மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தோழர் திரு.தியாகு நேர்காணல்

ஆச்சாரி

Aug 1, 2011

சிறகு இதழுக்காக தாய்த்தமிழ் பள்ளியின் தாளாளர் தோழர் திரு.தியாகு அவர்கள் அளித்த நேர்காணல்.

நேர்காணல் நடத்தியவர் திரு செந்தில்குமார்.

எழுத்து வடிவத்தில் படிக்க பக்கத்தின் கீழே செல்லுங்கள்.

பாகம் 1

பாகம் 2

பாகம் 3

சிறகு மாத இதழுக்காக தமிழ் தேச விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் தாய்த் தமிழ் பள்ளியின் நிறுவனருமான தோழர் தியாகு அவர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

தோழர் உங்களுடைய தாய்த் தமிழ் பள்ளியைப் பற்றி சிறு விளக்கம் தாருங்கள்.
தமிழ் நாட்டில் தமிழ் வழிக் கல்விக்காக ஒரு தரமான கல்வி நிறுவனம் இல்லை என்ற குறை நெடுநாளாக இருந்துவருகிறது. இன்றளவும் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் தமிழ் வழிப் பள்ளிகளாகத்தான் நடைபெறுகின்றன. ஆனால் இந்த அரசுப் பள்ளிகளின் தரம் தமிழின் தரமாக தவறாக மதிப்பீடு செய்யப்படுகிறது. எனவே தமிழ் வழியில் ஒரு தரமான கல்வி நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்பது எம் நெடு நாளைய கனவு. அந்த அடிப்படையில் ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் சில தோழர்கள் சேர்ந்து தாய்த் தமிழ் கல்விப் பணி என்ற ஒரு இயக்கத்தை தொடங்கினோம். இதன் மூலம் பொது மக்களிடம் ஆளுக்கு ஒரு ரூபாய் என்று நன்கொடை திரட்டி தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளியை சென்னை அருகில் இருக்கும் அம்பத்தூரில் நிறுவினோம். தாய்த் தமிழ் மழழையர் தோட்டம், தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளி, இப்போது அது தாய்த் தமிழ் இடை நிலைப் பள்ளி என்ற எல்லையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த பள்ளி தமிழகம் எங்கும் தாய்த் தமிழ் பள்ளிகள் தொடங்கப்படுவதற்கு ஒரு ஊக்கமாக முன் உதாரணமாக அமைந்ததில் எங்களுக்கு பெருமை. தற்போது நாங்கள் இந்த இருபதாம் ஆண்டில் பள்ளியை விரிவு படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

தாய் மொழியில் கல்வி கற்பதின் அவசியம் என்ன என்று விளக்க முடியுமா?
பொதுவாக தமிழ்நாட்டிற்கு வெளியே அல்லது இந்தியாவிற்கு வெளியே இப்படி ஒரு கேள்வி கேட்கப்படுமா என்பதே ஐயத்துக்குரியது தான். ஒரு மருத்துவரிடம் சென்று குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் என்ன நன்மை என்று அந்த மருத்துவரிடம் கேட்டால் அந்த மருத்துவர் சிரித்து விடுவார். ஏனேன்றால் எந்த செயற்கை உணவும் தாய்ப்பாலுக்கு நிகரில்லை என்பதை உலகம் ஒப்பு கொண்டிருக்கிறது. தாய்ப்பாலுக்கு நிகரான ஒன்று தான் தாய் மொழி என்பது. தாய் மொழி என்பது தனி மனிதனை மட்டும் பொறுத்ததல்ல. அவன் வாழும் சமூகத்தையும் பொறுத்தது. பிரெஞ்சு நாட்டில் வீட்டு தாய் மொழி எதுவாக இருந்தாலும் நாட்டு தாய் மொழி என்பது பிரெஞ்சு மொழி தான். ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு தேசிய மொழி இருக்கிறது. அந்த மொழி தான் அம்மக்கள் கல்வி பயில்வதற்கான மொழியாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தமிழ் நாட்டில் மக்களின் வாழ்க்கைக்கு ஊடமாக இருக்கும் தமிழ் மொழி தான் கல்விக்குரிய மொழியாக இருக்க முடியும். வேறொரு மொழி இருந்தால் அது செயற்கையானது திணிக்கப்படுவது. எனவே தமிழ் நாட்டில் தமிழ் வழிக் கல்வி தான் இயல்பானது.

