மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக தேர்தல் களம் 2014

ஆச்சாரி

Dec 15, 2012

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்து திராவிட கட்சிகள் ஆட்சியை பிடித்தது முதல் தமிழக அரசியல் இந்தியாவின் ஏனைய அரசியலைவிட என்றுமே மாறுபட்டுள்ள ஒன்று. காங்கிரஸ் ஆட்சியை இந்திய சுதந்திரத்துக்கு முன்னே நீதிக்கட்சி தோற்கடித்து திராவிட அரசியலின் விதையை தூவினர். அன்றிலிருந்து இன்று வரை தமிழகம் ஒரு மாறுபட்ட தேர்தல் களமாகவே பார்க்கப்படுகிறது. இதோடு அல்லாமல் இந்திய அரசியலை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாகவும் ஒட்டு மொத்த இந்தியாவின் அரசியல் முன்னோடியாகவும் தமிழகத்தை பார்க்கலாம். தமிழகத்தில் 1967லில் காங்கிரஸ் சரிவை கண்டவுடன் ஏனைய மாநிலங்களில் சரிவைக்  கண்டதை இதற்கு உதாரணமாக கூறலாம்.

சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் அரசியல் சூழலை முக்கிய நிகழ்வுகள் கொண்டு மூன்றாக வகுக்கலாம்.

1.       1960 களில் வந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம்

2.       1991 இல் நடந்த ராஜீவ்காந்தி கொலை

3.       மே 2009 ஈழப்போர்

தமிழகத்தில் நடந்த இந்த சம்பவங்களின் அடிப்படையில் நடந்த முதல் இரண்டு மாற்றங்கள் நமக்கு நன்றாகவே தெரியும் என்பதால் நாம் அதை விட்டுவிடுவோம். தமிழகத்தில் ஈழப்போரிற்கு பின் ஒரு புதிய அரசியல் சூழலை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 2014 தேர்தல் எப்படி இருக்கும் எப்படி இருக்கவேண்டும் என்பதை ஆராய்வோம்.

தமிழகத்தின் ஒட்டுப்  பதிவு 67% முதல் 72% உள்ளது. முன்பு 65% கீழ் இருந்தது இன்று 70% ஆகியுள்ளது. இன்றைய தேர்தல் களத்தில் படித்தவர்கள், நடுத்- தரவர்கத்தினர் மேலும் நடுநிலையாளர்கள் அதிகம் ஒட்டுப்  போடுவதே இதற்கு காரணம்.70% சதவீதம் ஒட்டு என்ற அடிப்படையில் பார்த்தோமேயானால் ஓட்டுகள் கடந்த இரண்டு தேர்தலின் நிலவரப்படி இப்படி பிரிகின்றது

அதிமுக 35%

திமுக 23%

தேமுதிக 9%

காங்கிரஸ் 6%

மதிமுக 3%

இதர கட்சிகள் 7% (பாமக, விடுதலைச்  சிறுத்தை)

அதிமுக

ஒரு காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் இரட்டை இலை சின்னத்தால் தனக்கென்று பெரிய வாக்குவங்கியை உள்ளடக்கிய இந்தக்கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய்  இன்று பெருவாரியான மக்களின் ஓட்டுகளை மற்றும் தன்னுடைய தனிப்பெரும்பான்மை ஆதிக்கத்தை இழந்து நிற்கிறது. இதற்கு பல்வேறு காரணங்களை கூறலாம்.

1. எம்ஜிஆர் அவர்களின் சின்னத்துக்காக ஒட்டு அளிக்கும் அன்றைய எம்ஜிஆர் காலத்து முதியவர்கள் காலாவதியாகி விட்டனர்.

