மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இயல் 7 – சிறுகதையின் கூறுகள்-பின்னணி

ஆச்சாரி

Nov 15, 2012

கதையை நடத்திச்செல்ல மூன்று வழிகள் இருக்கின்றன. ஒன்று எடுத்துரைத்தல், இன்னொன்று வருணனை, மூன்றாவது உரையாடல். இன்னார் இப்படிப்பட்டவர், அல்லது இது இப்படிப்பட்டது என்று அவ்வவற்றின் பண்புகளை விளக்குதல், எடுத்துரைத்தல் ஆகும். மேலும் கதையின் முக்கியச் சம்பவங்களைக் கூறுதலும் எடுத்துரைத்தலே. இதனால் எடுத்துரைத்தலைக் கதையாடல் என்றும் சொல்கிறார்கள். பின்னணியை வருணிக்கத்தான் இயலும். ஒரு கதை நடக்குமிடம் கடைத்தெரு என்றால் அந்தக் கடைத்தெருவின் பிம்பம்-அது எப்படி இருக்கிறது என்பதை நம் மனக்கண்ணில் உருவாக்குவது, வருணனை. உரையாடல், பாத்திரங்களுக்கிடையில் நிகழ்வது. பெரும்பாலும் நேர்க்கூற்றாக அமைவது.

வருணனை சிறுகதையின் பின்னணியை, சூழலைக் கட்டமைக்கிறது. இவற்றைக் கட்ட மைப்பதில் காலம் பற்றிய குறிப்புகளும் இடம் பற்றிய குறிப்புகளும் முக்கியமானவை.

சிறுகதையில் காலத்தை ஒழுங்காக ஆசிரியர் கட்டமைத்திருந்தால், நிஜமான கால ஒழுங்குப்படி கதை நடக்கிறது என்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது. ஒரு கதையைப் படிக்கும் போது காலத்தை உணர்த்தும் குறிப்புகளை கவனிக்கவேண்டும். அது குறிப்பிட்ட கால எல்லைக்குள் நடக்கின்ற ஒன்றா? அப்படியானால் எவ்வளவு காலப்பகுதி? எப்போது கதை தொடங்குகிறது? கதையின் நிகழ்காலம், கடந்த காலம் என்பது என்ன? ஒரு குறித்த நாளில், குறித்த போதில் கதையைத் தொடங்குவதற்குக் காரணம் ஏதேனும் இருக்கிறதா? மிகமுந்திய, பழையகாலத்திலிருந்து கதை சொல்லப்படுகிறதா?

கதையை வருணிப்பதில் காலத்தைவிடவும் முக்கியமானது இடம், அதிகஇடத்தை எடுத்துக்கொள்வதும்கூட. கதையின் சுற்றுப்புறப் பின்னணி அது. எழுத்தாளர் தமது கற்பனை யால் உருவாக்கிப் பூர்த்தி செய்த, நமக்கு நிஜமாகக் காட்சியளிக்கின்ற உலகம். “கதையின் இடத்தைச் சொன்னால்தான், கதைமாந்தர்கள்மீது நம்பிக்கை வரும்” என்று யூடோரா வெல்டி என்னும் பிரபலக் கதாசிரியை ஒரு முறை கூறினார். அதாவது குறிப்பிட்ட இடத்தைச் சொல்லும் போதுதான் அந்தக் கதைமாந்தர்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படுகிறது என்பது பொருள். பழைய காலத்தில் கதையைச் சொல்லத் தொடங்கும்போது ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா இருந்தான் என்று தொடங்குவார்கள். அந்தக் கதையின் பொதுமைத்தன்மைக்கும், கேட் கின்ற குழந்தைகளின் ஆர்வத்திற்கும் அது போதுமானது. ஆனால் இக்காலச் சிறுகதைகளை யோ நாவல்களையோ ஒரு ஊரில் ஒரு மனிதன் இருந்தான் என்று தொடங்கிச் சொல்ல முடியாது.

அதனால்தான் அந்தந்த வட்டாரங்கள், ஊர்கள் கதையில் முக்கியத்துவம் பெறுகின் றன. மு. வரதராசனாரைச் சென்னைக் கதாசிரியர் என்பார்கள். நாஞ்சில்நாடனின் கதைக ளில் கன்னியாகுமரி மாவட்டம் முக்கிய இடம் பெறுகிறது. புதுமைப்பித்தனின் முக்கியக் கதை கள் சென்னையில் நிகழ்ந்தாலும் அவர்கள் பேசுவது என்னவோ திருநெல்வேலி பாஷையில் தான். நீல. பத்மநாபன், அ. மாதவன் கதைகள் திருவனந்தபுரத்தை விட்டு அகன்றதில்லை. அசோகமித்திரனும் சென்னைக் கதாசிரியர்தான். பெருமாள் முருகனின் கதைகளில் திருச் செங்கோடு நிச்சயமாக இடம்பெறும்….இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி அந்தந்தக் கதாசிரியருக்கு ஓர் இடப்பின்னணி குறிப்பாக இருக்கிறது.