மக்கள் இவ்வாறு தாய் மொழியில் கல்வி கற்பதின் அவசியத்தை உணர்ந்து இருக்கிறார்களா?
நாம் எப்போதும் ஒன்றை நினைவில் வைத்து கொள்ளவேண்டும். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவேண்டும் என்பதை தாய்மார்கள் உணர்ந்திருக்கிறார்களா? இல்லை என்பதால் தான் அரசு தீவிரமாக தடுப்ப்பூசி போடுங்கள் என்று பரப்புரை செய்து வருகிறது. எனவே மக்கள் தாமாகவே இவற்றை எல்லாம் உணர்ந்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. இன்னொரு பக்கத்தில் இந்த நோக்கத்திற்கு எதிராக வணிக நோக்கத்தோடு ஒரு பரப்புரை நடத்தப்படுகிறது. தமிழ் வழிக் கல்வி பயனற்றது என்றும் அயல் மொழி கல்வியே ஆதயமானது என்று பரப்புரைகள் நடக்கும். பொது மக்கள் இதையெல்லாம் உணர்ந்திருப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது. எனவே அரசுடைய கடமை மக்களிடம் தாய் மொழி கல்வியின் பயன்களை எடுத்து சொல்ல வேண்டும். தமிழ் நாட்டில் தமிழ் வழிப் படித்தவர்களுக்கு வேளையில் முன்னுரிமை என்ற நிலை உறுதிப் படுமானால் மக்கள் தாமாகவே தாய் மொழிக் கல்விக்கு வருவார்கள். நமது கல்விச் சிக்கலையும் சமூக சிக்கலுடன் சேர்ந்த ஒரு கூறாகத் தான் பார்க்க வேண்டும். இங்கு வேலை வாய்ப்பில்லை. வெளிநாடு சென்றால் தான் வேலை கிடைக்கும். அதற்கு அயல் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணம் ஊட்டப்படுகிறது. எனவே தாய் மொழிக் கல்வியில் ஒரு தயக்கம் ஏற்படுகிறது. இது எளிதாக கடக்கக் கூடிய ஒன்று தான்.

உங்களின் இந்த முயற்சிக்கு மக்களின் ஆதரவு எப்படி உள்ளது?
நல்ல ஆதரவு இருப்பதால் தான் இவ்வளவு காலம் இதை நிலைத்து செய்து கொண்டிருக்கிறோம். எங்களிடம் செல்வம் இல்லை, பெருஞ்செல்வந்தர்களும் இல்லை, எங்களிடம் அரசும் இல்லை, அரசு உதவிகளும் இல்லை. இவை யாவும் இல்லாவிடினும் ஏழை மாணவர்கள் குறிப்பாக சமுகத்தில் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த குழந்தைகள் எங்கள் பள்ளியில் வந்து பயில்கிறார்கள். குடும்பம் குடும்பமாக வருகிறார்கள். அண்ணன் இடத்தை தங்கை வந்து பூர்த்தி செய்கிறார். அனைவரும் சேர்த்துக்கொள்ள கூடிய இடவசதி எங்களிடம் இல்லை. மக்களிடம் நல்ல ஆதரவு இருக்கிறது. இப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் படிப்பிலும் பண்பிலும் சிறந்தவர்களாக திகழ்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்ட பிறகு இப்போது நல்ல ஆதரவு இருக்கிறது.
தொடக்கத்தில் மாணவர்கள் இல்லாத காலத்தில் என் மகளைத் தான் முதல் மாணவியாக சேர்த்தேன். என் மகள் தாய்த்தமிழ் பள்ளியில் பயின்று, பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் பயின்று, பிறகு பொறியியல் படித்து தற்போது இன்போசிஸ் என்ற நிறுவனத்தில் கணினி பொறியாளராக பணியாற்றுகிறார். இதை போன்று பல மாணவர்கள் நீங்கள் எதையெல்லாம் ஆங்கில வழிக் கல்வியினால் அடைய முடியும் என்று எண்ணுகிறீர்களோ அதை எல்லாம் அடைந்திருக்கிறார்கள். மேலும் நல்ல ஒழுக்கத்துடன் இருக்கிறார்கள். இதை எல்லாம் பார்த்து தற்போது மக்களிடம் நல்ல ஆதரவு இருக்கிறது.

