நிறம் மாறும் உறவுகள் (சிறுகதை)
ஆச்சாரிFeb 1, 2013
அலுவலகத்திற்குச் செல்லாமல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கோவிந்தனிடம் என்னங்க… ஒரு மாசமா உங்களுக்கு ஒடம்பு சரியில்ல இந்த விசயம் உங்க தங்கச்சிக்கு தெரியிம்ல. என்னான்னு வந்து எட்டிக்கூடப் பாக்கல சரி, வர முடியாட்டாக் கூட ஒரு போன் பண்ணி என்னண்ணா எப்படி இருக்க? நல்லா இருக்கியான்னு கூட விசாரிக்கல… ம்ஹீம் நல்ல ஒறவுக…. எனக் கத்தியபடியே டீயைக் கொடுத்துவிட்டுச் சென்றாள் பார்வதி.
சலிப்பான கோவிந்தன் “ ம்… காலையிலேயே ஆரம்பச்சுட்டியா? எந்தங்கச்சிக்கு என்ன வேலையோ தெரியல பாவம் ” எனக்கூறி தொலைக்காட்சியில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது தொலைபேசி மணி ஒலித்தது. சட்டென்று கோவிந்தன் எடுத்து, அலோ… எனச் சொல்லி முடிப்பதற்குள் எப்படி இருக்கீங்கன்னா… நான் ரேணு பேசுறேண்ணா என்றதும், தங்கையின் நல விசாரிப்பு மனதிற்கு ஆறுதலாக இருந்தது கோவிந்தனுக்கு.
நீ எப்படிமா இருக்க? மாப்பிள்ள கொழந்தைங்க எல்லாரும் சௌக்கியமா? ம்,,,ம்,,, நல்லா இருக்காங்கண்ணா ? உங்கள வந்து பாக்க நேரமே இல்ல கோவிச்சுக்காதண்ணா .. எங்க வீட்டுக்காரரு பிசினஸ் விசயமா அடிக்கடி வெளியூர் போயிடுறாரு.. நான் ஒத்தயில கொழந்தய வச்சுக்கிட்டு . . . . . . பரவாயில்லம்மா, எனக்கு ஒம்மேல எந்த வருத்தமும் இல்ல… என்றதும் அண்ணே… நீங்க அண்ணிய கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வந்து நாலுநாள் தங்கிட்டுப் போங்கண்ணா,நாந்தான் வரமுடியல, நீகலாவது வரலாம்ல . . . சரிம்மா என்று தங்கையின் கட்டளையை தவிர்க்க முடியாமல் போனை வைத்தான் கோவிந்தன்.
போன்ல யாரு… ஒங்க அருமத் தங்கச்சியா? திடீர்னு என்ன பாசம் பொங்கிடுச்சு அவளுக்கு . . . என வாயிற்குள் ஏதேதோ முனுமுனுத்தாள் பார்வதி. கோபத்தோடு அவளைப் பார்த்த கோவிந்தன் “ஏந்தங்கச்சி ரேணுவ பாத்தாலே ஒனக்குப் பிடிக்கல, எப்பவுமே அவள கொற சொல்லிட்டே இருக்க… ஒன்னத் திருத்தவே முடியாது.. ஆனா பாரு ஏந்தங்கச்சிக்கு மனசு கேட்காம போன் பண்ணி ஆசயா வீட்டுக்கு வந்து நாளு நாள் தங்கனும்னு சொல்லிருக்கா. அவ பாசத்தப்பத்தி ஒனக்கென்ன தெரியப்போகுது? அண்ணன், தம்பி கூடப்பிறந்தா தெரிஞ்சிருக்கும்” எனக்கூறி படுக்கை அறைக்குள் சென்றான் கோவிந்தன்.
சாப்பாட்டுத்தட்டை கையில் எடுத்துக்கொண்டு படுக்கையறை சென்றாள் பார்வதி. சமாதானப் படுத்தும் விதத்தில் சரி.. சரி.. கோவப்படாதிங்க.. ஒடம்புக்கு ஆவாது இப்பென்ன… நாளைக்கே நாம உங்க தங்கச்சி வீட்டுக்குப் போகலாம் என்றதும் மகிழ்ந்த கோவிந்தன், பார்வதியிடம் ம் . . நீயா இப்படிப் பேசுற . .சரி சரி நாளைக்கே கௌம்பணும் துணிகள இப்பவே எடுத்துவை, சரிங்க எனக்கூறி சாப்பாட்டுத் தட்டை நீட்டி “மொதல்ல இத சாப்பிடுங்க, நான் துணி எடுத்து வைக்கிறேன்” எனக்கூறி விட்டுச் சென்றால் பார்வதி.