கதைத்தொடக்கத்திலேயே அது எங்கே நடக்கிறது என்று சொல்லிவிடுவது வாசகரின் சிரமத்தைக் குறைக்கும். இடங்கள் எப்படி வெளிப்படுத்தப்படுகின்றன என்பதைக் கதையில் பாருங்கள். சிலசமயங்களில் இடம் சுட்டப்படாமலும் இருக்கலாம். கதைக்குக் கதை இடத்தின் முக்கியத்துவம் மாறுபடும்.
[1948இல் என்று நினைக்கிறேன். நாற்பத்தாறோ நாற்பத்தெட்டோ சரியாக நினைவில்லை. மதுரையில் ஒரு பெருமாள் கோவிலுக்கு எதிரே இருந்த சந்தில் அவள் குடியிருந்தாள். மாதவி என்றும் லட்சுமி என்றும் சொல்லிக்கொள்வாள். வீட்டிலே இரண்டு குழந்தைகள் உண்டு. நான் ஒரு முறை சென்றுவிட்டு முகத்தைக் கழுவிக்கொண்டு துடைக்கத் துணி கேட்டபோது அவளது பழைய ஜம்பர் ஒன்றைத் தந்து, "இதுலே தொடச்சிக்கங்க, ஒங்க புண்ணியமெல்லாம் எனக்கு வரட்டும்" என்றாள்.]

இது ஜி. நாகராஜன் எழுதிய ‘நான் புரிந்த நற்செயல்கள்’ என்னும் கதையின் தொடக்கம். எந்தக் காலப்பகுதி, எந்த இடம் ஆகியவை கதை தொடங்கிய உடனே சொல்லப் பட்டு விடுவதோடு, கதையின் தலைப்புக்கான வெளிச்சமும் ஓரளவு கிடைத்துவிடுகிறது.
[நான் அன்று ஒரு முழநீளம் பெயர்கொண்ட-ஹோட்டல்காரர்களுக்கும் நாடகக்காரர்களுக் கும் தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே-ஹோட்டலுக்குள் நுழைந் தேன்.]

து ‘மிஷின் யுகம்’ என்ற சிறுகதையின் தொடக்க வாக்கியம் இது. புதுமைப்பித்தன் எழுதியது. கதாபாத்திரம் ஹோட்டலில் ஏதோ சாப்பிடச் செல்கிறான் என்பது கதைக்கு முக்கியமானது. அதைச்சொல்வதுடன், புதுமைப்பித்தன் தன் கருத்துரை ஒன்றையும் சேர்த்துச் சொல்கிறார். (அது இல்லாமல் அவர் பெரும்பாலும் எழுதுவதில்லை.)

பல்வேறு காட்சிகளும் நடப்பதற்கான குறிப்பான களம், இடத்தைவிடத் தேவையா னது. இடம் ஒரு காடு போன்றது என்றால், பின்னணி மரத்தொகுதிகள், அல்லது அந்தக் காட்டின் தனித்த சிறப்பான ஒரு பெரிய மரம். சிறுகதையில் பின்னணி என்பது அந்தக் கதை நடக்கின்ற காலமும் களமும் ஆகும். நிலப்பகுதி, இயற்கைக் காட்சிகள், கட்டடங்கள், பருவகாலங்கள், காலநிலை ஆகியவை பின்னணியாக அமைகின்றன. ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறோம். அதில் சென்டிரல் இரயில்வே ஸ்டேஷனைக் காட்டுவார்கள். பிறகு அண்ணாசாலையைக் காட்டி, எல்ஐசி கட்டடத்தைக் காட்டுவார்கள். உடனே அது சென்னை என்று புரிந்துகொள்வோம். அல்லது மலைக்கோட்டையைக் காட்டுவார்கள். அப்போது கதையின் களம் திருச்சிராப்பள்ளி என்று புரிந்துகொள்கிறோம். களத்தை விளக்க இது போன்ற எடுபிடியான காட்சிகளைப் பயன்படுத்துவது வழக்கம்தான். இதுபோன்றே காலத்தைக் காட்டவும் பலவிதமான உத்திகள் உள்ளன.