தாய்மொழியில் தரமான கல்வியை உருவாக்க முடியுமா?
தரமான கல்வி என்பதற்கான இலக்கணத்தை வகுத்துக்கொண்டு தான் நாம் இதை பேச வேண்டும். கல்வியின் நோக்கம் என்ன? கல்வியின் நோக்கம் பந்தயத்தில் ஓடி பரிசுப் பணம் பெற்று தரும் குதிரைகளை உருவாக்குவதல்ல. போட்டி நிறைந்த இந்த உலகத்தில் அடுத்தவனை அடித்து வீழ்த்துகிற சாமர்த்தியத்தை வளர்ப்பத்தல்ல. இதெல்லாம் கல்வியின் நோக்கம் போல் காட்டப்படுகிறது. நாம் அப்படி கருதவில்லை. கல்வி என்பது ஒரு மனிதனை முழு மனிதனாக்குவது. நாங்கள் கையில் எடுத்திருக்கும் தொடக்க கல்வி என்பது பிறக்கும் போது ஊனக்கண் திறந்து பிறக்கிற குழந்தையை உரிய வயதில் அறிவுக்கண் திறக்கிற முயற்சி. கல்வி கண் போன்றது. அந்த கண்ணைத் திறக்கிற முயற்சி இது. ஏன் எதற்கு என்று கேள்வி எழுப்பக் கூடியவனாக வளர வேண்டும். அறிவியல் கண்ணோட்டத்தையும், தன்னை சூழ்ந்திருக்கிற மனிதர்களை, உயிர்களை இயற்கையை நேசிக்கிற மனித நேயத்தையும் இயற்கை நேயத்தையும் வளர்க்க கூடியதாக கல்வி இருக்க வேண்டும். அதற்கு பெயர் தான் தரமான கல்வி. தரமான கல்வியை தமிழில் தரமுடியுமா என்று கேட்பதைக் காட்டிலும் தமிழில் தான் தரமுடியும் என்று வலியுறுத்துவது தான் இன்றியமையாதது.
கல்வி பண்பாடு தொடர்பு உடையது என்றால் தமிழ்நாட்டில் விழைந்திருக்கிற செழிப்பான பண்பாட்டை இந்த கல்வியின் வாயிலாக குழந்தைக்கு ஊட்ட வேண்டும். “கற்க கசடு அற கற்பவை! கற்றபின் நிற்க அதற்குத் தக” என்பதை நீங்கள் எந்த மொழியில் அந்த குழந்தைக்கு சொல்லப் போகிறீர்கள்? “பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அறத்தை நீங்கள் எந்த மொழியில் அந்த குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கப் போகிறீர்கள்.
இரண்டாவதாக அறிவியல் கண்ணோட்டம். அது சிந்தனைத் திறன் சார்ந்தது.
சிந்தனை திறனை உருவாக்க கூடிய மொழி நமக்கு தமிழ் தான். நாம் ஒரு மொழி சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு பிற மொழியில் கற்பதினால் ஏற்படும் விளைவுகளை நாம் கண்கூடாக பார்க்கிறோம். ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் குழந்தைகள் அரைகுறை தமிழையும் அசட்டு ஆங்கிலத்தையும் கற்று வைத்து கொண்டு மதிப்பெண் குறைந்து விட்டது என்று தற்கொலை செய்து கொள்கின்ற அளவிற்கு போகிறார்கள். அவர்களுக்கு ஒரு துணிவை, திடத்தை வாழ்க்கையோடு போராடுகிற தெளிவை தற்போது இருக்கின்ற கல்வி முறை தரவில்லை.
எனவே தான் சொல்கிறோம் தரமான கல்வியை தாய் மொழி கல்வியில் மட்டும் தான் தர முடியும்.

