மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஊழல் – தொடர் 2 – ஊழல் முதன் முதலில் என்று தோன்றி இருக்கும்?

ஆச்சாரி

Jan 1, 2013

இன்றைய தலைமுறையினருக்கு போபர்ஸ் பீரங்கி ஊழலுக்கு முந்தைய ஊழல்கள் தெரிந்திருக்க  வாய்ப்பில்லை. எந்த ஆட்சி என்றில்லாமல் அனைத்து ஆட்சியிலுமே இந்தியாவில் ஊழல்கள் நிறைந்து தான் இருக்கின்றன. சுதந்திரம் கிடைத்த உடன் தியாகிகள் என்று போற்றப்படுபவர்கள் நம்மை ஆண்ட போதும் ஊழல்கள் இல்லாமல் இருக்கவில்லை. 1948 இல் நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பெரிய ஊழல் என்று அழைக்கப்படும் ஜீப் வாகன ஊழலை சிலர் அறிந்திருப்பீர்கள்.

காஷ்மீரில் நடந்த போரில் பயன்படுத்த அவசரமாக 2000 பயன்படுத்தப்பட்ட ஜீப் வாகனங்கள் வாங்குவதற்கு ஆட்சியாளர்கள் முடிவெடுத்தனர். இங்கிலாந்திற்கான இந்தியத் தூதர் வி.கே.கிருஷ்ண மேனன் என்பவர் பல விதிமுறைகளை மீறி ஒரு சிறிய ஆங்கில நிறுவனத்திடம் இருந்து 80 இலட்ச ரூபாய்க்கு இந்த ஜீப்புகளை வாங்குவதற்கு ஒப்பந்தமிட்டார். ஒப்பந்தப்படி  இந்த வாகனங்கள் 1948 ஆகத்து தொடங்கி திசம்பருக்குள் வந்திருக்க வேண்டும், வாகனங்களை சரிபார்த்துவிட்டு 65 விழுக்காடு பணம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் ஒப்பந்தமிட்ட உடனேயே, இந்த 65 விழுக்காடு பணம் கொடுக்கப்பட்டுவிட்டது. அடுத்த ஆண்டு  காஷ்மீரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இரு மாதங்களுக்கு பின்னர் 1949 மார்ச்சில் 155 பழைய வாகனங்கள் மிகவும் மோசமான நிலையில் வந்திறங்கின. எதிர்க்கட்சியினரை  சமாதானப்படுத்த அனந்தசயனம் அய்யங்கார் என்பவரின் தலைமையில் பெயரளவிற்கு ஒரு விசாரணையை நடத்தி, ஊழலை மூடி மறைத்துவிட்டனர். பின்னர் இந்த வி.கே.கிருஷ்ண மேனன் நேருவின் அமைச்சரவையில் பாதுகாப்பு மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

வி.கே.கிருஷ்ண மேனன் உடன் நேரு

சுதந்திரத்திற்கு  முன்னரும் பிரிட்டிஷ் இந்தியாவில் ஊழல்கள் இல்லாமலில்லை. இரண்டாம் உலகப்போர் காலத்தில் நடந்த ஊழல்கள் கட்டுக்கடங்காமல் போகவே, ஆங்கில அரசாங்கம் 1941 இல் ஊழல்களை விசாரிக்க  டில்லி சிறப்பு காவல்துறையை (Delhi Special Police Establishment) ஏற்படுத்தியது. அதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இராபர்ட்- கிளைவ்  காலத்தில்  ஊழல்கள் மலிந்திருந்ததற்குச்  சான்றுகள் இருக்கின்றன. வெள்ளையர்கள்  தங்களது ஆட்சியை தக்க வைக்கவும் , அதிகாரிகளை மகிழ்வாக வைக்க வேண்டும்  என்பதற்காகவும், அரசு ஊழியர்களின் சம்பளச்  செலவுகளை குறைவாக வைத்துக் கொள்ளவும்  மறைமுகமாக அதிகாரிகளின் ஊழல்களை அங்கீகரித்தனர்.

ஆங்கிலேயர்களுக்கு முன்னர் நம்மை ஆண்ட அரசர்கள் காலத்திலும் ஊழல்கள் இருக்கத்தான் செய்தன. கல்வெட்டுகளிலும்,  சுவடிகளிலும் ஊழல் நடந்ததற்கான  நேரடியான ஆவணங்கள் கிடைக்கவில்லை எனினும், ஊழல்களை தவிர்ப்பதற்கான வழிகளையும், ஊழல் குற்றங்களுக்கான தண்டனை சட்டங்களையும் பரவலாக காண முடிகின்றது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் திருவள்ளுவர்
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.
என்று கூறியிருக்கிறார். இதன் பொருள் “மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவறு செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
மேலும் வெஃகாமை அத்தியாயத்தில் பத்து குறள்களிலும் முறைகேடாக செல்வம் குவிப்பதைக் கண்டித்திருக்கிறார்.

