மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செய்யுள்களை எளிதில் புரிந்து கொள்வது எப்படி? – 4

ஆச்சாரி

Aug 15, 2012

திருக்குறளில் போற்றுதல் என்றால் கவனித்தல் பாதுகாத்தல்

[செய்யுள்களை நேரடியாகப் புரிந்துகொள்ளச் சில சீரான நெறிமுறைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று செய்யுளில் பல சொற்கள் அன்றாடம் பழகிய சொற்கள்போல் ஒலித்தாலும் எதிர்பாராத பொருள்களிலும் வழங்குவதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதாகும். அப்படிப் புரிந்துகொண்டால் கிடைக்கும் பொருட்டெளிவும் இன்பமும் பயனும் அளவிடமுடியாதது.]

பொதுவாக இன்று போற்றுதல் என்ற சொல்லைக் கேட்டால்  பலரும் புகழ்தல், பாராட்டுதல், துதித்தல் என்ற பொருளைத்தான் உடனே சொல்வார்கள். இந்த அன்றாடப் பழக்கத்தால் பலரும் திருக்குறளையோ சங்க இலகியங்களையோ படிக்கும்பொழுதும் போற்றுதல் என்ற சொல்லுக்கு அந்தப் பொருளை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் போற்றுதல் என்றால் கவனித்தல், பாதுகாத்தல், பேணுதல், மதித்தல், கண்டுகொள்ளல் என்ற இன்னொரு பொருளைக் குறிப்பதை அறிவதில்லை. அதனால் அவர்கள் செய்யுள்களின் பொருளைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள் அல்லது அந்தப் பொருள் அறவே பொருந்தாத பொழுது திகைக்கிறார்கள்.

புறஞ்சொல்லைப் போற்றுவதா?:
இதற்கு நல்ல சான்று ஒன்றைச் சிலப்பதிகாரத்திலே காணலாம். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தினை முடிக்கும்பொழுது நன்னெறியை அறிவுறுத்திக் கூறுகின்ற பலவற்றுள் ஒன்றாகச் சொல்வது “பொய்யுரை அஞ்சுமின்! புறஞ்சொற் போற்றுமின்” (சிலம்பு: 30: 188) என்பது. இதைக் கேட்டதும் பலர் திகைக்கலாம். “பொய்யுரைப்பதை அஞ்சுங்கள்” என்று சொல்கிறது சரி; ஆனால் ஒருவரை முகத்துக்கு முன்னே புகழ்ந்துவிட்டு அவர் போனபின்னால் முதுகுப்புறமாக அவரையே தூற்றும் புறஞ்சொல்லைப் பாராட்டுங்கள் என்று சொல்வது எப்படிப் பொருந்தும் என்று மருள்வார்கள்!  ஆனால் இந்தக் குழப்பத்திற்குக் காரணம் போற்றுதல் என்பதற்குப் பாராட்டுதல் என்ற பொருளைமட்டுமே கற்றுள்ள பழக்கமேயாகும்! போற்றுதல் என்றால்  கவனித்தல் பாதுகாத்தல் என்ற பொருளும் உண்டு; பாராட்டுதல் என்ற பொருளைவிடப் பாதுகாத்தல் என்ற பொருள்தான் முன்பு பெரும்பான்மை வழக்கம். எனவே இங்கே “புறஞ்சொல்லைக் கவனியுங்கள்” என்பதுதான் பொருள்; அதாவது “புறஞ்சொல் பேசல் என்கிற தவற்றை உங்களிடம் நேராதவாறு கவனித்துக்கொள்ளுங்கள்” என்று சரியாகத்தான் இளங்கோவடிகள் சொல்கிறார் என்பது தெளிந்துவிடும்!

