மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நாடகம், நிகழ்வு, அழகியல்

ஆச்சாரி

Feb 1, 2013

நாடகம் என்பது இசைப்பாடலாகவும்,  நடனமாகவும்,  கூத்தாகவும் காலம் காலமாக மனிதனின் படைப்புணர்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வடிவமாக உள்ளது. கும்மி, அம்மானை, பறை, தப்பாட்டம், தேவராட்டம், கணியான் கூத்து எனப் பல்வேறு விளையாட்டு மற்றும் சடங்குகளும் இணைந்த கொண்டாட்ட வடிவங்களாகவும் நாடக உணர்வுகள், வெளிப்பாடு கொண்டுள்ளன. பொதுவாக ஓசைகளும், அசைவுகளும் தீவிரமாக மனித மனத்தை அலைக்கழிக்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. அதனால்தான் இலக்கியம் போன்றவை அறிவு பூர்வமான தாக்கங்களுடன் நின்றுவிடுகிற நிலையில் ஓசைகளையும் அசைவுகளையும் அடிப்படையாகக் கொண்ட நாடகம் போன்ற நிகழ்கலைகள் பல அடிமன உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்பவைகளாக இருக்கின்றன. படித்தவர் முதல் பாமரர் வரை எல்லோருக்கும பலவிதமான சுவையுணர்வுகளை இவை எழுப்புகின்றன.  முத்துசாமி தன்னுடைய வண்டிச்சோலை  கட்டுரையில் கிராமப்புற பாதைகளில் வண்டிகள் செல்லும்போது சருகுகள் எழுப்பும் ஒசை தான் தன்னடைய கற்பனைகள் தூண்டப்பட காரணமாக அமைந்தது என்கிறார். நடுநிசியில் வண்டி ஓட்டிச் செல்கிறவனின் தெம்மாங்குப் பாட்டு, ஏற்றம் இறைக்கிறவர்களின் கீதம், காலையில் ஊர்க்கோவிலில் வாசிக்கும் நாதசுரத்திலிருந்து பிறக்கிற பூபாள ராகம், இரண்டு மைல்களுக்கு அப்பால் உள்ள தண்டவாளத்தில் சீட்டி அடித்துக்கொண்டு ஓடும் ரயில் முழக்கம், முள்ளங்கி, முள்ளங்கி என்று கூவி விற்கும் ஏழைச் சிறுவர்களின் குரல்,  கோலப்பொடியை மொக்கமாவு என்ற கூவி விற்கும் சிறு பெண்ணின் குரல் என்று தான் ரசித்த மண்ணுலகத்து நல்லோசைகளைப் பட்டியலிடுகிறார் சிறுகதை எழுத்தாளர் கு. அழகிரிசாமி, ஆங்கிலக் கவிஞர் வோர்ட்ஸ்ஒர்த் தன்னுடைய கவிதையில் நெடுந்தூரத்திலிருந்து ஒலிக்கும் விவசாயப் பெண்ணின் பாடலில் உள்ள சோகத்தை இனம் காண்கிறார்.

நான் என்னுடய சிறு வயதில் காலையில் எழுந்து படித்துக் கொண்டிருக்கும் போது ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து ஒலிக்கும் திருப்பாவைப் பாடல்கள் பல்வேறு விதமாக மனதை இழுத்துக்கொண்டிருப்பதை அடிக்கடி நினைவு கூர்வேன், “சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்து’’ என்ற துவங்கும் திருப்பாவைப் பாடலில் வரும் “எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமேயாவம். உனக்கே நாம் ஆட் செய்வோம். மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்’’ என்ற பாடலில் வரும் உருக்கமும் நெகிழ்வும் அப்படியே மனதைப் பிடித்துக்கொள்ளும். அதேபோல் திருவெம்பாவைப் பாடலில் ஒலிக்கும் ‘மங்கலம் வருமோ’ என்ற வரி வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் என்னைப் பின்தொடர்ந்து வருவது போல் தோன்றும். நான் பாரதியார் பாடல்களைப் பலமுறை படித்திருந்தாலும் டி.கே.பட்டம்மாள், பாரதியார் பாடலைப் பாடுகிற போது ஏற்படும் கிளர்ச்சி எனக்கு வெறெப்போதும் ஏற்பட்டதில்லை ‘ஆடுவோமே பள்ளுப்  பாடுவோமே’ பாடலில் வரும் நாமிருக்கும் நாடு நமதென்பதறிவோம். அது நமக்கே உரிமையாம் என்பதறிவோம்.  இந்த பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம். பரிபூரணனுக்கேயடிமை செய்து வாழ்வோம் என்ற வரிகளைக் கேட்கும் போது ஏற்படும் எழுச்சியில் புதிய புதிய நாட்டங்கள் தோன்றும். துன்பப்படும் போதெல்லாம் மனம் பாட்டைத்தான் நாடும்.  ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா. அன்பிலா நெஞ்சில் கவிதை பாடி நீ ஆடிக்காட்ட மாட்டாயா’ என்ற பாரதிதாசன் பாடுவது ஆடலிலும், பாடலிலும் மனம் பெறும்உணர்வைக் காட்டும்.

