இந்தியா என்றால் “இந்தி’’ யாவா? (பகுதி:2)
ஆச்சாரிMar 1, 2013
இந்தி விதைப்பு:
“வங்காளியர் எனில் வங்காள மொழி பேசுநர், மலையாளியர் எனில் மலையாள மொழி பேசுநர், பஞ்சாபியர் எனில் பஞ்சாபி மொழி பேசுநர், மராத்தியர் எனில் மராத்தி மொழி பேசுநர், குசராத்தியர் எனில் குசராத்தி மொழி பேசுநர், இவை போல் இந்தியர் எனில் இந்தி மொழி பேசுநர், பேச வேண்டியவர்கள் என்ற தவறான எண்ணம் நம் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் விதைக்கப்பட்டுள்ளது. எனவே தான் தலைமை அமைச்சரும் இந்தியில் பேச முடியாமைக்கு வருத்தம் தெரிவிக்கிறார். இந்தியில் உரையாற்ற இயலாமை இழுக்கு எனக்கருதி இந்தியில் உரையாற்றுகிறார். இந்தியர் என்றால் இந்தி நாடு, இந்து நாடு என்ற எண்ணம் மாற முதலில் நம் நாட்டின் பெயரே மாற்றப்பட்டாக வேண்டும்.
பழந்தமிழ் இலக்கியங்கள் மூலம் நாம் இன்றைய இலங்கைத் தீவு ஈழம் என்றே அழைக்கப் படுவதை அறிகிறோம். அங்கு வாழ்ந்த மக்கள் தமிழர்களாகவே இருக்க வாய்ப்புள்ளது. சமசுகிருதமும் பிராகத மொழியின் கலப்பினால் சிங்களம் உருவானதாகவும் பல அறிஞர்கள் கருதுகிறார்கள் (பார்க்க Tamils of Sri Lanka: A comprehensive History by Dr. Murugar Gunasingam). சிங்கள இனம் மொழிக்கலப்பால் உருவாகியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. பின்னர் சிங்களர்கள் பெரும்பகுதியை வஞ்சகத்தால் கைப்பற்றிக் கொண்டனர். எஞ்சிய பகதிகளில் வாழ்ந்த தமிழர்களின் நூறாயிரக்கணக்கானவர்களை எரிகுண்டுகளாலும், கொத்துக் குண்டுகளாலும் அழித்தும், மண்ணில் புதைத்தும் ஒழித்துவிட்டனர். அப்படியும் எஞ்சியோரை வதை முகாம்களில் அடைத்து வைத்து குடிநீர் தட்டுப்பாடு உணபவுப்பற்றாக்குறை மருந்தின்மை ஆகிய கொடுமைகளை உருவாக்கிப் போதிய நல்வாழ்வு வாய்ப்புகளை ஏற்படுத்தாமல் அழித்து வருகின்னர்.
ஆகவே, தமிழர் வாழ்ந்த பகுதிகளை முழுவதும் சிங்கள நிலமாக ஆக்கவும், பரம்பரையாகச் சிங்கள நிலமாக இருந்தது போல காட்டவும் இந்தியத் துணையுடன் நடவடிக்கை எடுத்து வருகின்றனர், எனச் சிங்கள ஊடகங்களே தெரிவிக்கின்றன.
இலங்கைத் தமிழர்களுக்காக, இந்திய விடுதலைக்கு முன்பிருந்த தமிழ் மக்கள் குரல் கொடுத்து வந்திருந்ததுடன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல கடுமையான போராட்டங்கள் மூலம் தங்கள் உணர்வையும் வெளிப்படுத்தியுள்ளனர். உலக நாடுகளின் துணையின்றித் தமிழ் ஈழ மக்கள் தனி அரசை அமைத்த பின்பு அதை உலக நாடுகள் ஏற்க வேண்டும் என வேண்டி வந்தனர். அண்மைப் பேரழிவின் தொடக்கத்தில் இருந்தே அதனைத் தடுத்து நிறுத்த அனைத்துத் தரப்பினரும் பல்வேறு வகைகளில் போராடி வந்தனர்.
