மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இயல் 8 – சிறுகதையின் கூறுகள்-குறியீடும் குறிப்புமுரணும்

ஆச்சாரி

Dec 1, 2012

           வெற்றிகரமான கதைகள் யாவும் செறிவானவை. ஒரு நல்ல எழுத்தாளருடைய நோக்கம் மிகக் குறைந்த சொற்களில், மிக அதிகமான விஷயத்தைச் சொல்வதாக இருக்கிறது. இதனால் நல்ல கதைகள் யாவும் சுருக்கமானவை என்று கருதவேண்டாம். கதையில் வீணான எதுவும் இல்லை, ஒவ்வொரு வார்த்தையும் விஷயமும் உச்சகட்ட விளைவை நோக்கித் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பதுதான் இதற்கு அர்த்தம். வெடிமருந்தில்கூட, எவ்வளவு குறைந்த இடத்தில் மிகவலிமையான மருந்து சேகரித்துவைக்கப்பட்டுள்ளது என்பதில்தான் சக்தி அடங்கியிருக்கிறது. அதுபோலத்தான் கதையிலும்.

            மிகக் கடுமையான தேர்ந்தெடுப்பின்மூலமே எழுத்தாளர் செறிவினைச் சாதிக்கமுடி யும். கதையின் வாயிலாகத் தரப்போகும் அர்த்தத்திற்கு எந்தெந்த விஷயங்கள், சம்பவங்கள் மிக அதிகமாகப் பயன்தருமோ அவற்றை மட்டும் தேர்ந்தெடுக்கிறார் ஆசிரியர். எவற்றின் பயன் மிகக் குறைவானதோ அவற்றை விட்டுவிடுகிறார். பலவிதப் பயன்கள் அல்லது பன்முக மதிப்புகள் உள்ள விஷயங்களைக் கூடியவரை தேர்ந்தெடுக்கிறார். இவை ஒரேசமயத்தில் பல நோக்கங்களுக்கு உதவுகின்றன. கதாபாத்திரத்தையும் விவரித்து அதேசமயம் கதைப்பின்ன லையும் முன்னோக்கி நகர்த்தும் ஒரு விவரணை, இவற்றுள் ஏதேனும் ஒன்றை மட்டுமே செய்யக் கூடியதைவிட மேலானதுதானே?

            எழுத்தாளர் செறிவை அடைவதற்குப் பயன்படுத்தும் இரண்டு முக்கியமான கருவி கள் குறியீடும் குறிப்புமுரணும். இவையிரண்டுமே கதையின் வெடிப்புத் தன்மையை அதிகப் படுத்தக் கூடியவை. ஆனால் இரண்டிற்குமே வாசகரிடம் விழிப்புத்தன்மை, முதிர்ச்சி ஆகியவை வேண்டும்.

குறியீடும் உருவகமும்

            இலக்கியக் குறியீடு (வேறு குறியீடுகளும் இருக்கின்றன, அவற்றைப் பற்றி இங்கே சொல்லவில்லை) தான் என்னவாக இருக்கிறதோ (அல்லது எதற்காக நிற்கிறதோ) அதைவிடக் கூடுதலான அர்த்தங்களைத் தருவது. அது ஒரு பொருளாகவோ, ஆளாகவோ, சூழலாகவோ, செயலாகவோ இருக்கலாம். அதன் நேரடி அர்த்தம் வேறு பிற அர்த்தங்களையும் தருமாறு அமைகிறது. இவற்றில் மிக எளியது பெயர்க் குறியீட்டுத்தன்மை. ஆசிரியர்கள் பலவிதப் பெயர்களைப் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. ‘மறுபடியும்’ கதையில் கூட தலைமைப் பாத்திரத்திற்குச் சந்திரசேகரன் என்று பெயரிட்டிருக்கிறார் ஆசிரியர், ஆனால் அது எதற்கும் உருவகமாகவோ குறியீடாகவோ இல்லை. அதற்கு பதிலாக இராமநாதன் என்று இருந்தாலும் கதை அதே பயனைத்தான் தரும்.

