மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இயல் 12 – கதை வாசிப்பு முறை

ஆச்சாரி

Mar 1, 2013

நமக்கு வாழ்க்கையில் வாசிக்கக் கிடைக்கக்கூடிய நேரம் குறைவு, அந்தக் குறைந்த அவகாசத்தை நிறைவாகப் பயன்படுத்த வேண்டுமானால், தேர்ந்தெடுத்து வாசிக்கவேண்டும். அதனால்தான் வள்ளுவர் “கற்பவை கற்க” என்று கூறினார். தேர்ந்தெடுத்து வாசிக்கவேண்டும் என்பது முதல் நிலை. அதை எப்படி வாசிக்கவேண்டும் என்பது இரண்டாவது நிலை.

ஒரு சிறுகதையை மனித முகத்தோடு ஒப்பிடலாம். எவ்வளவு வகையான, வித்தியாச மான முகங்கள் உலகத்தில்! ஒன்று போல ஒன்று இருப்பதில்லை. பழக்கமாகிவிட்டால் இரட்டையர்களின் முகங்களுக்கிடையில்கூட வேறுபாடுகளை அறிந்துவிடலாம். ஆனால் பொதுவான இயல்புகள் எவ்வளவு இருக்கின்றன! இரண்டு கண்கள், அவற்றினிடையே ஒரு மூக்கு, கீழே ஒரு வாய், உதடுகள், மேலே நெற்றி, இரண்டு கன்னங்கள், தாடை…. இப்படித் தான் கதைகளுக்கிடையிலும் பொதுவான இயல்புகள் இருக்கின்றன, அதேசமயம் ஒவ்வொரு முகம் போலவும் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்ததாகக் காட்சியளிக்கிறது. சிலசமயங் களில் முகங்களை ஓவியர் பிக்காஸோ கியூபிக் வடிவங்களில் நேர்க்கோடுகளாக, முக்கோணங்களாக வரைந்தது போலச் சிறுகதைகளும் இழுக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் காட்சியளிக்கின்றன. பிக்காஸோவின் ஓவியங்களில் காண்பது யதார்த்தமான முகம் கிடையாது. அது போலவே இந்தக் கதைகள், யதார்த்தத்திற்கு மாறான அனுபவங்களை உங்களுக்குத் தந்து சற்றே தளரச் செய்வதற்காக எழுதப்பட்டிருக்கலாம்.

ஒரு கதையை எதுவுமறியாத சாதாரண வாசகரின் நிலையிலிருந்து வாசிக்கலாம். வாசித்து அனுபவம் பெற்ற தேர்ந்த வாசகரின் நிலையிலிருந்தும் வாசிக்கலாம். எழுத்தாள நிலையிலிருந்தும் வாசிக்கலாம். (எழுத்தாளனும் ஒரு தேர்ந்த வாசகனே. உதாரணமாக, க.நா.சு. தாமே ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், விமரிசகர் எனப் புகழ்பெற்றவர். அதேசமயம், அவர் வாசித்த இலக்கியங்களுக்கு அவர் ஒரு தேர்ந்த வாசகர். எனவே ஒவ்வொரு எழுத்தாளனும் தனக்கும் பிற ஆசிரியர்களுக்கும் தேர்ந்த வாசகனே என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.) ஆனால் ஆசிரியர்களோ இல்லையோ, எவரும் தேர்ந்த வாசக நிலையிலிருந்து வாசிப்பதற்குப் பழகிக் கொள்வது நல்லது.

முதலில் ஒரு சாதாரண நுகர்வோர் போல்தான் படிக்க ஆரம்பியுங்களேன். அப்படிப் படிக்க வேண்டும் என்பதற்காகவே கதைகள் எழுதப்படுகின்றன. ஒரு நல்ல கதை உங்களையே மறக்குமாறு செய்து, காலத்தையும் மறக்குமாறு செய்து, தனது யதார்த்தத்திற்குள் உங்களை ஈர்த்துக்கொண்டு விடுகிறது. நீங்கள் உங்கள் அறையிலோ பஸ்ஸிலோ செங்கல்பட்டு ரயிலிலோ உட்கார்ந்திருப்பதை மறந்துவிடுகிறீர்கள்.

