தமிழகத்தின் நகரங்களில் (சென்னை தவிர) மின்வெட்டின் தாக்கம்..
ஆச்சாரிDec 1, 2012
தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற அனைத்து கிராம நகரங்களிலும் சுமார் 14 மணிநேர மின்தடை இருந்து வருகிறது. மேலும் சில குக்கிராமங்களில் 18 மணிநேரம் கிடைப்பதில்லை. ஆனால் மிகுதியாக மின்சாரம் பயன்படுத்தப்படும் சென்னையில் மட்டும் இரண்டு மணிநேர மின்வெட்டு செய்யப்படுகிறது. அந்த வகையில் ஏனைய பிற கிராம நகர வாசிகள் இம்மின்வெட்டினால் அடையும் துயர்களை பதிவு செய்யக் கருதி செங்கோட்டை, தென்காசி, இராசபாளையம் ஆகிய பகுதிகளை ஆராய்ந்ததில்…
இப்பகுதிகளில் ஒரு நாளுக்கு 14-16 மணிநேரம் மின்வெட்டு அமலிலுள்ளது. நாம் சென்னையிலிருந்து வருகிறோம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டாலே ஓ! சென்னையில் மின்சாரத்தோடு சொகுசு வாழ்க்கை வாழ்பவர் நீங்கள் (முன்பெல்லாம் வீடு வாகன வசதி வைத்திருப்பவர் சொகுசு வாழ்க்கைக்காரர், ஆனால் இப்பொழுது மின்சாரம் கொண்டு மின்விசிறி போட்டு வாழ்ந்தாலே சொகுசுக்காரர் என்கின்றனர்).
உங்களுக்கு எங்கே தெரியப்போகிறது நாங்கள் படுகின்ற துன்பமெல்லாம், என்று அலுத்துக்கொண்டார் மேலும் கூறுகையில் “நீரின்றி அமையாது உலகு” என்பதை மாற்றி “மின்சாரம்(current) இன்றி அமையாது உலகு” என்று வைத்துக்கொள்ளலாம்.
தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்தும் மின்சாரத்தைக் கொண்டு இயங்கக்கூடியவை தான் ஆனால் அதன் அடிப்படையான மின்சாரமே இல்லையென்றால் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது?
எடுத்துக்காட்டாக அலைபேசிக்கான charge முதற்கொண்டு என அனைத்தையும் மின்சாரம் எப்போது வரும் என விழித்துப் பார்த்து பார்த்து செய்ய வேண்டிய தேவையுள்ளது.
ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்தஅரசியல்வாதிகள் மக்களின் நல்வாழ்வுக்கான நலத்திட்டங்களை தான் செய்வதில்லை (அது பழகிவிட்ட ஒன்று) பரவாயில்லை சரி, அவர்கள் கொடுத்த இலவச தொலைகாட்சி, மின்விசிறி, மிக்சி ஆகியவற்றையாவது உபயோகித்து மனதை தேற்றலாமென்று பார்த்தால் அதற்கும் வழியின்றி ஆக்கிவிட்டது இந்த மின்வெட்டு.
மின்வெட்டின் தாக்கத்தை பற்றி ஒரு அரிசி ஆலையின் நிறுவனர் கூறுகையில், இந்த அரிசி ஆலையில் நெல்லை அரைத்து தவிட்டைத் தனியாக பிரித்து அரிசியிலுள்ள குறுனை, கல், ஆகியவற்றை பிரித்தெடுத்து பதமான அரிசியை 25கிலோ வாக ஒவ்வொரு பையில் போட்டு ஒரு Conveyor Belt மூலம் சென்று பையை தைத்து 25 கிலோ அரிசிப்பையாக வெளிவரும். இச்சுழற்சியின் இடையே மின்வெட்டு ஏற்பட்டால் அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள்ளாக ஜெனரேட்டரை ஒட்டி இயந்திரங்களை இயக்க வேண்டும். தவறினால் அந்த கூட்டிலுள்ள அரிசிகள் யாவும் கருகிவிடும் என்றார்.
இந்த வகையில் தற்போது நிலவிவரும் கடும் மின்வெட்டு காரணமாக பெரும்பாலும் generator கொண்டுதான் ஆலை இயக்கப்படுகிறது. காலை வேலை நேரத்தில் 3-முதல் 4 மணிநேரம்தான் மின்சாரம் இருக்கிறது. அதனால் நாங்கள் டீசல் செலவு சேர்த்து 1(அ) 2 ரூபாய் மதிப்புகூட்டி வழங்கினால் அது நுகர்வோரிடம் சென்று சேரும்போது 5 ரூபாய் உயர்ந்திருக்கும்.இதே நிலைமை தான் இராசபாளையத்திலிருக்கும் Band-Aid மற்றும் பஞ்சு ஆலைகளுக்கும்.
