அமெரிக்கத் தேர்தல் முடிவுகள்: ஒருபார்வை
ஆச்சாரிNov 15, 2012
தேர்தல் முடிவிற்கு போவதற்குமுன் அமெரிக்க வரலாற்றை சற்று காண்போம். அமெரிக்காவின் தொல்குடிகள் மனிதனின் பயணத்தின் ஒருபகுதியாக வட அமெரிக்காவில் குடியேறி பின்பு தென் அமெரிக்காவிற்குச் சென்று குடியேறியதாகக் கூறுகின்றனர் அறிஞர்கள். இவர்களின் மூதாதையர்கள் பல்லாயிரமாண்டுகளுக்குமுன் உருசியாவிலிருந்து வந்ததாகக் கூறுகிறார் முனைவர் சுபென்சர் வெல்சு (பார்க்க ”Journey of Man” by Dr. Spenser Wells / யூடூயூப் ஆவணப்படம்: http://www.youtube.com/watch?v=OV6A8oGtPc4). இவர்களை செவ்விந்தியர்கள் என்று தவறுதலாகக் கூறுகின்றனர் பலர். இவ்வாறு அழைப்பது தம்மை அவமதிப்பதாகக் கருதுகின்றனர் இந்த தொல் அமெரிக்க குடிமக்கள். இந்தியர்களுக்கும் இவர்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. 1492-ம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த கிருத்தோபர் கொலம்பசு என்பவர் பொருள் தேடி ஐரோப்பவிலிருந்து மேற்கு நோக்கி அமெரிக்க நாடுகளை முதன் முதலில் அடைந்தவர். அங்கு வாழ்ந்த தொல் குடிமக்களை அடிமைகளாக ஐரோப்பாவிற்கு கொண்டு சென்றவர் இவர். காலனி ஆதிக்கவாதிகளினால் அதிகம் இழந்த இனம் தொல் அமெரிக்க இனம் எனலாம். இவரைத் தொடந்து பலர் அமெரிக்காவிற்கு சென்றனர். அவர்கள் ஆப்ரிக்காவிலிருந்து கருநிற ஆப்ரிக்கர்களை அடிமைகளாக அமெரிக்காவிற்கு கொண்டு சென்றனர். 1776-ம் ஆண்டு சூலை 4-ம் நாள் அமெரிக்கா ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலையடைந்து ஜார்ஜ் வாஷிங்டன் முதல் அதிபரானார். அமெரிக்காவில் அடிமைத்தளையை அறுத்தெரிந்த மற்றொரு குடியரசுத் தலைவர் ஆப்ரகாம் லிங்கன் என்பதை நாம் இங்கு நினைவு கூறவேண்டும்.
அமெரிக்கத்தேர்தல்முறை
அமெரிக்கத் தேர்தல் முறை மற்ற நாடுகளிடமிருந்து மாறுபட்டது. குடியரசுத்தலைவர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை அந்தந்த மாநிலங்களே நடத்தும். இந்தியாவில் உள்ளது போல் மத்திய தேர்தல் ஆணையமொன்று இங்கில்லை. தேர்தல்நாள் விடுமுறையல்ல. ஆனால் அஞ்சல் மூலம் வாக்களிக்கலாம். தேர்தலுக்கும் முன்னரே நேரடி வாக்குமளிக்கலாம். இதனால் தேர்தலுக்கு விடுமுறை தேவையில்லை என்று ஒருசாராரும், தேர்தல் நாளை விடுமுறைநாளாக அறிவிக்கவேண்டும் என்று ஒருசாராரும் கூறிவருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலுள்ள தேர்தல் அதிகாரிகள் தேர்தலை நடத்தி அறிவிப்பார்கள். முதலில் குடியரசுத் தலைவர் தேர்தல் முறையைப் பார்ப்போம். அமெரிக்க சட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் மக்கள் தொகைக்கேற்ப வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இதை தேர்தல் கல்லூரி வாக்குகள் (Electoral College votes) என்பர். குடியரசுத் தலைவராக 270 வாக்குகள் தேவை. மொத்த வாக்குகள் 538. அதிக அளவில் கலிபோர்னிய மாநிலத்திற்கு 55 வாக்குகளும், குறைந்த அளவில் 3 வாக்குகளும் (வையோமிங் உட்பட ஒரு சில மாநிலங்கள்) உள்ளன. மாநிலத்தில் அதிக வாக்குகள் வாங்குவோர்க்கு அனைத்து வாக்குகளும் அளிக்கப் படும். சில மாநிலங்களில் ஓரிரு வாக்குகள் வெற்றியடைந்த தொகுதிகள் பொருத்து அளிக்கப்படுகின்றன.