நாடகத்தில் ஒரு காட்சி நிகழும்போது பின்னால் திரைச்சீலை கட்டித் தொங்கவிட்டு, மேடைக்குரிய பொருள்களை வைப்பார்களே, அதுதான் பின்னணி. ஒரு நாடகம் தொடங்கு கிறது. பின்னணியில் ஒரு பெரிய ஜன்னல். அதன் வழியாகப் பெரிய கட்டடங்கள் தெரிகின்றன. மேடை மீது இரண்டுபுறமும் சோபாக்கள் போடப்பட்டுள்ளன. இடையில் ஒரு டீபாய். மூலையில் ஒரு மேசை. அதன்மீது ஒரு தொலைக்காட்சிப்பெட்டி தெரிகிறது. நேராகத் தெரியும் ஜன்னலுக்கு அருகில் இருபுறமும் அலமாரிகள். அவற்றில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதனைத்தான் செட்டிங்-(காட்சி அமைத்தல்) என்கிறோம். கதையில் மேடையில் பொருள்களை வைக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் இன்னின்னவை இருக்கின்றன என்று சொன்னால் போதுமானது. இங்குதான் வருணனை வருகிறது.

வெறுமனே வருணிக்கவேண்டும் என்பதற்காக வருணிக்கலாகாது. அது சலிப்பை ஏற்படுத்திவிடும். வாசகருக்கு நிஜமான, யதார்த்தமான, நம்பிக்கைக்குகந்த உலகத்தை உருவாக்கிக் காட்ட வருணனை செயல்படவேண்டும். விஷயக் குறிப்புகள் பொதுவாக, கதா பாத்திர வார்ப்புக்கும் கதையின் விளக்கத்திற்கும் பயன்படும். எனவே அவற்றை உருவகப் பாங்காக அமைப்பது நல்லது. கதைக்காட்சிகளை நாடகப்பாங்காக, விறுவிறுப்பாக உணர்த்த வேண்டும்.

சில கதைகளுக்குக் காட்சிஅமைவு மிக முக்கியமானது, சிலவற்றிற்கு அப்படி யில்லை. ஒரு காட்சியமைப்பு எப்படி அந்தச் சிறுகதைக்கு உதவுகிறது என்பதைக் காணப் பலவேறு கூறுகளைக் கவனிக்கவேண்டும்.

அ. இடம். புவியியல் சார்ந்த இடப்பகுதி. கதை எங்கே நடக்கிறது?

ஆ. காலம். எப்போது கதை நிகழ்கிறது? (வரலாற்றுக்காலப்பகுதி, ஒரு நாளின் நேரப்பகுதி, ஆண்டு போன்ற தகவல்கள்.)

இ. வானிலை. மழை பெய்கிறதா, வெயில் அடிக்கிறதா, புயல் வீசுகிறதா, எப்படி?

ஈ. சமூக நிலைமைகள். கதாபாத்திரங்களின் தினசரி வாழ்ககை எப்படிஇருக்கிறது? வட்டா ரச்சூழல் பற்றிக் கதை ஏதேனும் சொல்கிறதா? (குறித்த இடத்தின் பேச்சுவழக்கு, உடை, பாவனைகள், வழக்காறுகள் என்பவை போல). உதாரணமாக ஜெயகாந்தன் எழுதிய பெரும்பாலான கதைகளில் பேச்சு வழக்கின் வாயிலாகவே அவர் சென்னை கதைக்களமாக அமைகிறது என்பதைக் குறிப்பாகக் காட்டிவிடுவார். கி. ராஜநாராயணனுடைய கதைக்களம் கரிசல்காட்டுப்பகுதி என்பது ஊர்ப்பெயர் தெரியாவிட்டாலும் பேச்சுவழக்கினால் புலப்படக் கூடியது.

உ. மனநிலையும் சூழலும். (இதை அட்மாஸ்ஃபியர் என்பார்கள் ஆங்கிலத்தில்.) கதையின் தொடக்கத்தில் எந்தவிதமான உணர்ச்சி உருவாக்கப் படுகிறது? ஒளிநிரம்பி மகிழ்ச்சியான சூழலாக இருக்கிறதா, அல்லது இருண்டு, பயமுறுத்துவதாக அமைகிறதா? (எட்கர் ஆலன் போ வின் பல சிறுகதைகளில் இருண்ட, மூட்டமான, பயமுறுத்துகின்ற சூழல் அமைந்திருப்பதைக் காணலாம். உதாரணத்திற்கு தி ஃபால் அவ் தி ஹவுஸ் அவ் அஷர் என்பதைப் படித்துப் பாருங்கள்.)

காட்சியமைப்பு என்பது கதையின் பௌதிகமான பின்னணி. எங்கே எப்போது கதை நடக்கிறது என்ற தகவல்கள் இதனை உருவாக்குகின்றன. சூழலுக்கும் காட்சியமைப்புக்கும் நெருக்கமான தொடர்பிருக்கிறது. பலசமயங்களில் அதுதான் சூழலைத் தீர்மானிக்கிறது. சூழல் (செட்டிங்) என்பது கதையின் மனப்பாங்கு அல்லது தொனியைக் கட்டமைப்பது. பௌதிகச்சூழல்கள்-பிற கதாபாத்திரங்கள், அறைச்சாமான்கள், இயற்கைச் சூழ்நிலைகள், ஒளி, இருள், நிழல்கள், வானிலை போன்ற அனைத்தும்-ஒரு முதன்மைக் கதாபாத்திரத்தின் மனநிலையை பாதித்து அவன் மனப்பாங்கினை உருவாக்குகின்றன. கதையின் தொடக்கத் திலேயே பெரும்பாலும் அதன் சூழல் நிறுவப்பட்டுவிடுகிறது.

