மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஒப்பாரிப்பாடலும் அதில் ஒளிந்திருக்கும் உண்மையும்

ஆச்சாரி

Feb 15, 2013

இயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்ததே தமிழ்மொழி.  இத்தமிழுக்குச் சங்கம் வளர்த்து, தமிழை வளர்த்த பெருமை மதுரையைச் சாரும்.  இம்முத்தமிழையும் பருகி வளர்ந்து வந்த மதுரை மாவட்ட மக்களின் வாழ்க்கை ஓட்டத்தில்  முத்தமிழும் கலந்திருப்பது மறுக்க முடியாத உண்மை. நாகரிக வளர்ச்சி எனச் சொல்லிக் கொண்டு நமது அடையாளங்களைத் தொலைத்து வரும் இக்காலச் சூழலில், மதுரை மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இன்னும் அந்த பழங்கால பழமை மாறாமல் மக்கள் வாழ்கிறார்கள்.

தாலாட்டு, ஒப்பாரி, நடவுப்பாட்டு, கும்மிப்பாட்டு என கிராமத்தின் அடையாளங்களைத் தொலைத்து விடாமல் இந்தத் தலைமுறைக்கும் இப்பாடல்களை பயிற்றுவிக்கும் கருத்தம்மா என்ற பெயர் கொண்ட என் அம்மாவை ஒரு மாலை நேரம் சந்தித்து, ஒப்பாரிப் பாடல் பாடும் படியும். அதற்கான விளக்கமும் கேட்டேன் விவரித்தார்.

ஒப்பாரிப் பாடல் என்பது மனித இறப்புக்கு மட்டுமே பாடக்கூடிய பாடலாகும். தாய், தந்தை,  கணவன், பிள்ளை, உற்றார், உறவினர் எவரேனும் இறந்துவிட்டால் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்ப உணர்வை வெளிக்காட்ட ஒப்பாரி பாடப்படுகின்றன என்றார்.நான் சொன்னேன் அம்மா இப்பாடலை கர்நாடக சங்கீதத்தில் முகாரி, ஆகிரி போன்ற வகை ராகச் சாயலுடன் இருக்கிறது இவ்வொப்பாரி என்றேன்.

இன்றைக்கும் மதுரை மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமத்தில் எவரேனும் இறந்தால் அன்று இரவு அவர் வீட்டில் பெண்களால் விடிய விடிய ஒப்பாரி பாடப்படும். அல்லது ராஜா, ராணி வேசம் கட்டிக் கூத்துப் போடுவார்கள். அதே நேரம் ஆண்கள் விடிய விடிய சீட்டு (ரம்மி) விளையாடுவார்கள். என் அம்மாவிடம் அந்த ஒப்பாரிப் பாடலை பாடும்படி கேட்டேன். இவரின் தந்தையான (இறந்த) மொக்கையனை நினைத்துப் பாடினார்.

“ மரத சரவௌக்கு – எப்பா

நம்மவாச மங்காத நெய்வௌக்கு

சீம சரவௌக்கு -எப்பா

சிந்தாத நெய்வௌக்கு”

 இப்பாடல் வரிகளில்,  விளக்கு எவ்வாறு இருளை அகற்றி நமக்கு ஒளி கொடுத்து வழிகாட்டுகிறதோ அதுபோல ஜெக ஜோதியாகவும் சீரும் சிறப்புமாகவும் இருந்த நம் வீடானது,  என் அப்பா நீ இல்லாததால் இப்பொழுது இருண்டு கிடக்கிறதே என்ற மறைபொருளில் உணர்த்தும் விதமே இப்பாடலடி.

 *  கருப்புக் கொட புடுச்சு

 காட்டுப் பக்கம் போனாலும்

 காடும் பயிராகும்  நீங்க

 பாத்தெடமும் தோப்பாகும்.

 *  நீலக் கொட புடுச்சு

 நெலம் பாக்கப் போனாலும்

 நெலமும் பயிராகும் – நீங்க

 நின்ட எடமும் தோப்பாகும்

 அப்பாவின் மீதுள்ள அபரிமிதமான அன்பினால் இவ்வரி பாடப்படுகிறது. இவர் எங்கெங்கு செல்கிறாரோ  அங்கெல்லாம் செல்வம் பொழியும் என்றும், இப்படிப்பட்ட ஒங்கள தவறவிட்டு வாழறோமே என புலம்பி பாடப்படுகிறது.

 *  நாரத்தான் பண்ண

 நடக்கயில வந்த சீக்கு

 நாலு லட்சம் பணம் கொடுத்து

 நடந்த அலச்சம் வைத்தியர

 பணமும் செல்வாச்சு – நாங்க

 செஞ்ச பாவம் தொலையலப்பா

 *  இலுமிச்சம் பண்ண

 ஏழு லட்சம் பணம் கொடுத்து

 இருந்த அலச்சம் வைத்தியர

 பணமும் செலவாச்சு – நாங்க

 செஞ்ச பாவம் தொலையலப்பா

 என் அம்மாவின் அப்பா மொக்கையன் என்பவர் முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டு பதினெட்டு வருடம் படுத்த படுக்கையாகக் கிடந்தார். இதைக் குணப்படுத்த பண்ணாத வைத்தியமில்லை. போகாத இடமில்லை. வைத்தியம் பாக்கச் சென்ற இடங்களில் பணம் மட்டுமே செலவானது குணப்படுத்த முடியவில்லை. இறுதியில் இறந்தார்.