2. அடித்தட்டு மக்களின் துயரங்களை துளியும் மதிக்காமல் நிர்வாகத்திறமை, சீர்திருத்தங்கள் என்ற பெயரில் செய்த சீர்கேடுகள் அடித்தட்டு மக்களை அ.தி.மு.க -வை விட்டு வெகுதூரம் நகர்த்தியுள்ளது. முக்கியமாக போக்குவரத்துப்  பேருந்துகளை லாபத்திற்காக குறைத்தது, பேருந்து கட்டணத்தை  அதிகரித்தது, தலைமைச்  செயலகத்தை மாற்றியது இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம். இந்த ஓட்டுக்கள் யாவும் இன்று தே.மு.தி.க மற்றும் தி.மு.க வாங்கிக் கொண்டு போனது ஒரு தனிக்கதை.

3. ஜெ வின் அடாவடித்தனம், துக்ளக் தர்பார் நடத்துவது மற்றும் தி.மு.க வின் நலத்  திட்டங்களை வேண்டும் என்றே குழி தோண்டிப்  புதைப்பது இவை யாவும் நடுநிலையாளர்களையே முகம்சுளிக்க வைத்துள்ளது.

4. தங்கள் கட்சியின் தலைவர்களை, சட்டமன்ற உறுப்பினர்களை மதிக்காதது, மந்திரி சபையை மாற்றுவது, இவரின் திமிர்தனத்தை பார்த்து கொஞ்சமாவது சூடு சுரணை  உள்ள அதிமுகவினர் கூட்டம் கூட்டமாக தேமுதிக வை நோக்கி சென்றனர்.

இவர்களின் இன்றைய பலம்:

1.       ஜெஜெ வின் அடாவடிச்  செயல்களை நிர்வாகத் திறமை, தைரியசாலி என்று அவருக்கு ரசிகர் மன்றம் அமைத்து, அவர் செயலை ஆதரித்து ஒட்டுபோடும் அப்புராணி நடுநிலையாளர்கள்.

2.       திமுகாவின் சிறு தவறுகளை 20 வருடங்களாக வரிந்துகட்டி விமர்சனம் செய்யும் தேசிய மற்றும் தமிழக ஊடகங்கள் அதிமுகவின் செயல்களை அம்மையாருக்கு வலிக்காமல் மெலிதாக கண்டிப்பது

3.       1 வாக்கு எண்ணிக்கையில் ஒரு ஆட்சியையே தன் சுயநலத்துக்காக கலைத்தாலும் அதை எல்லாம் மறந்து பெருந்தன்மையுடன் இனநலத்திற்காக உறவு பாராட்டும் தேசியக்  கட்சியான பாஜகவின் பரந்த ஆதரவு.

4.       இந்துத்துவ ஆதரவு சக்திகள். கர்நாடகாவில் பாஜக ஆட்சியை கொண்டு வந்தது போல் திராவிட அரசியல்களமான தமிழகத்தில் கொண்டுவர இயலாது என்று இயற்கையில் இந்துத்துவாதியான ஜெவை வேறுவழியில்லாமல் ஆதரிப்பவர்கள்.

திமுக

தனக்கென ஒரு பெரிய வாக்குவங்கியை வைத்திருந்தாலும் எம்ஜிஆர் இன் அதிமுக உருவான முதல் இவர்களால் தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் எந்தத்  தேர்தலிலும் ஆதிக்கம் செலுத்தமுடியவில்லை என்பது இந்த கட்சிக்கு பின்னடைவு. இந்த பின்னடைவால் வலிமைஅடைந்த கட்சியில் ஒன்று தான் பாமக, விடுதலை சிறுத்தை. இப்படி பலசாதி கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில் பெரியாரின் திராவிட பாரம்பரியத்தில் வந்த இவர்களுக்கு தங்கப்பதக்கமே கொடுக்கலாம்.

இவர்களின் இன்றைய பலம்

1.       கையில் இருக்கும் மிதமிஞ்சிய பணம்

2.       தள்ளாடும் வயதில் எந்த நிலையில் திமுக  இருந்தாலும் அரசியல் சாணக்கியம் செய்து ஒரு நல்ல கூட்டணி உருவாக்கி இலவச திட்டங்களை அறிவித்து வெற்றிக்கனியை பறிக்கவைக்கும் இவரின் தனிப்பட்ட திறமை. இவரின் இலவசத்திட்டங்கள் அடித்தட்டு மக்களின் வரவேற்பை பெற்று ஒரு கணிசமான அடித்தட்டுமக்களின் வாக்கு வங்கியை வைத்துள்ளது.

