விடை தேடும் விஸ்வரூபம்
ஆச்சாரிFeb 1, 2013
தமிழ் நாட்டில் சினிமா என்பது கணிசமான பண பலம் கொண்ட மிகப் பெரிய வணிகம். இப்பெரும் வணிகத்தில், அறிவு சார்ந்தப் படங்கள், கலைப் படங்கள், சமூகப் பிரச்சனைகளை முன்னிறுத்தும் படங்கள், நல்ல கருத்துக்களைப் போதிக்கும் படங்களைத் தயாரிப்பவர்கள் மிகவும் குறைவு. தமிழகத்தில் சினிமாவும் கொழுத்த லாபம் ஈட்டக் கூடிய ஒரு தொழிலே. பொழுதுபோக்குப் படங்கள் என்ற பெயரில் ஆபாசக் காட்சிகளைக் தாங்கியும், வன்முறைக் காட்சிகள் நிறைந்து இருக்கும் வணிக ரீதியிலான படங்களே அதிகமாய் தயாரிக்கப்படுகின்றன. வசூலிலும் சக்கைபோடு போடுகின்றன. ஆனாலும், விதிவிலக்காக, தமிழ் சினிமாவைக் கடைத்தேற்ற சில கலைஞர்கள் அவ்வபோது தோன்றுவதுண்டு. அந்தச் சிறு கூட்டத்தில் முதன்மையானவர் கமல்ஹாசன் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. நிற்க.
இந்தியாவில் மதம் என்பது நமது வாழ்வோடு பின்னிப்பிணைந்த உணர்வுப் பூர்வமான ஒரு சங்கதி. மதம் என்ற இந்தக் கோட்டை, “உணர்ச்சி” என்ற எளிதில் உதிரக்கூடிய மண்ணால் குழைத்து கட்டப்பட்ட ஒன்று. இந்தக் கோட்டையில் சிறு கீறல் ஏற்பட்டால் கூட மதம் என்கிற விசயம் விஸ்வரூபம் எடுக்கும். அதிலும், சிறுபான்மை இன மதம் என்றால் சொல்லவே தேவையில்லை. அவர்கள் மிக எளிதில் பாதுகாப்பில்லாத உணர்வை அடைவார்கள். எனவே, அரசியல்வாதிகள் முதல் படைப்பாளிகள் வரை அனைவரும் இஸ்லாமியர் தொடர்பான எந்த விசயத்தையும் மிகக் கவனமாகவே அணுகுகிறார்கள். சிறுபான்மையினர் உட்பட எந்த ஒரு மதத்தினரின் உணர்வையும் புண்படுத்துதல் தவறு. சட்ட விரோதமும் கூட. நிற்க.
கமல் ஹாசனின் இயக்கத்தில் தற்போது வெளிவர உள்ள விஸ்வரூபம் திரைப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும், முஸ்லீம்களை இப்படம் தவறாகச் சித்தரிக்கிறது என்றும் இஸ்லாமிய அமைப்புக்கள் குற்றம் சாட்டி, தமிழக அரசிடம் புகார் அளிக்க, ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு இப்படத்தை பதினைந்து நாட்களுக்கு தடை செய்துள்ளது. இந்தத் தடை உத்தரவு சரியா?
