மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நிலத்தடி நீரும் விற்பனைக்கு

ஆச்சாரி

Jan 15, 2013

சென்னை மாநகரம். ஒரு கோடி மக்களின் வசிப்பிடம். ஒரு ராட்சசச்  சக்கரம் இடைவிடாமல் சுழல்வதுபோல இந்நகரம் கணப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கிறது. தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் இருந்தும் கூட ஒரு புதுவாழ்வைத் தேடி தினமும் பலர் சென்னைக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள். அனைவரையும் தாங்கிப்  பிடித்தபடி இந்நகரமும் முக்கி முனகி தனது ராட்சச பாதங்களை தட்டு தடுமாறி வைத்தபடி நகர்ந்து கொண்டும், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து கொண்டும் இருக்கிறது.

இந்நகரத்தின் கூட்ட நெரிசலில் நாமும் சிக்கிக்கொண்டு ஏதோ ஒரு வகையில் நம்மால் ஆன கைங்கர்யத்தைச்  செய்து, இந்தச்  சென்னை மாநகரத்தை வசிக்க முடியாத நரகமாக மாற்றிக்கொண்டே இருக்கிறோம். போதிய அளவுக்குக்  காற்றை மாசுபடுத்தியாகி விட்டது. சென்னை நகரத்தின் இமாலய வளர்ச்சி என்ற பெயரில், அதனை ஒட்டியுள்ள கிராமங்களை புறநகர் பகுதிகளாக்கி, அதன் விவசாய சதுப்பு நிலக்காடுகளை மண்கொண்டு மூடி, அடுக்கு மாடி எனும் பெயரில் கான்கிரீட் காடுகளாக  மாற்றப்பட்டு விட்டது. சாலை வசதி என்ற பெயரில் அனைத்து மண் சாலைகளையும் தார் பூசி, கான்க்ரிட் கலவையோடு சேர்த்துக்கட்டி அழகாக்கி, மழைநீர் நிலத்தடியில் செல்லாமல் வழி செய்தாகிவிட்டது. நிலவளம், மண்வளம் மற்றும் காற்று போன்றவற்றை காலி செய்துவிட்டு, இப்போது, கொஞ்சம் மிச்சம் மீதி இருக்கும் நீர் வளத்தையும் நிர்மூலமாக்க நாம் வெகு ஆர்வமாய் புறப்பட்டுவிட்டோம்.

நமக்கு தேவை பணம். அதை எவ்வாரெல்லாம் சம்பாதிக்கலாம் என்ற வரைமுறை தேவை இல்லை. பணம் சம்பாதித்தால் மட்டும் போதும். தமது சொந்த வயலின் நிலத்தடி நீரை, ஒரு லாரி லோடு வெறும் நூறு ரூபாய்க்கு விற்று நம்மில் ஒருவர்,  பணம் சம்பாதிக்கிறார். அந்த ஒரு லோடு லாரி தண்ணீரை ரூபாய் இரண்டாயிரத்துக்கு அடுக்குமாடி குடியிருப்புக்களுக்கும், உணவகங்களுக்கும் மற்றும் மருத்துவமனைகளுக்கும் விற்று நம்மில் இன்னொருவர், பணம் சம்பாதிக்கிறார். சட்ட விதிமுறைகளை மீறி செயல்படும் இந்த இருவரிடமும் மிரட்டிக்  கையூட்டு பெற்று நம்மில் மற்றொருவர், எளிதாகச்  சம்பாதிக்கிறார். இப்படியாக நம்மில் பலர் எப்படியோ நன்றாக வசதியாக வாழ்கிறார்கள்.

இவ்வாறு ஒரு நாளைக்கு 12000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள், சுமார் பதினேழு மில்லியன் லிட்டர் தண்ணீரை சென்னை நகரை ஒட்டியுள்ள கிராமங்களின் நிலத்தில் இருந்து உறிஞ்சி எடுத்து, இந்த மாநகரத்தின் பயன்பாட்டுக்காகக்  கொட்டிக் கொண்டு இருக்கின்றன. அரசாங்க உரிமம் பெற்ற ஒருவர் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டுமே மின் மோட்டார் மூலமாக நீரேற்றம் செய்யவேண்டும். ஆனால், உண்மையில், இவர்கள் சுமார் இருபது மணிநேரம் இடைவிடாது நிலத்தில் இருந்து தண்ணீரை உறிஞ்சுகிறார்கள். இதை யாரும் செய்யலாம். உரிமம் பெற்றவர் பெறாதவர் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது. இவ்வாறு சென்னைக்கு நீரை அள்ளி அள்ளி வாரி இறைக்கும் பல கிராமங்கள் இப்போது மலடாகி விட்டன. அவற்றுள் செயின்ட் தாமஸ் மவுண்ட் (பரங்கிமலை) பகுதி முக்கியமானது. நிலத்தடி நீர் ஊறிக் கிடந்த இந்தப் பகுதி இப்போது கிட்டத்தட்ட வறட்சிப் பிரதேசமாகிவிட்டது. இதே நிலை தான், மாம்பாக்கம், சிட்லபாக்கம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம் பகுதிகளுக்கும். தென்சென்னைப் புறநகர் பகுதிகள் அநேகமாக நிலத்தடி நீர் இல்லாத காய்ந்த படிம பாறைகளாய் மாறி வெகுநாளாகிவிட்டன.

