ஊழல் – அறிவோம், அழிப்போம் தொடர் – பகுதி 1
ஆச்சாரிDec 15, 2012
ஊழல் என்ற வார்த்தையை கேட்ட உடன் தன்னிச்சையாக 2G ஊழல் தான் நம் நினைவிற்கு வருகின்றது. அதற்கு பிறகு இந்த இரண்டு ஆண்டுகளில் மேலும் எத்தனை பெரிய ஊழல்கள் வந்துவிட்டன. ஆதர்ஷ் அடுக்குமாடி வீட்டு வசதி சங்க ஊழல், காமன் வெல்த் விளையாட்டு ஊழல் (70000 கோடி இழப்பு), எஸ் பேண்டு அலைக்கற்றை ஊழல் (2 இலட்சம் கோடி இழப்பு), டில்லி விமான நிலைய ஊழல் (163,000 கோடி இழப்பு), நிலக்கரி ஊழல் என்று ஒவ்வொரு ஊழலிலும் பல்லாயிரம் கோடிகள், இலட்சம் கோடிகள் என்று பேரிழப்புகளை நாம் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
இது போன்ற இமாலய ஊழல்களில் அரசு தன் பணத்தை இழக்காமல் இருந்திருந்தால் நம் நாடு இன்று எப்படி இருந்திருக்கும்?
இந்தியாவை வருமான வரி இல்லாத நாடாக்கி இருக்கலாம். பெட்ரோல் வரியை நீக்கி லிட்டர் 40 ரூபாய்க்கு பெட்ரோல் கிடைக்கச் செய்யலாம். வீடில்லாமல் குடிசைகளிலும், தெருவிலும் வசிப்பவர்கள் அனைவருக்கும் கான்கிரிட் வீடுகள் கட்டிக் கொடுக்க முடியும். ஆறுகளை இணைத்து, ஏரிகளை மேம்படுத்தி, கால்வாய்கள் அமைத்து தண்ணீர் சிக்கலை முழுமையாக தீர்க்க முடியும். தனியார் கல்வி நிறுவனங்களை அரசே விலைக்கு வாங்கி அனைவருக்கும் தரமான இலவச கல்வி கொடுக்க முடியும். நம் குடும்பத்தில் கல்வி செலவாவது மிஞ்சும். வெளிநாட்டு கடன்களை அடைத்து நாம் பல நாடுகளுக்கும் கடன் கொடுக்கும் நிலையில் அமர்ந்திருக்கலாம். குறைந்தது மின்தடை இல்லாத நிலையையாவது அடைந்திருக்கலாமே!
அரசியல்வாதிகள் நம் வாழ்க்கை முன்னேற்றத்தை எங்கே கருதுகின்றார்கள்? கிரிக்கெட்டில் வெற்றி அடைவதையும், ராக்கெட் விடுவதையும், ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வாங்குவதையும், GDP வளர்ச்சி சதவிகிதத்தையும் காட்டி நாம் சிறப்பான முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறோம், விரைவில் வல்லரசாகி விடுவோம் என்ற மாயையை உருவாக்குகின்றார்கள். நமது உண்மை நிலைமையோ மிகவும் கவலை அளிப்பதாக இருக்கின்றது.
நம் நாட்டில் 62 கோடி மக்கள் இன்னும் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்தி வருகிறோம். உலக அளவில் இவ்வாறு திறந்த வெளி கழிப்பறையை பயன்படுத்துபவர்களில் 59 சதவிகிதத்தினர் நாம் தான். நம்மை விட மக்கள் தொகை அதிகம் கொண்ட சைனாவில் கூட ஒரு கோடி மக்கள் தான் இந்த இழிநிலையில் இருக்கின்றார்கள்.
நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 21 இலட்சம் குழந்தைகள் ஐந்து வயதை அடைவதற்கு முன்னரே நோயுற்று இறக்கின்றனர். இதில் பெரும்பாலான குழந்தைகள் இறப்பது வயிற்றுப்போக்கு, டைபாய்டு, மலேரியா, தட்டம்மை போன்ற குணப்படுத்த முடிகின்ற நோய்களால் தான். தினம் ஆயிரம் குழந்தைகள் வயிற்றுப் போக்கால் மட்டுமே இறப்பது எவ்வளவு கொடுமை? வயிற்றுப்போக்கை குணப்படுத்த சுத்தமான நீரும் சற்று முதலுதவி பற்றிய அறிவும் இருந்தாலே போதுமே!
அதைக்கூட நமது அரசு மக்களுக்கு அளிக்க முன்வரவில்லையே? அரசியல்வாதிகள் நாம் அனைவரும் அலைபேசி வைத்திருக்க வேண்டும், தொலைகாட்சி வைத்திருக்க வேண்டும், கணினி வாங்கி இணையத்தொடர்பு வாங்க வேண்டும்,வாகனம் வாங்க வேண்டும் என்பதில் தானே கவனம் செலுத்துகிறார்கள். நம் மக்களுக்கு கல்வியோ, சுகாதாரமோ அளிக்கும் திட்டங்களில் அரசியல்வாதிகளுக்கு ஊழல் செய்யும் வாய்ப்பு குறைவென்பதால் முன்னேற்ற திட்டங்களில் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர். காமன் வெல்த்தில் செய்ய முடிந்த அளவிற்கு கால்வாய் வெட்டுவதில் ஊழல் செய்ய வாய்ப்பில்லை தானே.
நாம் தொலைக்காட்சித் தொடர்களிலும், திரைத்துரையினரின் கவர்ச்சியிலும், விளையாட்டுகளிலும், மதுவிலும் மயங்கி கிடக்க வேண்டும் என்பதே அரசியல்வாதிகளின் விருப்பம். இருந்தும் சற்று விழிப்போடு கேள்வி கேட்பவர்களை மிரட்டி அச்சுறுத்துகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுளில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி ஊழல்களை வெளிக்கொணர முயன்றவர்களில் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த ஐம்பது படுகொலைகள் ஐம்பது லட்சம் பேரையாவது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து விலகி இருக்கச் செய்யும் எனபது நம் அரசியல்வாதிகளுக்கு நன்கு தெரியும்.
நம் அரசியல்வாதிகளின் 65 ஆண்டுகள் சாதனையை ட்ரான்ஸ்பரசி இன்டர்நேஷனல் அமைப்பின் ஊழல் பட்டியலில் தெளிவாக காணமுடிகின்றது. பத்து மதிப்பெண்களுக்கு நமக்கு கிடைத்திருப்பது 3.1 தான். இந்த பட்டியல் நமக்கு கிடைத்திருக்கும் மிகத் தெளிவான வழிகாட்டி. நமது மதிப்பெண்ணை ஒட்டி அருகில் இருக்கும் மற்ற நாடுகள் இந்தோனேசியா, வியட்நாம் போன்றவைகள். நமது ஒரு ருபாய் முன்னூறு வியட்நாம் பணத்திற்கும், இருநூறு இந்தோனேசியா பணத்திற்கும் சமம் என்றால் அந்நாட்டின் நிலைகளை புரிந்துகொள்ளுங்கள்.
நாம் இன்னும் ஒரு மதிப்பெண் குறைந்தது 2 மதிப்பெண் வரிசையில் சேர்ந்தால் நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கின்றது. ஜிம்பாப்வே நாட்டின் மதிப்பெண் 2.2. அந்த நாட்டின் விலைவாசி நிலைமை உலகமறிந்தது. அந்நாட்டில் ஒரு கோழி முட்டை விலை 3500 கோடி அந்நாட்டு பணம்.
நம் நாட்டின் ஊழல்களை சற்றுக் குறைத்து ஒரு மதிப்பெண் கூடி நான்கு வரிசையில் சேர்ந்தால் கூட குவைத், மலேசியா போன்ற முன்னேற்ற நிலையை அடையலாம். GDP பற்றி பேசும் நம் அரசியல்வாதிகள் என்றாவது இந்த மதிப்பெண்களை உயர்த்துவதைப் பற்றி பேசுகிறார்களா என்று பாருங்கள்.