 இக்கதையை படிக்காத என் அம்மா இட்டுக்கட்டி, தமிழ் இலக்கண முறைப்படி எதுகை, மோனையுடன் பாடுவது என்னை ஆச்சரியப்படுத்தியது.

 *  மாங்கா அடுப்புக் கூட்டி

 மல்லிகப்பூச் சோறாக்கி

 மல்லிகப்பூச் சோறுதிங்க – யப்பா

 மந்தையெல்லாம் தேடுறேனே

 *  தேங்கா அடுப்புக் கூட்டி

 தென்னம்பிள்ள சோறாக்கி

 தென்னம்புல்லு சோறுதிங்க

 தெருவெல்லாம் தேடுறேனே

 தந்தை தன் மகளுக்கு மல்லிகைப் பூப்போன்ற சோற்றை  ஊட்டி வளர்த்தார். அவர் மறைந்த பின் அதுபோன்ற சோற்றை மகள் ஆக்கி, மறைந்து போன தந்தைக்கு ஊட்ட ஆசைப்படுவதாக அமைந்துள்ளது இப்பாடல் அடிகள்.

 *  வெள்ளப் பட்டுடுத்தி

 விதி வழி போனாலும் -என்ன

 வெள்ளால பிள்ளை என்பார்

 வீமனோட தங்கை என்பார்

 *  பச்சப் பட்டுடுத்தி

 பாதவழி போனாலும் -என்னப்

 பாப்பாரப் பிள்ளை என்பார்

 பரமனோட தங்கை என்பார்.

 தாழ்ந்த குடியில் பிறந்த தந்தை, தன் மகளுக்குச்  சிறுவயதில் பட்டுப் பாவடை சட்டை வாங்கி அணிவித்து வீதிவழி நடக்கவிட்டு அழகு பார்த்த போது,  பார்த்த மக்களெல்லாம் நீ வெள்ளாளப் பிள்ள மாதிரி இருக்க,  பாப்பாரப் பிள்ள மாதிரி இருக்க, பரமசிவனோட தங்க மாதிரி இருக்க எனக்கூறிய அந்த வார்த்தைகளை இத்தனை வயதிற்குப் பிறகு நினைவூட்டி,இப்படியெல்லாம் எண்ணக் கொஞ்சினியே . . . .என    தன் தந்தையை நினைத்துப் பாடப்படுவதே இப்பாடலடிகள்.

 *  கள்ளிக்கடியில -நாங்க

 கரும்பா வளந்த மக்க -இப்போ

 கையேந்தி நிக்கிறமே

 *  கருமணல் சோங்குல

 கரும்பா வளந்த மக்க -இப்போ

 கையேந்தி நிக்கிறமே

 ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆனதும், அவள் பிள்ளை பெற்று பாடை ஏறுவது வரை பிறந்த வீட்டுச் சீதனம் என்ற பெயரில் தன் மகளுக்கு தந்தை செய்யக் கூடிய சீர் செனத்திகள் நிறைய உண்டு. தந்தை தவறியதிற்குப் பின்பு அந்த உதவிகள் கிட்டாமல் நொந்து போய் அப்பெண் தந்தையை நினைத்து பாடப்படும் அடிகளே இவை.

 *  சரளக்கல்லுப்  பாதயில -நாங்க

 சலிக்காம வழி நடந்தம்பே

 சரளக்கல்லு குத்துதுன்னு – நாங்க

 சலிச்சோம் பெறந்த எடத்த

 *  வெள்ளக்கல்லுப் பாதயில – நாங்க

 வெரசா வழி நடந்தம்பே

 வெள்ளக்கல்லு குத்துதுன்னு – நாங்க

 வெறுத்தோம் பெறந்த எடத்த

 இதில் தந்தை இருக்கும்போது வாக்கப்பட்டு பொன மகள்,  தந்தையைக் காண வரும் மகிழ்ச்சியில் நடந்து வரும் போது சாலையில் இருந்த சரளக்கல்லில் சளைக்காமலும், வெள்ளக்கல்லில் வெரசாகவும் (விரைவாகவும்) நடந்து வருகிறாள். தந்தை இறந்த பிறகு அதே கற்சாலையில் நடந்து போனாலும் தந்தை இல்லாததால் பெறந்த இடத்தை வெறுத்தோம் எனப் பாடுகின்றனர்.

 இப்பாடலைப் பாடும் போது இறந்து போன தன் தந்தையை நினைத்து பாடிக்கொண்டே அழுதாள் என் அம்மா. பார்த்துக் கொண்டிருந்த எனக்கு மட்டும் அழுகை வராமலா இருக்கும்?  என் அம்மா அவரின் தந்தையை நினைத்து அழுக, அம்மா அழுகிறதே என நான் என் அம்மாவைப்  பார்த்து அழுக. . . .  ஆக ஒப்பாரிப் பாடல் கேட்கப்போய் தாயும், மகனும் நிஜமான ஒப்பாரி வைத்தோம்.

Biology pro-academic-writers.com/ title master of science where odense science 195 studying in sdu changed my attitude to scientific work

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஒப்பாரிப்பாடலும் அதில் ஒளிந்திருக்கும் உண்மையும்”

அதிகம் படித்தது