தேமுதிக

2009 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 9% வாக்குகள் பெற்று இந்திய அரசியல் நோக்கர்களையும், ஊடகங்களையும் பிரமிக்க வைத்தவர் விஜயகாந்த். அப்படி அவர் ஓட்டுக்காக என்ன செய்தார்? அவர் செய்தது ஒன்றேஒன்று தான். துடிப்பாக இரண்டு பெரிய கட்சிகளை தனியாகவே கூட்டணி இல்லாமல் தொடர்ந்து எதிர்த்து தேர்தலில் நின்றார். அதிமுக, திமுகவின் மீது வெறுப்பு கொண்டிருந்தவர்கள் இவரை ஒரு மாற்று சக்தியாகப் பார்த்தனர். மற்றபடி இவர் ரசிகர்களின் ஒட்டு 3%கீழானவையே. இவரின் பலமானது

1.       வாக்கு வங்கி – இவர்களின் கணிசமான ரசிகர்கள்

2.       அதிமுகவில் இருந்த பழைய எம்ஜிஆர் ரசிகர்கள் இவரை கருப்பு எம்ஜிஆர் ஆக பார்ப்பது.

3.       ஜெவையும், கலைஞரையும் ஒரு சேர வெறுக்கும் அடித்தட்டு மக்கள்.

4.       முன்புசொன்னது போல் அதிமுகவில் இருந்து பிரிந்த வந்த கொஞ்சம் சூடு சுரனை உள்ள சிறிது கட்சி நிர்வாகிகள்.

5.       அதிமுகவில் இருந்தால் சம்பாரிக்க முடியாது என்று திமுக பக்கமும் போக முடியாமல் இருப்பவர்கள் தேமுதிகவை தேர்ந்தெடுத்து உள்ளனர்.

வெள்ளம் திரண்டு வரும் பொழுது பானையை ஒடைப்பது போல் இவ்வளவு வலிமையாக வளர்ந்தகட்சி இவரின் தரம்கேட்ட மேடைப்பேச்சுகள், செய்கைகள் மற்றும் குடிப்பழக்கத்தினால் பின்னடைவை சந்தித்துள்ளது. இவரின் காங்கிரஸ் ஆதரவு போக்கும் மக்களை முகம் சுளிக்கவைத்துள்ளது. இனி தேமுதிக வளர வாய்ப்பில்லை.

 காங்கிரஸ்

இந்த கட்சிக்கு இன்னும் 4-6% ஓட்டு வங்கி இன்னமும் உள்ளதாக நம்பப்படுகிறது. இவர்களை ஒரு தடவை தனித்து நிற்க வைக்கும் வாய்ப்பை நம் தமிழக கட்சிகள் கொடுத்தால் தெரிந்துவிடும் இன்னமும் என்ன மிச்சம் இருக்கிறது என்று. இது நடக்கும் என்று நம்புவோம். அப்படியே இவர்களிடம் அந்த அளவு வாக்குகள் இருந்தாலும் பெரிதாக வருத்தப்படத் தேவையில்லை. காரணம் இருக்கிற கொஞ்ச நஞ்சம் ஓட்டுக்களும் பல கோஷ்டி பூசல்களில் பிரிந்துவிடும். ஊரில் பத்து பேர் காங்கிரஸில் இருந்தால் அதில் பத்து பேரும் பத்து கோஷ்டிகளில் இருப்பர்.

இவர்களின் பலம்

1. இந்தியாவில் அதிக பணம் மற்றும் சொத்துக்கள் வைத்துள்ள ஒரு தேசிய கட்சி மற்றும் அதில் உள்ள பெரும் பணமுதலைகள். எப்படியும் தமிழகத்தில் தேர்தல் செலவுக்கு மத்தியில் இருந்து பணம் வந்துவிடும்.