இப்படியே போனால் என்ன ஆகும்? நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. பொதுவாக, நிலத்தின் அடியில், நீர் அடுக்கு(water table)க்கு சற்று கீழே, சில நூறு அடிகளில் நிலத்தடி நீர் பொதிந்து கிடக்கிறது. இந்த நிலத்தடி நீரை அக்யூபர் (aquifer) என்று நீர்வள நிபுணர்கள் சொல்கிறார்கள். அதற்கு கீழே, ஒரு அடுக்குக்கு பிறகு, ஆழ்நிலை உப்புத் தண்ணீர் களம்(deep salty aquifer) உள்ளது. சில நூறு அடிகளில் இருக்கும் நிலத்தடி நீரை, நாம் முற்றிலுமாக இறைத்துவிட்டால், அந்த இடத்திற்கு ஆழ்நிலை உப்புத் தண்ணீர் வந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்த தண்ணீர் கடல் நீர் போலத்தான். இதனை நமது அன்றாட வாழ்வுக்கு பயன்படுத்துவது மிகவும் கடினம்.

காவேரித் தண்ணீர் இல்லாமல் தமிழக டெல்டா பகுதிகள் காய்ந்து கிடப்பதைக் கூட நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், நமது நிலத்தடி நீர் வளத்தை நாமே மோசம் செய்து அழித்துவிட்டு, நீர் ஆதாரத்துக்கு நாம் நாளை என்ன செய்யப் போகிறோம்? நகரம் மாநகரமாகி இப்போது நரகமாகிவிட்டது. நம்மிடம் இருக்கும் மிச்சசொச்சம் வளத்தையும் காசுக்கு விற்றுவிட்டு பின்பு, நிலமும் தரிசாகி, நிலத்தடி நீரில் உப்புநீர் கலந்து, அதுவும் உபயோகப்படுத்தப் படமுடியாத அளவுக்கு மாறிய பின், நல்ல நீருக்கு நாம் எங்கே போவது? கடல் நீரைச் சுத்திகரிக்கத்  தேவையான பணம் நம்மிடம் இருக்கிறதா? என்றால் இல்லை. தற்போது  பெட்ரோல், டீசல் போல தண்ணீரையும் இறக்குமதி செய்யப் போகிறோமா?

தென்சென்னையில் மட்டும் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட குடிநீர்த் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இவர்களது உற்பத்திக்காக, தனியார் நிலங்களில் சட்ட விரோதமாக நாள் முழுவதும் ஜெனரேட்டர் மூலமாக தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதற்கெல்லாம் கேட்பாரே கிடையாது. நமது அரசிடமும் இந்த நீர்க் கொள்ளையை தடுக்கக் கூடிய எந்த கொள்கையும், செயல்முறைத் திட்டமும் இல்லை. சில ஆயிரம்  ரூபாய் நோட்டுக்களை வேண்டியவர்களுக்கு வீசி, செய்ய வேண்டியதைச் செய்து, இந்தக்  கொள்ளை எந்த பாதகமும் இன்றி நடந்து கொண்டேயிருக்கிறது.

சென்னை மாநகரம் மட்டுமல்ல, தமிழ் நாட்டின் சிறு நகரங்கள் உட்பட அனைத்திலும் இந்த பிரச்சினை இருக்கிறது. ஆனால், இந்த சிக்கலின் தீவிரத்தைத் தான் யாரும் புரிந்துகொள்ள வில்லை. நமக்கு எப்போதும் தும்பை விட்டு வாலைப்  பிடித்துத் தானே பழக்கம்.

கடுங்கோடை காலம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டில் எந்தப்  பருவமழையும் நான்கு நாட்களுக்கு மேல் பெய்யவில்லை. கடுமையான குடிநீர் பற்றாக்குறையை நாம் சந்திக்க இருக்கிறோம். இந்த ஜனவரி மாதத்தின் தொடக்கத்திலேயே சமவெளிகளில், கோடை காலங்களில் அடிக்கும் வெயில் காய்கிறது. இதற்கு குறைந்த பட்சம் நாம் செய்ய வேண்டியது என்ன?

 கடந்த காலங்களில் மழைநீர் சேகரிப்பு முறையை கடுமையாக அமல்படுத்தியதைப் போல, இப்போதும், நிலத்தடி நீர் காக்கும் முறையை, அது எவ்வகை நீராயினும், நிலத்தில் அவை தங்கிச் சேரும் வகையில் பாதுகாக்கும் வழிமுறையை அறிவித்து, பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோரலாம். கடுமையான விதிகளை கொணர்ந்து, சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்கலாம். ஆற்றுப் படுகைகளில் தேவையான அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவது எவ்வாறு கடும் குற்றமாகக் கருதப்படுகிறதோ, அதேபோல இந்த நீர்க் கொள்ளைக்கும் கடும் தண்டனை அளிக்கும் ஆணையை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக்  கிணறுகள், ஆழ்துளைக்  கிணறுகள், வயல்வெளி விவசாயக்  கிணறுகள் போன்ற அனைத்தையும் தமிழக அரசு முறையாகப்  பதிவு செய்யவேண்டும். அதைகொண்டு, மிக விரிவான பராமரிப்பு மற்றும் நீர்ப் பாதுகாப்புக்கான திட்டத்தை அறிவித்து, அவற்றைத் தொடர்ந்து  கண்காணிப்புக்கு உட்படுத்தினால் ஒழிய, இந்த நீர் திருட்டைக் கட்டுப்படுத்தமுடியாது.

நீர் ஆதாரம் வாழ்வின் ஆதாரம்.

நீர் மேலாண்மை வாழ்வின் மேன்மை.

Also, it https://www.college-homework-help.org/ might be necessary to plan and to conduct interviews

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நிலத்தடி நீரும் விற்பனைக்கு”

அதிகம் படித்தது