அதேபோன்று கௌடில்ய சாணக்கியரின் எழுத்துக்களிலும் ஊழல்களின் பாதிப்புகளையும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் காணமுடிகின்றது. அவருடைய கீழ்கண்ட சொற்றொடர்கள் அவர் ஊழலை எவ்வளவு ஆழமாக கவனித்திருக்கிறார் என்பதை காட்டுகின்றன.

நாக்கின் நுனியில் இடப்பட்ட தேனையும் விசத்தையும் எவ்வாறு சுவைக்காமல் இருக்க முடியாதோ அதே போன்று அரசு ஊழியர்களால் அரசரின் வருமானத்தில் ஒரு  குறைந்த பகுதியையாவது சுவைக்காமல் இருக்க முடியாது.

நீரினுள் நீந்தும் மீன் நீர் அருந்துகிறதா இல்லையா என்பதை எவ்வாறு கண்டறிய முடியாதோ அதே போன்று அரசு ஊழியர்கள் அரசுப் பணத்தை கையாடல் செய்கிறார்களா இல்லையா என்பதை கண்டறிய முடியாது.

வானில் பறக்கும் பறவையின் நகர்வுகளை கூட கண்டறிந்து விடலாம், ஆனால் தவறான  காரியங்களில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் நகர்வுகளை கண்டறிவது கடினம்.

சாணக்கியரின்  அர்த்த சாஸ்திரத்தில் ஊழலைக் கட்டுப்படுத்த பல சட்டங்களை  விவரித்திருக்கின்றார். அவற்றில் ஒன்று ஊழலை வெளிக்கொணரும் ஒற்றர்களுக்கு சம்பந்தப்பட்ட தொகையில் ஆறில் ஒரு பங்கை வெகுமதியாக அளிக்கும் திட்டம். இது போன்ற திட்டங்கள் நமக்கு இன்றும் பெரும் பயனளிக்க கூடியவைகளே.

நம் நாட்டில் மட்டுமல்ல உலகின் மற்ற நாகரீகங்களிலும் ஊழல் சுவடுகளை காண முடிகின்றது. உலகிற்கு ஜனநாயகத்தை கற்றுக்கொடுத்த கிரேக்கத்திலும் ஊழல்கள் இல்லாமலில்லை. கி.மு.300 களில் வாழ்ந்த கிரேக்கப்  பேச்சாளர் டேமஸ்தனிஸ் இவ்வாறு கூறி இருக்கிறார்.

“நமது முன்னோர்கள்  சுயலாபத்திற்காக அரசியலில் ஈடுபடவில்லை, நகர மக்களுக்கு சேவை செய்யவே  அரசியலில் ஈடுபட்டனர். ….. இன்று நமது நகரத்தின் வசதிகள் வெகுவாக  முன்னேறி இருக்கின்றன. நகரெங்கும் கைப்பிடி சுவர்கள்,  நீரூற்றுகள் பழுது நீக்கங்கள், புதிதாக இடப்பட்டிருக்கும் சாலைகள்… இப்புதிய திட்டங்களை செயல்படுத்தியவர்களை சற்று கவனித்துப் பாருங்கள். அவர்களில் பலர்  ஏழ்மையிலிருந்து செல்வந்தர்களாகி இருக்கின்றனர். .. சிலர் அரசு மாளிகைகளை விட சிறந்த வீடுகளை தங்களுக்கு கட்டி இருக்கின்றனர். அவர்களின் செல்வம் உயர்ந்திருப்பதற்கேற்ப அரசின் செல்வங்கள் குறைந்திருக்கின்றன.”

இவ்வாக்கியங்கள் கிரேக்கத்திலும் நம் அரசியல்வாதிகள், அதிகாரிகள் போன்றவர்கள் இருந்திருக்கின்றனர் என்பதைக்  காட்டுகின்றன. ஆனால் நம்மிடம்  இன்றும் இல்லாத பல ஊழல் ஒழிப்புச்  சட்டங்கள் அவர்களிடம் அன்றே  இருந்திருக்கின்றன. எந்த அதிகாரத்தையும் தனி மனிதரிடம் கொடுக்காமல்  குழுக்களிடமே அதிகாரத்தைக் கொடுத்திருந்தனர். பதவியின் முடிவில் ஆட்சியாளர்களின் சொத்துக்களை தணிக்கை செய்வது , சந்தேகத்திற்குள்ளாகும்  வகையில் செல்வம் சேர்த்தவர்களை நாடு கடத்துவது,  ஒருவர் இருமுறைக்கு மேல்  பதவிக்கு வர முடியாதது போன்ற சட்டங்கள் ஊழலை கட்டுப்பாட்டில் வைத்திருக்க  அவர்களுக்கு பேருதவியாக இருந்தன.