உதாரணமாக ‘நான் இருக்கிறேன்’ என்ற கதையின் தொடக்கத்தில் கதைக்களத்தினை ஜெயகாந்தன் சித்திரிப்பதைக் காணலாம்:

[அந்தச் சத்திரத்தின் வாசற்கதவுகள் சாத்திப் பூட்டப்பட்டிருக்கும்; பூட்டின்மீது ஒரு தலை முறைக் காலத்துத் துரு ஏறி இருக்கிறது. கதவின் இடைவெளி வழியாகப் பார்த்தால் உள் சுவர்களைக் கிழித்துக்கொண்டு கம்பீரமாய் வளர்ந்துள்ள அரசஞ்செடிகளும் காடாய் மண்டிக் கிடக்கும் எருக்கம்புதர்களும் தெரியும். சத்திரத்துக்கு எதிரே அதாவது சாலையின் மறுபுறத்தில் நான்கு புறமும் படித்துறையுள்ள ஆழமில்லாத குளம். குளத்திற்கு அப்பாலும், குளத்தைச் சுற்றிலும் செழிப்பான நஞ்சைநிலப் பகுதி. வரப்பினு£டே நடந்து ஏறினால், சற்றுத் தூரத்தில் ரயில்வே லைன் மேட்டுப்பகுதி. ரயில்வே லைனுக்கு மறுபுறம், இந்தப் பக்கம் செழித்துத் தலை யாட்டிக்கொண்டிருக்கும் பயிர்களை வளர்த்ததன் பெருமை என்னுடையதுதான் என்று அலையடித்துச் சிலுசிலுக்கும் ஏரிநீர்ப்பரப்பு கண்ணுக்கெட்டிய து£ரம் பரந்து கிடக்கிறது.

அதற்கப்புறம் ஒன்றுமில்லை; வெறும் தண்ணீர்தான். தண்ணீர்ப்பரப்பின் கடைக் கோடியில் வானம்தான். தண்ணீரும் வானமும் தொட்டுக்கொண்டிருக்கிற இடத்தில் நிலவின் பெருவட்டம் மங்கிய ஒளியை ஏரி நீரில் கரைத்து மிதந்துகொண்டிருக் கிறது….நிலவு மேலே ஏற ஏற அதன் உருவம் குறுகிச் சிறுத்தது; ஒளி பெருகிப் பிரகாசித்தது. ஒருகோடியில் எழுந்து ரயில்வே லைன் மேட்டின் மேலேறிய நிலவு வீசிய வெளிச்சம், மறுகோடியில், சத்திரத்துத் திண்ணையில் உட்கார்ந்து உணவருந்திக்கொண்டிருந்த அந்த வியாதிக்காரப் பிச்சைக்காரனின் புத்தம்புதிய தகரக் குவளையின் மீது பட்டுப் பளபளக்க, அதன் பிரதி பிம்பம் அவன் முகத்தில் விழுந்தது.

திண்ணையில் அவனைத் தவிர யாரும் இல்லை. அவன் அந்தத் தனிமையிலும், தகரக் குவளையில் ஊறிக்கிடந்த ரசத்து வண்டல் சோற்றிலும் லயித்துத் தன்னைமறந்த மகிழ்ச்சி யுடன் பாடிக் கொண்டே ஒவ்வொரு கவளமாய்ச் சாப்பிட்டான். அவன் பார்வை நிமிர்ந்து நிலத்தில் பதிந்திருந்தது. வாய்நிறையச் சோற்றுடன் அவன் பாடுவது தெளிவாய் ஒலிக்க வில்லை. கேட்ககத்தான் அங்கு யாரிருக்கிறார்கள்!]

நாம் கூறிய பின்னணி அமைவுக்கான இலக்கணங்கள் எல்லாம் இந்தப் பகுதியில் பொருந்தி வருவதைக் காணலாம். கடைசிப் பாராவில் சூழலும் இடம் பெற்றிருக்கிறது. மிக மகிழ்ச்சியான நேரம். மகிழ்ச்சியான சூழல். வியாதிக்காரப் பிச்சைக்காரன் என்றாலும் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. அதற்கேற்றாற்போல் அவன் பார்வை நிலவில் பதிந்திருக்கிறது. இந்த வருணனை-சூழல், பின்னால் கதைக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்று சொல்லத் தேவையில்லை. பிச்சைக்காரன் பாடுவதோடு நிறுத்தவில்லை. நன்றாக இரசித்துச் சாப்பிட்டு விட்டு “எல்லாம் நல்லாத்தான் இருக்கு” என்று சந்தோஷத்தோடு சொல்லிக் கொள்கிறான்.