தாய் மொழியில் கல்வி கற்பதன் மூலம் ஆங்கிலத்தில் சரளமாக பேச இயலுமா?
தமிழ் வழிக் கல்வி என்று நாம் சொல்வதை தமிழை மட்டும் கற்றல் என்று புரிந்து கொள்ளக் கூடாது. உலகெங்கும் தாய் மொழியோடு ஒரு அயல் மொழியையும் சேர்த்து கற்கிற ஒரு முறை இருக்கிறது. வாய்ப்பும் தேவையும் இருக்குமானால் மூன்றாவதாக கூட ஒரு மொழியை கற்றுக் கொள்ளலாம்.
பிரெஞ்சு நாட்டில் குழந்தைகள் முதல் நான்காண்டு காலம் முன் பள்ளி பருவத்திலும் பின்னர் ஐந்தாண்டு காலம் தொடக்க கல்வி முடிகிற வரைக்கும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே கற்கிறார்கள். ஆறாம் வகுப்பிலிருந்து தான் ஏதேனும் ஒரு ஐரோப்பிய மொழி கற்று தரப்படுகிறது.
எனவே தமிழ் நாட்டில் தமிழை முதல் மொழியாக கற்பதோடு, இரண்டாவதாக இன்னொரு மொழி கற்பது என்பது கல்வி முறைக்கு தேவையான ஒன்று. இங்கு முதல் மொழி என்று ஒரு மொழியை அழைப்பதற்கும் இரண்டாவது மொழி என்று ஒரு மொழியை அழைப்பதற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளவேண்டும். வரிசையில் முதலில் நிற்பவன் முதாலமவன், இரண்டாவது நிற்பவன் இரண்டாமவன், இருவரின் இடத்தையும் மாற்றிக் கொண்டால் முதாலவன் இரண்டாமவனாகி விடுவான். மொழியில் அப்படி இல்லை, இதற்கு வேறு பொருள் இருக்கிறது. தமிழ் நாட்டில் ஒருகாலத்தில் ஆங்கிலத்தை முதல் மொழி என்றும் தமிழ் அல்லது சமஸ்கிருதம் அல்லது இந்தியை இரண்டாம் மொழி என்று அழைத்துக் கொண்டிருந்தனர். இதை தமிழரிஞர்கள், கல்வியாளர்கள் மறுத்த பிறகு பெயரை மட்டும் மாற்றிவிட்டார்கள். இப்போது தமிழ் முதழ் மொழி, ஆங்கிலம் இரண்டாம் மொழி.
பயிலும் முதல் மொழியும் பயிற்று மொழியும் (medium of instructions) தமிழாக இருக்க வேண்டும். இது தான் கல்வி மொழி தமிழாக இருக்க வேண்டும் என்பதர்கான பொருள். தமிழ் வழியில் அறிவியலை பயில்வது போன்று, சமூகவியல் பயில்வது போன்று தமிழ் வழியில் ஆங்கிலத்தையும் படிக்கலாம். இதற்கு தான் இரண்டாவது மொழி என்று பெயர். எப்படி தமிழில் ஒரு அடிப்படை தேர்ச்சி இல்லாமல் தமிழில் மற்ற பாடத்தை கற்க இயலாதோ அதே போன்று தான் தமிழில் அடிப்படை தேர்ச்சி இல்லாமல் தமிழ் வழியில் ஆங்கிலத்தை கற்க இயலாது. ஆங்கிலேயர்கள் ஆங்கிலம் கற்கும் வழிமுறை வேறு. தமிழர்கள் ஆங்கிலம் கற்கிற வழி முறை வேறு. நீங்கள் இதை திருப்பி பாருங்கள், ஆங்கிலேயர்கள் தமிழைக் கற்றால் அதே வழி முறையில் தமிழைக் கற்பார்களா? கற்க மாட்டார்கள். அவர்கள் முதலில் ஆங்கிலத்தை இயற்கையான முறையில் கற்கிறார்கள். அது தான் முதல் மொழிக்குரிய வழி முறை. ஒரு குழந்தைக்கு நாம் அம்மா என்ற சொல்லை கற்றுக் கொடுக்கும் போதே அந்த குழந்தைக்கு அம்மாவைத் தெரியும். நாம் எழுத்து கூட்டுவதற்கும் உச்சரிப்பதற்கும் தான் சொல்லிக் கொடுக்கிறோம். இந்த அம்மாவை அந்த குழந்தை தெளிவாக கற்றுக் கொண்ட பிறகு நீங்கள் ஆங்கிலத்தில் மதர் (mother) என்ற சொல்லை சொல்லி கொடுக்கும் போது மதர் என்றால் அம்மா தான் என்று எளிதாக கூறி விடலாம். இது தான் முதல் மொழிக்கும் இரண்டாம் மொழிக்கும் இருக்கின்ற வேறுபாடு. இது சொற்களுக்கு மட்டுமல்ல இலக்கண கட்டமைப்பிற்கும் அப்படிதான். இந்த முறையில் தான் மொழிக் கல்வி அமைய வேண்டும். அறிவியல் முறையில் மொழி கற்றல் என்பது இது தான். இந்த அறிவியலை மீறுகிற ஒரு நடைமுறையை இப்போது வைத்திருக்கிறார்கள். மழலை நிலையில் தொடங்கி ஆங்கிலத்தை கொண்டு வருகிறார்கள். இது தவறு. ஆங்கிலம் பயிலட்டும் பயில வேண்டிய முறையில் பயிலட்டும். இவ்வாறு பயின்றால் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சியைக் கொடுக்கும். சர்ச்சிலின் ஆங்கில உரையில் இலக்கன பிழை இருப்பதாக சுட்டிக் காட்டிய சீனிவாச சாஸ்திரி வலங்கைமான் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி கற்று தான் ஆங்கிலம் பயின்றார். இது தான் ஆங்கிலம் கற்பதற்கு சரியான முறை.