இதற்கும் முந்தைய எகிப்திய நாகரிகத்திலும் ஊழல்கள் நடைபெற்றிருக்கின்றன. மூன்றாம் ரமேசெஸ் ஆட்சியில் இன்றைய இந்தியாவின் நிலைபோன்று எங்கும் ஊழல் மலிந்திருந்திருக்கின்றன. அரசு கஜானாக்கள், தானியங்கள் மேல்மட்ட அரசு ஊழியர்களால் சுரண்டப்பட்டன. மெடினெட் ஹபு என்ற இடுகாட்டு கோவிலைக்  கட்டிய பணியாளர்கள், தங்களுக்குப்  போதுமான உணவைக் கூட முறையாக வழங்கவில்லை என்று அரசை எதிர்த்து கி.மு.1157 இல் வேலை நிறுத்தத்தில்  ஈடுபட்டிருக்கின்றனர். வரலாற்றில் பதிவாகி இருக்கும் முதல் வேலை நிறுத்தம் இது.

உலகின் முதல் நாகரிகமாக கருதப்படும் மெசபடோனிய நாகரிகத்திலும் ஊழல் சுவடுகள்  காணப்படுகின்றன. சாரகனுக்குப்  பின்னர் வந்த அக்காடிய  மன்னர்கள் ஆட்சியில் ஊழல்கள் நிறைந்திருந்தன. ஏகபோக சந்தைகள்,  லஞ்சங்கள்,  அநியாய வரிகள் திணிக்கப்பட்டு மக்கள் சுரண்டபட்டனர். பின்னர் உர்நம்மு  என்ற படைத்தளபதி அக்காடிய வம்ச ஆட்சியை ஒழித்து புதிய உர் வம்ச ஆட்சியைத்  தோற்றுவித்தார். உர் மன்னர்களின் ஆட்சியில் ஊழல்கள் கட்டுபடுத்தப்பட்டன. அரசு செயல்முறைகள் வெளிப்படையாக நடத்தப்பட்டன. ஒவ்வொரு பரிமாற்றங்களும் முறையாக பதியப்பட்டு ரசீதுகள் கொடுக்கப்பட்டன. இதற்கு நான்காயிரம் ஆண்டுகளுக்குப்  பின்னர் இன்று நமக்கு எத்தனை இடங்களில் முறையாக ரசீது கொடுக்கப்படுகின்றது?

உர் மன்னர்களுக்கு சில காலங்களுக்கு பின் ஆட்சிக்கு வந்த ஹமுராபி ஊழல்கள் குறைந்த வெளிப்படையான ஆட்சியை வழங்கியதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. ஹமுராபி தனது அரசின் 282 சட்டங்களை எழுதி ஊரின் நடுவில்  வெளிப்படையாக வைத்திருந்ததில் இருந்தே அவருடைய ஆட்சியின்   வெளிப்படைத்தன்மையை அறிந்து கொள்ள முடிகின்றது.

மெசபடோனிய  நாகரிகத்திற்கு முந்தைய வரலாற்றுச்  சான்றுகள் ஏதும் இல்லாததால் அதற்கு முந்தைய வரலாற்றை தத்துவரீதியாகத்தான் பார்க்க வேண்டி இருக்கின்றது. ஊழல் நடப்பதற்கு அரசு சொத்துக்களும், தனியார் சொத்துக்களும் தனித்தனியாக இருந்திருக்க வேண்டும்.

முதன் முதலில் மனிதன் மற்ற பல விலங்குகளைப் போன்று குழுக்களாக தான் வாழ்ந்தான். சொத்துக்கள் அனைத்தும்  குழுக்கழுக்கு பொதுவாகத்தான் இருந்தன. பின்னர் பல குழுக்கள் சேர்ந்து  வாழத் தொடங்கிய பொழுது, அக்குழுக்களுக்கு இடையே பொதுவான சொத்துக்கள் உருவாகத் தொடங்கின.

