மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கிராமத்தை முன்னேற்றும் அறிவுச்சுடர் இளைஞர்கள்

ஆச்சாரி

Feb 15, 2013

‘எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில்’ என்றோரு பழமொழி உண்டு. துடிப்புமிக்க நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள் இந்தியாவையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர். ஆனால் மேற்கண்ட கூற்றுக்கு இன்றைய இளைஞர்கள் இலக்கணமானவர்களாக இருக்கிறார்களா? என யோசிக்க வேண்டிய இத்தருணத்தில், நாகரீக வெளிச்சம்படாத ஒரு குக்கிராமத்தில் படித்துப் பட்டம் பெற்ற ஐந்து இளைஞர்கள் இணைந்து, பல கிராமத்துக் குழந்தைகளுக்கு எந்தக் கட்டணமும் பெறாமல் கல்வி கற்றுக் கொடுக்கும் அரும்பணியைத் தொடர்ச்சியாக கடந்த ஏழு ஆண்டுகள் நடத்தி வருவதோடு, இதில் நன்றாகப் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களைத் தங்கள் சொந்த செலவிலேயே மேற்படிப்பு படிக்க வைத்து இன்றைய கால இளைஞர்களுக்கே முன்னோடியாகத் திகழ்ந்து வரும் இந்த இளைஞர்களைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கு அருகே உள்ள நாட்டார்மங்கலம் என்ற ஊரிலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மொடையூர் எனும் கிராமம். தற்போது சிமெண்ட் சாலைகள் போடப்பட்ட அந்தத் தெருக்களில் பல ஓலைக்குடிசைகளும், சில ஓட்டு வீடுகளுமாக நிறைந்திருக்கின்றன. மாலை ஐந்து மணி அளவில் புத்தகப்பையைத் தூக்கிக்கொண்டு கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர் பள்ளி மாணவர்கள்.

பள்ளி என்றாலே வேண்டா வெறுப்பாகச் செல்லும் குழந்தைகள் கூட இந்த அறிவுச்சுடர் கல்வி சமூக சேவை மையத்திற்கு தங்களது புத்தகப்பைகளைத் தூக்கிக் கொண்டு மகிழ்ச்சியாக ஓடி வருகின்றனர். இங்கே நூற்றுக்கும் மேற்ப்பட்ட பள்ளி மாண, மாணவிகள் படிக்கின்றனர் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை ஒரு பிரிவும், ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை ஒரு பிரிவுமாக இரண்டு வகுப்புகள் நடக்கின்றன. கட்டாந்தரைப்பகுதி மழையினால் ஈரமாக இருக்க, கொண்டு வந்த சாக்கு, சணல் பைகளை விரிப்பாகப் போட்டு உட்காந்திருக்கின்றனர் மாணவர்கள்

பழைய துருப்பிடித்துப்போன இரும்புக்கட்டிலை இங்கே கரும்பலகையாக உருமாற்றி வைத்திருந்தனர். இரண்டு குண்டு பல்ப், ஒரு டியூப்லைட் வைத்துக்கொண்டு ஒரு பெரிய கல்விச் சேவையே செய்து கொண்டிருக்கிறது இந்த இளைஞர்கள் கூட்டம்.

ஆங்கிலம், கணிதம், தமிழ், பொதுஅறிவு, அறிவியல், சமூக அறிவியல், ஓவியம், தற்காப்புக்கலைகள், கலைப்பயிற்சிகள் என்று கல்வியோடு பல கலைகளையும் கற்றுக்கொடுத்து வருகின்றனர். நான்கூட பலமுறை இங்கே சென்று இக்குழந்தைகளுக்கு சமூக விழிப்புணர்வுப் பாடல்களையும், பறையாட்டத்தையும், நாடகத்தையும், நாட்டுப்புற நடனங்களையும் கற்றுக் கொடுத்து வந்தேன் என இங்கே சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். காரணம் நாம் கற்ற கலையோ, கல்வியோ அதை பிறருக்கு பயிற்றுவிக்கும் பொழுதுதான் நாம் முழுமை அடைகிறோம் என்பது எனது நம்பிக்கை. சரி விசயத்திற்கு வருவோம்.

