மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புதுதில்லி அவலமும், தூக்குத் தண்டனைக்கு ஆதரவான குரல்களும்

ஆச்சாரி

Jan 15, 2013

புது தில்லி அவலம் நாடு முழுதும் அந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக  பெருத்த ஆதரவையும், எதிர்ப்பையும் கிளப்பி விட்டிருக்கிறது. அந்த அவலம் நிகழ்ந்த விதம் – 31 கி.மி. ஓடிய பேருந்தினுள் ஒரு பெண்ணும், ஆணும் தாக்கப்பட்டு ஆடைகளைந்து தூக்கி வீசப்பட்ட விதமே அத்தகைய போராட்டங்களை ஏற்படுத்தியது. ஏதேனும் மற்றொரு இடத்தில் இது போன்று நடந்திருந்தால் அப்போராட்டங்கள் நடக்க வாய்ப்பின்றி வழக்கம் போல் பார்க்கப்பட்டிருக்கும். அந்த விதத்தில் போராட்டக்காரர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தவியலாது. அதே வேளை  இது  பாலியல் தாக்குதல் என்ற பிரச்சினையையும் தாண்டி அதற்கடுத்த பிரச்சினையான தூக்குத் தண்டனை தேவையா?  இல்லையா ? என்பதையும் தொட்டுச் சென்றுள்ளது. சந்தடிச் சாக்கில் தூக்குத் தண்டனையின் ஆதரவாளர்கள் அது தேவையே என்று முழங்கியிருக்கின்றனர்.

ஆனால் இன்னுமொருமுறை தில்லி அவலம் போன்று ஒன்று இடம்பெறாமலிருக்க வேண்டுமென்றால் தூக்குத் தண்டனையால் அது சாத்தியமா என்று உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அனைவரும் சிந்தித்துப் பார்க்கத் தவறி விடுகின்றனர். நாகரிக சமுதாயம் தோன்றிய காலந்தொட்டு இறப்புத்தண்டனையானது பல வடிவங்களில் பல்லாயிரம் ஆண்டுகளாக வழங்கப்பட்டே வந்திருக்கிறது. இன்று அது தூக்குத் தண்டனையாக வடிவம் பெற்றிருக்கிறது.

ஆனால் முன்பிருந்தே தூக்குத் தண்டனை என்பது அரசுகளால், ஆளும் வர்க்கங்களால் பெரும்பாலும் தங்கள் எதிர்தரப்பினரை மௌனிக்கும் கருவியாகவே பயன்படுத்தப் பட்டு வருகிறது. இன்றும் அந்நிலை தொடர்கிறது. நவீன வரலாற்றில் பகத்சிங் முதல் ராஜீவ் காந்தி வழக்கில் சிறைப்பட்டுள்ள மூவர் மற்றும் கசாப் வரையிலும் அதைக் காண்கிறோம். அரசின், ஆளும் வர்க்கத்தின் இந்த பழிவாங்கும் போக்கினுக்கெதிராகவும், தூக்குத் தண்டனை என்பது குற்றங்களைத் தடுக்கும் ஒரு வழியல்ல என்றும் உலகம் முழுதும் பல ஜனநாயகப் போராட்டங்கள் நடைபெற்று, உலகில் 153 நாடுகளில் தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டும் இருக்கிறது.

ஆனால் உலகின் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லப்படும் இந்தியாவில் தூக்குத் தண்டனை வேண்டும் என்று குரல் எழுப்புவது, இங்கே எந்தெந்த  ஆற்றல்கள் ஜனநாயகத்துக்கெதிராகக்  குறிபார்த்துக்கொண்டுள்ளனவோ அந்தந்த ஆற்றல்களின் குரலின் எதிரொலிப்பாகவே உள்ளது.

 ஒருபுறம் குழந்தைகள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டால் அத்தகைய குற்ற -வாளிகளை நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்வழியில் காவல்துறையினர் சுட்டுக்கொல்லலாம் என்று மக்கள் ஏற்றுக்கொள்ளுமாறு நம்ப வைக்கப்படுகின்றனர். அதை ஊடகங்கள் வலிமையாக பரப்புகின்றன. வங்கிக்கொள்ளையர்கள் என்ற பெயரில் அடையாளம் தெரியாத ஐந்து பேர்கள் சுட்டுக்கொல்லப்பட்டால் அதை சரியென்று ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று சமூக மனநிலை கட்டமைக்கப்படுகிறது. இந்த நிகழ்வுகளிலுள்ள அநீதிகள் சாதாரண மக்களின் ஆழ்மனதை எட்டாமல், மேலோட்டமாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவர்கள் பார்க்குமாறு பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது.