2.   எதற்காக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறோம் என்றே தெரியாமல் இருக்கும் சில காங்கிரஸ் தொண்டர்கள்.

மதிமுக

ஒரு நல்ல மதிப்பிற்குரிய தலைவராக இருந்தும் அரசியலில் முடிவெடுக்கும் திறன் இல்லாத தலைவரை கொண்டுள்ளது இந்த கட்சிக்கு பெரிய பின்னடைவு. இந்த கட்சியின் பலம் இன்றும் தமிழர்களின் மதிப்பிற்குரிய தலைவராக இருக்கும் வைகோ. அதிமுகவுடன் இன்று வரை இருந்த கூட்டணி அவரை தமிழக அரசியலில் மறைந்துவிடாமல் காத்த அதே வேலையில் அது இன்று வரை பெரியதாக வளரவும் இல்லை. கடந்த பத்து ஆண்டுகளில் அதிமுகவை நம்பியவர் மக்கள் சக்தியையும் நம்பியிருக்கலாம். தமிழகத்தின் மூன்றாம் அணிக்கான தேவையுள்ள அரசியல் சூழலை கவனிக்க தவறிவிட்டார். தொண்டர்கள் விருப்பத்திற்கு ஒரு தலைவன் முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமே தவிர ,கட்சியின் செயல் முடிவுகளை தலைவனே தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவே தலைவனுக்கான தகுதியும் அழகும். இவரின் பின்னடைவு ஒட்டுமொத்த தமிழர்களின் பின்னடைவு. இவர்களின் பலம் ஒன்றே ஒன்று

1. வைகோ

நாம் தமிழர்

இலங்கையில் நடந்த போரின் கோரத்தை ஊர் ,ஊராக சென்று மேடை போட்டு சாதாரண மக்களிடம் விழிப்புணர்ச்சியும் இளைஞர்களிடம் எழுச்சியும் கொண்டு வந்தவர் சீமான். இவரை பற்றி பல குறைகள் கூறினாலும் தமிழகத்தில் இலங்கை போருக்கு பின் இருக்கும் மாறுபட்ட அரசியல் சூழலுக்கு வித்திட்டவர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இவர்களின் பலம் தமிழகத்தில் தீவிர தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் இளைஞர்கள் இவரிடம் உள்ளது. பல்வேறு தமிழக பிரச்சனைகள் பற்றி பேசினாலும் அவரின் குரல் அழுத்தமாக இலங்கைப் போரைத் தாண்டி ஒலிக்கவில்லை. இது அவர்களின் பின்னடைவு. சாதிய அரசியலையும், திராவிட அரசியலையும் எதிர்க்கும் சீமான் அவர்களுடன் கூட்டணியும் கிடையாது என்கிறார். சாதிய அரசியலை எதிர்ப்பதில் ஒரு அர்த்தம்  உள்ளது ஆனால் திராவிட அரசியலை எதிர்ப்பது அவருக்கு பின்னடைவையே தரும். திராவிட அரசியல் என்பது தமிழகத்தை தாண்டி என்றும் ஒலித்ததில்லை.  அது தமிழர்களின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டது. திராவிட அரசியல் தான் தமிழர்களை இன்னும் தமிழர்களாய் விழிப்புடன் வைத்துள்ளது என்பதை அவர் உணரவேண்டும்.  இன்று அரசியல் லாபத்துக்காக திராவிடக்  கொள்கைகளை விற்ற திராவிட அரசியல் வியாதிகளைப்  பார்த்து ஒட்டுமொத்த திராவிட அரசியலை குறை கூறக்கூடாது. திராவிட அரசியலில் அவருக்கு மறுப்பு இருக்கலாம் ஆனால் எதிர்ப்பு தேவையில்லை. திராவிடத்தை எதிர்ப்பதனால் மட்டுமே தமிழ்தேசியம் வளரும் என்று அவருக்கு யாரேனும் ஆலோசனை சொல்லி இருந்தால் காலம் கடந்து  அந்த கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்வதை விட இப்பொழுதே மாற்றிகொள்வது நல்லது. அதேபோல் கட்சியின் வளர்ச்சி நடுநிலையாளர்களின் ஒட்டுகளை வாங்க இலங்கை பிரச்னை மட்டுமே கொண்டு பெற முடியாது என்பதை உணரவேண்டும்.