இன்றைய நிலவரத்தினால் இக்காலத்திலே திருக்குறளுக்கு உரை எழுதுவோரும் தவறுகள் செய்கின்றனர். சான்றாகப் பொறுமையுடைமை அல்லது பொறையுடைமை பற்றிய
 “நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.” (குறள்:16:4)
என்ற குறளுக்குக் கலைஞர் கருணாநிதி  உரைக்கும் உரையென்ன? “பொறுமையின்   உறைவிடமாக  இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்” என்கிறது!  போற்றுதல் என்றால் புகழ்தல் என்று தவறாகப் பொருள்கொண்டுள்ளார் கருணாநிதி. போற்றி என்கிற சொல்லுக்குத் தவறாகப் பொருளுரைப்பதோடு அமையாமல் அதற்கு மேல் இன்னும் தவறாக அந்த உரை திருக்குறட் செய்யுள் சொல்வதற்கு முற்றிலும் மாறாக வேறு எதையோ கருதிச் சொல்கிறது என்பதையும் கவனிக்கவேண்டும். அதையுணரத் தேவநேயப்பாவாணர்  சொல்லும் உரையைக் கவனிக்கவேண்டும்: “நிறையுடைமை நீங்காமை வேண்டின் – ஒருவன் நற்குண நிறைவு தன்னிடத்தினின்று நீங்காமையை விரும்பின்; பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் – அவனாற் பொறையுடைமை பேணிக்காத்து ஒழுகப்படும்.” அப்படியேதான் மு. வரதாராசனாரும் பழைய உரைகாரர்களாகிய மணக்குடவரும் பரிமேலழகரும் உரைக்கிறார்கள் என்பதை அங்கே காணலாம். 

ஆத்திசூடியின் “பொருள்தனைப் போற்றி வாழ்”:
 ஆத்திசூடியின் 86ஆம் மந்திரமான “பொருள்தனைப் போற்றி வாழ்” என்பது இப்பொழுது தெளிவாக விளங்கும். இன்றைய வழக்கம்போல் புகழ்தல் என்ற பொருள்கொண்டால் “உன் உடைமைப்பொருளைப் புகழ்ந்து வாழ்” என்பது பொருந்தாதென்று உடனே தெரிந்துகொள்ளலாம்! ஆனால்  கவனித்தல் என்ற பொருள் பொருந்தும்: “உன் உடைமைப்பொருள்களைக் கவனித்து, அதாவது பாதுகாத்து, வாழ்” என்பதுதான் பொருந்தும். திருக்குறளும் “பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை” (குறள்:26:2) என்கிறது; அதற்குப் பரிமேலழகர்  “பொருளால் பயன் கோடல் அதனைப் பாதுகாவாதார்க்கு இல்லை” என்கிறார்.

திருக்குறளில் போற்றுதல்:
 திருக்குறளில் போற்றுதல் என்ற சொல்லுக்கு மொத்தம் 16 பயில்வுகள் உண்டு. இதுவரை ஏற்கேனெவே இரண்டு பயில்வுகளில் பாராட்டல் புகழ்தல் என்ற பொருளில்லை என்று கண்டுள்ளோம். மீதியாவனவற்றை ஆராய்வோம்:
 “நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
            போற்றாது புத்தேள் உலகு” (குறள்: 24:4)
[வரை = வரம்பு; போற்றாது = பேணாது, மதிக்காது; புத்தேள் = தேவர்கள்]

அதன் பொருள்: “நிலவுலக வரம்பிலே நீண்டுநிலைக்கும்  புகழை ஒருவன் செய்வானாயின், தேவருலகம் அவனையல்லாமல் அறிஞர்களைக் கண்டுகொள்ளாது, மதிக்காது”. பரிமேலழகர்  போற்றாது என்பதற்குப் பேணாது என்பார்; பேணுதல் என்ற சொல்லுக்கும் போற்றுதல் என்ற சொல்லின் காத்தற் பொருளே ஆகும். ஆத்திசூடியின் தந்தைதாய்ப் பேண் என்பதன் பொருள் “தந்தை தாயரைக் கவனித்துக்கொள்” என்பதே. பாவாணர் பரிமேலழகரின் பேணுதல் என்பதற்கு விரும்புதல் என்று பொருள்கொண்டுள்ளார். ஆயினும் புகழ்தல் என்ற பொருள் இங்கே கிடையாது என்பதை நன்கு கவனிக்கவேண்டும்.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை (குறள்:32:5)
[நோய் = துன்பம்; கடை = இடம், பொழுது]
அதன் பொருள்: “பிற உயிர்களின் துன்பத்தைத் தனக்கு நேர்ந்த துன்பம்போல் எண்ணிப் பாதுகாக்காத இடத்திலே அறிவினால் ஆகும் பயன் உண்டோ?” பரிமேலழகர், மணக்குடவர் மற்றும் இன்றைய உரைகாரர்கள் அனைவரும் இதிலே போற்றுதல் என்பதற்குக் காப்பாற்றல், பாதுகாத்தல் என்று சீராகப் பொருளுரைப்பார்கள். போற்றுதல் என்பதற்குப் புகழ்தல் என்பது அறவே பொருந்தாது என்பது கண்கூடு. “தன் துன்பம்போல் புகழாத இடத்திலே” என்பது படுபிசகல்.