 உண்மையில் இந்தக் குற்றச் செயல்கள் நடைபெறுவதற்கும்,  நடப்பு சமுதாயத்தில் குற்றமனப்பான்மை வளர்வதற்கும்  காரணமாக இருக்கும் காரணிகளும், அதைத் தாங்கிப் பிடிக்கும் அரசும், காவல்துறையுமே பொறுப்பு என்று மக்கள் புரிந்து கொள்ள வாய்ப்பில்லாமலே போய்விடுகிறது. குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு மக்களிடையே அது பற்றிய விழிப்புணர்வையும், குற்றமிழைக்க விரும்புவோர் மனதில் குற்றச் செயல்களை குறைக்கும் அல்லது  தடுக்கும் – மனச்சான்றை தட்டியெழுப்பும் வகையிலான பரப்புரையையும் மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமை;  காவல் துறையின் கடமை. ஆனால் குற்ற மனப்பான்மை உள்ள சமுதாயத்தையே அரசும், காவல்துறையும் தங்கள் அதிகாரத்தை மக்களுக்கெதிராகத் தக்க வைத்துக்கொள்வதற்காக விரும்புகின்றன. அதனால் குற்றச் செயல்களை அவை நிகழுமுன் தடுக்க அவை ஒருபோதும் விரும்புவதில்லை. குற்றங்கள் நடந்தபின்னர் கொடிய முறையில் தங்கள் தண்டனையை சட்டத்திற்கு புறம்பாகவும்,, நீதிமன்றம் தலையிடாவண்ணமும் நிறைவேற்றித்  தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டவே விரும்புகின்றன இவ்வமைப்புக்கள்.

கொடிய குற்றங்கள், அவற்றினையொட்டிய மனித்தத் தன்மையற்ற தூக்கு / என்கவுண்டர் போன்ற அரசின் தண்டனைகள் ஆகியவை மக்களிடம் ஒரு பயபீதியை நிரந்தரமாகக்  குடியிருக்க வைக்கின்றனவேயன்றி, குற்றவாளிகள் தொகை குறைவதை இந்த அணுகுமுறை ஒருபோதும் உறுதிசெய்ய வில்லை. அரசையும், காவல்துறையையும் பற்றிய மக்களின் பயபீதியின் பின்னே அரசின் சுரண்டல் அதிகாரத்தின் வளர்ச்சியும், குற்றவாளிகளின் எண்ணிக்கை பெருகுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தத் திருப்பணிக்கு கூடுதல் வலு சேர்ப்பதே புதுதில்லி நிகழ்வையொட்டித்  தூக்குத் தண்டனையை ஆதரிக்கும் குரல்கள் யாவும். தூக்குத் தண்டனைக்கு ஆதரவாகக் குரலெழுப்புவோர் தெரிந்தோ, தெரியாமலோ அரசின், மற்றும் காவல்துறையின் கபடநோக்கத்திற்கு துணைபோகின்றனர். அதனால் கசாப்புக்கள் நாளும் தேதியும் குறிக்கப்படுவது நாட்டிற்குத் தெரிவிக்கப்படாமல் தூக்கில் தொங்குவது தொடர்கிறது.

Punishment what happens if they don’t phone tracker succeed

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “புதுதில்லி அவலமும், தூக்குத் தண்டனைக்கு ஆதரவான குரல்களும்”
  1. kasi visvanathan says:

    மரண தண்டனைக்கு எதிரான கருத்தியலும், இயக்கங்களும் வலுப்பெற வேண்டிய காலம். நாம் விரைந்து செயல்பட்டால் வல்லாதிக்கங்களின் கருவறுக்கும் நோக்கத்தை தகர்க்கலாம். நல்ல கட்டுரை. கட்டுரை ஆசிரியருக்கு நன்றி.

அதிகம் படித்தது