புதுப்பொங்கலும் பசு மஞ்சளும்
ஆச்சாரிJan 15, 2013
“தைப் பொங்கல்” இயற்கையோடும் கிராமிய மணத்தோடும் கூடிய இந்த விழா தமிழர்களின் திருநாள் என்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய விஷயம் அல்லவா. கிராமிய மணம் கொண்ட இந்த விழா இன்றும் நகர்ப் புறங்களை விட கிராமத்தில்தான் அதிகமாகக் கொண்டாடப்படுகிறது. சூரியனின் ஒளியால் உயிர் பெறும் அனைவரும் சூரியனுக்கு நன்றி சொல்லும் நாள் இது.
மாதங்களில் சிறந்த மார்கழியில் அழகான கோலங்கள் இட்டு அதன் நடுவே வைக்கப்பட்ட பசுஞ்சாணியும், பறங்கிப் பூவும் வரட்டியாகத் தட்டப்படுகின்றன. சூரியனின் தேர் தெற்கு திசையில் இருந்து வடக்குபக்கமாகத் திரும்புவதாகவும் ஒரு ஐதிகம் உண்டு. எனவே தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை “உத்தராயணம்” என்று சொல்லுகின்றனர். நகர்ப்புறங்களைவிட கிராமங்கள்தான் பொங்கலைக் கண்டுகளிக்க சிறந்த இடமாகும். வீடுகள் அனைத்தும் சுண்ணாம்பும், காவியும் அடிக்கப் பெற்று வாசல்கள் தோறும் பனம்பூவும், தென்னங்குருத்தும், அலங்கரிக்கும் அழகே தனிதான். புத்தம் புதிய மண்பானையில் திறந்த வெளியில் அடுப்பு ஏற்றி பானையில் பசுமஞ்சள் கொத்து கட்டி பால் பொங்கிவரும் அழகினை பார்த்துக் குலவை பாடும் பெண்களை கிராமத்தில் மட்டுமே பார்க்க முடியும்.
நகரத்தில் தொலைக்காட்சி நிகழ்வுகளாக இவை இப்பொழுது காட்டப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாத பனிப் பொழிவின் இடையே தன் பொற்கிரணங்களை வீசிக் கிளம்பிவரும் சூரியனை வணங்கி தாய்மார்கள் தரும் பால்பொங்கலும், புதிதாக அறுவடை செய்யப்பட்ட செங்கரும்பின் ருசியும், முற்றி விளைந்த பறங்கியும், பூசணியும் போட்டு செய்யப்படும் கூட்டும் வருடா வருடம் பொங்கல் எப்பொழுது வரும் என்று நம்மை ஏங்க வைக்கும் விஷயங்கள் அல்லவா. இனிப்புப் பொங்கலுடன் சூடாக ஆவி பறக்கும் குறுமிளகும், சீரகமும், முந்திரியும் சேர்ந்த வெண்பொங்கலும், நீயா நானா என்று சுவையல் போட்டிபோடும் சுவாரசியமான நாள்தான் தைப்பொங்கல் திருநாள்.
பொங்கலும் கூட்டும் செய்யும் முறையை நாம் இப்பொழுது பார்க்கலாம்.
புதுபச்சரிசி - கால் கிலோ
புது வெல்லம் - 400 கிராம்
பாசிபருப்பு - 50 கிராம்
நெய் - கால் கிலோ
முந்திரி, ஏலக்காய்தூள் - 20 ஒவ்வொன்றும்
ஜாதிக்காய் தூள் - 20 கிராம்
உலர்ந்த திராட்சை - 20 கிராம்
ஜாதிகாய் தூள் ஒரு சிட்டிகை ஏலக்காய்தூள் ஒரு ஸ்பூன், பால் - அரை லிட்டர்
புதுப்பானையை நன்கு கழுவி பாலை ஊற்றி அடுப்பில் ஏற்றவேண்டும். அரிசியும் பாசிப் பருப்பும் இளஞ்சூடாக வறுத்து பின் நீர்விட்டு களைந்து பாலில் சேர்க்கவேண்டும், மேலும் இரண்டு கோப்பை நீர்விட்டு அரிசியும் பருப்பும் நன்றாகக் குழையும் வரை வேக வைக்கவேண்டும். வெல்லத்தை பொடியாக செய்து குழைந்த சாதத்தில் நன்றாக சேர்த்து பொங்கல் பதம் வரும் வரை கிளறவேண்டும். நெய்யை சூடாக்கி ஜாதிக்காய் தூள், ஏலக்காய் தூள், முந்திரி, திராட்சை ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து பொங்கலில் சேர்த்து கிளறி பரிமாறவேண்டும்.
ஏழு கறி கூட்டு :-
பூசணிக்காய் - 1 கீற்று
பறங்கிக்காய் - 1 கீற்று
அவரைக்காய் - 100 கிராம்
கொத்தவரை - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
சர்க்கரை வள்ளி கிழங்கு - 10 கிராம்
முருங்கைகாய் - 2
வற்றல் மிளகாய் - 8
தனியா - 6 டீஸ்பூன்
கடலை பருப்பு - 4 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 6 டீஸ்பூன்
புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தாளிக்க - அரை கரண்டி எண்ணெய்
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
அரிசி மாவு - 2 ஸ்பூன்
வெல்லம் - ஒரு சிறிய துண்டு
புளியை ஊற வைத்து நன்கு கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். காய்கள் அனைத்தையும் ஒன்றரை இன்ச் நீளத்திற்கு மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். தனியா, மி.வற்றல், க.பருப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றை எண்ணெய் சிறிது விட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும். கரைத்த புளிநீரில் காய்களை லேசாக வதக்கி போட்டு உப்பு மஞ்சள்தூள் போட்டு வேகவைக்கவும். வறுத்த சாமான்களை நன்றாக விழுதாக அரைத்து கொதிக்கும் காய்களுடன் சேர்த்து காய்களை நன்றாக வேகவிடவும். அரிசி மாவை சிறிது நீரில் கரைத்து கொதிக்கும் குழம்பில் போட்டு கருவேப்பிலை வெல்லம் சேர்த்து கிளறவேண்டும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு உ.பருப்பை தாளித்து சேர்க்கவும். சுவையான பொங்கலும், ஏழுகறி கூட்டும் உங்களை சாப்பிட வா வா என்றழைக்கும் நிச்சயமாக.
வெண்பொங்கல்
புது அரிசி பச்சரிசி - 200 கிராம்
பாசிபருப்பு - 50 கிராம்
நெய் - 200 கிராம்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைகேற்ப
கருவேப்பிலை - இரண்டு கொத்து
முந்திரிபருப்பு - 50 கிராம்
செய்முறை : பருப்பையும், அரிசியையும் இளஞ்சூடாக வறுத்துக் கொள்ளவேண்டும். அதை நன்றாகக் களைந்து 4 கோப்பை தண்ணீர் விட்டு மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும். நன்கு குழைந்த இந்த பொங்கலில் நெய்யில் வறுத்த மிளகு, முந்திரி, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.



கருத்துக்கள் பதிவாகவில்லை- “புதுப்பொங்கலும் பசு மஞ்சளும்”