கதையின் இறுதிப்பகுதியில் அந்தப் பிச்சைக்காரன் பேசிக்கொள்கிறான்.
["அதோ, ரொம்ப து£ரம் தள்ளி வந்திருச்சே சப்தரிஸி மண்டலம்...நாலு நட்சத்திரச் சதுரத்துக்கு ஓரமா, வாலு மாதிரி இருக்கற மூணுக்கு நடுவாலே ஓரத்திலே, ஆமாமா, அருந்ததி...அருந்ததியைப் பாத்தவனுக்கு ஆறுமாசத்துக்குச் சாவில்லே! அடி செருப்பாலே! இன்னும் ஆயுசு அதிகம் வேணுமா என் கட்டைக்கி" என்று விரக்தியும் வேதனையும் குழைய முனகிக்கொண்ட வியாதிக்காரன் கையிலிருந்த பீடியைத் தரையில் நசுக்கித் தேய்த்தான். அவன் பார்வை சப்தரிஷி மண்டலத்தை வெறித்தது.]

இங்கே கடைசியில், “இன்னும் எனக்கு ஆயுசு அதிகம் வேணுமா” என்று முனகுவதும் விரக்தியும் வேதனையும் அடைவதும் நிகழ்கின்றன. முதல் காட்சியமைப்பில், நிலவொளியும் பிச்சைக்காரனின் பாட்டும் ஒரு மகிழ்ச்சியான சூழலை உருவாக்குகின்றன. நிலவொளி ரொமாண்டிக் தன்மை நிரம்பிய ஒன்று. மேலே காட்டப்பட்ட காட்சியில் நிலவு இல்லை. மறைந்துவிட்டது போலும். (ஆசிரிய வருணனையிலிருந்து அது முன்நிலவுக்காலம்-வளர்பிறை என்று தோன்றுகிறது. வளர்பிறைக்காலம் என்றால் பின்னிரவில் நிலவு இருக்காது.) வெற்று வானத்தில் நட்சத்திரங்கள்தான் இருக்கின்றன. இருள். சப்தரிஷி மண்டலம் தெரிகிறது. அருந்ததி நட்சத்திரம் தெரிகிறது.

நிலவும் பாட்டும் பிச்சைக்காரனின் மகிழ்ச்சியான மனப்போக்கிற்கு ஒத்த காட்சி அமைவுகள். பின்னால் அவனுடைய மனம் இருண்டுபோனதை வானத்தின் இருட்டு காட்டு கிறது. முன் இரவின் நிலவும், பின் இரவின் இருளும் குறியீடாக இன்னொரு செய்தியையும் தெரிவிக்கின்றன. முன்இரவு என்பது இளமை. இந்தக் கதையில் வருகின்ற (நாம் இங்கே காட்டாத கதாபாத்திரம்) நொண்டி வயதில் இளையவன். அவன் வாழவேண்டியவன். தேய்கின்ற பின்இரவு என்பது முதுமை. பிச்சைக்காரன் வயதானவன். அவனுக்கு ‘இனி வாழ்க்கை தேவையில்லை’ என்ற மனப்பான்மை ஏற்பட்டுவிடுகிறது.

இந்தக் கதை தருவதும்-பெறுவதும் பற்றியது. பிச்சைக்காரன் மகிழ்நோக்கு நிரம்பி யவன். இவனை நாடிவந்த நொண்டி துயர்நோக்குக் கொண்டவன். இருவரும் பேசிக்கொள் ளும்போக்கில்  இந்த மனப்பான்மைகள் இடம் மாறுகின்றன. பிச்சைக்காரனின் மகிழ்ச்சி போய், விரக்தி தொற்றிக்கொள்கிறது. (பிறகு தற்கொலை செய்துகொள்கிறான் அவன்). தற்கொலை செய்துகொள்வதெற்கென வந்த நொண்டி பிச்சைக்காரனின் மகிழ்நோக்கைப் பெற்று மகிழ்ச்சியோடு வாழச்செல்கிறான். இவற்றுக்கு இசைவான காட்சியமைப்பும் சூழலும் உருவாக்கப்படுவது கவனிக்கத்தக்கது.