நாடாளுமன்றத் தேர்தல் மற்ற நாடுகளைப் போன்றுதான். இந்தியாவில் உள்ளது போல் அமெரிக்காவிலும் நாடாளுமன்றத்தில் இருமன்றங்களுள்ளன. அதை செனட் (Senate) என்றும் அவுஸ் (House – மொத்தம் 435) என்று கூறுவர். செனட்டிற்கு ஒவ்வொரு மாநிலத்திலிருந்து இரு உருப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். செனட்டில் 50 மாநிலங்களிலிருந்து மொத்தம் 100 உருப்பினர்கள் உள்ளனர். ஆனால் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உள்ள ஒரு பெரிய வேறுபாடு இவ்விருமன்றங்களிற்கும் உருப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். நியமன உருப்பினர் என்பதே இங்கு கிடையாது.
அமெரிக்காவில் அமைச்சகத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் தொடர்பு கிடையாது. தகுதி வாய்ந்த எவரையும் குடியரசுத் தலைவர் அமைச்சர்களாக நியமிக்கலாம். அவர்கள் நாடாளுமன்ற உருப்பினர்களாக இருக்கத் தேவையில்லை. ஆனால் அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும், ஏன் நீதியரசர்களும் செனட்டில் ஒப்புதல் வாங்க வேண்டும். செனட்டில் ஒப்புதல் வாங்க 60 வாக்குகள் தேவை. குடியரசுத் தலைவர் பரிந்துரைத்த பலர் செனட்டில் ஒப்புதல் பெறமுடியாமல் பலமுறை விலக நேர்ந்துள்ளது. இம்முறையால் அதிகாரம் ஒருவரிடத்திலோ, ஓர் அமைப்பிற்கோ இருப்பதில்லை.
2012 தேர்தல்முடிவுகள்
இங்கு தேர்தல் பிரச்சாரங்கள் தேர்தலுக்கு ஓராண்டிற்கு முன்பே துவங்கிவிடும். முதலில் வேட்பாளர்கள் கட்சிக்குள் போட்டியிட்டு வெற்றியடையவேண்டும். அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியில் (Republican Party) பலர் போட்டியிட்டனர். அதில் மாசசுசெட்டின் முன்னாள் ஆளுநர் திரு மிட் இராம்னி வெற்றியடைந்து அக்கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். சனநாயகக் கட்சியின் (Democratic Party) சார்பில் இந்நாளைய குடியரசுத் தலைவர் திரு பராக் ஒபாமா அவர்கள் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஒருவரும் நிற்கவில்லை. பொதுவாக பதவியிலிருக்கும் குடியரசுத்தலைவரை எதிர்த்து அக்கட்சியில் ஒருவரும் நிற்க மாட்டார்கள்.
குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப் படுவதில் திரு. இராம்னி அவர்கள் பெரும் சிக்கலை நேற்கொண்டார். குடியரசுக் கட்சி அமெரிக்காவின் தீவிர வலது சாரிக் கட்சியாக மாறிவிட்டதால் திரு. இராம்னியும் நடுநிலையிலிருந்து விலகி அதிதீவிர கிருத்துவர்களின் ஆதரவை பெற தானும் தீவிர கிருத்துவ மதவாதக்கொள்கைகளுக்குத் தாவ வேண்டியிருந்தது. ஆளுநராக இருந்த காலத்தில் நடுநிலையில் இருந்த திரு இராம்னி தன்னை தீவிர கன்சர்வேடிவ்-ஆக காட்டிக் கொண்டது இருசாராரையும் அவரின் மீது ஐயம் கொள்ள வைத்தது. குடியரசுக் கட்சியினர் இவரை நம்பத் தயாராக இருக்கவில்லை. அதனால் இவர் மேலும் மேலும் தன்னை வலது சாரியாகக் காட்டிக்கொள்ள முற்பட்டார். இது நடுநிலையாளர்களையும், எக்கட்சியையும் சாராதவர்களையும் எரிச்சலூட்டியது. குடியரசுக் கட்சியின் தீவிரவாதிகளின் பிடியில் மாட்டி இவர் தனது கொள்கைகளை மாற்றிக் கொண்டார். கருத்தடைக்கு எதிரான நிலை, பெண்களுக்கு எதிரான நிலை, ஓரினச்சேர்க்கைக்கு எதிரான நிலை, அவர்கள் திருமணத்திற்கு எதிரானக் கொள்கை, நடுத்தர/ஏழை மக்களுக்கு உதவும் அரசு கொள்கைகளுக்கு எதிரான நிலை போன்ற நிலைப்பாடுகள் இவரது வெற்றிக்கு மேலும் சிக்கலை உருவாக்கின. அதற்குமேல் இவர் பணக்காரகளுள் ஒருவர், வசதிபடைத்தவர்களுக்கு மேலும் வரிச்சலுகை அளிக்க முன் வந்தமை போன்றவை மக்களிடம் இவரது செல்வாக்கை குறைத்தது. ஒரு சீரான கொள்ளை இல்லாதவர் என்கிற உணர்வையும் இவரது போக்கு காட்டியது.