இச்சேவை மையத்தை இயக்கிவரும் ஐந்து நபர்களில் ஒருவரான ஓவியர் எம்.எஸ்.முருகனிடம் பேசினேன். இவர் கூறியதாவது ஆரம்பத்தில் இது ஒரு ரசிகர் மன்றமாகத்தான் இருந்தது. இதனை நாங்கள் தான் கல்வி மையமாக மாற்றினோம். எதேச்சையாக ஒரு நாள் அம்பேத்கரின் ஒட்டுமொத்தப் புத்தகத் தொகுதிகளையும் படித்த பொழுது எனக்குள் பெரிய மாற்றங்கள் ஏற்ப்பட்டன. கல்விதான் நமக்கான உரிமையைப் பெற்றுத்தரும் என்கிற நம்பிக்கையை இந்நூல் வாசிப்பு எனக்குள் ஏற்படுத்தியது.
பிறகு ஏன் இங்கு ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன என்று நினைத்து அதனைக் கலைத்துவிட்டோம். என் சக நண்பர்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து ஒரு கூட்டம் போட்டோம். ஊரில் படித்த பட்டதாரிகள் நாங்கள் ஐந்துபேர் தான். எனவே எங்களுக்குக் கிடைத்த கல்வி மற்றவர்களுக்கும் சென்று சேர வேண்டும், எங்களைப் போல் அவர்களும் அறிவு வளம் பெருக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆதலால் ரசிகர் மன்றத்தைக் கலைத்து ‘அறிவுச் சுடர்’ என்கின்ற பெயரில் கல்வி மையத்தை ஆரம்பித்தோம்.

இப்பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் இங்கு கல்வி பயில்கின்றனர். என்று அறிமுகப்படுத்திக் கொண்ட முருகன் சென்னை கவின்கலைக் கல்லூரியில் ஒவியம் பயின்றவர் இவர்தான் மையத்தின் ஓவிய ஆசிரியர் மற்றம் கல்விமைய நிறுவனர்.

நாங்க சரியா செய்யிறோமோ இல்லையோ, ஆனா சரியானதைச் செய்கிறோம், இங்கு இருக்கின்ற கிராமப்புற மாணவர்களுக்க சரியான கல்வி கிடைப்பதிலலை. அப்படித் தப்பித்தவறி கிடைத்தாலும் அதனை முழுமையாகப் பெறக்கூடிய வகையில் மாணவர்களுடைய குடும்பச் சூழல் இருப்பதில்லை. ஆதலால் அவர்களால் முடியாததை நாங்கள் செய்துகாட்ட விரும்பினோம். இப்பொழுது அது சாத்தியமாகி இருக்கின்றது. என்கிற தேவராஜ் என்ற தம்மதேவா, சென்னை அம்பேத்கர் கலைக்கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றவர். இப்பொழுது இக்கல்லவி மையச் செயலாளராக இருக்கிறார்.

அப்போது திடீரென லேசான சாரல் பெய்யத் தொடங்கியது பக்கத்தில உள்ள ஒலைக் குடிசையின் அருகில்சென்று தங்களின் புத்தகப்பைகளை அணைத்துக் கொண்டிருந்தனர் மாணவர்கள், சிறிது நேரம் கழித்து அந்தச்சாரல் நின்ற பின், மீண்டும் ஈரத்தரையில் தங்களின் சாக்குகளைப் போட்டு மீண்டும் பாடம் கேட்க ஆவலாக அமர்கின்றனர் மாணவர்கள், மழை கொடுத்த இடைஞ்சல்கள் அவர்கள் முகத்தில் துளியளவும் இல்லை மாறாக ஆர்வம்தான் மேலிருக்கின்றது. “இது தான் எங்களின் பலம்’’ என்கின்றனர் அனைவரும்.