            ஆனால் ‘நியாயம்’ கதையில் புதுமைப்பித்தன் தேவஇர(ற)க்கம் நாடார் என்று பெய ரிடுவது கூடுதலான பல அர்த்தங்களைத் தருகிறது. அசலான பெயர் தேவஇரக்கம் நாடார்தான். ஆனால் அவரிடம் இரக்கம் காணப்படவில்லை என்பது ஒன்று. இரண்டாவது அவர் தன் பெயரை தேவஇறக்கம் நாடார் என்றே எழுதுகிறார். அவர் தம் பண்பிலிருந்து இறங்கிவிட்டார் என்பதை அது உணர்த்துவதாகிறது. இன்னொன்று தேவனே இறங்கிவந்து மனிதன்மீது இரக்கம் காட்டும்போது மனிதனுக்கு மனிதன் எப்படியிருக்க வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இப்படி அந்தப் பெயர் ஒரு குறியீடாகிப் பல அர்த்தங்களைத் தருமாறு அமைகிறது. இதனை பெயர்க்குறியீடு (நேம் சிம்பலிசம்)  என்பார்கள். கதாபாத்திரப் பெயர்களை உருவகமாகவும் வைப்பதுண்டு. சிலசமயம் கதையின் தலைப்பும் உருவகமாக அமையலாம். சுந்தர ராமசாமி எழுதிய ஓர் அழகான கதையின் தலைப்பு ‘கோவில்காளையும் உழவுமாடும்’. இந்தச் சொற்கள் கதைக்குள் எங்குமே இடம் பெறவில்லை. தலைப்பில் மட்டுமே இடம்பெறுகின்றன. கதையின் இரண்டு கதாபாத்திரங்களை இச்சொற்கள் உருவக மாகக் குறிக்கின்றன. அவருடைய இன்னொரு கதையின் தலைப்பு ‘சீதைமார்க் சீயக்காய்த் தூள்’. இதில் ‘சீதைமார்க்’ என்ற சொல்லை ஆளுவதற்குப் பலமான பின்னணி இருக்கிறது. அவருடைய இன்னொரு கதையான ‘பல்லக்குத் து£க்கிகள்’ என்பதில் கதைமுழுவதுமே பல்லக்கும் அதைத் தூக்குபவர்களும் வருகிறார்கள். ஆனால் பல்லக்கு எது, பல்லக்குத் து£க்கிகள் யார், இவர்கள் எவரின் உருவகங்கள் என்ற கேள்வி எழுகிறது.

            ‘பல்லக்குத் தூக்கிகள்’ கதையில்போல, பெயர்க்குறியீடுகளைவிடப் பொருள்களையும் செயல்களையும் குறியீடுகளாகப் பயன்படுத்துவது முக்கியமானது. சில கதைகளில் இந்தக் குறியீடுகள் மிக யதார்த்தமாகப் பொருந்திவிடுகின்றன. மிகக் கூர்மையான நோக்குடைய வாசகர்களுக்குத் தவிர அவற்றின் குறியீட்டுமதிப்பு முதல் வாசிப்பில் தெரியவராது. சில கதைகளில் அவை வெளிப்படையாகவும் மையமாகவும் அமைந்து குறிப்பிட்ட விளக்கத்தைக் கதைப் பொருளுக்குத் தருகின்றன. முதல்வகையில், குறியீடுகள் வலுப்படுத்துகின்றன, அர்த்தத்தைக் கூடுதலாக்குகின்றன. இரண்டாவது வகையில் அவை அர்த்தத்தைச் சுமந்து செல்கின்றன.

            குறியீடுகளை அறியவும் அடையாளம் காணவும் புலப்பாடும் சாமர்த்தியமும் வேண்டும். மாணவர்களைப் பொறுத்தவரை குறியீட்டு மதிப்புகளைப் பற்றிய ஞானம் முதன் முதலாக அவர்களுக்கு ஏற்பட்டவுடனே எல்லாப் பொருள்களிலும் குறியீடுகளைக் காணத் தொடங்கிவிடுவார்கள். இங்கே ஒரு முக்கியமான எச்சரிக்கை: நமது (வாசகரின்) சாமர்த் தியத்தைக் காட்டும் களமாக இலக்கியப் பிரதியை ஆக்கிக்கொள்ளக்கூடாது. இல்லாத குறியீடுகளைக் கதையில் தேடுவதைவிட இருப்பனவற்றை விட்டுவிட்டாலும் பரவாயில்லை. ஆரம்ப வாசகர்கள், குறியீட்டுப் பொருள்களைத் தேடும்போது விழிப்பாக இருக்கவேண்டும். அவர்கள் பின் வரும் சில விதிகளைக் கடைப்பிடிப்பது நல்லது.

1. ஒரு விஷயத்தைக் குறியீடாக எடுத்துக் கொள்வதா வேண்டாமா என்பது பற்றிய குறிப்பினைக் கதைக்குள்ளாகவே தேடவேண்டும். குறியீடுகள் தங்கள் இருப்பை எப்போதுமே குறிப்பாகத் தெரிவிக்கின்றன. அழுத்திக் கூறுதல், திரும்பத்திரும்பக் கூறுதல், அல்லது அவை அமைந்திருக்கும் இடம் ஆகியவை யாவும் அவற்றின் இருப்பைக் காட்ட உதவும். இப்படிப்பட்ட அடையாளங்கள் இல்லாமல், குறியீடாக நாம் ஒன்றை ஏற்பது அவ்வளவாகச் சிறப்பானதல்ல.