திரு. ஒபாமா அவர்களுக்கு இந்த தொல்லையில்லை. குடியரசு உட்கட்சித் தேர்தலில் மற்ற வேட்பாளர்களால் பெரிதும் காயம்பட்டிருந்த திரு. இராம்னியை எளிய மக்களுக்கு எதிரானவர் என்கிற பிரச்சாரத்தை திரு. ஒபாமாவும், சனநாயக்கட்சியும் எளிதாக செய்ய முடிந்தது. அதற்கு அவர் குடியரசுக் கட்சியின் மற்ற வேட்பாளர்களுக்கு நன்றி கூற வேண்டும். மேலும் திரு. இராம்னி உட்கட்சித் தேர்தலில் வெற்றியடைய பெரும் பொருளைச் செலவிடவேண்டியிருந்தது. திரு. ஒபாமாவிற்கு அச்செலவில்லை. முதலிலிருந்தே திரு. இராம்னியை அவரும், சனநாயக்கட்சியினரும், அவரது ஆதரவாளர்களும் குறிவைத்து பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருந்தனர். அதனால் தேர்தலுக்கு 6 திங்கள்களுக்கு முன்னரே இராம்னியின் மீது ஐயத்தை விதைக்கும் பணியை செவ்வனே திரு. ஒபாமா ஆதரவாளர்கள் செய்து விட்டனர்.
திரு. ஒபாமா அமெரிக்க மக்களிடையே நல்ல செல்வாக்கை பெற்றிருக்கிறார். பொதுவாக மக்கள் அவரை விரும்புகின்றனர். அவரது பெண்கள் சார்பான கொள்கைகள், அனைவருக்கும் மருத்துவ வசதி, ஒருவர் யார் யாரை காதலிப்பது, திருமணம் செய்துக் கொள்வது அவரது உரிமை என்கிற அறிவிப்பு, அத்தகையத் திருமணங்களுக்கு ஆதரவு நிலை, நடுத்தர மக்களுக்கான ஆதரவு, புவி வெப்பமாதல் மனிதனின் செயலினால்தான் அதை சரிசெய்ய வேண்டும் என்கிற கொள்கை, செல்வந்தர்களின் வரிவிகிதம் அதிகரிக்கப்படவேண்டும் போன்ற பல சனநாயகக் (Liberal) கொள்கைகள் இவரது வெற்றியை தேர்தலுக்கு முன்பே உறுதிப்படுத்தியது என்பது மிகையல்ல. இதற்கு மகுடம் வைத்தாற்போல் தேர்தலுக்கு ஒருகிழமை முன்பு ஏற்பட்ட சாண்டி புயல் இவரது வெற்றியை மேலும் உறுதிப்படுத்திவிட்டது. புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவரது ஆட்சியாளர்கள் செய்த உதவி, அப்பகுதி ஆளுநர்களுடன் (நியூசெர்சி ஆளுநர் குடியரசுக் கட்சியைச் சார்ந்தவர்) இவர் நடுநிலையோடு ஆற்றியப் பணி போன்றவை இவருக்கு சாதகமாக அமைந்தது.