தாய் மொழியில் உயர் கல்வி கொடுப்பது சாத்தியமா? அப்படி உயர் கல்வி உருவாக்க என்ன வழி?
தமிழால் முடியுமா என்று கேட்டால் தமிழால் முடியும். தமிழர்களால் முடியுமா என்று தான் நாம் பார்க்கவேண்டும். உயர்கல்வியை தமிழில் கொடுப்பதற்கு என்ன தடை? தமிழரிஞர்கள், துறைசார் வல்லுனர்கள் ஏற்கனவே நாங்கள் தமிழில் பொறியியல் கற்று தருகிறோம், மருத்துவம் கற்று தருகிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள். கலைச் சொற்கள் இல்லை என்று குறை கூறி விடக் கூடாதென்று தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் அருளியார் அவர்கள் ஒரு அருஞ்சொற்பொருள் அகராதியையே உருவாக்கி இருக்கிறார். ஆங்கிலத்தில் நல்ல புலமை தேர்ச்சி பெற்றவர்கள், ஆங்கில வழியிலேயே பொறியியல் மருத்துவம் பயின்றவர்கள், ஆங்கில வழியிலேயே பொறியியல் மருத்துவம் கற்று கொடுப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள், அத்தகைய பேராசிரியர்களை உங்களுக்கு காட்டுகிறேன், அவர்கள் தமிழ் வழியில் தான் இந்த கல்வி இருக்க வேண்டும் என்று உறுதியாக சொல்வது மட்டுமல்ல, தமிழில் கற்பிக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.
தமிழ் நாட்டில் ஒரு கட்டத்தில் பொறியியல் கல்வியை தமிழ் வழியில் கொடுப்பது என்று திட்டமிட்டு, அதற்கான மாணவர்கள் பதிவு, ஆசிரியர்கள் சேர்க்கை, பாடப் புத்தகம் தயாரிப்பு என்று எல்லா வேலைகளும் நடந்தன. ஆனால் அனைத்திந்திய தொழில் நுட்ப கல்வி மண்டம் இதை அனுமதிக்க மறுத்துவிட்டனர். அவர்கள் கூறிய காரணம் நீங்கள் தமிழ் நாட்டில் தமிழில் பொறியியல் கற்று கொடுத்தால் அந்தந்த மாநிலத்தில் அவர்களது மொழியில் பொறியியல் கற்றுக் கொடுக்க முன் வந்து விடுவார்கள். அதனால் இந்திய ஒருமைப்பாடு பாதிக்கப்படும். தாய் மொழிக் கல்விக்கு எதிராக இந்திய ஒருமைப்பாடு இருக்கிறது. இந்திய ஒருமைப்பாடா குழந்தையின் கல்வி முக்கியமா என்றால் இந்திய ஒருமைப்பாடு என்று அவர்கள் முடிவிற்கு வந்துவிட்டார்கள். தற்போது இது தான் தடையாக இருக்கிறது.