2. இலக்கியக் குறியீடு ஒன்றின் அர்த்தம், கதையின் முழுச்சூழலினாலும் நிறுவப்படவேண்டும், ஆதரிக்கப்பட வேண்டும். குறியீட்டின் அர்த்தம் கதைக்குள் இருக்கிறதே அன்றி கதைக்கு வெளியில் அல்ல. உதாரணமாக, கோணங்கியின் கருப்பு ரயில் கதையில், பொன்வண்டுகள் அடங்கிய தீப்பெட்டிகளால் ஆன ரயில் பற்றி விவரிக்கப்படும்போதே அது குறியீடாக மாறு கின்ற சாத்தியம் தெரியவருகிறது.

3. ஒன்றைக் குறியீடாக ஏற்க, அந்த விஷயம் தனது நேர்ப்பொருளிலிருந்து மாறுபட்ட தன்மை கொண்ட அர்த்தத்தைக் கொண்டிருக்கிறதா என்று பார்க்கவேண்டும். உதாரணமாக, ஒரு பாலம் என்றால், அது ஸ்தூலமான பாலத்தை மட்டும் குறிக்கக்கூடாது. வேறொன்றைக் குறிப்பதற்கான சாத்தியம் இருக்கவேண்டும்.

4. குறியீட்டுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட அர்த்தங்கள் உண்டு. பல அர்த்தங்களை ஒரே சமயத்தில் அது கொண்டிருக்கும். மிகத் திறனோடு குறியீட்டை அமைக்கும்போது அது பலபக்கங்களாகப் பட்டைதீட்டப்பட்ட ஒரு வைரத்தைப் போலாகிறது. ஒளியில் அதனைத் திருப்பும்போது பல வண்ணங்களோடு அது ஒளிர்கிறது. இதனால் நாம் நினைக்கின்ற எந்த அர்த்தத்தையும் அது தரும் என்பதல்ல. சாத்தியமான அர்த்தங்களின் தொகுதி எப்போதுமே கதைச்சூழலினால் கட்டுப்படுத்தப்படுகிறது. இருப்பினும், சிக்கலான பல அர்த்தங்களை உடைமை, பருமைத் தன்மை, உணர்ச்சிவலிமை ஆகிய எல்லாம் அதற்குத் தனித்த செறிவுதருகின்ற மதிப்பினை அளிக்கின்றன.

கீழ்க்கண்ட பகுதிகளைப் பாருங்கள்:

[“என்ன விஷயம்?” என்று கேட்டார்கள் பல்லக்குத் தூக்கிகள்.

“ஒண்ணுமில்லே. பெரியவர் யாத்திரை ரத்தாகியிருக்குன்னு போட்டிருக்காங்க.”

“விடிஞ்சுதுடா அப்பா, முருகா, என் அய்யனே”

கீழே சளசளவென்று பேச்சு ஆரம்பமாயிற்று.

“இதாப் பாருங்க. நமக்கு அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கலே. தூக்குங்க.”

எல்லோரும் தயங்கியவாறு நின்றார்கள். “பழக்கம் விட்டுப்போச்சுன்னா உங்களுக்குத்தான் கஷ்டம். நாளைக்கே வாறார்டா அப்படீனு மாத்திச் சொல்லுவாங்க. நாம நம்ம வேலையைச் செய்துக்கிட்டே இருக்கணும்.”

“அந்தக் கலப்பையை மட்டும் தூக்கி வெளியிலே வச்சுடலாமா? அளுத்துது.”

“இருந்துட்டுப் போவுது. ஜாஸ்தி தூக்கிப் பளகறது பின்னாலே ஏந்தல்.”

“வழக்கம்போல முருகானு கூப்பிடறோமே…”

“உங்க இஷ்டம்.”

“முருகா முருகா” என்று கத்தியபடி பல்லக்கைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டார்கள். வெயில் உச்சியில் ஏறி இருந்தது.]

அ. இந்தப் பகுதியில் இரண்டு குரல்கள் ஒலிக்கின்றன. யார் யாருடைய குரல்கள் அவை?

ஆ. மேற்கண்ட உரையாடலிலிருந்து அக்குரலை உடையவர்களுடைய பண்புகளாக எவற்றைக் கூற முடியும்?

