அக்டோபர் 28, 2016 இதழ்
தமிழ் வார இதழ்

கும்கி படப்பாடல் விமர்சனம்

மனோஜ்

Sep 1, 2012

கும்கி என்பது காட்டு யானைகளை விரட்ட பழக்குவிக்கப்பட்ட வளர்ப்பு யானை. அதையே படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன் அவ்வகையில் திரைப்படத்தின் தலைப்பே இசையாய் இனிக்க, மேலும் யுகபாரதியின் வரிகளில் இமானின் இசையில் பாடல்தொகுப்பும் இனிமை சேர்க்கிறது. தமிழை ததும்ப ததும்ப தந்திருக்கிறார் பாடலாசிரியர் யுகபாரதி, அதற்கேற்ப இமானும் இசைக் கருவிகளின் சங்கமத்தை இனிமையாக வடித்திருக்கிறார்.

“அய்யய்யையோ ஆனந்தமே..”(பெண்) – அதிதி பாலின் இனிய குரலும் வயலின் இசையும் பின்னிப் பிணைந்து ஓர் இனிய மனதை வருடும் பாடலாக அமைந்திருக்கிறது. இப்பாடலில் இமான் சின்னச் சின்ன இசைக் கருவிகளை  மிக துல்லியமாக இசைத்ததில் மிளிர்கிறார். [4.17 மணித்துளிகள்]

“அய்யய்யையோ ஆனந்தமே..”(ஆண்) – ஹரிசரனின் குரலில் ஒலிக்கும் இப்பாடல் முந்தைய பாடலிருந்து முற்றிலும் வேறுபட்டே அமைந்திருக்கிறது. வரிகள் மிகவும் ரசிக்கவைக்கிறது. [4.25]

“நீ ஏப்ப புள்ள சொல்லப்போர..” – அல்போன்ஸ் ஜோசப்பின் அழுத்தமான குரலில் ஒலிக்கும் இப்பாடலில் இனிய கோர்வையான வார்த்தைகளை கையாண்டிருக்கிறார் யுகபாரதி மேலும் இமானின் எதிரொலி கானம் சேர்க்கையும் அழகு சேர்க்கிறது. [4.01]

“ஒண்ணும் புரியல சொல்ல தெரியல..” – இமானின் வருடும் குரலில் இப்பாடல் வசீகரிக்கிறது. அது ஏன் என பார்க்கும்போது தெரிந்தது யுகபாரதியின் எதுகை-மோனைகள், ஈர்க்கும் வரிகள். இப்பாடலை இவர் எப்படி இவ்வளவு சுவாரசியமாக அமைத்தார் என்பது ஒண்ணும் புரியல, இதன் அழகை எப்படின்னு சொல்ல தெரியல. [4.20]

“சோய் சோய்…” – மகிழினி திருமேனியின் கிராமத்திய சாயலில் அமைந்த நாட்டுப்புற பாடல் வகையான இப்பாடலில் யானை பிளிறலை குறிக்கும் விதமாக இசை அமைப்பு கவனிக்கப்படும். இப்பாடலில் “ராமன் ஆண்டாலும் ராவணன் எனக்கொரு கவலை இல்லை” என்னும் பழைய வரிகளைக் கொண்டு இசை அமைத்ததை தவிர்த்திருக்கலாம்.[3.42]

“சொல்லிட்டாலே அவ காதல..” –  ரஞ்சித் & ஸ்ரேயா கோஷலின் இனிய குரலில் அமைந்த இப்பாடல் ஒரு மெல்லிய டூயட்காதல் கானமாக ஒலிக்கிறத. [4.34]

“எல்லா ஊரும் எங்களுக்கு..” – பென்னி தயால், இமானின் குரலால் துள்ளல் இசையில் அமைந்த 2.53 நிமிடம் ஒலிக்கும் இப்பாடல் படத்தின் அறிமுக பாடலாக அமைய வாய்ப்புகள் அதிகம். அவ்வகையில் இப்பாடல் பட்டத்திற்கான அல்லது கதாபாத்திரத்திற்கான ஒரு நல்ல அறிமுக கதை கூறும் பாடலாக அமைந்திருக்கிறது. [2.53]

எங்கோ கேட்ட இசையுடன் கூடிய புதிய தமிழ் வரிகள் எனத்  மொத்தத்தில் கும்கி படத்தின் பாடல்கள் இனிமையாக விரும்பி கேட்கும் வகையில் அமைந்துள்ளன என்றே சொல்லவேண்டும்.


மனோஜ்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கும்கி படப்பாடல் விமர்சனம்”