மறுநாள் தங்கை ரேணுவின் வீட்டிற்குச் சென்றதும் “வாங்கண்ணா… வாங்க அண்ணி எப்படி இருக்கீங்க! ! நல்ல இருக்கீங்களா! ! இங்க உட்காருங்கண்ணே காபி எடுத்துட்டு வாரேன், அவரு ஆபீசுக்குப் போயிருக்காரு வர லேட் ஆகும். கொழந்தய எங்கம்மா? அவ தூங்குறாண்ணே… இதோ வந்துடுறேன் என்று சமையலறைக்குள் சென்றாள்.
இரவு வெகுநேரம் ஆகியும் மாப்பிள்ளை வரவில்லையே என எதிர்ப்பார்த்து உறங்கச் சென்ற கோவிந்தனுக்கு தூக்கம் வரவில்லை. சற்று நேரத்திற்குள் தங்கையின் அறையில் மாப்பிள்ளை குரலைக் கேட்டதும் மகிழ்ச்சியோடு பேசச் சென்ற கோவிந்தன் கதவருகே நின்றான். என்னடி? புதுசா அண்ணன் மேல பாசம் வந்திருச்சா? ஒடம்பு சரியில்லாத அவரப் பாக்கப் போலாம்னு சொன்னேன், வேண்டாங்க போனா செலவாகும், பணம் கேப்பாங்கன்னு சொன்ன இப்ப என்னடான்னா, அவங்கள வீட்டுக்கு வரச்சொல்லிருக்க எனக்கு ஒன்னும் புரியல போ… என்றவனிடம்…
அட நீங்க வேற… வெவரந்தெரியாதவரா இருக்கீங்களே! இன்னும் ரெண்டு நாள்ல உங்க நண்பரோட திருமணத்துக்கு கொடைக்கானல் போறோம்ல வீட்டப் பூட்டிட்டு போக முடியாது. பாதுகாப்பு இல்ல, காலம் ரொம்பக் கெட்டுக் கெடக்கு. அதான் அவங்கள வரச் சொன்னேன். காவலுக்கும் ஆச்சு, கவனிச்சுக்கிட்டோம்னு பேரும் ஆச்சு . நீங்க வாய மூடிட்டு சும்மா இருங்க. ஒங்களுக்கு ஒண்ணும் தெரியாது. என்றதும் ரேணுவின் கணவன், சும்மா சொல்லக்கூடாதுடி என்னம்மா யோசிக்கிற? சுட்டுப் போட்டாலும் எனக்கு இப்படி ஐடியா வராது எனக்கூறி சிரித்தான்.
இவர்களின் இந்தப் பேச்சையும், சிரிப்பையும் கேட்டு நின்ற கோவிந்தனின் உள்ளம் கலங்கி, ஏனோ கண்களில் நீர்கோர்த்து. நடைப் பிணம் போல நடந்து படுக்கையில் விழுந்தான். பொழுது புலர்ந்தது; ரேணு டீயைக் கொண்டுவந்து அண்ணனிடம் கொடுத்தாள். முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு, அண்ணே . . ஒரு விசயம் சொல்லணும் சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டீங்களே, பரவால்லம்மா சொல்லு, இல்லண்ணா நேத்து நைட் தான் போன்வந்தது, நானும் அவரும் வேல விசயமா வெளியூருக்குப் போறோம், வர நாலு நாளாகும் வீட்டுக்கு வந்த உங்கள கூட இருந்து கவனிக்க முடியலன்னு நெனச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு… என வராத கண்ணீரை தனது முந்தானை கொண்டு துடைத்தாள்.
அப்போது தனக்கு வந்த கண்ணீரை வெளிக்காட்டாமல், கவலைப்படாம போயிட்டு வாம்மா. நீ வார வரைக்கும் வீட்டப் பத்திரமா நான் பாத்துக்கிறேன் என்றதும் சரிண்ணா அப்போ நாங்க கௌம்புறோம் எனக்கூறி திரும்பினாள். எதிரில் நின்ற தன் கணவன் கையைப் பிடித்துக் கொண்டு தன் அறைக்குச் செல்லும்போது கோவிந்தன் காதில் கேட்கும்படியாக “பாத்தியாங்க என் நடிப்ப. எங்கண்ணன், எம்மேல இருக்கிற பாசத்துல அழுதத. . என்றதும் கோவிந்தனுக்குச் சிரிப்பு வந்தது. அப்போது வந்த பார்வதியும் கணவனைக் கண்டு சிரித்தாள் ஒன்றும் புரியாதவளாக…
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
இப்படிபட்ட அண்ணன் யாருக்கு கிடைக்கும்?????
இப்படிபட்ட அண்ணன் யாருக்கு கிடைப்ப்பார்?????
its a real story…really nice !!! many people there as like renu character…
like to read more stories miss jacklin… and thanks for giving awesome stories… !!!