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும். (குறள்:47:8)
      [ஆறு = நெறி, முழுமையாக முடியும் நெறிமுறை; வருந்து = உழை; பொத்து = தொளை, குறை]
அதன் பொருள்: “ஒருவினைக்கு முழுமையான முடிவுதரும்  நெறியின்படி உழைக்காத உழைப்புப் பலர் இருந்து கவனித்தாலும், பாதுகாத்தாலும், குறைபடும்”.  மீண்டும் பரிமேலழகர், மணக்குடவர், வரதராசனார், பாவாணர் எல்லாரும்  காத்தற் பொருளையே உரைப்பதைக் கவனிக்கவும்.

ஆற்றின் அளவறிந்து ஈக; அதுபொருள்
போற்றி வழங்கு நெறி. (குறள்:48:7)
[ஆறு = நெறி]; வழங்கு = நடத்தல், ஒழுகுதல்]
அதன் பொருள்: “தனக்கு உள்ள பொருளின் அளவை அறிந்து கொடுக்கும் நெறிமுறைப்படிக் கொடுக்கவும்; அதுதான் ஒருவன் தன்உடைமைப்பொருளைப் பேணிக்காத்து நடக்கும் நெறியாகும்”. இங்கே புகழ்தல் என்ற பொருள் வேடிக்கையாகவே ஒலிக்கும்…”அதுதான் தன் பொருளைப் புகழ்ந்து ஒழுகும் வழி” என்று…! இங்கே இன்னொரு பழக்கப்போலிச் சொல்லையும் கவனிக்கவும். வழங்கும் நெறி என்றால் கொடுக்கும் நெறி என்று பொருளன்று; இயங்கும், நடக்கும், ஒழுகும் நெறி என்றுதான் பொருள். பரிமேலழகரின் உரையை  நன்கு கவனிக்கவும்.

ஆற்றாரும் ஆற்றி அடுப, இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின். (குறள்: 54:7)
[ஆற்று = செய்துமுடி, இயல், சமாளி; அடு = வெல்; போற்றார் = மதிக்காதார், பகைவர்; போற்றி = பாதுகாத்து]
அதன்பொருள்: “தன்னை மதியாதாராகிய பகைவரிடத்தில் வெல்வதற்கு ஏற்ற இடமறிந்து தன்னையும் பாதுகாத்துச் செய்தால் சமாளிக்கமுடியாதவர்களும்கூடச் சமாளித்து வெல்வார்கள்”. இங்கே போற்றார் என்பதற்கு உரைகாரர்கள்  பகைவர் என்றே பொருள்சொல்லினும் அடிப்படைப் பொருள் மதிக்காதவர்கள் என்றே பொருள். இதனையே புறநானூற்றின் முதற்பாடலில் “போற்றார்ப் பொறுத்தலும்” என்று முரஞ்சியூர் முடிநாகராயர் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனின் நற்பண்புகளில் ஒன்றாகப் பாடுவார்: அதற்குப் பொருளாகப் “பகைவர் பிழைசெய்தால் அப்பிழையைப் பொறுத்தலும்” என்று பழைய உரை உரைக்கும்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு; அருந்தியது
அற்றது போற்றி உணின். (குறள்: 95:2)
         [யாக்கை = உடம்பு; அறு = செரி, சீரணமாகு; அற்றது = செரித்தது, சீரணித்தது]
அதன் பொருள்: “உடம்புக்கு மருந்தென்று ஒன்று தனியாக வேண்டாமே, ஏற்கெனெவே அருந்தியது செரித்துவிட்டதா என்று கவனித்து, உண்டால்”. இங்கேயும் செரித்துவிட்டதா என்று புகழ்ந்து உண்டால் என்பது வேடிக்கையான பொருள்தரும் என்பதைப் போற்றவும் (= கவனிக்கவும்). பரிமேலழர்  அதே பொருளில் “தெளிய அறிந்து” என்பார், மணக்குடவர் “பாதுகாத்து” என்பார். இங்கே கவனிப்பது என்னவென்றால் பரிமேலழர் சொல்வதுபோல் செரிப்புக்கு அறிகுறிகள்: யாக்கை நொய்ம்மை (உடல் மெலிவு), தேக்கின் தூய்மை (ஏப்பத்தின் தூய்மை), பசி மிகுதல் ஆகியன.
எனவே இப்படியே மற்றகுறள்கள் உட்படப் 16 தடவைகளும் திருக்குறளில் போற்றுதல் என்ற சொல்லுக்குப் புகழ்தல் என்ற பொருள் இல்லாமையை அறிந்துகொள்ளலாம்.

