மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திருவள்ளுவர் காலம்

ஆச்சாரி

Oct 1, 2012

சிறகு முன்னுரை

திருக்குறள் காலம் குறித்து பல கருத்துகள் நிலவி வருகின்றன. மறைமலையடிகள் தலைமையில் கூடிய தமிழறிஞர்கள் திருவள்ளுவர் காலத்தை கி.மு. 31 என்று அறிவித்தார்கள். ஆனால் கமில் சுவலபில் போன்ற மேலைநாட்டு தமிழறிஞர்கள் உட்பட பல தமிழறிஞர்கள் திருக்குறள் சங்கம் மருவியக்காலத்தைச் (கி.பி. 4-ம் நூற்றாண்டிற்கு பின்) சேர்ந்தது என்று கூறிவருகின்றனர். சிறகு திருக்குறள் காலம் குறித்த கட்டுரையொன்று (http://siragu.com/?p=1574) வெளியிட்டிருந்தது. அதற்கு மாற்றாக செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார் அய்யா அவர்கள் இக்கட்டுரையை அனுப்பியிருந்தார்கள். அய்யாவின் கருத்திற்கு மதிப்பளித்து இக்கட்டுரையை வெளியிடுகிறோம்.

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்கள் ஒரு வாழும் திருவள்ளுவர். நூற்றிற்கும் மேலான நூல்கள் எழுதியிருக்கும் இவரைச் சந்திப்பது வாழ்வின் பெரும்பேறு. திருச்சி-கரூர் சாலையில் காவிரியாற்றங்கரையில் அல்லூர் எனும் சிற்றூரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்து அதில் வாழ்ந்து வரும் இவரது இல்லமே ஒரு தமிழாலயம். அரிதான நூல்களை சேர்த்து இவர் வைத்திருக்கும் நூலகம் ஆய்வாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அய்யா அவர்களிடம் இல்லா தமிழ் நூல்களே இல்லை எனலாம். மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் அருமை மாணவரான இளங்குமரனார் என்பது அகவைக்கும் மேலாக தமிழின் வளர்சிக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் அரும்பாடுபட்டு வருகிறார். இத்தள்ளாத வயதிலும் இந்தியா முழுதும் பயணித்து தமிழ்ப் பணியாற்றி வருகிறார். 2007-ம் ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையின் (www.fetna.org) ஆண்டு விழாவில் பங்கேற்றது பேரவைக்கு அழியாத பெருமை தந்தது. எளிமைக்கும், தமிழறிவிகற்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் அய்யாவின் இக்கட்டுரையை வெளியிடுவது சிற்கிற்கு பெருமை. திருவள்ளுவர் காலத்தில் மாறுபட்ட கருத்திருந்தாலும் அனைவர் மதிக்கும் பேரறிஞர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுதியனுப்பியக் கட்டுரையை வெளியிடுவது சிறகின் கடமை.

—————

திருவள்ளுவர் காலம்

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக அமைச்சர் திரு. வ. சுப்பையா அவர்களும் சென்னை அஞ்சல் ஆட்சித்துறைத் தலைமைச் செயலகத் தலைமை எழுத்தர் திரு. காழி. சிவ. கண்ணுசாமி அவர்களும் கலந்து பேசி 17.01.1935 இல், ‘திருவள்ளுவர் திருநாட்கழகம்’ என ஓர் அமைப்பைத் தோற்றுவித்தனர்.
சென்னை, பவழக்காரத் தெருவில் உள்ள சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகக் கட்டடம், திருநாட் கழகத்துப் பணிமனையாக விளங்கியது.
தமிழ்ப் பேராசிரியர் திரு. கா. நமசிவாயர் தலைவராகவும், வித்துவான் பாரிப்பாக்கம் கண்ணப்பர் செயலராகவும் திரு. வ. சுப்பையா பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மற்றும் துணைத்தலைவர்கள் துணைச் செயலர்கள் உறுப்பினர்கள் எனவும் 21 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முதலாண்டு திருவள்ளுவர் விழா 1935 மே திங்கள் 18, 19 ஆம் நாள்களில் சென்னை-1, பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் மறைத்திரு. மறைமலையடிகளார் தலைமையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திருவள்ளுவர் நினைவு மலர் வெளியிடப்பட்டது.