தமிழில் கல்வி கற்பவர்கள் ஆங்கிலத்தில் கல்வி கற்பவர்களை விட வேலை வாய்ப்பில் பின் தங்க மாட்டார்களா?
ஒரு சமுகத்தில் வேலை வாய்ப்பு என்பதே அந்த சமுக அமைப்பைப் பொறுத்தது. அந்த சமுகத்தின் பொருளியல் தொழிலியல் கொள்கையைப் பொறுத்தது. இது நேரடியாக அரசியல் தொடர்பான ஒரு சிக்கல். படஈக்கும் மொழியை மாற்றுவதன் மூலம் அரசியல் சிக்கலை மாற்றிவிட முடியாது. தமிழ் நாட்டில் படித்தவர்களை எல்லாம் நாடு கடுத்துவதன் மூலம் வேலையின்மை சிக்கலை தீர்த்துவிட முடியுமா என்றால் முடியாது. ஆங்கிலம் படித்த ஆங்கில மொழி பேசுகிற நாடுகளில் வேலையின்மை சிக்கல் இல்லையா? முதலாளித்துவ சமுக அமைப்பில் வேலையின்மை என்பது உடன் பிறந்த நோய் அது. இது மொழியைப் பொறுத்தது அல்ல.
தமிழ் நாட்டில் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்றால் ஒன்று தமிழ் நாட்டில் கிடைக்கும் இயற்கை வளங்கள் மீது தமிழ் நாட்டு மக்களுக்கு இறையான்மை வேண்டும். இயற்கை வளங்களின் அடிப்படையில் தான் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். இரண்டாவது தொழில் வளர்ச்சிக்கான கொள்கை, எத்தகைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது, உழைப்பு முனைப்பு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதா அல்லது மூலதன முனைப்பு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதா என்று கொள்கையை வகுக்கிற இறையான்மை அதிகாரம் தமிழ் நாட்டிற்கு இருக்க வேண்டும். இது இல்லை என்றால் நாம் எந்த மொழியில் படித்தாலும் வேலை வாய்ப்பு சிக்கலை தீர்க்க முடியாது.
தாய் மொழிக் கல்வியில் கற்கும் மாணவர்கள் சமுகத்தை நன்றாக புரிந்து கொண்டு இது போன்ற சமுக சிக்கலை தீர்ப்பதற்கு போராடுவார்கள். எங்கள் பள்ளியின் ஓய்வுப் பெற்ற தலைமை ஆசிரியர் சுடர்விழி, வழக்கமாக சொல்வார், “தாய்த்தமிழ் பள்ளியில் படிகின்ற மாணவர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா என்று கேட்கிறார்கள், ஒன்று அரசு இவர்களுக்கு வேலை கொடுக்கும், அல்லது கொடுக்கவில்லையெனில் இவர்கள் அரசுக்கு வேலை கொடுப்பார்கள்.”
வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கு ஆங்கிலம் தேவை தானே என்று கேட்கிறார்கள், அவர்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு வேலை தேடி சென்றுவிடட்டும். தமிழ் நாட்டில் தமிழ் வழியில் படித்தால் மட்டும் தான் வேலை என்பதை நாம் சட்டமாக்குவோம். அப்போ இந்த சிக்கல் தீர்ந்துவிடும்.

அரசு உங்களின் பள்ளிக்கு ஏதாவது உதவி செய்கிறதா?

இதுவரை எங்களுக்கு அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடையாது. அரசு ஒப்புதல் பெற்று நடத்த வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தார்கள். அந்த ஒப்புதலை பெறுவதற்கு நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். தமிழ் நாட்டில் கல்வித்துறையில் இலஞ்ச ஊழல் மலிந்து கிடக்கிறது. ஒரு பள்ளியை பார்வையிடுவதற்கு கல்வி அதிகாரி வருகிறார் என்றால் அவருக்கு நாம் வாகனம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், அவருக்கு கையில் பணம் கொடுத்து அனுப்ப வேண்டும். அரசுப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியை பள்ளியை பார்வை இடுகிற கல்வி அதிகாரிகளுக்கு உரையில் போட்டு கொடுப்பதற்கு தான் பயன்படுத்தப் படுகிறது. கட்டட சான்றிதழ், தீயணைப்பு சான்றிதழ், சுகாதார சான்றிதழ் என்று ஒவ்வொரு சான்றிதழுக்கும் போராடி தான் நாங்கள் அரசு ஒப்புதலையே பெற முடிந்தது.
அரசிடம் இருந்து வரும் உதவி என்பது நிபந்தனை அற்றதாக இருக்க வேண்டும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர்கள் ஒப்புதல் அளிக்கும் போதே அரசிடம் உதவி கோர மாட்டோம் என்று உறுதி மொழி கொடுக்க நிர்பந்திக்கிறார்கள். அரசிடம் உதவி கேட்பது ஒரு குற்றமா? தமிழ்த் தொண்டிற்கு தமிழ் நாட்டு அரசிடம் உதவி கோருவதை ஏன் ஒரு குற்றமாக்குகிறார்கள்? அவர்களுக்கு உதவுகிற எண்ணம இல்லை.