அதை தவிர்த்து இப்பகுதிகளிலுள்ள சிறுதொழில் ஆலைகள் தொடர் மின்வெட்டின் காரணமாக மேலும் வேலை நேரத்தில் கிடைக்கும் 3 மணி நேர மின்சாரத்தை வைத்து உற்பத்தி செய்ய இயலாமல் தற்காலிகமாக மூடப்பட்டதன் காரணமாக அதை நம்பியிருந்த குடும்பங்கள் பெருவாரியாக பாதிப்புக்குள்ளகியுள்ளனர்.
மேலும் தச்சு வேலை, இரும்பு கிரில்(Grill) கதவு செய்பவர்கள், வெல்டர்கள், இணைய நடுவங்கள் (Browsing Center), தொலைக்காட்சி, அலைபேசி கடைகள், ஒலிபெருக்கி நிலையம், உணவகம் போன்ற பல தொழில்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டும் முடங்கியும் கிடக்கின்றது.
இதன் காரணமாக இப்பகுதியிலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் பிழைப்புத்தேடியும் மற்றும் பரிசு சீட்டு விற்கவும் அருகிலுள்ள கேரளாவில்(1மணி நேரமே மின்வெட்டு) குவிந்த வண்ணம் உள்ளனர்.
மின்வெட்டினால் எத்தொழில் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஒரு தொழில் மட்டும் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. அது Inverter மற்றும் Generator விற்பனை மற்றும் பொருத்தும் தொழில்.
நம் மக்கள் இம்மின்வெட்டினை எதிர்கொள்ள கண்கட்டி வாய்பொத்தி வேறு ஊருக்கு தஞ்சம் புகுகிறார்கள் அல்லது தேநீர் கடையில் உட்கார்ந்து புலம்பி (அ) திட்டித் தீர்க்கிறார்களே அல்லாமல் இதற்கான மாற்றுவழி அல்லது இதனை எப்படி சரி செய்வது என்பதை பற்றிய சிந்தனையே இல்லாத முட்டாள்களாக திராணியற்றே உள்ளனர்.
தாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுக்கு உபசாரம் செய்யும் மனநிலையில் இருந்து அவர்களை கேள்வி கேட்கும் நிலைக்கு வரும் வரை தமிழகம் மாறாது.உயராது.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
திரு. சங்கரநாராயணணின் கருத்து முற்றிலும் சரி.
சென்னைவாசிகளுக்கு இரண்டு ஓட்டுக்கள் உள்ளனவா! சென்னை தமிழகத்தை நம்பி இருக்கின்றது. ஆனால் தமிழ்நாடு சென்னையை நம்பி இல்லை. இது பட்டவர்த்தனமான உண்மை. இருப்பினும் எட்டுக்கோடிபேர் இருளில் வாழும்போது சிங்காரச் சென்னை ஜொலிக்கிறது.
மின் வெட்டு கிராமப் புறங்களை வாட்டிஎடுத்த போது, கோவை-மதுரை-திருச்சி நகர வாசிகள் கண்டுகொள்ளவே இல்லை. விவசாயம் எக்கேடு கெட்டால் என்ன என்ற நகர்ப்புற ஆணவம். நோய் தனக்கும் வந்தபின் புலம்புகின்றனர்.
இருப்பினும் இதுவரை சென்னைக்கு ஏன் இந்த தனி இடம், நாங்கள் என்ன சென்னையின் காலனிகளா என்ற ஆணித்தரமான கேள்வி எழவில்லை. பொது நல வழக்கும் தொடரவில்லை. ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லை.
மின் பற்றாக்குறை மூன்றில் ஒரு பங்கு உள்ளது. இந்த பற்றாக்குறையை எல்லோரும் சமமாகப் பங்கிடவேண்டியது அடிப்படை நியாயம்; எல்லாருக்கும் எட்டுமணி நேர மின்வெட்டு செய்தால் இதை சமாளித்துவிடலாம். அரசு ஆதிக்க சக்திகளை வசதியாக வைக்க நினைப்பதில் வியப்பில்லை. எனவே சென்னைக்கு இரண்டு மணிநேர மின்வெட்டு.
ஆனால் வெட்கம் கெட்ட விவசாயிகளும் சிறு தொழிலதிபர்களும் குறைந்தபட்சம் எட்டுமணிநேரம் மின்சாரம் கொடுங்கள் என்று அரசிடம் பிச்சை கேட்கின்றனர். சலுகைகளுக்காகவே வாழ்க்கை முழுதும் அலைந்து உரிமைகளை தட்டிக்கேட்கும் உணர்வே தமிழ்நாட்டில் இல்லாமல் போய்விட்டது.
ஆடுகளைப் போன்ற ஜடங்களுக்கு ஓநாய் அரசு அமைந்ததில் வியப்பு என்ன இருக்கிறது!