இதுவரை தமிழகத்தின் கட்சியின் வலிமை பின்னடைவை பார்த்தோம் அதே போல் ஓட்டுக்கள் மக்களிடத்தில் எப்படி பிரியும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

70% ஓட்டுப்பதிவு என்று வைத்து ஒட்டுப்போடும் மக்களை தரவாரியாகப்  பிரிப்போம்

12% - பணத்திற்கு, இலவசத்திற்கு ஒட்டுப்போடும் மக்கள்

20% - கட்சி தொண்டர்கள், அவர்கள் சுற்றம், சொந்தங்கள், ஒரே கட்சிக்கு ஒட்டுப் போடும் மக்கள்

8% - சாதி,மத அடிப்படையில்

22% - நடு நிலையாளர்கள்

4% - தமிழ் தேசியவாதிகள்

4% - இதரவாக்கு வங்கிகள்

வருகின்ற 2014 தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிக்கொண்டிருக்கிறோம். இந்த தேர்தலில் மூன்று அணிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

1. அதிமுக + பாமக + கம்யூனிஸ்ட்  + மனிதநேய கட்சி

2. திமுக + காங்கிரஸ் + தேமுதிக + விடுதலை சிறுத்தைகள் +  முஸ்லீம் லீக்

3. மதிமுக மற்றும் இதர தமிழர் நலன் சார்ந்த கட்சிகள்.

தேமுதிக வும் பாமகவும் ஒரே அணியில் இருக்க வாய்ப்புகள் இல்லை. பாமக அதிமுகவுடம் சேரலாம் அல்லது தேமுதிக தனித்து நின்றால் பாமக திமுகவுடன் சேரும். இதுபோல் ஒரு கூட்டணி அமையும்பட்சத்தில், அதிமுக திமுக அணியின் போட்டி மிகக் கடினமானதாக இருக்கும்.

இந்தத்  தேர்தல் தமிழர்களின் நலன்சார்ந்த கட்சிகள் வெற்றிபெற வேண்டும் என்பது பலரின் விருப்பம். அதற்கு முக்கிய காரணம் 2009 நடந்த ஈழப்படுகொலையின் தாக்கம். நம்மில் ஒவ்வொருவருக்கும் உள்ளது. ஈழத்து மக்கள் நல்வாழ்வு பெற தமிழக அரசியல் தமிழர்களிடம் உள்ளது மிகவும் அவசியம். அதுபோல் தமிழக அரசியலில் பலவருடங்கள் நம்மை மாறி மாறி ஆண்டு வரும் திமுக அதிமுக கட்சிகளை ஓரம் கட்டுவதும் காலத்தின் தேவையாக உள்ளது. அதன்படி 2014 தேர்தலில் மாற்றுசக்தி வெல்ல, உள்ள சாத்திய கூறுகளை ஆராய்வோம்.

முன்பு சொன்னது போல் கடந்த தேர்தலில் நடுநிலையாளர்கள் பங்களித்தது போல் 2014 தேர்தல் வெற்றியை நடு நிலையாளர்களே பலமாக தீர்மானிப்பார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் கிடைக்காத பலம் இன்று தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. அதனால் இந்த பலத்தை தமிழர் நலன் விரும்பும் கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அதற்கு இப்போதைய தேவைகள் இதுவே

1.  முதலில் திராவிடம் தமிழ்தேசிய மோதலை தமிழர் நலன் சார்ந்த கட்சிகள் விடவேண்டும். இரண்டு சக்திகளும் தமிழர் நலன் என்பதே கொள்கை என்று இருக்கும் பொழுது இந்த மோதல் தேவையா என்பதை உணரவேண்டும்.