நான் ஒருமுறை கிழக்காசிய ஆதிவாசிகள் பற்றிய ஒரு ஆவணப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்கள் அடிமைப்பட்டும், அடக்குமுறைக்கு ஆளாகியும் பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள். ஒருநாள் எங்கிருந்தோ ஒரு கழைக்கூத்தாடி வந்து மெல்லியகுரலில் பறையொலியை எழுப்புகிறான். அந்த ஒலி அவர்கள் மனதில் பொதிந்துள்ள துயரங்களைத் தட்டி எழுப்புகிறது. அவர்கள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தங்கள் வாழ்வின் அவலத்தை அவர்கள் உணர்கிறார்கள். இன்று பறை, துடும்பு போன்ற இசைக்கருவிகள் ஒரு விடுதலை உணர்வின் குறியீடாக நவீன நாடகங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். அண்மையில் நிகழ்த்தப்பட்ட முருகபூபதியின்  “உதிரமுகமூடிகள்” நாடகத்தில் ஆஸ்திரேலிய ஆதி இசைக்கருவியான டிஜ்ருடூவின் இசை எழுப்பிய உணர்வுகள் ஒரு தொன்மைச் சூழலின் பின்புலத்தை வழங்கின. இவ்வாறு இசை நம்முடைய உணர்ச்சிகளை ஒருமுகப்படுத்திக் கொண்டும், ஆடல் என்பது நம்முடைய சுதந்திரத்தின் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டு வருவதையும் இவற்றின் சங்கமமான நாடகம் என்பது ஒரு செறிவான மனித இயக்கத்தையும் மதிப்பீடுகளையும் முன்னெடுத்துச் செல்வதையும் நாம் பார்க்க முடியும்.

நம்முடைய இசை நாடகங்களிலும் பின்னர் வந்த சுதந்திரப் போராட்டகால நாடகங்களிலும் இசைப்பாடல்கள் நாடகங்களின்  பிரதான அம்சமாக உணர்வுகளின் ஒருங்கிணைப்புக்கான ஒரு பெரிய பாலமாக இருந்தன. இந்த காலகட்டத்தில் தன்னுடைய பாடல்கள் மூலம் கே.பி.சுந்தராம்பாள் உருவாக்கிய எழுச்சியை நாம் நினைவுகூர வேண்டும். காந்தி பேசுவதற்கு ஏற்பாடான கடற்கரைக் கூட்டத்துக்கு மக்களைத் திரட்ட கே.பி.சுந்தராம்பாள் பாடல்களே உதவியாக இருந்தன. நம்முடைய நாட்டுப்புற நாடகங்களில் இந்த பங்கு பெறுதல் என்கிற அம்சம் பூரணமானதாக இருக்கிறது. அவை நடனம், நாடகத்தன்மை, கதை சொல்லுதல், பாடல் பாலியல்தன்மை, மதம் எல்லாவற்றையும் உள்ளடக்கி பார்வையாளனுடைய அதிகபட்ச பங்குகொள்ளலை உறுதி செய்கின்றன. புரிசையில் பதினெட்டுநாள் நடக்கும் மகாபாரதக்

கூத்தின் இறுதிநாளில் நடிகர்களும், பார்வையாளர்களும் இணைந்து திரௌபதி அம்மனை வழிபடும் நிகழ்வுடன் கூத்து முடிவு பெறுகிறது. இங்கு நடிகர்களும், பார்வையாளர்களும் நாடகம் என்ற வடிவில் மதச்சடங்காகிப் போகிற காரியத்தில் இணைந்த பங்கேற்பாளராகிறார்கள்.

எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றிப் படிக்கும் போது அவர் வெளி உலகிற்குத் தெரியாத எண்ணற்ற தனிப்பாடல்களையும், மக்களின் வாய்மொழி இலக்கியங்களையும், நாட்டுப்புறச் சொல்லாடல்களையும், இசை  மற்றும் நாட்டியக் கூறுகளையும் திரட்டி அவற்றை பிரபலப்படுத்த வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அலைந்து திரிந்ததை அறிய நேர்ந்தது. அவ்விதமாகத் திரிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் மக்களிடையே வழங்கிவந்த இசை லயத்துடன் கூடிய காவடிச்சிந்து பாடல்களை பல வருடங்கள் அலைந்து முறையாகத் திரட்டிப் புதிய வடிவில் பதிப்பித்தது தான் அண்ணாமலை செட்டியாரின் காவடிச்சிந்து நூல். காவடிச் சிந்து பாடல்களைக்கூட இசை வாத்தியங்களின் துணையுடன் ஒரு நிகழ்வு சார்ந்த பின்புலத்தில் கேட்டுப் பரவசமான நிலையிலேயே அந்தப் பாடல்களின் மீது மோகம் கொண்டார் அழகிரிசாமி. அருணாச்சலக் கவிராயரின் இராம நாடகம் பற்றிய மதிப்பீட்டில்  கூட அது பாடுவதற்காகவே எழுதப்பட்ட நாடகம் என்றாலும் அந்தப் பாடல்களைப் பாடும் நிலையிலேயே அவை நாடகவடிவம் கொண்டு நாடக உணர்வுகளை எழுப்புவதாகக் குறிப்பிடுகிறார். அதேபோல முக்கூடற்பள்ளு பாடல்களைப் படிப்பதைவிட மேடையில் நடிப்போடு பாடும்போது அனுபவிப்பதே அதிக ராசானுபவத்தைக் கொடுக்கும் என்கிறார். கிராமிய மெட்டுகளில் இந்தப் பாடல்கள் மந்தை நாடகங்களில் பாடப்படும்போது நம்முடைய முன்னோர்கள் இவற்றைக்கேட்டு அனுவிப்பதை குறிப்பிடுகிறார். நிகழ்த்துதலின் மூலமாக  நாடக உணர்வைப் பெறுதல் என்பது நாடகத்தின் பிரிக்க முடியாத பகுதி என்பதை அவர் உணர்ந்ததால் தான் காவடிச்சிந்து , குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற்பள்ளு ஆகிய இசை சார்ந்த பாடல் இலக்கியங்களை நாடகமாக விரித்துப் பார்க்கக் கூடிய பார்வை அவரிடம் உருவானது.

நம்முடைய பாரம்பரியமான நாட்டுப்புறக் கூத்துகளில் செயல்படும் மனஇயலை ஆராயும்போது அது ஒரே சமயம் சமூகக் கட்டுக்கோப்பை பாதுகாக்கவும், அதேசமயம் சமூகம் தன்னுடைய இறுக்கமான கட்டுமானங்களிலிருந்து விடுபடுவதற்கான காரியங்களையும் தொடர்ந்து செய்து வந்திருப்பதை நாம் பார்க்க முடியும். நம்முடைய சமூகத்தில் பல்வேறு காரணங்களால் வாழ்க்கைத்தரம் கட்டுப்பட்டதாக இருக்கிறது. உணர்வு ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் அமுக்கப்பட்டதாக இருக்கிறது, கலை அனுமதிக்கிற அபூர்வமான சில தருணங்களில்தான்  அவர் தன் தளைகளிலிருந்து வெளிப்படுகின்றன. பொழுதுபோக்கு என்கிற அம்சத்தைத் தாண்டி இது ஒருவிதமாக இயற்கையை சரிக்கட்டும் போக்காகவும், கலாச்சார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட உணர்வுகளுக்கான வடிகாலாகவும் இருக்கிறது. சமூக கலாச்சார கட்டுப்பாடுகளால் பல விதங்களிலும் ஒடுக்கப்பட்ட மனிதன் தன்னுடைய வாழ்வியல் பிரச்சனைகளைத் தாண்டி இங்கு தான் தன்னை ஒரு முழுமனிதனாகப் பார்க்கிறான். எங்கே அவனுக்கு விடுதலையும், பூரணத்துவமும் நிகழ்கிறதோ, அது அவனுடைய நேரிடையான எல்லைகளைத் தாண்ட அவனுக்கு அனுமதி வழங்குகிறது. தன்னுடைய படைப்புப் பொறிகள் தூண்டப்படுவதை அங்கு அவன் பார்க்கிறான், அதனாலேயே கூத்தில் வரும் கட்டியங்காரனும், விதூஷகனும் அவ்வப்போது நாட்டு நடப்புகளை கேலிக்கும், விமர்சனத்துக்கும் உட்படுத்துகிறார்கள். பண்ணையாரை முன்னால் வைத்துக்கொண்டே அவருடைய தகாத செல்களை விமர்சிக்கும் சுதந்திரத்தை ஒரு தொழிலாளி பெறுகிறான். சமூக ஒடுக்குமுறைக்கும், பாலியல் ரீதியான ஒடுக்குமுறைக்கும் எதிரான குரல்கள் கூர்மையான அங்கத்துடனும், இயல்பான சுதந்திரத்துடனும் வெளிப்பாடு கொள்கின்றன. இவ்வாறு நாடகத்தளம் என்பது அவனுக்கு கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட இடமாக உள்ளது. ஒரு நுட்பமான  அளவில் அதிகாரத் தகப்பிற்கான இடமாகவும்  அது உள்ளது. பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம் ஆகிய சிற்றிலக்கியங்களிலும் கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையிலும் காப்பிய மரபுக்கு மாறாக    விளிம்புநிலை மனிதர்களின் வாழ்நிலைகளும், அநீதி எதிர்ப்பு முதலான கருத்தாக்கங்ளும் ஆழமாக ஊடுருவி இருப்பதைப் பார்க்க முடியும்.

தொடரும் . . . . .

The number of states in the two population categories c and d was approximately what percent greater than writing essay website the number in the four population categories from e through h

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாடகம், நிகழ்வு, அழகியல்”

அதிகம் படித்தது