நல்லது. மகிழ்ச்சியாகப் படியுங்கள். இந்த முதல் வாசிப்பின் போது நீங்கள் எதையும் தேடுவதில்லை. ஓர் அனுபவம் உங்களுக்குக் கிடைக்கிறது-அவ்வளவுதான். சிலசமயங்களில் படித்தபிறகு அற்புதமாக உணர்கிறீர்கள். ஒரு நல்ல படைப்பினைப் படிக்கும் போது ஒரு பரவச உணர்ச்சி ஏற்படுகிறது. “எப்படிப் பாடினரோ, அடியார்” என்று ஒரு பாட்டு சொல்லுவதைப்போல, “எப்படி எழுதினாரோ இப்படி” என்ற உணர்ச்சி தோன்றுகிறது. உங்களை ஏதோ ஒருவிதத்தில் அந்த எழுத்து வளப்படுத்தியிருக்கிறது.

சில சமயங்களில் இப்படி நாம் உணர்வதில்லை. ஏதோ முப்பது நிமிடம் போயிற்று, அவ்வளவுதான். சிலசமயங்களில் ‘இவ்வளவு மோசமாக இருந்ததே’ என்று கசப்புணர்ச்சி கொள்ளவும் நேரலாம். பல சமயங்களில் அம்மாதிரி மோசமான கதைகளை நாம் விவாதிக்க விரும்புவதில்லை-அதுவும் ஒரு பயனுள்ள செயலாக இருக்கும் என்ற போதிலும்.

ஒரு வேளை அது நல்ல கதை என்று நீங்கள் நினைப்பதாக இருந்தால், அது உங்களை எப்படி உணர வைத்தது? அதிலிருந்து என்ன புரிந்துகொண்டீர்கள்? உங்கள் சொந்த வார்த்தைகளில் அந்த வாசிப்பைப் பற்றி எப்படி விளக்குவீர்கள்? நான் கதைப் பின்னலைச் சொல்லவில்லை. நான் கேட்பது, அது உங்களுக்குத் தந்த அனுபவம் என்ன? இந்த அனுபவத்தை எழுதிப் பார்ப்பது நல்லது. (இப்படித்தான் பல எழுத்தாளர்கள் உருவாகி றார்கள்.)

இந்தச் சமயத்தில் அந்தக் கதையை மறுவாசிப்புக்கு உட்படுத்துங்கள். இப்போது நீங்கள் ஒரு நுகர்வோராக வாசிக்கவில்லை. ஒரு தேர்ந்த வாசகராக வாசிக்கிறீர்கள். கதையின் ஆரம்ப அனுபவத்தை உணர்ந்துவிட்டீர்கள். இப்போது இன்னும் கூடுதலான பகுத் தாராய்கின்ற அனுபவத்திற்கென-கதையின் முழுமைக்காக மட்டுமல்ல, எப்படிப் பலவிதத் தேர்வுகள், முடிவுகள், நுட்பக் கருவிகள், திறன்கள் அக்கதையில் பயன் படுத்தப்பட்டுள்ளன, அவற்றை எவ்விதம் நீங்கள் கற்றுக்கொள்ளலாம் என்பதற்காக.

முதலில் சிறுகதையின் தலைப்பைப் பாருங்கள். இந்தக் கதை எதைப் பற்றியதாக இருக்கலாம்? அந்த விஷயத்தைப் பற்றிய உங்கள் பின்னணி அறிவைப் பயன்படுத்திச் சிந்திக்க வேண்டும். உதாரணமாக, ஒரு சிறுகதையின் தலைப்பு ‘ரிஷிமூலம்’ என்றால் அந்தச் சொல் என்னென்ன தொடர்புகளை மனத்தில் கொண்டு வருகிறது? ரிஷி என்ற சொல்லுக்கு ஏராளமான உட்குறிப்புகள் உள்ளன. ரிஷிமூலம் நதிமூலம் காணக்கூடாது என்ற பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது. இந்தக் காலத்தில் ரிஷி என்று ஆண்கள் பெயர் வைத்துக் கொள்கிறார்கள். இப்படி எத்தனையோ. ‘மறுபடியும்’ என்று ஒரு கதைத் தலைப்பு இருந்தால், ஏன் இப்படிக் கதைத் தலைப்பு அமைந்திருக்கிறது, எந்த அனுபவம் மறுபடியும் நிகழ்வதாகச் சொல்லப்படுகிறது என்பவற்றைப் பார்க்கவேண்டும். எந்தச் சொல்லுக்கும் நேரடி அர்த்தம் (டினோடேஷன்)  என்பதற்கும் அப்பால் பலவிதத் தொடர்பு அர்த்தங்கள் (அசோசியேஷன் கள்)-உட்குறிப்பர்த்தங்கள் அல்லது இரண்டாம்நிலை அர்த்தங்கள் (கானடேஷன்) எனப் பல உண்டு. அவைகளை எழுப்பிக்கொள்வது பயனளிக்கும்.