இ. மேற்கண்ட பகுதியில் உருவகங்கள் உள்ளனவா? குறியீடுகள் உள்ளனவா? எவை எவை?

ஈ. அவற்றின் அர்த்தங்களாக எவற்றைக் கூறுவீர்கள்?

இவற்றிற்குரிய விடைகளை முயன்று பாருங்கள்.

            ஜெயகாந்தனின் ‘அக்கினிப்பிரவேசம்’ பிரபலமான கதை. பின்னர் ‘சிலநேரங்களில் சில மனிதர்கள்’ என்ற நாவலாக விரித்து எழுதப்பட்டது. மழையில் தனித்து நிற்கும் ஓர் அறியா இளம்பெண்ணை, கல்லூரியில் படிப்பவளை, ஒருவன் காரில் அழைத்துச் சென்று ‘கெடுத்துவிடுகிறான்’. வீட்டுக்கு வந்த அவளை அவள் தாய் குளிக்கச்செய்து தூய்மையாக்கி “இதுதான் அக்கினிப் பிரவேசம், இதை யாரிடமும் சொல்லாதே” என்கிறாள். கதை இத்துடன் முடிகிறது. கதை முடியும் சமயத்தில், ஒரு சிறிய குறிப்பு வருகிறது.

[கொடியில் துவைத்து உலர்த்திக் கிடந்த உடைகளை எடுத்துத்தந்து அவளை உடுத்திக் கொள்ளச் சொன்னாள் அம்மா.

“அதென்ன வாயிலே ‘சவக் சவக்’குன்னு மெல்லறே?”

“சுயிங்கம்”

“கருமத்தைத் துப்பு…சீ! துப்புடி. ஒரு தடவை வாயைச் சுத்தமா அலம்பிக் கொப்புளிச்சிட்டு வா” என்று கூறிவிட்டு பூஜை அறைக்குச் சென்றாள் அம்மா.]

அவள் துப்பினாளா இல்லையா என்பது பற்றிக் கதை ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் இங்கே சூயிங்கம் என்பது ஒரு குறியீடாக நிற்கிறது. அது அவன் வாங்கித்தந்தது. அவனுடைய ஞாபகத்தின் உருவமாக நிற்கிறது. அவள் தாய் அவளைக் குளிப்பாட்டி தூய்மைப் படுத்தி யதாகச் சொன்னாலும் அவன் நினைவு அவளைவிட்டு நீங்கவில்லை என்பதை இந்தக் குறிப்பு காட்டுகிறது. அது மெல்லுகின்ற ஒரு பசை. அவள் இனி அதை வாழ்நாள் முழுதும் மெல்லப்போகிறாள். பசைபோல அவளை அது ஒட்டிக்கொண்டது என்ற விஷயம் இங்கே உணர்த்தப்படுகிறது.

குறிப்புமுரண் (ஐரனி)

            குறிப்புமுரண் என்பது பல அர்த்தங்கள் கொண்ட ஒரு சொல். ஆனால் எந்த அர்த்த மாயினும் அவற்றிற்குள்ளாக ஒரு பொருத்தமின்மை, அல்லது இசைவற்ற தன்மை அடிப்படை யாக இருக்கிறது. அனுபவத்தின் சிக்கல்தன்மையையும், மறைமுகமாக ஒரு மதிப்பீட்டையும் காட்டுவதோடு செறிவாக்குவதற்கும் ஆசிரியர் இதனைப் பயன்படுத்துகிறார். ஆனால் குறிப்பு முரணை அங்கதம், கேலி, நையாண்டி போன்றவற்றுடன் சேர்த்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது.

            மூன்றுவிதக் குறிப்பு முரண்கள் உள்ளன. இவற்றுள் மிக எளிதானது சொல் முரண் (வெர்பல் ஐரனி). கதாசிரியருக்கு அவ்வளவாக முக்கியத்துவம் அற்றதும் இதுதான். ஆசிரியரின் சொற்கள் என்னவோ அவற்றிற்கு எதிரான உட்குறிப்பு இருக்குமாறு அமைவது சொல் முரண். என்ன சொல்லப்படுகிறது என்பதற்கும் வாசகருக்கு என்ன அர்த்தப்படுகிறது என்பதற்குமான இடைவெளியில் இது நிகழ்கிறது. உதாரணமாக, வகுப்பறைக்கு ஒரு மாணவன் காலதாமதமாக வருகிறான். “வாங்கய்யா வாங்க, மகாராஜா வருகையை எதிர் பார்த்துத்தான் நாங்க காத்திருக்கோம்” என்று வரவேற்கிறார் ஆசிரியர். இது சொல் முரண். அதேபோல தான் கொடுமைப்படுத்தும் மருமகளை “மகாராணி இன்னும் எழுந்திருக்க வில்லையா” என்று மாமியார் கேட்கும்போது நிகழ்வதும் சொல்முரண்தான். இப்படி நாம் வாழ்க்கையிலேயே அதிகமாக இதைப் பயன்படுத்துகிறோம்.