2.  நடுநிலையாளர்கள் ஓட்டுகளை கவர்வது. இதற்கு ஈழப்பிரச்சினைகளை தாண்டி இன்று தமிழகத்தில் உள்ள மக்கள் பிரச்சினையை எடுக்கவேண்டும். மின்வெட்டு, சுகாதாரப்  பிரச்சனை இன்றைய அதிமுக கையாளும் விதத்தில் மக்களுக்கு அதிருப்தியே. தேர்தல் நெருங்கும் பொழுது இந்த பிரச்சனைகளுக்கு வலுவான திட்டத்தை முன்வைத்து மக்களிடம் ஒட்டு கேட்பதில் தான் வெற்றியுள்ளது.

3. இன்று ஜெயலலிதாவின் மேல் நடுநிலையாளர்களுக்கும் சில தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கும் உள்ள மதிப்பு. இது தமிழர் நலன் சார்ந்த அரசியலுக்கு மிகப்பெரிய எதிரி. ஜெயாவைப்  பொருத்தவரை அவரின் அரசியல் என்பது இந்திய தேசியத்தின் நலனை சார்ந்தே இருக்கும். அதில் தமிழர்களின் நன்மை இரண்டாம் இடமே. ஈழப்போர் நடந்த பொழுது ‘போர் என்றால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள்’ என்று கூறியது நினைவில் இருக்கலாம். இந்திய தேசியத்தை எதிர்த்து தமிழர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்று நினைத்தாலும் அவரைச்  சூழ்ந்துள்ள  சக்திகள் அவரை விடாது. இன்றைய சூழலில் கொள்கை அளவிலும் தன்னுடைய செயல்பாடுகளிலும் மக்கள் மதிப்பையும் வலிமையையும் இழந்து நிற்கும் திமுகவுக்கு இனி தமிழக அரசியலில் எதிர்காலம் இல்லை. இனிவரும் அரசியல் என்பது இந்திய நலனை முன்னிறுத்தும் ஜெயலலிதாவின் அரசியலுக்கு தமிழர் நலனை முன்னிறுத்தும் சக்திகளுக்கும் நடக்கும் கருத்தியல் களமாகவே இருக்கும். இந்த மாற்றம் கூட தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும். தமிழக அரசியலில் ஜெ வை ஓரம் கட்டிவிட்டு இருவேறு தமிழர் நலன் கொண்ட கட்சிகள் உருவாக்குவதே நமக்கு நோக்கமாக இருக்கவேண்டும். இந்த மாற்றங்கள் வர சில வருடங்கள் ஆகலாம். ஆனால் தற்போதைய தேவை ஜெ வை எதிர்த்து செய்யும் அரசியலிலே உள்ளது. இதை உணராமல் இன்னும் கலைஞரை திட்டி அரசியல் செய்வதில் புண்ணியமில்லை.

4. அதிமுக திமுக அணிகள்  பலமாக அமையும் பட்சத்தில் அவர்களின் தேர்தல் வியூகம் இரண்டு கட்சிகளின் நேரடி மோதலாக இருக்கும். இதை மூன்றாம் அணி சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