அறுபத்தைந்து ஆண்டுகளில் இந்த அரசியல்வாதிகளை நம்பி நாம் அடைந்த இழி நிலைமை போதும். இன்னும் இவர்கள் ஏதாவது சட்டம் கொண்டுவந்து ஊழலைக் ஒழிப்பார்கள் என்று நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். ஊழல் என்பது இவர்களின் மூச்சுக்காற்று போன்றாகிவிட்டது. இவர்களால் ஊழலை ஒழிக்கவோ குறைக்கவோ முடியாது. நாம் தான் அதற்கான வேலைகளில் இறங்க வேண்டும். ஊழலில் இருந்து நாட்டைக்காக்க வழிகளை கண்டறிய வேண்டும். ஊழல் அரசியல்வாதிகளை ஒதுக்கித் தள்ள வேண்டும்.
ஆனால் தற்போது நாமுமே ஊழல் சக்கரத்தில் சிக்கிக்கொண்டு இருக்கின்றோம். இலவச தொலைக்காட்சி, விலையில்லா மடிக்கணினி, வாக்கிற்கு பணம் என்பவைகள் ஊழல் சாத்தானின் பிள்ளைகள் என்பதை நாம் அறிந்தும் ஏற்றுக் கொண்டு வருகிறோம். இலவசங்களுக்கும், ஊழல்களுக்கும், மது விற்பனைக்கும், விலைவாசி உயர்விற்கும், தண்ணீர் பஞ்சத்திற்கும், மின் தடைகளுக்கும், குழந்தைகளின் மரணத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டிலிருந்து ஊழலை விரட்டுவதற்கு முன், நம் வீட்டிலிருந்து விரட்டி அடிக்க வேண்டும். வீட்டிலிருந்து தொடங்கி, ஊழலில்லா ஊரை உருவாக்காமல் ஊழலற்ற நாட்டை உருவாக்க முடியாது.
நோயிற்கு தகுந்த மருந்துகளை பயன்படுத்தும் மருத்துவர்களைப் போன்று வெவ்வேறு விதமான ஊழல்களைக் கட்டுப்படுத்த பல்வேறு உத்திகளை நாம் ஆராய்ந்து நடைமுறைப் படுத்த வேண்டும். ஊழல்கள் என்ன உருவத்தில் வந்தாலும் அடையாளம் காண நாம் பழகிக் கொள்ளவேண்டும்.
ஊழல்களுக்கு வெறும் பணத்தாசை மட்டும் காரணமல்ல. லஞ்சம் வாங்குபவர்கள் பணம் சம்பாதிக்க தெருமுனை கொள்ளைகளிலோ, விபச்சாரத்திலோ ஈடுபடுவதில்லை. ஊழல்களின் அடிப்படைக் காரணங்களையும், ஊழல்கள் செழித்து வளர்வதற்கு உதவும் சமூக சூழ்நிலைகளையும் நாம் கண்டறியவேண்டும். அப்பொழுதான் ஊழல்களை நம்மால் முளையிலே கிள்ளி எறிய முடியும்.
நமது தாத்தா பாட்டிகள் வெள்ளையர்களிடம் இருந்து நாட்டை மீட்டார்கள். வெள்ளையர்கள் 250 ஆண்டுகளில் நம்மிடம் சுரண்டிய செல்வத்தை விட பல மடங்கை நமது அரசியல்வாதிகள் கடந்த 25 ஆண்டுகளில் நம் நாட்டிலிருந்து சுரண்டி விட்டனர். நாம் இப்போது இந்த கொள்ளையர்களிடம் இருந்து நாட்டை மீட்க வேண்டிய கடமையில் இருக்கின்றோம். வாருங்கள் அதற்கான வழிகளைத் தேடி பயணத்தைத் தொடங்கலாம்.
நாம் மாறினாலொழிய நாடு மாறாது.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஊழல் – அறிவோம், அழிப்போம் தொடர் – பகுதி 1”