            நியாயம் கதையில், இரக்கமற்ற ஒருவருக்கு தேவஇரக்கம் நாடார் என்று பெயர் வைத்தது சொல் முரண். நியாயமே அற்றவிதத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட சம்பவத்தைக் கொண்ட ஒரு கதைக்கு நியாயம் என்று பெயர் வைத்தது சொல்முரண் மட்டுமல்ல, சூழல் முரணையும் கொண்டுள்ளது. புதுமைப்பித்தன்தான் சொல் முரணை அடிக்கடி பயன்படுத்துபவர். ‘பொன்னகரம்’ என்ற கதைத் தலைப்பும் சொல் முரண் கொண்டதுதான்.

            நாடக முரண் என்பதில் ஒரு கதாபாத்திரம் கூறுவதற்கும் வாசகர் உண்மை என அறிந்ததற்கும் இடையில் முரண் தோன்றுகிறது. இந்தப் பெயர் வந்ததற்குக் காரணம் நாடகங் களில் இது அதிகமாகப் பயன்படுகிறது என்பதால்தான். ஒரு கதாபாத்திரம் இயல்பாக ஒரு விஷயத்தைப் பேசுவதுபோல இருக்கும். ஆனால் கதாபாத்திரங்களுக்குத் தெரியாத செய்திகள் வாசகர்களுக்குத் தெரியும் என்பதால் அதிலுள்ள முரண் வாசகர்களுக்குத்தான் தெரியும். இதனைப் பயன்படுத்துவதில் ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் மிகத் தேர்ந்தவர்.

            உதாரணமாக, ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு (டுவெல்த் நைட்) நாடகத்தில் நிகழும் எல்லாமே நாடக முரணின்பாற் பட்டவைதான். ஒரு பெண், வயோலா, ஆண்வேடத் தில் புதியதொரு நாட்டில் செல்லநேர்கிறது. ஆர்சினோ என்பவன் நகரத்தலைவன். அவனிடம் வேலைக்கு அமர்கிறாள். அவளை ஆண் என்று கருதிப் பெண்களைப் பற்றி ஆர்சினோ பேசும் யாவுமே நாடக முரண்கள்தான். மேலும் ஆர்சினோ ஒலிவியா என்பவளைக் காதலிக் கிறான். ஆனால் ஆண்வேடத்திலிருக்கும் வயோலா ஆர்சினோவைக் காதலிக்கிறாள். தன்னைக் காதலிக்காத ஒலிவியாவிடம் தன்னைக் காதலிக்கும் வயோலாவையே தூது அனுப் புகிறான் ஆர்சினோ. தூது வரும் அவளை ஆண் என்று கருதி அவளை ஒலிவியா காதலிக்கத் தொடங்குகிறாள். இவர்கள் செய்கைகள், பேச்சுகள் எல்லாமே நாடக முரணாக அமைகின்றன. (ஆர்சினோ ஒலிவியாவைக் காதலிக்க, ஒலிவியா வயோலாவைக் காதலிக்க, வயோலா ஆர்சினோவைக் காதலிக்க, ஒரு சுழல் உருவாகிறது. இதைத் தீர்க்கவேண்டுமானால் நான்காவதாக ஒருவன் வரவேண்டும். வயோலாவைப் போலவே இருக்கும் அவளது சகோத ரன் செபாஸ்தியன் வருவதனால் கதை முடிவுக்கு வருகிறது. வயோலா வேடத்தைக் கலைக்க, ஆர்சினோ வயோலாவையும், ஒலிவியா செபாஸ்தியனையும் மணக்கின்றனர்.)

            வயோலா பெண் என்பது வாசகர்களுக்கு, பார்வையாளர்களுக்குத் தெரியும். ஆனால் ஆர்சினோவுக்கோ ஒலிவியாவுக்கோ தெரியாது. நாடகமுரண் என்பதில் உள்ள அம்சமே, கூடுதலான விஷயங்கள் வாசகருக்குத் தெரியும், கதாபாத்திரங்களுக்குத் தெரியாது என்பது தான். நாம் அறிந்த சிலப்பதிகாரக் கதையிலும், கோவலன் கண்ணகி திருமணம் நடக்கும் போது, தோழியர்கள் பிணைந்த கைகள் விலகாமல், தீதின்றி வாழ்க என்று வாழ்த்துகின்றனர். இதுவும் நாடகமுரண் பேச்சுதான். ஏனென்றால் அடுத்த காதையிலேயே பிணைந்த கை விலகப் போகிறது (கோவலன் மாதவியிடம் செல்லப்போகிறான்), தீமைகள் நடக்கப் போகின்றன என்பது நமக்குத் தெரியும், ஆனால் அந்தச் சொற்களைப் பேசியவர்களுக்குத் தெரியாது.