வெறுமனே பாடம் எடுத்தால் மாணவர்கள் நம்மைவிட்டு விலகி விடுவார்கள். மாணவர்களை நாங்கள் தேடிப்போவதை விட அவர்கள் எங்களைத் தேடி வரவேண்டும் அந்த வகையில் முதலில் யோசித்தோம். அதனால் முதலில் இக்கல்வி மையம் அவர்களுக்குப் பிடித்த இடமாக இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அவர்கள் தேடி வருவார்கள் என்று முதலில் இதை விளையாட்டுக் கூடமாக மாற்றினோம். இப்பொழுது கூட தினமும் ஒருமணி நேரம் விளையாடிய பிறகுதான் இவர்களுக்கு வகுப்புகளைத் தொடங்குவோம். நாங்கள் இம்மாணவர்களை நண்பர்களைப் போல அணுகினோம்.

இதனால் ஆசிரியர் மாணவர் என்கின்ற அந்நியம் எங்களிடம் இருந்து விலகியது. அவர்களின் கண்ணீருக்கு காதுகள் கொடுத்தோம். துயரங்களில் தோள் கொடுத்தோம் . அதனால் தான் எங்கள் ஐந்து பேரையும் அவர்கள், அவர்களின் குடும்பத்தில் ஒருத்தர் போலவே நினைக்கிறார்கள்.

இவர்களுக்குக் கலையார்வத்தை வளர்க்கின்றோம். ஏனென்றால் கலை இவர்களுக்கு மிக முக்கியம். எங்களின் நடத்தைகளைப் பார்த்துக் கொண்டு மாணவர்கள் மேலும் ஆர்வமாகப் படிக்க விரும்புகின்றார்கள். மாணவர்களுக்காக நாங்கள் தினந்தோறும் நிறையப் படிக்கிறோம். அப்பொழுதுதான் அவர்களின் மனதில் சரியான விதையை விதைக்க முடியும். மாணவனாக எப்பொழுதும் இருக்கும் மனநிலையை உடையவனால் மட்டுமே நல்ல ஆசிரியனாக இருக்க முடியும் என்கிறார் சாக்கிய சக்தி. (சிறகு இதழில் எழுதுபவர்) இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வாளர்.

இங்கு இருக்கின்ற மாணவர்களுக்கு இரண்டு பிரச்சனைகள் பெரிதாக இருப்பதை உணர்ந்தோம். ஒன்று பள்ளி இடை நிறுத்தம் மற்றொன்று குடும்ப வறுமைச் சூழல். குடும்ப வறுமை காரணமாகப் பெற்றோர்கள் செங்கல் சூளைகளிலும், கல் குவாரிகளிலும் வருடக் கணக்கில் வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். இதனால் வீட்டில் இவர்கள் (மாணவர்கள்) மட்டும் தனியாக இருப்பார்கள். இதனால் தங்களுக்கு சரியான வழிகாட்டி இல்லாமலும், பள்ளிக்குச் செல்லாமலும் இடையிலேயே நின்றுவிடுகின்றனர். இது மிகப்பெரிய பிரச்சனையாக ஊர் முழுக்க இருந்தது இது மேலோட்டமாக பொருளாதாரம் சார்ந்த பிரச்சனையாக இருந்த போதிலும் நாங்கள் அதனைக் கவனமாகக் கையாண்டோம்.

படிப்பை இடையிலேயே விட்டுவிட்ட மாணவர்களை அழைத்து அவர்களுக்கு (counselling) அறிவுரை கூறினோம். கல்வியின் அவசியம் குறித்துப் பேசினோம். இப்படி ஊரில் படிப்பை இடையிலேயே விட்டுவிட்ட எல்லா மாணவர்களையும் தேடி நாங்களே மீண்டும் பள்ளியில் சேர்த்தோம். இப்பொழுது அவர்கள் பட்டதாரிகளாக இருக்கின்றனர். என்கின்றனர் இக்குழுவில் இருவரான துரையும், சிவபாலாவும்.

