வெண்ணெய் போல் வழுக்கிச் செல்லும் பிரானூர் பரோட்டா..
ஆச்சாரிDec 1, 2012
பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட பிரசித்திபெற்ற தென்காசியிலுள்ள காசிவிசுவநாதர் கோவிலை தரிசித்து புனித காசி தீர்த்த பிரசாதமெல்லாம் பெற்று சென்னைக்கு வீடு திரும்ப ஆயத்தமானபோது மணி இரவு 7 அடித்த தருணம் பசியும் வயிரை கிள்ளத்துடங்கியது. சரி இங்கேயே சாப்பிட்டுவிடலாம் என முடிவெடுத்ததும், உள்ளுக்குள் ஒருவகை பயம் பழக்கமில்லா ஊரில் முன்பு ஒருமுறை இப்படித்தான் பசியில் சாப்பிடபோய் வேகாத இட்லியை வைத்தார்கள். சரியென்று மனதை தேத்திக்கொண்டு சாம்பாரை ஊற்றினால் அதில் பரிதாபமாய் நீச்சலடித்து இறந்துபோயிருந்த ‘ஈ’க்கள், வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள் நிறைந்த மிதமான வெந்நீராயிருந்தது. இம்முறையும் அதே சங்கடம் வேண்டாமென்று எண்ணி பார்ப்பவரிடமெல்லாம் இங்கே ‘நல்ல’ உணவு எங்கே கிடைக்கும், ‘நல்ல’ உணவகமெது என கேட்டுக்கொண்டே சென்றேன். ஆச்சரியம் என்வென்றால் ஒரே விடை கொண்ட வினா கேட்டாற்போல் அனைவரும் “பிரானூர் பார்டர் பரோட்டா” தாங்க நன்றாக இருக்குமென்று கூறினார்கள்.
தென்காசியிலிருந்து 10 நிமிட நேரத்தில் அடையக்கூடிய சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது பிரானூர் பார்டர் (பொதுவாக பார்டர் என்பார்கள்). அங்கு மூன்று பரோட்டா கடைகள் இருக்கின்றன, மூன்றுமே அதன் தனித்தன்மையான சுவைகளைக் கொண்டிருக்கிறது. பரோட்டாவில் போய் என்ன பெரிய தனித்தன்மையான சுவை என்று நீங்கள் கேட்க்கலாம். ஆனால் இந்த பார்டர் பரோட்டாவில் உள்ளதே …வெண்ணை பரோட்டா போன்று வழுக்கிக்கொண்டு தொண்டைக்குள் போகிறது இங்கு கடைக்காரர்களே பரோட்டாவை பிய்த்துப்போட்டு சால்னா(Gravy) என்று சொல்லப்படும் நாட்டுக்கோழி குழம்பை ஊற்றுகிறார் பாருங்கள்.. அட அட அட அப்படி ஒரு சுவை. ஒருமுறை உண்டால் நிச்சயம் இந்த நாட்டுக்கோழி சால்னாவின் சுவைக்கு அடிமையாகிவிடுவோம்.
அட இவ்வளவு தானா என்று கேட்போர்க்கு இங்கே கோழி 65, மிளகு கோழி, கோழி கொத்து(chops) என எல்லாம் நாட்டுக்கோழியில் செய்தவை அத்தனையும் அதிசுவை மிகுந்துள்ளது அதுவும் கார விரும்பிகளுக்கு கொண்டாட்டம் தான். இவை அனைத்தும் ஒளிவு மறைவுமின்றி நம் கண் முன்னே செய்து தரப்படுவதால் சுத்தமாக செய்யப்படுகிறதாயென்று நீங்களே பார்த்துக்கொள்ளலாம் .
நீங்கள் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்ல நேர்ந்தால் மிக அருகாமைல் அமையப்பெற்ற இந்த பார்டர் பரோட்டாவில் என்னதான் அப்படி இருக்கிறது என்று நீங்களே சுவைத்து வாருங்களேன்.
(குறிப்பு: இன்னும் பரோட்டா வெறும் 5 ரூபாய்தாங்க, சால்னாவும் இலவசம் தான்).
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “வெண்ணெய் போல் வழுக்கிச் செல்லும் பிரானூர் பரோட்டா..”