சூழல்(அட்மாஸ்ஃபியர்) என்பது உணர்ச்சி சம்பந்தப்பட்டது. வானம் எப்படி நம்மீது கவிந்திருக்கிறதோ அதுபோலக் கதையில் நம்மீது கவிகின்ற ஒன்று. வானிலை, சுவர்ச் சித்திரம் போன்ற எளிய விஷயங்கள்தான் அதில் வரும் என்றில்லை. கதைக்குப் பின்னணியாகக் குறிப்பிட்ட வரலாற்றுக் கணம், சமூகச் சூழல் ஆகியவற்றைக் கொள்வதுண்டு. குறித்த இடங்களுக்கும் காலங்களுக்கும் தனித்த உணர்ச்சிசார்ந்த சாராம்சம் உண்டு. ஒரு பாலைவனம் பின்னணியாக ஆக்கப்பட்டால், பெரும்பாலும் அந்தச் சூழல் வறண்ட, அச்சுறுத்தலான, மனித நேயமற்ற அல்லது வெறுமைசார்ந்த ஒன்றாகத்தான் அமையும்.

நாவல்களைவிடப் பின்னணியும் சூழலும் சிறுகதையில் மிகக் குறைவு. காட்சியமைவு என்பது வருணனையுடன் தொடர்புபட்டது என்றாலும் சிலசமயங்களில், செயல், உரை யாடல், ஒரு கதாபாத்திரத்தின் சிந்தனைகள் ஆகியவற்றாலும் வெளிப்படுத்தப்படலாம். சில சமயங்களில் எழுத்தாளர் கையாளும் தொனியும், கதைக்கான மனநிலை அல்லது சூழலை உருவாக்குவதில் பயன்படலாம். எழுத்தாளரின் தொனி என்பது கதை பற்றிய, வாசகர்களைப் பற்றிய அவர்தம் மனப்பாங்கினைக் குறிப்பதாகும்.

(ஓர் எழுத்தாளரின் தொனி என்பது நகைச்சுவையாக, அங்கதமாக, உணர்ச்சிமிகுந் ததாக, உற்சாகம் நிரம்பியதாக, கிண்டல் செய்வதாக, விட்டுக்கொடுப்பதாக, எப்படி வேண்டு மானாலும் இருக்கலாம். தொனி என்பது வருணிக்கின்ற வார்த்தைகள் சம்பந்தப்பட்ட விஷயம்.)
எப்படிப்பட்ட காட்சி அமைவையும் சூழலையும் உருவாக்குவது என்பது கதையின் தேவையைப் பொறுத்த விஷயம் ஆகும். சில கதைகளுக்கு மிக விரிவான அமைவு தேவைப் படும். சிலவற்றிற்குத் தேவையில்லை. முன்பு பார்த்த ‘ரிக்ஷா’ கதைக்குப் பின்னணியே சொல்லப்படவில்லை. ஏதோ ஒரு நகர, நடுத்தரக் குடும்பத்தின் வீடு என்பது உய்த்துணர வைக்கப்படுகிறது. அவ்வளவுதான் அதற்குத் தேவையான பின்னணி.

‘மறுபடியும்’ கதையிலும் பின்னணி மெதுவாகத்தான் துலக்கமடைகிறது. டாக்டர் வீட் டுக்குச் செல்லுதல் பற்றிய வருணனை சந்திரசேகரன் மத்தியதரத்து ஆள் என்ற தோற்றத்தை அளிக்கிறது. கதைமத்தியில் வரும் ஆயிரம்விளக்கு மசூதி பற்றிய வருணனை, இடம் சென்னை என்பதையும், கதைத்தலைவன் மேல்மத்திய தரத்தைச் சேர்ந்தவன் என்பதையும் உணர்த்து கிறது. கதையின் தொடக்கத்திலும் முடிவிலும்தான் பின்னணியோ காட்சியமைவோ வருணிக் கப்பட வேண்டும் என்பதில்லை. எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் வருணனை இடம் பெறும்.
சூழலமைப்பும், பின்னணியும், வருணனையும் செய்யும் பணிகள்-

1. கதைக்கு ஒரு யதார்த்தப் பின்னணியை இவை அளிக்கின்றன. குறிப்பிட்ட கால இடச் சூழலில்தான் கதை அமைகிறது என்னும்போது வாசகருக்குத் தெளிவு உண்டாகிறது. கதை யைச் சட்டெனத் தொடர முடிகிறது.

2. வெறும் கதையை எடுத்துரைப்பது, கதைப்பின்னல் என்பது (உரையாடல் சேர்ந்தாலும்) ஓர் எலும்புக்கூடு போன்றதுதான். வருணனைதான் கதைக்குச் சதை போன்றது. கதைக்கு வடிவம் அளிப்பது வருணனைதான். வருணனையற்ற கதை, சதையற்ற பெண் போலத்தான்.

3. நல்ல வருணனைகள் கதைக்கு சுவாரசியத்தை அளிக்கின்றன.

4. பலசமயங்களில் கதாபாத்திரங்களை வருணனைகள் உருவாக்குகின்றன.