கமல் ஹாசன் என்பவர் யார்? ஒரு சிறந்த நடிகர். அதற்குமேல் சொன்னால், சம்பாதிக்கும் பணத்திற்கு சரியான வருமான வரி கட்டி, நேர்மையாய் தொழில் செய்யும் ஒரு நல்ல குடிமகன் (தேசிய அளவில் வருமானவரி சரியாக கட்டுவதற்காக மத்திய அரசு கமல் ஹாசனுக்கு இரண்டு முறை விருது வழங்கி இருக்கிறது நினைவு கூறத்தக்கது). அவர் இதுவரை இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாகப் பேசியோ அல்லது நடந்தோ இருக்கிறாரா? என்றால் இல்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் இதுவரை சினிமாவின் மூலமாக தமிழ்ச் சமுதாயத்திற்கு ஆற்றிய பணிகள் என்ன? அமெரிக்கத் திரைப்படங்களின் பாதிப்பு அவருடைய படங்களில் தென்பட்டாலும், கமல் ஹாசனின் இயக்கத்திலும், அவருடைய நடிப்பிலும் உருவான திரைப்படங்கள் தனித்துவம் மிக்கவை. விருமாண்டி என்ற விதையால் தான் பருத்திவீரன் என்ற சிறந்த படம் கிடைத்தது என்று இயக்குனர் அமீர் சொல்கிறார். விருமாண்டி பார்த்தபிறகு தான், பருத்திவீரன் போன்ற கதையை படமாக்க துணிவு பிறந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
இப்படியாக, யதார்த்தத் திரைப்படங்களின் ஆக்கத்தில் பல முன்னோடியான முறைகளையும், நடிப்புத் திறனில் பல பரிமாணங்களையும் நிகழ்த்திக் கொண்டிருப்பவர் கமல்ஹாசன். பல விதங்களில் தமிழ் சினிமாவையும், கூடவே இந்தியச் சினிமாவையும் ஒரு சேர உலகத்தரத்துக்கு உயர்த்த ஆசை கொண்ட இந்த கலைஞனுக்கு எதிராக முஸ்லிம் அமைப்புக்கள் அணிசேர்ந்து செயல்படுவது ஏன்? இது நியாயமா?
கமலிடம் வரிந்து கட்டி நிற்கும் இருபத்துநான்கு முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்புக்கு விஸ்வரூபம் திரைப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டு இருக்கிறது. படம் பார்த்துவிட்டு, ஒட்டுமொத்தப் படமே இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்கிறது, இதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அமைப்பு எழுப்பியது. இதில் சற்றும் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. ஆட்சேபகரமான காட்சிகள் இருக்குமானால், மத்தியத் தணிக்கை அமைப்பு இந்தப் படத்திற்கு எப்படி அனுமதி கொடுத்திருக்கும்? சில காட்சிகள் தவறாகச் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றன, அவற்றை நீக்க வேண்டும் என்று இவர்கள் சொன்னால் அதில் கொஞ்சமாவது நியாயம் இருக்கும். இந்தத் திரைப்படத்தையே வெளியிட விடாமல் செய்துவிட வேண்டும் என்று இந்தக் கூட்டமைப்பு பிடிவாதம் பிடிப்பது பல்வேறு வினாக்களை எழுப்புகிறது.
இந்த இருபத்து நான்கு அமைப்புகள் தான் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் எண்ணங்களை பிரதிபலிக்கின்றனவா? என்று கேட்டால் இல்லை என்று தான் பெருவாரியான முஸ்லிம்கள் சொல்வார்கள். இந்த அமைப்புகள் சொல்படிதான் முஸ்லிம்கள் நடந்து கொள்கிறார்களா என்ன? இந்த அமைப்புகள் நடந்துகொள்ளும்விதம் சரியல்ல. அவர்கள் செல்லும் பாதை தவறானது. மத்தியத் தணிக்கை அமைப்பால் வெளியீட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்ட ஒரு திரைப்படத்தை தடுத்த நிறுத்த கும்பலாய் கூடுவது, திரை அரங்கங்களின் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது, ப்ரொஜெக்டர் மற்றும் திரை அரங்க நாற்காலிகளை உடைப்பது என இவர்கள் சட்டத்தை கையில் எடுப்பது முறையா?
ஒரு மேம்பட்ட சமுதாயம் கலைஞனுக்கு முழு சுதந்திரத்தை அளிக்கக் கூடியதாகத் தான் இருக்கும். கலைஞர்கள் அரிதானவர்கள். போற்றப்படவேண்டியவர்கள். சினிமா கலைஞர்களாகட்டும், எழுத்தாளர்களாகட்டும், ஓவியர்களாகட்டும், வேறு எந்த படைப்பாளிகளாகட்டும், அவர்களின் எண்ணவோட்டத்தை, சிந்தனையை தடை செய்வது நமது சமுதாயம், மலடான ஒரு சமுதாயமாக மாறுவதற்கே வழிவகுக்கும்.