ஊடகவியலார்கள் எதிர்பார்த்தது போல் தேர்தல் முடிவு அமைந்திருந்தது. பல கருத்துக் கணிப்புகள் திரு. ஒபாமா 300-ற்கும் மேலான வாக்குகளை பெற்று வெற்றியடைவார் என்று கணித்திருந்தனர். அது போலவே தேர்தல் நாளன்று திரு. ஒபாமா அவர்கள் 332 வாக்குகளும், திரு இராம்னி அவர்கள் 202 வாக்குகளும் பெற்றனர். கடந்த தேர்தலில் வெற்றியடைந்த இரு மாநிலங்கள் தவிர (இந்தியானா மற்றும் வட கரொலைனா) மற்ற அனைத்து மாநிலங்களையும் திரு. ஒபாமா தக்க வைத்துக் கொண்டார். மொத்த வாக்கு எண்ணிக்கையிலும் 2 மில்லியனுக்கு அதிகமான வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார். திரு இராம்னி அதிக மாநிலங்களில் வெற்றியடைந்திருந்தாலும் மக்கள் தொகை அதிகமுள்ள அனைத்து மாநிலங்களிலும் (டெக்சசு தவிர) திரு. ஒபாமா வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. படித்தவர்கள், பெண்கள், இளைஞர்கள், தென் அமெரிக்கர்கள், ஆசியர்கள், யூத மக்கள் போன்றோர்களிடம் அதிகம் செல்வாக்குப் பெற்று திரு. ஒபாமா வென்றிருக்கிறார். அடுத்த நான்காண்டுகள் இவர் குடியரசுத் தலைவராக பணியாற்றுவார். திரு. ஒபாமா அவர்கள் அமெரிக்காவின் 44-வது குடியரசுத்தலைவர்.
அடுத்த நான்காண்டுகள் முக்கியமானவை. இக்காலத்தில் ஒய்வுப் பெறவுள்ள உச்சநீதிமன்ற நீதியரசர்களுக்கு பதிலாக புதிய நீதியரசர்களை நியமிக்கும் வாய்ப்பு திரு. ஒபாமாவிற்கு உள்ளது. தனது கொள்கைகளுக்கு ஆதரவானவர்களை இவர் நியமிக்க வாய்ப்புள்ளது. உச்சநீதிமன்றத்தில் இதனால் சனநாயக கட்சியினருக்கு பெருபாண்மைக் கிடைக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ஒன்று மட்டும் நிச்சயம் அமெரிக்க மக்கள் பல இனத்தவர்களாக விரிவடைந்துள்ளனர். கடந்த தேர்தலைவிட இத்தேர்தலில் சிறுபாண்மையினர் அதிகம் வாக்களித்துள்ளனர். இது மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. லத்தீன் அமெரிக்கர்கள் மேலும் வளர வாய்புள்ளது. ஆப்ரிக்க அமெரிக்கர்கள், ஆசியர்கள் வளரவும் அதிக வாய்ப்புள்ளது. குடியரசுக் கட்சியின் சமூக, பொருளாதாரக் கொள்கைகளினால் இவர்கள் பெரும்பாலும் சனநாயகக் கட்சியினருக்கு வாக்களிக்கவே வாய்ப்புள்ளது.
செனட் தேர்தலிலும் சனநாயக் கட்சி பெரிய அளவில் வெற்றியடைந்திருக்கிறது. சனநாயக் கட்சி – 53, கட்சி சாராதவர் – 2, குடியரசுக் கட்சி – 45. குடியரசுக் கட்சியினர் மற்றொரு முக்கிய மன்றமான house-ஐ தக்க வைத்துள்ளனர். எனவே அமெரிக்க மக்கள் இருசாராரும் ஒருங்கிணைந்து செயல்பட உத்தரவிட்டுள்ளனர். குடியரசுக் கட்சியினர் ஆதரவில்லாமல் திரு. ஒபாமாவால் ஆட்சி செய்ய முடியாத நிலையில் திரு ஒபாமாவின் அடுத்த ஆட்சிக் காலம் துவங்கவுள்ளது. குடியரசுக் கட்சியினர் சோர்ந்திருக்கும் நிலையில் திரு ஒபாமா தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்த முயல்வாரா அல்லது குடியரசுக் கட்சியினர் கடந்த ஈராண்டைப்போல தடங்கல்களை மேன்மேலும் செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற திரு ஒபாமாவின் வெற்றியினால் உலகம் நிம்மதியடைந்துள்ளது என்கிற கருத்து பெரும்பாலும் நிலவுகிறது. இவரது இரண்டாவது ஆட்சிக் காலம் எப்படியிருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமெரிக்கத் தேர்தல் முடிவுகள்: ஒருபார்வை”