2014 தேர்தலின் மூச்சு ஜெ எதிர்ப்பு அரசியலிலே உள்ளது. இவரை யார் வலிமையாக எதிர்க்கிறார்களோ அவர்களே தமிழகத்தின் மாற்றுசக்தி. தமிழர்நலன் விரும்பும் கட்சிகளின் தமிழ் இனத்தின் நலனுக்காக ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். இது தவிர நடுநிலையாளர்களின் ஓட்டுகளை பெறுவதிலும் கவனம் இருக்க வேண்டும். மேலே சொல்லப்பட்ட 22% நடுநிலையாளர்களின் ஓட்டுகளில் முயன்றால் 12% சதவீத ஓட்டுகளை பெறமுடியும். இது தவிர இந்த தேர்தலில் சாதி மதம் கடந்து ஒரு மாற்று அரசியல் உருவாக்க மக்கள் விரும்புகின்றனர். இதனடிப்பையில் மூன்றாம் அணி14% முதல் 18% ஒட்டுகளை பெற வாய்ப்புள்ளது. இவையாவும் 2014 தேர்தலில் மூன்றாம் அணிக்கு வெற்றியை கொடுக்குமா என்றால் அதுநடப்பது கடினமே. ஆனால் மூன்றாம் அணி வாங்கும் வாக்குகள் புதிய அரசியலுக்கு ஒருபாதையை ஏற்படுத்தும். எவ்வளவு அதிக வாக்குகள் வாங்குகிறதோ அவ்வளவு பலமான அரசியல் பாதை உருவாக்கப்படும்.

ஆக 2014 தேர்தல் உதிக்கும் சூரியன் மறையும் தருணம் அது 2016 சட்டமன்ற தேர்தலின் தமிழ்தேசியத்தின் உதயம்.

The main features of mobile spy the mobile spy package is packed full of features that address the main problem areas i thought about this created by unmonitored cell phones

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “தமிழக தேர்தல் களம் 2014”
  1. பெருமாள் தேவன் says:

    தற்போது ராமதாஸ் தலைமையில் சாதியில் இருப்பவர்களின் கூட்டணி ஒன்று உருவாகி வருகிறது. கட்டுரையாளர் அதைப் பற்றி எதுவும் எழுதவில்லை. திராவிடம் பேசும் கட்சிகள் தமிழரின் நலன் விரும்பும் கட்சிகள் என்று எழுதியிருக்கிறீர்கள். இதில் முக்கிய கட்சிகள் திமுக, அதிமுக. இந்த இரண்டு கட்சிகளுமே தமிழர் விரோதமான கட்சிகள் என்பதை காலங்காலமாக நிரூபித்துள்ளன.

    திமுக வெற்றி பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் கட்டுரையாளர், அதன் மூலம் என்ன பலன் கிடைக்கும் என்பதை எழுத தவறி விட்டார். இன்றும் திமுக 39 எம்பிகளை கொண்டுள்ளது. இது தமிழரின் நலன் விரும்பும் கட்சி என்றால் அதை மின்வெட்டு, காவிரி நீர் முதலான பிரச்சனைகளில் நிரூபித்திருக்கலாம். மாறாக பொய் வழக்கு போடுவதை எதிர்த்து போராட்டம் நடத்துகிறது.

    ஜயலலிதாவும் தமிழர் விரோத தலைவரே. ஆனால் அவரை மட்டுமே வீழ்த்துவதையே கட்டுரையாளர் விரும்புகிறார். அழிய வேண்டியது திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமேதான். அதற்கான மாற்று வழிகளை தமிழர் நலன் கருதும் கட்சிகள் தேடிக் கண்டறிய வேண்டும்.
    அதேபோல அந்த கட்சிகள் முதலில் தங்களுக்குள் கருத்தொற்றுமைக்கு வரவேண்டும். அவ்வாறில்லாத பட்சத்தில் இன்னும் இரண்டு மூன்று தேர்தல்களுக்கு அதிமுக, திமுகவே ஆட்சிக்கு வரும். ஆனால் அதற்குள் தமிழர்நலம் விரும் கட்சிகள் தெளிவடைய வாய்ப்புள்ளது. இறுதியில் தமிழர் நலனே வெற்றி பெறும். திராவிடக் கருத்துக்களும் அதிமுகவும், திமுகவும் அழியும்.

  2. Ilakkuvanar Thiruvalluvan says:

    நல்ல ஆய்வுரைகள். அயல் எழுத்துகளின்றி எழுதியிருக்கலாமே!அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

அதிகம் படித்தது