முதலில், சினிமாவை வெறும் சினிமாவாக மட்டும் பார்க்கும் எண்ணம் நம்மிடையே தோன்ற வேண்டும். பிரான்ஸ் போன்ற நாடுகளில் தணிக்கை என்ற அமைப்பே கிடையாது. யார் வேண்டுமானாலும், எந்தக் கருத்தை வலியுறுத்தியும் படம் எடுக்கலாம். வெளியிடலாம். ஏற்க இயலாத எதிர்மறைக் கருத்துகள் கொண்ட படங்களை மக்களே நிராகரிக்கிறார்கள். அந்த அளவுக்கு நாம் போக வேண்டாம். அந்த அளவுக்குக் கட்டுப்பாடில்லாத சுதந்திரம் நமக்கு வேண்டாம். தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்படும் படங்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகிக்காமல் அவற்றை வெளியிடத் தடையும் செய்யாமல் இருந்தாலே போதுமானது.
இதிலும், கமல் படங்கள் மட்டும் ஏன் அடிக்கடி இம்மாதிரியான பிரச்சினைகளை சந்திக்கின்றன? அவரது (பல) படங்களின் கதைக்கரு சமூகத்தின் சில முக்கிய அடிப்படைப் பிரச்சினைகளைச் சார்ந்து இருப்பதுதான். ஒரு படைப்பாளிக்குத் தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களைத் தன் மனதைப் பாதிக்கும் சம்பவங்களைக் காட்சிப்படுத்தும் பொறுப்பு உள்ளது. அது அவனது கடமையும் கூட. இதை எதிர்ப்பது, அப்படைப்பாளியை முடக்குவது போன்றது. சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடுகளில் இது நடக்கலாம். ஜனநாயக நாடு என்று பேசித் திரியும் நாம் இதைச் செய்யக் கூடாது. போதாக்குறைக்கு, அவர் ஒரு பிரபலமான நடிகர். அவரை எதிர்த்துப் போராட்டம் நடத்தினாலோ, பிரச்சினை செய்தாலோ ஒரு மலிந்த விளம்பரம் கிடைக்கும். அந்த விளம்பரத்தினால் ஒரு சில வாரங்கள் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் பெயர் அடிபடும். இது போதுமே?
அதற்காக, பொத்தாம்பொதுவாக, நீதி கேட்டுப் போராடும் அனைவரையும் குறை கூறிவிட முடியாது. உதாரணத்திற்கு, அணுஉலை எதிர்ப்பாளர் திரு. சுப. உதய குமாரனை எடுத்துக் கொள்ளலாம். அசுர பலம் கொண்ட மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து இதுநாள் வரை சட்டரீதியாகவும், அகிம்சை வழியிலும் தொடர்ந்து போராடி வருகிறார். இவருடைய எதிர்ப்பில் சாரம் இருக்கிறது. மக்கள் ஆதரவு மென்மேலும் பெருகிக்கொண்டே இருக்கிறது.
மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட சாதாரண “த்ரில்லர்” படமான விஸ்வரூபத்திற்கு தடை விதித்து, இந்த விசயத்தை மிகப்பெரியதாக உருமாற்றம் செய்து, உலக அளவில் அப்படத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது தமிழக முதல்வர் ஜெயலலிதா தான். மத்தியத் தணிக்கைத் துறையால் சான்றிதழ் வழங்கப்பட்ட இத்திரைப்படத்தை, அதன் இயக்குனர் கமலைக் கூட ஆலோசிக்காமல், மிகுந்த காழ்ப்புணர்ச்சியுடன், ஓட்டு வங்கி அரசியலுக்கு பலியாகி இந்தத் தடை உத்தரவை ஜெயலலிதா பிறப்பித்துள்ளார்.