உங்களின் இந்த கல்விப் பயணத்தில் ஒரு இனிமையான அனுபவத்தை சொல்ல முடியுமா?
என் தந்தை ஒரு ஆசிரியர். ஆசிரிய பணியை உயர்வாக மதித்தவர். தன மக்களில் யாரேனும் ஒருவராவது ஆசிரியராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். எனது எந்த அரசியல் பணியையும் அவர் மதிக்க மாட்டார். ஆனால் இந்த கல்விப் பணியை மற்றும் அவர் உயர்வாக மதிக்கிறார். அவருக்கு தொண்ணூற்றி ஐந்து வயதாகிறது. இன்றும் என்னை பார்த்த உடன் குடும்பத்தினரைப் பற்றி விசாரிப்பதற்கு முன் பள்ளி நலமா என்று தான் விசாரிப்பார்.
கல்விப்பணி என்பதை நாம் ஒரு இயக்கமாக கொண்டு செல்லவேண்டும். இந்திய தேசிய இயக்கம் தனக்கான ஒரு கல்வி இயக்கத்தை வைத்திருந்தது. தேசிய இயக்கம் என்பது போராடுவதும் அழிப்பது மட்டுமல்ல. அது முக்கியமாக ஆக்குவது. அதே போன்று தமிழ் தேசிய இயக்கத்தின் ஒரு கூறாக தமிழ் தேசிய கல்வி முறையை அதற்கான நிறுவங்களை நாம் இப்போது இருந்தே கட்டி எழுப்ப வேண்டும். அந்த நோக்கத்திலே தான் நாம் இந்த பணியிலே ஈடுபட்டிருக்கிறோம். இதற்காக நாங்கள் நீண்ட நடைப் பயணங்கள் செய்கின்ற போது சமிபத்தில் 44 பேர் எரிக்கப்பட்ட கீழ வெண்மணி கிராமத்திற்கு சென்றிருந்தோம். அந்த மண்ணில் நாங்கள் நிதி சேர்க்க வந்திருக்கிறோம் என்று உடன் ஒரு விவசாய தொழிலாளி பெண் தான் அன்று கூலியாக வாங்கின நெல்லை கொண்டு வந்து எங்கள் துண்டை விரிக்க சொல்லி கொட்டினார். இந்த மக்களிடம் தான் தமிழும் தமிழ் நாடும் பாதுகாப்பாக இருக்கப் போகின்றன. இவர்களை நம்பித்தான் நாங்கள் செயல்படுகிறோம்.
இந்த பள்ளிக்கு நான் செல்லும் ஒவ்வொரு நாளுமே எனக்கு இனிய அனுபவம் தான். இந்த பள்ளி ஒரு குடும்பம். குழந்தைகள் எல்லாம் ஆசிரியர்களை அக்கா அத்தை என்று அழைப்பார்கள். ஆசிரியர் ஒருவருக்கொருவர் சகோதர அல்லது தாய் மகள் உறவோடு பழகுவார்கள். இந்த குடும்பத்திற்கு தலைவனாக இருப்பது மிக இனிமையான அனுபவம். அதை நான் தொடர்ந்து அனுபவிக்கிறேன்.