            சிலசமயங்களில் நாடகமுரண் மிகுந்த அவலத்தையும் அளிக்கவல்லது. பாரதக்கதையில் கர்ணனுக்கு நேரிடும் சம்பவங்கள் எல்லாம் இப்படிப்பட்டவை. உதாரணமாக, இந்திரன் வேதியன் வடிவில் வந்து கவசகுண்டலங்களைக் கேட்கும்போது, கர்ணன் உடனே அவற்றை அளித்துவிடுகிறான். வந்தது இந்திரன் என்றோ, பின்னால் கர்ணன் வெற்றி பெறக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் கேட்கிறான் என்றோ அவனுக்குத் தெரியாது. ஆனால் நமக்குத் தெரியும் ஆகையால், இப்படி நேர்ந்துவிட்டதே என்று வருந்துகிறோம்.

            இந்த உதாரணங்களில் எல்லாம், குறிப்புமுரண் ஆசிரியருக்குச் செறிவையும் சொல் லுவதில் ஆற்றலையும் ஏற்படுத்தித் தருகிறது. குறியீடுபோல, குறிப்புமுரணும் வெளிப்படை யாகக் கூறாமலே புதுவித அர்த்தங்களைப் பெறுகின்ற சாத்தியங்களை உருவாக்குகிறது. இரண்டு பொருத்தமற்ற (ஒன்றுக்கொன்று எதிரான) மெய்ம்மைகளைச் சரியான இடத்தில் வைப்பதன் மூலம், பேட்டரியின் இரண்டு முனைகளுக்கிடையில் மின்சார ஓட்டத்தை ஏற்படுத்துவதுபோல ஓர் அர்த்த ஓட்டத்தை  எழுத்தாளர் ஏற்படுத்திவிட முடிகிறது.

            சூழல் முரண்தான் கதாசிரியர்களுக்கு மிக முக்கியமானது. இங்கே தோற்றத்திற்கும் நிஜத்திற்கும் இடையில் ஒரு பொருந்தாமை ஏற்படுகிறது. அல்லது எதிர்பார்ப்புக்கும் விருப்பப் பூர்த்திக்கும் இடையில் இடைவெளி ஏற்படுகிறது. அல்லது எது நம்மிடம் இருக்கிறது என்பதற்கும் எது பொருத்தமாக இருக்கும் என்பதற்கும் இடையில் முரண் ஏற்படுகிறது.  பெரும்பாலும் எதிர்பார்ப்புக்கும் உண்மையில் நிகழ்வதற்கும் இடையிலுள்ள முரணாக இது அமைகிறது.

            வாழ்க்கையில் இல்லாததா கதையில் இடம் பெறுகிறது? வாழ்க்கையில் நாம் சூழல் அல்லது சம்பவ முரணை அடிக்கடி எதிர்கொள்கிறோம். இருப்பதிலேயே பெரிய முரணாக நான் நினைப்பது, வாக்காளர்கள் ஒவ்வொரு முறையும் நல்லது செய்வார்கள் என்று நம்பி ஒரு கட்சிக்கு வாக்களிப்பதும், அந்தக் கட்சி பதவிக்கு வந்தபிறகு வாக்காளர்களை மிகக் கேவலமாக நடத்தி அவர்களுக்குத் தீங்கு செய்வதையும்தான். இதைவிடப் பெரிய சூழல் முரண் என்ன வேண்டும்?

            பழங்கால நீதிநூல்கள் கூறுகின்ற முறையில்: (இதற்குத் தத்துவம் என்று பெயரிட்டுக் கொச்சைப் படுத்த நான் விரும்பவில்லை) நிலையாமை பற்றி ஆழ்ந்து நினைப்பதும் சூழல் முரண்தான். தான் அழியவே போவதில்லை என்கிற மாதிரியாக ஒவ்வொரு மனிதனும் இறுமாப்போடு ஒவ்வொரு சம்பவத்திலும் நடந்துகொள்கிறான். ஆனால் எதிர்பாராத முறையில் மாண்டு போகிறான். நிலையாமையைவிடச் சிறந்த முரண் வாழ்க்கையில் இல்லை. திருமூலர் பாட்டில், ஒருவர் (தன் அலுவலைவிட்டு) வீட்டுக்கு வருகிறார், நன்றாக அறுசுவை உணவை உண்கி றார், அதுமட்டுமா? தன் மனைவியோடு அருமையாகச் சந்தோஷமாக இருக்கிறார். பிறகு இடப்புறமாகச் சற்றே வலிக்கிறது என்கிறார், பிறகு? அவ்வளவுதான்! “கிடக்கப்படுத்தார் கிடந்தொழிந்தாரே” என்கிறார் திருமூலர். இதைவிட ஐரனி வேறென்ன இருக்கிறது?