மனிதன் பண்டமாற்று முறையைக்  கண்டறிந்த பின்னர் தான் சொத்துக்கள் வளரத் தொடங்கின. அதிலும் என்று மனிதன் தனது உழைப்பை விற்று, மாற்றாகப்  பொருளை பெறத் தொடங்கினானோ அன்று தான் சொத்துக்களின் அசுர வளர்ச்சி தொடங்கியது. அதுவரை பொதுக்காரியங்களுக்கு சொந்த உழைப்பைக் கொடுத்து வந்தவர்கள் பொருள்களைக் கொடுத்து மனித உழைப்பை வாங்கும் வழியைப் பயன்படுத்தினர். இதன் மூலம் பொதுக்காரியங்களைக் கவனிக்கும் அமைப்புகளிடம் பொதுச்சொத்துக்கள்  பெருகின. பின்னர் காலாந்திர வரி வசூல், முழு நேர அரசு ஊழியர்கள் என்று  பொதுக்காரியங்கள் முறைப்படுத்தப்பட்டன. இந்நிலையில் தான் பொருளாதார ஊழல்கள் தொடங்கி இருக்க வேண்டும்.

நாகரீகங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சி சான்றுகளை வைத்துப் பார்க்கையில் ஊழல் தொடங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை கி.மு.5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்  இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இன்றைய ஞானத்தின் படி ஊழல்  சுமாராக ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கி.மு. நான்காயிரங்களில் தொடங்கி  இருக்க வேண்டும்.

வரலாற்றின் தொடக்கம் வரை ஊழலைத் தேடிச்சென்றது. அன்றிலிருந்தே ஊழல் இருக்கத்தான் செய்கிறது என்று நிறுப்பிப்பதற்கன்று. நமது முன்னோர்கள்  எவ்வாறு ஊழலைக் கட்டுப்படுத்தினார்கள் என்று அறிந்து கொள்ளவே.

இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக ஒழிக்க முடியாத ஊழலை நம்மால் எப்படி ஒழிக்க முடியும் என்று கவலை கொள்ள வேண்டாம். ஊழலை விட பழமையான கொலை போன்ற  குற்றங்கள் இன்று குடுவையில் அடங்கிய பூதங்களாக அடைக்கப்பட்டிருக்கையில்  ஊழலிற்கு மட்டும் சிறப்பென்ன இருக்கின்றது. வரலாற்றிலும்,  இன்றும் ஊழல் குறைந்த அரசுகள் பல இருக்கின்றன. அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் கூட ஊழல்,  பல்கிப் பெருகி இருந்த சிங்கப்பூர் போன்ற நாடுகள் இன்று ஊழல் மிகக்குறைந்த நாடுகளாக திகழ்கின்றன. ஊழல் ஒழிக்க முடியாததல்ல.

நமது அலட்சியங்களில் தான்  ஊழல் உயிர் வாழ்கின்றது.

It is also okay to change the focus of the project http://writemypaper4me.org/ as long as the full thesis committee agrees to changes in the focus

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “ஊழல் – தொடர் 2 – ஊழல் முதன் முதலில் என்று தோன்றி இருக்கும்?”
  1. கார்த்திக் says:

    ஊழல் சிறு குழுக்கள் மாறி அரசாட்சி வந்தவுடன் தொடங்கி இருக்க வாய்ப்புண்டு. மக்களுக்கும் நிர்வர்கதிருக்கும் உள்ள இடைவெளி அதிகம் ஆக ஆக ஊழல் அதிகம் அடைந்திருக்கவேண்டும். ஒரு ஊருக்கு தலைவன் என்ற நிலையில் ஊழல் சற்று குறைவாகவே இருந்திருக்கும். பண்ட மாற்றுமுரையில் ஊழல் குறைவாக இருந்திருக்கும். பண்டத்திற்கு பொருள் அல்லது பணம் என்ற வந்தவுடன் ஊழல் பெருகியது. ஆக ஊலக்கு காரணம்
    ௧. மக்களுக்கும் ஆட்சியாளருக்கும் இருந்த இடைவெளி
    ௨. பண்ட மாற்றும் முறைமாறி பணம் மற்றும் பொருள் சேர்க்கும் முறை
    ௩. அரசுக்கு கீழ் கொண்டு வந்த சொத்துக்கள் அல்லது பொருட்கள்

    • Deepan says:

      எது தொடக்கம் எது முன்னொடி என்பது ஒரு வரலருக்கு நன்மை . ஆனால் இப்போது வூலலை ஒ ஒலிக்க ஒரு வலி வுன்டு .
      We have to keep a agent in every office and track the report in almost private manner and send him warnings regarding his actions and then if he is not listening . Just resigning them will be a solution

அதிகம் படித்தது