தேவாரத்துப் போற்றி அருச்சனை:

தேவாரத்திலே அப்பரின் போற்றித் திருத்தாண்டகப் பாடல்கள்  மிகவும் புகழும் இனிமையும் வாய்ந்தவை; அவற்றில் போற்றி போற்றி என்ற சொல் அருச்சனைக்காக மீண்டும் வழங்கும். சான்றாகத் திருவாரூர் என்னும் திருமூலட்டானச் சிவன்மேல் பாடும் போற்றிப் பாடல் காண்போம்:
“கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
கழல் அடைந்தார் செல்லும் கதியே, போற்றி!
அற்றவர்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய், போற்றி!
மற்று ஒருவர் ஒப்பு இல்லா மைந்தா, போற்றி!
வானவர்கள் போற்றும் மருந்தே, போற்றி!
செற்றவர்தம் புரம் எரித்த சிவனே, போற்றி!
திருமூலட்டானனே, போற்றி போற்றி! (தேவாரம்:அப்பர்:6:32)

அங்கே பலரும் போற்றி என்பதற்குப் புகழ்தல் என்ற நினைக்கலாம். ஆனால் அங்கே அதன் பொருள் காப்பாற்று என்பதாகும் என்று சுப்பிரமணிய ஐயரின்  உரை  (1905-1981) உரைக்கிறது. போற்றி என்றால் “காப்பாற்றுக” என்று வியங்கோள் வினைமுற்றாக அவர் உரைசொல்கிறார்.  மற்றபடி “மதிப்பு” என்ற பெயர்ச்சொற் பொருளும் கொள்ளலாம்.

ஆயினும் எல்லா இடங்களிலும் அதனைச் சொல்வோன் தன்னைக் காக்க என்று கருதும் பொருள் அமையாது. கவனித்துக்கொள்க என்ற அடிப்படைப்பொருள்தான் சில இடங்களில் பொருந்தும்.
சிலப்பதிகாரத்திலே  கோவலனுக்கு மாதவி எழுதி கௌசிகன் என்ற தூதுவன் கையால் அனுப்பும் ஓலைமடற் செய்தியிலே சொல்லும்  “பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி” (சிலம்பு:13:92) என்ற அடியிலே போற்றி என்பதற்குக் காக்க என்றே 14-ஆம் நூற்றாண்டின் அடியார்க்குநல்லார் பொருளுரைக்கிறார். அவர் “போற்றி என்றது குரவர்பணி பிழைத்தலானும், கற்புடையாளொடு இரவிடை வேற்றுநாட்டிற்குச் சேறலானும், யான் இறந்துபடுதலானும் நின்புகழ்க்குக் குறையுண்டாகாமற் காக்க” என்றே  விளக்குகிறார்.  “உன் பேற்றோர்களாகிய பெரியவர்களின் பணிவிடையை விட்டதாலும் கற்புடையாளாகிய கண்ணகியோடு இரவினிடையே வேற்று நாட்டிற்குச் செல்லுதலாலும் யான் இறந்துபடுதலானும் நின் புகழ்க்குக் குறையுண்டாகாமற் கவனித்துக்கொள்க” என்று பொருள்.