5. சிலசமயங்களில் குறிப்புமுரண், அங்கதம், இரண்டாம்தள அர்த்தம், உருவக அர்த்தம், குறியீட்டு அர்த்தம் ஆகியவற்றை உருவாக்குகின்றன. முக்கியமாக உணர்ச்சிசார்ந்த சூழலை வடிவமைக்கின்றன.
கீழ்க்காணும் சூழலமைப்புப் பகுதிகளைப் படித்து அதன் கூறுகளை விவரியுங்கள். அவை என்னென்ன பணிகளை ஆற்றுகின்றன என்பதைச் சொல்லுங்கள்.

மி

[சீ! என்ன நாற்றம்! ஒரேயடியாகப் பிணவாடை அல்லவா அடிக்கிறது? குமட்டல் எடுக்க, புகையிலையின் கோளாறோ என்று ஜன்னல்பக்கமாகச் சென்று அப்படியே உமிழ்ந்து, வாயை உரசிக் கொப்புளித்துவிட்டுவந்து படுக்கையின்மீது உட்கார்ந்தேன்.
துர்நாற்றம் தாங்க முடியவில்லை. உடல் அழுகி, நாற்றம் எடுத்துப்போன பிணம்போல; என்னால் சகிக்க முடியவில்லை. எனக்குப் புரியவில்லை. ஜன்னல் வழியாக நாற்றம் வருகிறதோ? ஊசிக் காற்றுக்கூட இழையவில்லையே... கட்டிலை விட்டு எழுந்திருந்து ஜன்னலின் பக்கம் நடந்தேன். இரண்டடி எடுத்துவைக்கவில்லை, நாற்றம் அடியோடு மறைந்து விட்டது. என்ன அதிசயம்! திரும்பவும் கட்டிலுக்கு வந்தேன். மறுபடியும் நாற்றம். அதே துர்க் கந்தம். கட்டிலின் அடியில் ஏதேனும் செத்துக்கிடக்கிறதோ? விளக்கை ஏற்றினேன். கட்டிலடி யில் து£சிதான் தும்மலை வருவித்தது. எழுந்து உடம்பைத் தட்டிக்கொண்டு நின்றேன்.]

மிமி

[தன்வீட்டிலே சும்மா தலையோடு வாசல் நடந்துகொண்டு சுகமாக வாழலாம் என எண்ணி யவனுக்கு எதிரே வாசலில் பெரிய மரமொன்று பார்வைகொள்ள நிற்கிறது. வாயிற்பக்கம் எப்போதாவது வந்து நின்று போவார் வருவோர்களைச் சும்மா நின்று கவனிப்புக் கொள்வதில், இந்த மரத்தையும் பார்வையில் பட்டுப் போகுமளவிற்கு வெறித்து நோக்குவது உண்டு. எந்த யுகத்திலிருந்து இது இப்படிக்கு இங்கே ஸ்தல விருக்ஷமென நிற்கிறது என்பது புரியவில்லை. ஆனந்தமாக அது ஆகாயத்திற்கும் பூமிக்குமாக வளர்ந்து எட்டுத் திக்கையும் நோக்கிப் படர்ந்ததென இருப்பது எதற்காகவென்றும் தெரியவில்லை. தன்வீடு ஒரு திக்கை நோக்கி நிற்பது சரியெனப் புரிந்தாலும் இந்த மரம் எந்தப் பக்கம் பார்த்து நிற்பது என்ற சம் சயம் யோசனையினால் விடுபடமுடியாது இவன் திகைப்பது உண்டு. அந்த மரம் ஒருபோதும் நிசப்தம் கொள்ளாது, எந்நேரமும் பக்ஷிஜாலங்களின் கூக்குரலைக் கொடுத்துக் கொண்டி ருப்பது விநோதமாகப் படும். சிற்சில சமயம் ஊரை நாசம் செய்ய வானரங்களும் குடும்ப சகிதம் அதில் குடியேறி, வால் பிடிப்பில் தலைகீழாகத் தொங்கி கிரீச்சிட்டு கத்தி ஆடி அட்ட காசம் செய்யும். அது எச்சாதி மரமென்பது தெரியாது. காலையில் மரத்தடியில் மலர்கள் பாய் விரித்தாற்போல வீதியில் சிதறிக்கிடந்து காட்சியளிக்கும்போது, வாசனை நெடியெனக் காற்றடித்த வாக்கில் பரவிக்கொண்டிருக்கும். கும்பல்கும்பலாகப் பிள்ளைகள் அதைப் பொறுக்க வருவதையும் இவன் கவனிப்பது உண்டு.]