கதையை இந்தச் சமயத்தில் ஒரு நோக்கத்துடன் வாசிக்கவேண்டும். அவன் சொன்னான், இவன் சொன்னான், வாத்தியார் சொன்னார், பாடத்தில் வந்திருக்கிறது என்பதற்காக வாசிக்கக் கூடாது. சுதந்திரமான வாசிப்பு, கதையைப் படிக்கும்போது எது முக்கியமானது என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள உதவும். சும்மா, எவ்வளவு நீளம் இருக்கிறது அந்தக் கதை என்று முதலில் புரட்டிப்பாருங்கள். (டால்ஸ்டாய் எழுதிய இவான் இலியிச்சின் மரணம், ஹெமிங் வேயின் கடலும் கிழவனும் போன்ற நீண்ட கதைகளைப் படிக்க இது உதவும். குமுதம் பாணியிலான முக்கால் பக்கக் கதைகளுக்கு உதவாது.)

கதையின் தொடக்கங்கள் முக்கியமானவை. முதல் வாக்கியமும், முதல் பாராவும் எவ்வளவோ விஷயங்களை எளிதாக நிறுவி விடுகின்றன. கதையின் சந்தர்ப்பம், முக்கியக் கதாபாத்திரங்கள், நாம் எதைத்தான் வாசிக்கப்போகிறோம், ஆசிரியத்தன்மை, நோக்குநிலை, தொனி, குரல் என்று பலவிஷயங்கள் தொடக்கப் பாராவிலேயே தெரிந்துவிடுகின்றன. என்ன அடிப்படையில் ஆசிரியர் கதை எழுதுகிறார், முழுக்கதையின் எவ்வளவு விஷயங்கள் கதைத் தொடக்கத்திலேயே ஆலோசிக்கப் படுகின்றவை, எப்படி நீங்கள் அவற்றில் ஈர்த்துக் கொள்ளப்படுகிறீர்கள் என்பதெல்லாம் தொடக்கத்திலேயே பிடிபடும் விஷயங்கள்.

வெவ்வேறு பாராக்களின் முதல் வாக்கியங்கள் எப்படி அமைந்திருக்கின்றன என்று பாருங்கள். முதல் பத்தியை மட்டும் முதலில் படியுங்கள். இவை அந்தச் சிறுகதை எங்கு அமைக்கப்பட்டிருக்கிறது, மொழிநடை எந்த அளவு கடினமாக இருக்கிறது, உங்களுக்கு அந்தக் கதையைப்படிக்க எவ்வளவுநேரமாகும் என்பவற்றைத் தெளிவுபடுத்தும்.

பிறகு முக்கியக் கதாபாத்திரங்களைக் கண்டுபிடியுங்கள். முக்கியக் கதாபாத்திரங்கள் கதையை நிகழச் செய்பவர்கள். கதையின் செயல்களை நடத்துபவர்கள். அல்லது கதையின் முக்கியமான சம்பவங்கள் இவர்களுக்குத்தான் நேரிடுகின்றன. இவர்கள் பார்வையிலிருந்து தான் பொதுவாகக் கதை சொல்லப்படும். அவர்கள் எப்படி இருக்கிறார்கள், எதை விரும்புகிறார்கள் என்றெல்லாம் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் செயல்களையும் கூர்ந்து நோக்குங்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அடையாளம் காணுங்கள், கதையைப் படித்தபின் அவர்களின் சாராம்சமான குணங்களை வருணிக்க இயலவேண்டும்.

சிறிய பாத்திரங்களையும் குறித்துக்கொள்ளுங்கள். சில சமயங்களில் முக்கியக் கதைமாந்தருக்கு எதிர்நிலைப் பாத்திரம் ஒருவரும் கதையில் அமைந்திருக்கலாம். சிறிய பாத்திரங்களுக்கு வளர்ச்சி இருக்காது. குளத்தங்கரை அரசமரம் கதையில், கதையைச் சொல்வது ஓர் அரசமரம். ஆனால் மரமும் கதை சொல்லமுடியும் என்று ஏற்றுக் கொண்டுதான் கதையை வாசிக்கிறோம்.