முடிவுரை:

திருக்குறளில் போற்றுதல் என்கின்ற சொல்லுக்குப் புகழ்தல், பாராட்டல், துதித்தல் என்ற பொருளை அறவே மறப்பது தகும் என்றும் கவனித்தல், பாதுகாத்தல், மதித்தல் என்ற பொருள்தான் உண்டு என்றும் உணர இந்தக் கட்டுரை உதவுகிறது. மற்றபடிச் சிலப்பதிகாரம், ஆத்திசூடி, புறநானூறு போன்றவற்றிலும் சிலசான்றுகளோடு அதே கவனித்தற் பொருள்தான் பழம்பாடல்களில் மிகுந்து குறிப்பதையும் இந்தக் கட்டுரை தெளிவுபடுத்தியுள்ளது.  இந்த அறிவு மிகவும் வழக்கமாக என்றோ தமிழர்களிடையே பரவியிருக்க வேண்டியது; ஆனால் இப்படிச் சிறப்பாகச் சுட்டி நிறுவவேண்டிய நிலைமையில் உள்ளோம். அதற்குக் காரணம் தமிழிலக்கியத்தைத் துல்லியமாகப் பொருளுணர்வதும் அப்படியுணரக் கற்பிப்பதும் இல்லாததே.  எனவே தமிழ்மொழிக் கல்விமுறை மாறித் தேர்வுகளில் இப்படிச் செய்யுள்களின் குறிப்பிட்டசொற்களின் பொருளை வெளிப்படையாக வினாவி மதிப்பிடவேண்டும்; அப்பொழுதுதான் தமிழ்மொழி வாழும்; அந்தத் தொடர்ச்சியால்தான் தொலைந்த அறிவினை இப்படி மீட்கமுடிகிறது.  இப்படித் தெளிவான நிலைக்குத் தமிழறிவு மீண்டால் தமிழர்களும் தெளிவும் இன்பமும் வாழ்க்கைப்பயனும் அடைவார்கள்.

நன்றியுரை:

இங்கே பழைய இலக்கியங்களின் அரிய பழைய உரைகளை இணையத்திலே இட்டு இப்படி நொடிப்பொழுதில் உடனே கிட்டுமாறு ஏற்படுத்தியுள்ள தமிழிணையக் கல்விக் கழகத்திற்கு ( http://www.tamilvu.org/ ) என் நன்றியினைத் தெரிவிக்கிறேன்.

  http://www.tamilvu.org/slet/l2100/l2100uri.jsp?song_no=154&book_id=31&head_id=26

  http://www.tamilvu.org/slet/l2100/l2100uri.jsp?song_no=154&book_id=31&head_id=26
  http://www.tamilvu.org/slet/l2100/l2100uri.jsp?song_no=252&book_id=31&head_id=26

  http://www.tamilvu.org/slet/l2100/l2100uri.jsp?song_no=234&book_id=31&head_id=26

  http://www.tamilvu.org/slet/l2100/l2100uri.jsp?song_no=468&book_id=31&head_id=27

  http://www.tamilvu.org/slet/l2100/l2100uri.jsp?song_no=477&book_id=31&head_id=27

  http://www.tamilvu.org/slet/l2100/l2100uri.jsp?song_no=493&book_id=31&head_id=27

  http://www.tamilvu.org/slet/l2100/l2100uri.jsp?song_no=942&book_id=31&head_id=27

  http://www.ifpindia.org/ecrire/upload/digital_database/Site/Digital_Tevaram/U_TEV/DM6_32.HTM

  http://www.ifpindia.org/ecrire/upload/digital_database/Site/Digital_Tevaram/INDEX.HTM

  http://www.ifpindia.org/ecrire/upload/digital_database/Site/Digital_Tevaram/U_TEV/VMS6_032.HTM#p1

  http://www.tamilvu.org/slet/l3100/l3100uri.jsp?slno=1500&subid=1500029

Data such as these are important for helping teachers guide flowing right over there students toward the development of fluid, transferable knowledge leonard et al

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செய்யுள்களை எளிதில் புரிந்து கொள்வது எப்படி? – 4”

அதிகம் படித்தது