மிமிமி

[நூறுரூபாய் முன்பணமும் கொடுத்துவிட்டுச் சென்றார் குமாரவேலு பணிக்கர். ஒரு மாத காலத்தில் படத்தை முடித்துத் தந்துவிட வேண்டும் என்பது பேச்சு, சுப்பையா ஆசாரி ஒப்புக் கொண்டார்.
சரியான சான்ஸ் அடித்துவிட்டது. சீதையின் முழுஉருவப்படம் ஐந்நூறு ரூபாய். முன்பணம் ரூபாய் நு£று வேறு. திருப்தியாக இருந்தால் மேலும் ஒரேயடியாக இருபது படத்துக்கு ஆர்டர்.
மனசில் குது£கலம் பொங்கி வழிந்தது. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களின் முக்கியச் சந்திப்பு களில் தொங்கப்போகிறது, நாடகத்திரைபோல் ஒரு படம். கூடிக்கூடிப் பார்க்கமாட்டார்களா ஜனங்கள்? சீதை மார்க் சீயக்காய்த்து£ள் என்ற கொட்டை எழுத்துகள் கண்களைக் கவ்வினா லும் படத்தின் அடிப்பக்கம், வலதுகோடியில் சுப்பையா ஆசாரி என்ற பெயர் புலப்படாமலா போய்விடும்?]

மிக்ஷி

[காலையிலேயே பொட்டைக் குளத்தைச் சுற்றியிருந்த இடம் உயிர்பெறத் தொடங்கியிருந்தது. வழக்கத்திற்கு மாறாகக் காக்கைகள், பருந்துகள், குருவிகள் அதிக அளவில் வரத்தொடங்கி யிருந்தன. பல குடும்பங்கள் ஏற்கெனவே வந்துவிட்டிருந்தன. வந்த வேகத்திலேயே நிழலில் உட்கார்ந்து பொங்கல் வைப்பதற்கான வேலைகளைச் செய்ய ஆரம்பித்தனர். ஒரு சிலர் அடுப்பு வெட்டிக் கொண்டிருந்தார்கள். ஒருசிலர் அடுப்புகோலக் குச்சிகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள். பெண்கள் குச்சி பொறுக்கிவரக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். கிழவிகளும் சிறுபிள்ளைகளும் மூட்டைமுடிச்சுகளுக்குக் காவலாக உட்கார்ந்திருந்தனர். ஒருவர் தவறாமல் எல்லோரும் "மய காத்து வந்துடும். சட்டு சருக்குன்னு வேலயப் பாருங்க" என்று சொல் லிக் கொண்டிருந்தார்கள்.]

மேற்கண்ட நான்கு பகுதிகளும் தமிழின் நான்கு சிறந்த எழுத்தாளர்கள் எழுதிய நான்கு கதை களின் தொடக்கங்கள். முதல் கதையின் சூழல், அது ஒரு பேய்க்கதை என்பதற்கு மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. புதுமைப்பித்தன் எழுதிய காஞ்சனை என்ற கதையின் தொடக்கம் அது.

இரண்டாம் கதை மௌனியினுடையது. அதன் தத்துவார்த்தமான பொருளுக்கு ஏற்றவாறு மயக்கமான சூழல் அமைக்கப்படுகிறது. திடீரென வாசலில் மரம் தோன்றுவது, அது ஆகாயத் துக்கும் பூமிக்குமாக அளாவி வளர்ந்திருப்பதாகத் தோன்றுவது, இவன் கவனிப்பது உண்டு, செய்வது உண்டு போன்ற நழுவலான தொடர்கள்.

மூன்றாம் கதை சுந்தர ராமசாமியினுடையது. படம் வரைய ஒரு வாய்ப்புக் கிடைத்த சந்தோஷ மும், புகழ்மீது மயக்கமும் கதாபாத்திரச் சிந்தனையின் வாயிலாக வெளிப்படுகின்ற.ன. கடைசி யாகத் தந்திருக்கும் பகுதி இமையம் என்னும் எழுத்தாளர் ஒரு திருவிழாவின் கும்பலை வருணிக்கின்ற கதையின் தொடக்கப்பகுதி.

இவைஅனைத்தும், கதையின் கருப்பொருளை மனத்தில் கோடிட்டுக் காட்டுவதாகவும், பின்னர் வரப்போகின்றவற்றை ஒருவாறு முன்னுணர்த்துவதாகவும், கதையின் தொனியை எடுத்துரைப்பதாகவும் அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது. தக்கவாறு இனிமேல் நீங்களே கதையின் வருணனைப் பகுதிகளை ஆராயக் கற்றுக்கொள்ளலாம். குறிப்பாக, தொடக்கங்க ளையும், இறுதிப்பகுதிகளையும்.

Seek the college essay help to www.college-essay-help.org/ aid of librarians on a one-to-one basis to further your skills

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இயல் 7 – சிறுகதையின் கூறுகள்-பின்னணி”

அதிகம் படித்தது