பிறகு கதைப்பின்னலைக் கவனியுங்கள். அதாவது கதையில் என்ன நிகழ்கிறது என்பதை உங்கள் பார்வையிலிருந்து சொல்லுங்கள். இதுதான் கதைப்பின்னல். கதையில் நிகழ்வுகள் முறைமாறி யிருந்தாலும் நீங்கள் கால வரிசைப்படி அவற்றைச் சொல்ல இயல வேண்டும். கதையின் செயல் மீது செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் என்ன என்பதைப் பாருங்கள். ஈ.எம். ஃபார்ஸ்டர் கதைக்கோட்டுக்கும் கதைப்பின்னலுக்கும் வேறுபாடு காணக்கூடியவர். என்ன நிகழ்கிறது என்பதை கதைக்கோடு என்றும், ஏன் நிகழ்கிறது என்று கேட்டால்தான் கதைப்பின்னல் கிடைக்கும் என்றும் அவர் கூறுவார். கதைக்கோடு தன் போக்கில் செல்ல அதன்மீது செல்வாக்குச் செலுத்துகின்ற நிகழ்வுகள்; கதாபாத்திரங்கள்; நிலைமைகள்; கருப் பொருள்கள் ஆகியவற்றின் பலவிதத் தொகுதிகள் யாவுமே அவரது கருத்துப்படி கதைப்பின்னல் என்பதில் அடங்கும். கதையின் அடிப்படையான மோதல்/ பிரச்சினை என்ன என்பதை விவாதியுங்கள்.

சில கதாசிரியர்கள் தங்கள் கதாபாத்திரங்களைக் குறிப்பிட்டதொரு சூழலில் வைத்துப் பார்ப்பது வழக்கம். உதாரணமாக, ஒரு வேட்டைக்காரன். அவனைப் புதியதொரு அறிமுகமற்ற தீவில் விட்டுவிட்டால் என்ன செய்வான்? ஒரு மருத்துவர், தனது மகனுக்கே அறுவை சிகிச்சை செய்யவேண்டி வருகிறது. அப்போது எப்படி உணர்வார்?

அடுத்ததாகப் பார்க்க வேண்டியது பின்னணி அமைவு(செட்டிங்). கதை எங்கே, எப்போது நடக்கிறது என்பதுதான் பின்னணி. இது ஆசிரியக் கதை சொல்லும் தொனி, அவர் அமைக்கவிரும்பும் மனநிலை (மூட்) ஆகியவற்றையும் பல சமயங்களில் உள்ளடக்கியிருக்கிறது. இவற்றையெல்லாம் உள்ளடக்கிச் சூழலமைவு (அட்மாஸ்ஃபியர்) என்ற சொல்லைப் பயன்படுத் துகிறோம். கதை ஒரு தனிமை உணர்ச்சியை உருவாக்குகிறதா, பயவுணர்ச்சியை ஏற்படுத்து கிறதா போன்றவற்றை இது உள்ளடக்கியிருக்கிறது.

பிறகு நோக்குநிலையை கவனியுங்கள். கதாசிரியர் ஒரு குறிப்பிட்ட ஆளை ஏன் கதை சொல்வதற்குத் தேர்ந்தெடுக்கிறார்? நிகழ்காலத்திற்கு பதிலாக ஏன் இறந்த காலத்தைப் பயன்படுத்துகிறார்? ஏன் படர்க்கையில் கதைசொல்வதற்கு பதிலாகத் தன்மையில் சொல்கி றார் போன்ற கேள்விகளுக்கான விடைகள் இவற்றில் அடங்கும்.

காலத்தை எவ்விதம் ஆசிரியர் கையாளுகிறார் என்ற விஷயத்தை கவனியுங்கள். சில ஆசிரியர்கள் அடுத்த பாராவைத் தொடங்கும்போதே பத்து ஆண்டுகளைக் கடத்திவிடு வார்கள். பத்தாண்டுகள் கழித்து….என்று தொடங்குவார்கள். காலம் கழிந்ததைக் குறிக்கும் எந்தச் சொல்லையும் கவனமாகப் பாருங்கள். ஒரு நிருபர் காலவரிசைப்படிதான் சம்பவங் களைக் கூறியாக வேண்டும், ஆனால் கதாசிரியருக்கு அப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. பெரும்பாலும் ஆசிரியர்கள் கதையின் நடுப்பகுதியிலிருந்து தொடங்கிச் செல்லு வார்கள். அல்லது காலத்தில் முன்னும் பின்னும் இயங்குவார்கள். இம்மாதிரிச் சமயங்களில் உங்களுக்குக் காலவரிசைப்படி சம்பவங்களை அமைத்துக்கொள்வது கடினமாக இருக்கலாம். கால வரிசைப்படி கதையைச் சொல்லாமல் இப்படிப்பட்ட முறையை ஏன் ஆசிரியர் கையாளுகிறார் என்ற கேள்வியை எழுப்பிக்கொள்ளுங்கள். இதனால் கதைக்கு என்ன ஆதாயம் கிடைக்கிறது?