            பழைய காலத்திலே மயான வைராக்கியம், பிரசவ வைராக்கியம் என்று இரண்டைச் சொல்லுவார்கள். இரண்டுமே அற்புதமான சூழல்முரணைச் சித்திரிப்பவை. ஒருவன் இறந்து போனான், அந்தப் பிணத்தைப் புதைக்க/எரிக்க எத்தனையோ பேர் கூடப்போகிறார்கள். அவர்களில் ஒருவன், “இதுதான் வாழ்க்கையா! சீ, இனிமேல் நான் நல்லவனாகவே நடந்து கொள்வேன்” என்று முடிவு செய்கிறான். ஆனால் வீட்டுக்குப்போய் வரவுசெலவுக் கணக்கைப் பார்க்கத்தொடங்கியவுடனே புத்தி மாறிவிடுகிறது. இதுதான் மயான வைராக்கியம்.

            பிள்ளைபெறும் வேதனையில் இருக்கிறாள் ஒருத்தி. பிரசவ வலியின் தவிப்பில் இதற் குக் காரணமான கணவனைத் திட்டுகிறாள், “இனிமேல் உன்னோடு படுக்கவே போவதில்லை போடா” என்கிறாள். ஆனால் குழந்தைபெற்று வீட்டுக்குத் திரும்பியபிறகு, அடுத்த குழந்தைக் குத் தயராகிவிடுகிறாள். இதுதான் பிரசவ வைராக்கியம். முரண்கள், முரண்கள்!

            ஜெயகாந்தனின் குருபீடம் கதையில், பன்றிபோலத்திரிகின்ற, எந்தவித நற்பண்பும் அற்ற அருவருப்பான ஒரு பிச்சைக்காரன் முதலில் வருணிக்கப்படுகிறான். அவனை எல்லோரும் சீ என்ற வெறுத்து ஒதுக்குகிறார்கள். அவனுக்கு நற்பழக்கங்களே கொண்ட ஒருவன் சீடனாக வந்து வாய்க்கிறான்.  பிச்சைக்காரன் குரு என்று ஆனவுடனே அவன் நடத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது. சிந்திக்கிறான். இருத்தலுக்கான அடிப்படை விஷயங்களைப் பேசத்தொடங்குகிறான். இப்போது அவனுக்குக் கிடைத்த மரியாதை மாறுகிறது. எல்லோரும் மதிக்கிறார்கள். இவனை ஒரு சித்தன் என்று நினைக்கத் தொடங்குகிறார்கள். திடீரென அவனுக்கு ஒரு ஞானோதயம் ஏற்படுகிறது. தன் சிஷ்யன்தான் தனக்கு குரு என்பதை உணர்கிறான். இந்த முரண்தான் கதையின் மையம். குரு குருவும் அல்ல, சீடன் சீடனும் அல்ல, எதிர்பார்ப்புக்கும் உண்மைக்குமான முரண் கதையை நடத்திச் செல்கிறது.

            ஷேக்ஸ்பியரின் மேக்பெத் கதையில் சூழல் முரண் மிகவும் நன்கு கையாளப் பட்டுள்ளது. எதிர்பார்ப்புக்கும் நடப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடுதான் சூழல் முரண். குறிப்பாக, அவன்தான் செயல்பட்டு அரசனைக் கொல்லப்போகிறான் என்று எதிர்பார்த்தால், அவன் மனைவிதான் உண்மையில் கொலைகாரி ஆகிறாள். அதேபோலப் பேச்சு(சொல்) முரணும் இதில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. சூனியக்காரிகள் ஒவ்வொரு முறையும் சொல் லும் சொற்கள் நேரடியாக ஒரு பொருளையும் எதிர்மாறாக உண்மையில் வேறொரு பொரு ளையும் தருவதாக இருக்கின்றன.

