண்டுமா? இது சுயநலமா? அல்லது அண்ணன் உதயகுமார் கூறுவது போன்று சாதி வெறியா? சாதி வெறியென்று எடுத்துக்கொள்ள மனம் எத்தனிக்கிறது. ஏனென்றால் இக்கிராமங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் ஏழை மீனவர்கள், ஏழை தலித்துகள், ஏழை கிருத்துவர்கள், ஏழை இசுலாமியர்கள். உயர்சாதியினர் இங்கு வாழ்வதில்லை. இவர்களின் உயிர் அரசுகளுக்கு மட்டுமல்ல நகரத்தில் வாழும் மெல்தட்டு மக்களுக்கும் முக்கியமில்லை. எனவே இது நகர மக்களின் சுயலம் என்று சுருக்கமாகக் கூறி விட முடியாது.

ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர் மீது சிறிதும் கவலை கொள்ளாமல் தமது வசதியான வாழ்வை மட்டும் விரும்பும் நகர வாழ் மக்களின் போக்கை மனிதகுலத்திற்கே எதிரான வெறி என்று கூறுவதில் என்ன தவறு உள்ளது? நகரங்களிலுள்ள தொழிற்சாலைகளும், தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களும் அவர்களது இலாபமுமே அரசிற்கு முக்கியம். அவைகளுக்கு மின்வசதி செய்து கொடுப்பதே அதன் கடமை. அதனால் கீழ்த்தட்டு மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை என்று எண்ணும் நகர்வாழ் மக்களின் போக்கை மனிதம் போற்றும் அனைவரும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். என்று அரசுகள் மக்களுக்காக ஆளுகிறதோ அன்றுதான் உண்மையான மக்களாட்சி துவங்கும். 340 நாட்களும் மேலாக எவ்வித வன்முறையும் இல்லாமல் மகாத்மா இன்றிருந்தால் அவரே வியக்கும் வகையில் இவர்கள் போராடிவருகின்றனர். அந்த மக்களின் பொறுமையைப் பார்க்கும் போது நெஞ்சு வியக்கிறது. எத்தனை நாட்கள் பொறுமையுடன் இவர்கள் போராடுவார்கள் என்பது நடுவண் அரசிடமும், மாநில அரசிடமும்தான் உள்ளது. அண்ணன் உதயகுமாரைக் காணுகையில் மகாத்மா நினைவிற்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.

இருமணிநேரங்கள் இடிந்தகரையில் இருந்த காலம் எங்கள் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு. ஒரு நல்லவரைச் சந்தித்த மனமகிழ்வுடன் பிரியா விடை பெற்று நானும் அறிவனும் குமரி நோக்கிப் பயணமானோம். நாங்கள் வந்த இருநாட்களுக்குப் பின் சமூக ஆர்வலரும், போராளியுமான திருமதி. அருணா ராய் அவர்கள் இடிந்தகரை வந்து நிலையை நேராக ஆய்ந்து மாநில அரசையும், நடுவண் அரசையும் கடுமையாகச் சாடியது எங்கள் போன்றோர்க்கு சிறிது மனவலிமையைத் தந்தது. போராட்டக் குழுவினர் அனைவரின் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்று மக்களிடம் பேச அவர் அரசிடம் கோரிக்கை வைத்தார். கூடங்குளம் ஆலையின் துவக்கத்தை சற்றுத் தள்ளிப்போட்டு மக்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்று அவர் அரசிடமும், அணுமின்சக்தி ஆணையத்திடமும் கேட்டுக்கொண்டார். செவி சாய்க்குமா (மக்கள்?) அரசு?

கூடங்குளம் பகுதியிலிலுள்ள கிராம மக்களின் கோரிக்கைகளுள் ஒரு சில:

ஆலையில் கசிவு ஏற்படும் வேளையில் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் பேரிடர் பயிற்சி அனைத்து மக்களுக்கும் அளிக்க வேண்டும்.

ஆலைக்குள் நடைபெறும் செயல்களை மக்களுக்கு அவ்வப்பொழுது அறிவிக்க வேண்டும்.

மக்கள் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும். (வேதனை என்னவென்றால், உச்சநீதி மன்றம் மக்களின் ஐயங்களுக்கு பதில் அளிக்க அணுமின் ஆணையத்திற்கு கட்டளையிட்டும் அவர்கள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காதது. இது அனைத்துத் தரப்பினராலும் வன்மையாக் கண்டிக்கப் படவேண்டும்)

Good, beautiful, terrific, and nice www.homework-writer.com are examples

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “தெற்கில் ஒளிவீசும் நம்பிக்கை”
  1. பால்பாண்டி says:

    மாற்றுவழிமின்சாரத்தைசெயல்படுத்துங்கல்அனுமின்நிலையம்வேண்டாம்எங்கள்வாரிசுகள்காபோரடும்திருஉதயகுமார்அவர்களின்அறபோரட்டமவெல்லட்டும்

  2. arun says:

    உதயகுமார் தமிழகத்தின் சொத்து.

அதிகம் படித்தது