உங்களது இந்த பள்ளிக்கு ஏதேனும் இடர்பாடுகள் சந்தித்தீர்களா?
இந்த பள்ளிக்கான இடர்பாடுகள் என்பதே தமிழ் நாட்டில் தமிழ் வழிக் கல்விக்கான அதே இடர்பாடுகள் தான். இந்த இடர்பாடுகளை நாம் இரண்டு வகையாக பிரித்து விடலாம். ஒன்று ஏமாற்றுபவர்கள் தரும் இடர்பாடுகள், இன்னொன்று ஏமாறுபவர்கள் தரும் இடர்பாடுகள். லாட்டரி சீட்டு விற்பவர் நாளையே நீங்கள் இலட்சாதிபதி ஆகலாம் என்று கூவி விற்கிறார். இதை நம்பி பலர் வாங்குகிறார்கள். இவர்களில் யாரோ ஒருவருக்கு அது உண்மையாகப் போகிறது. மற்றவர்களுக்கு எல்லாம் அது உண்மையாகப் போவதில்லை. ஆங்கில வழிக் கல்வியும் அப்படித்தான். உங்கள் மகன் கலிபோர்னியாவிற்கு போக வேண்டுமா என்று கூறி அழைக்கிறார்கள். ஒரு சிலர் நிச்சயமாக கலிபோர்னியாவிற்குப் போகப்போகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அது பொய். இதில் நாம் ஏமாந்து போகிறவர்களையும் ஏமாற்றுவர்களையும் நாம் சமப்படுத்தி பேசக்கூடாது. ஏமாந்து போகிறவர்களாக ஏராளமான தமிழ் மக்கள் இருக்கிறார்கள். அவர்களது மனத்தடை தான் எங்களுக்கு மிகப் பெரிய தடை. பணத்தடை பெரிதல்ல, அதை கடப்பது எளிது, அனால் இந்த மனத்தடை எங்களுக்கு இன்றைக்கும் பெரிய தடை தான். ஏனென்றால் ஒரு பெரிய நகரத்தில் சில நூறு பேர்களை சேர்த்து இந்த வழிக்கு கொண்டு வருவதையே நாம் வெற்றியாக கருத வேண்டிய அளவிற்கு இந்த மனத்தடை வலுவாக உள்ளது. மக்களுக்கு ஒரு செய்தி புரியவில்லை என்பதை விட நாம் மக்களுக்கு புரியும் படி மக்களிடம் கூறவில்லை என்று தான் நாங்கள் கருதுகிறோம். இந்த தடையை மக்களுக்கு புரியவைத்து வெல்வோம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இந்த பள்ளியைப் பொறுத்த வரை உங்களுக்கு எதிர்கால திட்டங்கள் இருக்கிறதா?
இந்த பள்ளி என்பது ஒரு அடையாள முயற்சி தான். இந்த அடையாள முயற்சி எனபது மொத்த தமிழ் நாட்டிற்கு வழி காட்ட வேண்டும் என்பதற்காகத்தான். அனால் இதுவே தமிழ்நாட்டின் பொதுக் கல்வி முறையாக வரவேண்டும் என்றால் அதற்கு சில பள்ளிகள் முழைப்பது மட்டும் போதாது. அதற்கு தமிழ் நாட்டிற்கான ஒரு புதிய கல்வி முறையை உருவாக்க வேண்டும். அது அரசியல் சமுக அமைப்பு தொடர்பானது.
இந்த பள்ளியைப் பொறுத்த வரை இதை நாம் இன்னும் ஒரு சிறந்த அடையாள முயற்சியாக நாம் மாற்ற முடியும். என்னுடைய கனவு தாய்த்தமிழ் தொடக்கப் பள்ளி, இடை நிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளி, தாய்த்தமிழ் கலை அறிவியல் கல்லூரி, தாய்த்தமிழ் பொறியியல் கல்லூரி, தாய்த்தமிழ் மருத்துவ கல்லூரி, தாய்த் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் என்று வளர்ந்து செல்லுமானால் அது மிகவும் பெருமைப் படக்கூடியது. இது என்னை மட்டும் சார்ந்ததல்ல, என்னுடைய தோழர்களுடைய முயற்சி, மக்கள் அளிக்கிற ஆதரவு, உங்களைப் போன்ற ஊடகங்கள் அளிக்கிற ஆதரவு இதை எல்லாம் பொறுத்து நாம் அவ்வாறு வளர்த்துச் செல்ல முடியும் என்று நம்புகிறேன்.

உங்களின் பணிகளுக்கிடையே சிறகு இதழுக்கு நேர்காணல் அளித்ததற்கு மிக்க நன்றி.
நன்றி வணக்கம்.

Whatever is essential for an effective presentation should be on hand in the room where the meeting will be held guidelines for essay writing

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தோழர் திரு.தியாகு நேர்காணல்”

அதிகம் படித்தது