நேர்மையான முறையில் ஒருவர் ஒரு வணிகத்தில் ஈடுபட்டு இருக்கும்போதும், அந்த வணிகத்திற்கு அநீதி நடக்கும்போதும், அந்த அநீதியைத் தடுக்க வேண்டியது ஒரு அரசின் கடமை. அதை விடுத்து, ஒரு தனி மனிதன் தானே, அவனது லாபம் நட்டம் பற்றிய அக்கறை நமக்கெதற்கு என்று கமலைக் கைவிட்ட தமிழக அரசு, அனைவருக்கும் பொதுவான அரசாகத் தெரியவில்லை.
ஒரு தனி மனிதனை விட ஒரு சமூகம் முக்கியம் என்று உடனே சிலர் வாதாட முன் வருவர். இத்திரைப்படத்தைப் பற்றிய தவறாக புரிதலின் காரணமாகவோ, அல்லது வேறு ஏதாவது காரணத்திலாலோ இஸ்லாமிய அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, பேச்சுவார்த்தையின் மூலமோ, தேவைப்படின், சட்டத்தை பிரயோகித்தோ இந்தப் பிரச்சனையில் தீர்வு காண தமிழக அரசு முயன்று இருக்க வேண்டும். அதை விடுத்து, ஒரு அரசுக்கு தேவையான நடு நிலைமையை புறந்தள்ளி, “இதோ தடை” என்று ஆணையிட்டது தவறு. இந்த நிலைமை நீடித்தால், இனி வரும் திரைப்படங்களில், வில்லன் கதாபாத்திரத்தின் பெயர் தப்பி தவறி முஸ்லீம் பெயராக இருந்தால் கூட, சில முஸ்லிம் அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவிக்கலாம். அதற்காக, அப்படத்திற்கு தடை விதிக்க அரசு முன் வருமா?
இந்த நிலை நீடித்தால், தமிழ்த் திரை உலகம் என்ன ஆகும்? வழக்கமாக, தமிழ் திரைப்படங்களில் காவல் துறையினரை மிகவும் கண்ணியக் குறைவாகவே எப்போதும் காட்டுகின்றனர். அவர்களும் இனி சீறி எழ வாய்ப்பு இருக்கிறது. நமக்கு மலையாளிகள் என்றாலே டீக்கடை வைத்திருப்பவர்கள்தான். இனி, அவ்வாறு திரைப்படக் காட்சிகள் இருந்தால், அவர்களும் பொங்கி எழுவார்கள். இதுதவிர, போலிச்சாமியார்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என எல்லோரையும், கதைக்காக, ஏதோ ஒரு விதத்தில் எதிர்மறையாகத் திரைப்படங்களில் காட்டப்பட வேண்டி இருக்கிறது. அவர்களும் நடுவீதிக்கு வந்து குரல் எழுப்புவார்கள். இனி இவர்களும் தமிழக அரசிடம் தடை கோரி மனுச் செய்யலாம். இதற்கு முடிவேது?
கலாச்சாரத் தீவிரவாதம் என்கிற வறட்டு வாதம் தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருகிறது. இதைப் பற்றிப் பேசவே பலர் அஞ்சுகின்றனர். கமல் சார்ந்த திரை உலகினரே, கமலுக்கு நேர்ந்தது ஏதோ அவரோடு போய்விடும் என்று நினைத்து வாய்மூடி மௌனமாக இருக்கிறார்கள். இதற்க்காக நடிகர் சங்கம் கூட இதுவரை ஒரு வார்த்தை கூட பேசாமல் மெளனம் காக்கிறது. இன்று தனி ஒரு கலைஞன் எதிர் கொள்ளும் இந்தப் பிரச்சனை நாளை ஒட்டு மொத்த திரை உலகிற்கும் ஏற்ப்படும்.அப்போதுதான் இவர்களின் ஒட்டுமொத்தத் திருவாயும் ஒ . .ஒ . .வென மலரும். முளையிலேயே கிள்ளி வீசப்படாத இப்பிரச்சனை நாளை திரைஉலகில் விஸ்வரூபமேடுக்கும்.அப்போது பார்க்கலாம் கலாச்சார தீவிரவாதம் இருக்கிறதா இல்லை இறந்து விட்டதா என்று.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “விடை தேடும் விஸ்வரூபம்”