இதைவிட முக்கியமான சாதனை ஒன்று இருக்கின்றது என்று துவங்கினர். இவ்வியக்கத்தைச் சேர்ந்த செந்தில். இந்த மொடையூர் முழுக்க தலித் மக்கள் மட்டுமே வசிக்கிறோம் இதனைச் சுற்றி உள்ள நாட்டார்மங்கலம், எடப்பாளையம், திருத்தவேலி போன்ற கிராமங்களைச் சேர்ந்த மாணர்களும் இங்கு வந்து டியூசன் படிக்கின்றனர். கலையூர் என்ற கிராமத்தில் பெரும்பாலும் நரிக்குறவர்கள் வசிக்கின்றனர். அந்த மாணவர்களும் எங்களிடம் கல்வி கற்க வருகின்றனர். எனவே இங்கு சாதி, மதம் பார்க்கமாட்டோம். மாதம் இருமுறை பெற்றோர்களை வரவழைப்போம். அப்பொழுது அவர்கள் இங்கு வருவதும். எங்களோடு பழகுவதும் தாங்கள் குழந்தைகள் அனைத்து மாணவர்களோடும் பழகுவதைப் பார்த்து அவர்கள் பெருமைப்படுவதும் நல்ல மாற்றங்கள். இது அனைத்து இடங்களிலும் பரவ வேண்டும் என்கிறார் செந்தில். இவர் எம்.சி.ஏ பட்டதாரி.

வாங்க! நம்ம நூலகத்துக்குப் போகலாம் என இவர்கள் அனைவரும் அழைக்க அவர்களைப் பின் தொடர்ந்தேன் மூன்று ஒலைக் குடிசைகளுக்கு மத்தியில் இருக்கிறது ஓர் ஓட்டு வீடு. அதுதான் இவர்களின் நூலகம். சங்க இலக்கியத்திலிருந்து நவீன இலக்கியம் வரை இங்கு நூல்கள் குவிந்து கிடக்கின்றன. தினசரி நாளிதழ்கள் ஒரு மூலையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இது மாணவர்களே அவர்களாக விரும்பி வாங்குகிற தினசரிகள். மீண்டும் பாடசாலை மாணவர்களோடு பேசத்துவங்கினேன். பொதுஅறிவில் அவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள்.

ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் இதை நாங்க நடத்திக்கிட்டு இருக்கோம். எங்களுக்கு எந்த உதவியோ, நன்கொடையோ இதுவர எவராலயும இல்ல. இந்தச் சேவை மையத்த அடுத்த தளத்துக்கு கொண்டு போகணும்னு நாங்க எல்லாரும் ஆசைப்படுகிறோம். இந்த மாணவர்களுக்குப் புத்தகம், நோட்டு, பேனா, பென்சில் தேர்வு அட்டை, சீருடைனு பொருட்கள் வழங்க எங்க பணத்திலிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் கையேந்தி வசூலிச்ச பணத்த வச்சு உதவிகள் செய்றோம். கருணை உள்ளம் கொண்டவர்கள் உதவினால் மேலும் விரிவுபடுத்தி இப்பணியை பலருக்கும் செய்வோம் என்ற ஏக்கப்பெருமூச்சோடு கூறி முடித்தனர் அறிவுச்சுடர் கல்வி சமூக சேவை மைய குழுவினர்.

குறிப்பு : இவ்வியக்கத்திற்க்கு உதவிக்கரம் நீட்டுபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் : 9940156391,9585747525,9962426768


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கிராமத்தை முன்னேற்றும் அறிவுச்சுடர் இளைஞர்கள்”

அதிகம் படித்தது