            உருமாற்றம் என்னும் கதையில் (காஃப்கா எழுதியது) பூச்சியாக மாறிவிட்ட கதைத் தலைவன், தன் தந்தையிடமிருந்து ஓர் அன்பான வார்த்தையை எதிர்பார்க்கிறான். ஆனால் அவன் தந்தையோ அவனை ஆப்பிளால் அடிக்கிறான். அது முதுகில் பதிந்து அதனால் ஏற் படும் காயத்திலேயே (அல்லது அன்பை எதிர்பார்த்த இடத்தில் ஆழமான வெறுப்பு கிடைத்த காயத்திலேயே) அவன் இறந்துபோகிறான். இதுவும் சூழல் முரண்தான்.

            திரைப்படங்களில் சூழல் முரண் ஒவ்வொரு சம்பவத்திலுமே அமைந்திருக்கும். உதாரணமாக, பதினாறு வயதினிலே கதையில் மயில் தான் நம்பிய டாக்டர் தன்னை மணந்து கொள்வான் என்று எதிர்பார்க்கிறாள், ஆனால் நடக்கவில்லை. தான் வெறுத்து ஒதுக்குகின்ற சப்பாணியையே இறுதியாக அவள் நாடவேண்டிய விதமாக ஆகிறது. மிகவும் மென்மையான வனாகக் கருதப்பட்ட-யாருக்கும் தீங்கு செய்வான் என்று நாம் எதிர்பார்க்காத-சப்பாணி, வில்லனைக் கொல்கிறான். இவையெல்லாம் சூழல் முரண்கள்தான்.

            நிச்சயமாக ஒவ்வொரு கதையிலும் ஒரு சூழல் முரண் இருக்கும். சூழல் முரண் இன்றிக் கதையே இல்லை. முக்கியமாக அதைத்தான் வாசகர்கள் கண்டுபிடிக்கப் பழகவேண்டும். உண்மையில் சூழல் முரண் என்பது கதையின் சூழல் காரணமாக ஏற்படுகின்ற மோதல் அல்லது போராட்டம் அல்லது பிரச்சினைதான். அது வெளிப்படையாகச் சொல்லப்படாமல் குறிப்பாக இடம்பெறும்போது குறிப்பு முரணாகிறது.

            முரண்களை அறிவதில் சில பயிற்சிகளை மேற்கொள்வது பயன்தரும்.

1. ஜெயகாந்தனின் ‘இருளும் ஒளியும்’ என்ற கதையை வாசிக்கவும். அதில் காணப்படும் முரண் யாது?

2. சுந்தர ராமசாமியின் ‘ரத்னாபாயின் ஆங்கிலம்’ என்ற கதையைப் படிக்கவும். அதில் இடம் பெற்றுள்ள சூழல் முரணையும் பிற முரண்களையும் விவாதியுங்கள்.

3. சுஜாதா எழுதிய ‘ஜன்னல்’ என்ற கதையைப் படிக்கவும். அதில் இடம்பெற்றுள்ள முரண் பற்றிக் கூறுங்கள்.

            குறிப்புமுரண் பற்றிக் கூறியவற்றை இங்கே தொகுத்துக்கொள்வது நல்லதாக அமையும். குறிப்பு முரண் எல்லாக் கதைகளிலும் ஏதோ விதத்தில் இடம்பெறவே செய்கிறது. அதில் சொல்முரண் (வெர்பல் ஐரனி), நாடகமுரண் (டிராமேடிக் ஐரனி), சம்பவ அல்லது சூழல் முரண் (சிச்சுவேஷனல் ஐரனி) என்ற மூன்று விதங்கள் உள்ளன.

            பேசப்படும் வார்த்தைகளுக்குள்ளாகவே மாறுபாடாக அர்த்தம் ஏற்படுமானால் அது சொல்முரண். கதாபாத்திரங்களுக்குத் தெரிந்ததைவிட வாசகர் அல்லது பார்வையாளருக்குக் கூடுதலாக விஷயங்கள் தெரிந்திருப்பதால் ஏற்படுவது நாடகமுரண். நாம் எதிர்பார்ப்பதற்கும் நிகழ்வதற்குமிடையில் சம்பவங்களில் அல்லது நிகழ்ச்சிகளில் ஏற்படுவது சூழல்முரண். இனி மேல் கதைகளைப் படிக்கும்போதெல்லாம் அதிலுள்ள முரண்களை அறிந்து வாசியுங்கள், அவற்றின் சுவை பலமடங்கு கூடும்.

Encourage teens to seek help from an adult if they http://topspyingapps.com are victimized or notice someone being hurt online

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இயல் 8 – சிறுகதையின் கூறுகள்-குறியீடும் குறிப்புமுரணும்”

அதிகம் படித்தது