இரண்டாம் ஆண்டு திருவள்ளுவர் விழா 1936 சூன் திங்கள் 4 ஆம் நாள் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் முதுபெரும் புலவர் உ.வே.சாமிநாதர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மூன்றாம் ஆண்டு திருவள்ளுவர் திருவிழா 1937 மே 22 ஆம் நாள் இராமநாதபுர மாவட்டம் பாகனேரியில் கோவை சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணியனார் தலைமையில் நடைபெற்றது.

அதன்பின்னர்த் திருவள்ளுவர் திருநாட்கழகம் அமைவுற்றது. இது, திருவள்ளுவர் திருநாள் விழாமலரில் உள்ள திருநாட்கழக வரலாறு ஆகும் (1968).

மறைமலை அடிகள் முடிபு ‘திருவள்ளுவர் காலம்’ பற்றி என்னவாக இருந்தது?

“தமிழர் என்ற பொதுமை உணர்வைத் தமிழ்மக்கள் இடையில் ஊட்ட அடிகள் விரும்பினார். அதற்கு வாய்ப்பாகவும் தம் சிவநெறிக்கும் தமிழ்நெறிக்கும் முதற்குரவராகத் தம்மால் போற்றப் பெறும் சிறப்புக்குரியவராகவும் விளங்கும் தெய்வப் புலமைத் திருவள்ளுவரையே தமிழர்க்குரிய ஆண்டுக் கணக்கீட்டின் முதல்வராகக் கொண்டார்.

“அடிகளின் கருத்துப்படி திருவள்ளுவர் கிறித்துவுக்கு முப்பத்தொரு ஆண்டுகள் முற்பட்டவர். ஆதலின், அடிகள் தமிழாண்டுக் கணக்கீட்டைக் கி.பி. (கிறித்துவுக்குப் பின்) கி.மு. (கிறித்துவுக்கு முன்) என்று கொள்ளாது தி.மு. (திருவள்ளுவருக்கு முன்) தி.பி. (திருவள்ளுவருக்குப் பின்) என்று இருபது ஆண்டுகட்கு முன்பே வரையறை செய்துவிட்டார்”

திருவள்ளுவர் திருநாள்

“திருவள்ளுவர் திருநாள் வைகாசித் திங்கள் அனுடம் (பனை) என்றே குறித்துவிட்டனர்” என்கிறார் மறை. திருநாவுக்கரசு (மறைமலையடிகள் வரலாறு பக். 773-774) திருநாவுக்கரசர் நூல் 1959 இல் வெளிவந்தது. அதற்கு 20 ஆண்டுகளின் முன்னரே திருவள்ளுவர் நாளைத் தீர்மானித்துவிட்டார் என்பது திருநாட்கழகத்தின் தலைவராகப் பொழிந்த பொழிவுக் கருத்தைக் கொண்டு உரைத்ததாகலாம்.

வைகாசித் திங்கள் அனுடம் கி.மு. 31 என்று தீர்மானித்ததை அன்றி, அடிகளார் தைத்திங்களைத் தீர்மானிக்க வில்லையாம். திருநாட்கழகம் நடத்திய மூன்று விழாக்களும் வைகாசியில் நடத்தப்பட்டதே அதற்குச் சான்றாம்.

அடிகளார், திருவள்ளுவரைப் பற்றிக் கூறிய தலைமைப் பொழிவில்,

“திருவள்ளுவ நாயனார், கிறித்து சமய முதல்வரான ஏசு முனிவர் பிறப்பதற்கு முப்பதாண்டுகள் முன்னரே பிறந்தருளினார் என்பதை, மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும் என்னும் எமது பெருநூலிலே பலநூற் சான்றுகள் கொண்டு விளக்கிக் காட்டியிருக்கின்றாம். அதன் விரிவை அங்கே கண்டு கொள்க” (செந்தமிழ்ச் செல்வி. 13:550) என்றார்.

“இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் திருவள்ளுவர்தம் திருநாளாய வைகாசி அனுடத்தன்று வள்ளுவர் விழாக் கொண்டாடுவதற்கான முறைகளைத் தேர்ந்து அமைப்பதற்காகவே இக்கழகம் கூட்டப்பட்டது” என்கிறது திருநாட்கழக அறிக்கை-1 (செந்தமிழ்ச் செல்வி. 13:335).

திருவள்ளுவர் திருநாள் கி.மு. 31 வைகாச அனுடம் என்றே தீர்மானித்தார் அடிகள். அதிலிருந்து தி.மு.; தி.பி. என்னும் வழக்கம் தமிழ்ப்பற்றாளரிடம் உண்டாயது. நாட்காட்டி நாட்குறிப்பு என்பனவும் ஆக்கப்பட்டன! பாவாணர் பாவலரேறு வழிஞர் திருவள்ளுவர் ஆண்டைப் பற்றினர்.