முத்துக்குமாரர்கள் அனலுக்கு உணவாகி, உயிர் ஈகம் புரிந்து, தமிழ் இன உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். இவை அனைத்தும் பயனற்றுப் போகும் வண்ணம் இநதிய காங்கிரசு அரசு கேளாச் செவியால் நடந்து கொண்டதன் காரணம் என்ன? இந்திய நாட்டின் ஒரு பகுதியாகத் தமிழ்நாடு விளங்கினாலும் இந்தியாவிற்கு அயலவரால் இன்னல் வரும் பொழுதெல்லாம் முதலில் தோள் கொடுப்பவர்கள் தமிழர்களாக இருந்தாலும், இந்திய தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளது.
பாராதமுகமும், புறக்கணிப்பும் இருந்தாலும் பொறுத்துக் கொள்ளலாம், ஆனால் சமசுகிருத மேலாண்மைக்காக கழுத்தறுப்பு வேலை அல்லவா செய்து வருகிறது. மத்திய ஆட்சிக்குத் தமிழகத் கட்சிகளின் பங்களிப்புத் தேவை என்ற கட்டாயச் சூழலிலும் தமிழ் நாட்டிற்கு எதிராகச் செல்லும் துணிவு எவ்வாறு அதற்கு வந்தது? தமிழால் ஒன்று படாத் தமிழ் நாட்டு மக்களே அதற்குக் காரணமாகும்.
தமிழகப் பேராயக் கட்சியோ தில்லிக்கு காவடி தூக்குவதில் அணி, அணியாகப் பிரிந்து போட்டி போட்டுக் கொள்வதில் காட்டும் கருத்தைத் தமிழர் நலனை கட்டிக் காப்பதில் காட்டுவதில்லை தமிழ்நாட்டுக் கட்சிகள் தங்களுக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்வதைப் பார்த்து செல்வாக்குடன் இருப்பதாக எண்ணினால் அது தவறாகும். ஓர் எடுத்துக்காட்டைக் கூற விரும்புகிறேன்.
கருமவீரர் காமராசர் சுட்டிக் காட்டுபவரைத் தலைமை அமைச்சராக ஏற்றுக் கொள்ள முன்வந்த பேராயக் (காங்கிரசு) கட்சியினர் அவரைத் தலைமை அமைச்சராக ஏற்க முன்வரவில்லையே? இதுதான் உண்மை நிலை. வடவர் நம்மைக் கறிவேப்பிலையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை.
ஆனால் நம் இனமோ, மொழியோ பயனுறும் வண்ணம் செயல்பட முன்வருவதில்லை. திராவிடம், திராவிட இயக்கம் என்றே தமிழக மக்கள் பேசி வந்தாலும் பிற தென் மாநிலத்தவரும் தமிழ் மக்களுக்கு எதிராகவே நடந்து கொள்கின்றனர். மத்திய அரசுகளும் அவற்றிற்கே துணைபுரிகின்றன. நாமோ பாடங்கற்காமல் விழித்தெழாமல் இருக்கின்றோம்.
“ தமிழின் வாழ்வு தமிழர் வாழ்வு !
தமிழர் வாழ்வே தமிழின் வாழ்வு ! !
என்பதே பேராசிரியர் சி இலக்குவனார் வற்புறுத்தி வந்த கோட்பாடு ஆகும். எனவே, தமிழர் வாழ, தமிழ் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் செந்தமிழின் செம்மொழித் தகுதி ஏற்கப்பட்டால் தமிழ் நலன் சார்ந்த விந்தை பல நிகழும் எனப்பலராலும் சொல்லப்பட்டது ஆனால் முழு ஏமாற்றமே.
தமிழை மத்திய அரசின் அலுவல் மொழியாகவும், இந்தியாவின் தேசிய மொழியாகவும் அறிவிக்கச் செய்ய வேண்டும் தேசிய மொழி என்று இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்தி அறிவிக்கப்படாமலேயே தேசிய மொழியாகப் பரப்புரை செய்யப்படுகிறது. வாழும் செம்மொழியும், மூத்தமொழியும் ஆகிய தமிழைத் தேசிய மொழிகளுள் ஒன்றாக அறிவிப்பதால் இந்தியாவிற்கே பெருமை எனப் பிறரை உணரச் செய்ய வேண்டும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியா என்றால் “இந்தி’’ யாவா? (பகுதி:2)”