திருவள்ளுவர் காலம்: திருவள்ளுவர் சங்கக்காலப் புலவர்களால் போற்றப்பட்டவர் என்பதற்குச் சான்று உண்டு. சில குறிப்புகளை மட்டும் பார்ப்போம்.

“பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்

மண்புக்கு மாய்வது மன்”

என்னும் குறள் விளக்கமாக,

“உண்டால் அம்மஇவ் வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;

துஞ்சலும் இலர்;பிறர் அஞ்சுவ தஞ்சிப்

புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்ன மாட்சி அனையர் ஆகித்

தமக்கென முயலா நோன்றாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே”

இதன் முதலடியையும் ஈற்றடியையும் நோக்கக் குறளின் விரிவாக்கமென்பது புலப்படும் (புறம். 182). இதனைப் பாடியவர் கடலுண்மாய்ந்த இளம்பெரு வழுதியார் என்னும் பாண்டிய மன்னர்.

நற்றிணையில் ஒருபாடல்;

“முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்”

என்கிறது (355).

இப்பாடல் அமைப்பும் சொற்பொருள் விளக்கமும் திருக்குறள் விளக்கமாக இருத்தல் திருக்குறள் கற்றார் எவர்க்கும் வெளிப்படத் தோன்றும். அது,

“பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்”

என்பது. இக்குறளின்கண் நாகரிகம் என்பது கண்ணோட்டமாதல்,

“முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்”

என்பதனானும் அறிக என்றார் பரிமேலழகர்.

இனி, “இப்பாடல்கள் வழியே திருவள்ளுவர் தம்குறளை யாத்திருக்கவும் கூடுமல்லவோ, அதனை எண்ணலும் வேண்டுமென்றோ” என்பார் உளராகலாம்!

“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை”

என்னும் குறளை மேற்கொள்ளும் மணிமேகலைச் சாத்தனார்,

“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றஅப்

பொய்யில் புலவன் பொருளுரை தேராய்”

என்பது போலக் குறளை மேற்கொண்டு பொய்யில் புலவர் என்று புலவர் பெயரும் பொருளுரை என அவர் நூற் பெயரும் சுட்டியிருப்பின் ஏற்கலாம் எனலாம்! அதே குறளைத்,

“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத்

தெய்வம் தொழுதகை திண்ணிதால்”

என்று இளங்கோ வடிகள் காட்டுகிறார். நூலாசிரியர் பெயரோ நூற் பெயரோ இல்லாமலும், சாத்தனாரும் அடிகளாரும் ஒருகாலத்து ஒன்றிய நண்பராய் இருந்து இரட்டைக் காப்பியம் இயற்றியவர்கள் என்பதால் ஏற்கிறோம் அல்லவோ! சாத்தரும் அடிகளும் திருவள்ளுவர் பெயரையோ நூற்பெயரையோ சுட்டாமல் சுட்டும் குறள்களும் உளவாதல், ஆய்வோர் அறிவர். அவ்வாறே சங்கநூல்களில் இருத்தலும் அறிவர்.

சங்க நூலாம் புறநானூற்றில் குறள்விளக்கமும் அதன் தொடரும் நூற்பெயரும் உண்டாயின் சங்கத்தார் காலத்திற்குத் திருவள்ளுவர் பிற்பட்டவர் என இயலாது அல்லவோ! என்பரேல் மேல்வரும் சான்று காண்க.

“ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்

மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்

குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்

வழுவாய் மருங்கில் கழுவாயும் உளவென

நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்

செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென

அறம்பா டிற்றே ஆயிழை கணவ!”

எனச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடுகிறார் (புறம். 34).

இப்பாடல் திருக்குறளின் தலைப்பெயரான ‘அறம்’ பாடிற்று என்பதும்,

“செய்தி கொன்றார்க்கு உய்தி இல்” என்பது.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு”

என்பதன் ‘செறிபிழிவு’ என்பதும் விளங்காமல் போகாது.

முந்தைச் சோழருள் ஒருவன் கிள்ளிவளவன். அவனைப் பாடிய பாடலில் குறளும் குறளின் பெயரும் உண்டாயிருக்கவும் சங்கக் காலத்திற்குப் பின்னாகத் தள்ளல் முறையாகாது!

பதினெண் கீழ்க்கணக்குள் ஒன்றாகத் திருக்குறளைச் சேர்த்தது. காலக் கருத்தால் அன்றாம். அடியளவு சிறிதாதல் கொண்டேயாம். அன்றியும் வெண்பா யாப்பை எண்ணியுமாம்!

‘குறுவெண்பாட்டு’ என்பதால் தொல்காப்பிய யாப்பும்,

‘அறமுதலாகியமும் முதற்பொருளும் என்பதால் முப்பாலும்,

பொருளொடு புணர்ந்த பக்கம் என்பதால் இல்லறவியலும்,

அருளொடு புணர்ந்த அகற்சி என்பதால் துறவறவியலும் இயற்றியமை அறிக.

“புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல்” என்னும் தொல்காப்பிய உரிப்பொருள் முறைவைப்பு மாறாமல், ஒவ்வோர் உரிப்பொருளுக்கும் ஐந்தைந்து அதிகாரமாய்க் காமத்துப்பால் இருபத்தைந்து அதிகாரம் பாடியமையும் எண்ணுவார், வள்ளுவர் காலத்தைப் பின்னுக்குத் தள்ளார். சங்கக் காலத்தவரும் சுட்டிக் கூறும் பழைமையர் என்பதைக் கொள்வார்! அவரும் சங்கம் சார்ந்தவர் என்றும் அவர்க்கு முன்னரும் பின்னரும் சங்கம் நிகழ்ந்தது என்பதும் அறிவார்.

இதனால், கி.மு. 31 என்பதை முன்னுக்குத் தள்ளி வேண்டுமோ எனின் பெருந்தக்கோரால் ஆய்ந்து முடிவெடுக்கப்பட்டு நடைப்படுத்தி வரும் காலத்தை மாற்றும் நோக்கில் இஃது எழுதப்பட்டதில்லை! வள்ளுவரையும் அவர்க்கு முந்தைத் தொல்காப்பியரையும் கி.பி. ஆறாம் நூற்றாண்டு தொட்டு எட்டாம் நூற்றாண்டு வரை சொல்வார் ஆய்வின் உள்நோக்கம் உணர்த்தி உண்மை காட்டற்கே எழுதப்பட்டதாம்.

ஏன் திருக்குறளைப் பின்னுக்குத் தள்ளுகிறார் எனின், பொருந்தா நூல்களொடு பொருத்திக் காட்டி எங்கள் மொழியே முன்மொழி எங்கள் வழியே முன்வழி எனத் துணிந்து கரவாக உலகை ஏமாற்றுதற்கே என்பது வெளிப்படை!

இனி உலகை ஏமாற்ற முடியாது என்னும் உண்மை அறிந்து கொண்டும் தொடர்ந்து கூறும் பொய்யால் மெய்யாக்கிவிடலாம் என்னும் போலிமையாலாம்.

“எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேல்மிதக்கும்

என்பது பாவாணர் துணிவுரை!

The material contained herein is http://domyhomework.guru not intended to provide specific advice or recommendations for any specific situation

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “திருவள்ளுவர் காலம்”
  1. kasi visvanathan says:

    திருவள்ளுவரின் காலம் எடுத்தாளப்பட்ட சான்றுகள் என்பது ஒருபுறம் இருக்க, அவரது குறளில் பயன்பட்ட மொழியின் நடை, சங்க இலக்கியத்திற்கு சற்றுப்பிந்தையதாகவே தோன்றுகிறது. எனினும், சங்க காலத்தின் கால வரையறை என்பது இன்னமும் மிகத் தெளிவாகாத நிலையில், அறிஞர்கள் ஏன் வள்ளுவருக்கு முந்தைய சங்க காலத்தின், நிகழ் பதிவினை கி.மு.5ம் அல்லது 6ம் நூற்றாண்டிற்கு முன்னதாக கணக்கிட மறுக்கின்றனர் ? அந்த வகையில், களப்பிரர் வருகை கி.மு.வில் நிகழ்வதும் அதன் தொடர்ச்சியான சமண, சாக்கிய மதக் கொள்கையும், திருவள்ளுவரின் காலமும் தற்போதைய திருவள்ளுவர் ஆண்டிற்கு பொருத்தமானதே.
    இது நம் அறிஞர்களின் கருத்து வேறுபாட்டில் உருவான சிக்கலே. அது வடமொழியாளர்களுக்கு வசதியானது.

அதிகம் படித்தது