கதையின் முக்கியமான தருணத்தைக் கண்டுபிடியுங்கள். ஒவ்வொரு சிறுகதையிலும் ஏதேனும் முரண் உண்டு. போராட்டம் உண்டு. விறுவிறுப்பை ஊட்டும் அம்சங்கள், மறை பொருள்கள் உண்டு. கொஞ்சம் இழுவிசை உண்டு. இவை எல்லாவற்றுக்கும் நிச்சயமாகப் பயன் உண்டு. முக்கியமான தருணங்களில்தான் கதாபாத்திரங்கள் தங்கள் திசைகளை மாற்றிக் கொள்வார்கள். அதாவது முன்போல் அல்லாமல் வேறுவிதமாக உணர்வார்கள், அல்லது வேறுவிதமாக நடந்து கொள்வார்கள்.

கதையின் சூழலை எவ்விதம் ஆசிரியர் பயன்படுத்துகிறார் என்பதைப் பாருங்கள். ஏதோ ஓர் இடத்தில்தான் கதை நிகழ்ந்தாக வேண்டும். ஆனால் அந்த ஏதோ ஓரிடம் என்பது வரலாற்றுப் பூர்வமான காலநேரம் கொண்டிருக்கலாம், அல்லது ஒரு கதாபாத்திரத்தின் மேக மூட்டமான மனமாகவும் இருக்கலாம்.

பார்வைக்கோணங்களை (பெர்ஸ்பெக்டிவ்) ஆசிரியர் எவ்விதத்தில் பயன்படுத்துகிறார் என்பதைப் பாருங்கள். பார்வைக்கோணம் என்பது நோக்குநிலையோடு சிலசமயங்களில் குழப்பிக் கொள்ளப்படுகிறது. எவ்வித நிலைப்பாடுகளிலிருந்து கதையின் விவரங்கள் தெளிவுபடுத்தப் படுகின்றன என்பதைப் பார்வைக்கோணம் என்ற சொல் குறிக்கிறது. திரைப்படமாயின் இதைக் காமிராக் கோணம் (ஆங்கிள்) என்பார்கள். பார்வைக் கோணங்கள் மாறினால், எதற்காக மாறுகின்றன என்று கேட்டுக் கொள்ளுங்கள். இதனால் கதைக்கு என்ன நன்மை கிடைக்கிறது என்பதையும் நினைத்துப் பாருங்கள்.

இறுதியாகக் கதையின் முடிவு. முடிவுகள் கதையை மறுபடியும் திறக்கலாம், அல்லது அந்த அனுபவத்தோடு முடிக்கலாம். கதைவாசிப்பில் முக்கியத் தருணம் அது. கதையின் முழு அனுபவத்தையும் பெறுகின்றன தருணம்.

பிறகு எஞ்சியிருப்பவை கதையின் அணிசார் அம்சங்களும் நோக்கமும்தான்.
கதையின் அணிசார் அம்சங்கள்
1. ஆசிரியர் எவ்விதம் குறிப்புமுரணைக் கையாளுகிறார் என்பதை கவனியுங்கள். குறிப்பு முரண் என்பது பெரும்பாலும் எதிர்பாராத ஒன்றைத் தெரிவிக்கிறது. நாடக முரண் என்பது வாசிப்பவர் அளவுக்குப் பரந்த அறிவு பெறாத கதாபாத்திரங்கள் எவ்விதம் வினை செய்கிறார்கள், எதிர்வினை செய்கிறார்கள் என்பதையெல்லாம் காட்டும். சூழல்முரண், வாசகர்களுக்கும் கதாபாத்திரங்களுக்கும் எதிர்பாராத ஒன்றாக அமையும். சொல்முரண் சிலேடையாக, கேலியாக, கிண்டலாக, நகைச்சுவையாகப் பேசுவதாக அமைந்து பாத்திரத்தின் முக்கியமான பண்பு எதையேனும் வெளிப்படுத்தும்.
2. திரும்பத்திரும்ப வரும் பிம்பங்களை அல்லது படிமங்களை கவனியுங்கள். கதையில் ஆசிரியர் அறிமுகப்படுத்தும் திரும்பத் திரும்பவரும் படிமப்பாணிகள் (இமேஜரி) கதைவளர்ச் சிக்கோ, கதையின் அர்த்தத்திற்கோ, கதாபாத்திரத்தின் வளர்ச்சிக்கோ பயன்படுவதாக இருக்கக்கூடும்.
3. ஆசிரியர் கையாளும் குறியீடுகளைப் புரிந்துகொள்ளுங்கள். படிமங்கள் எல்லாம் குறியீடுகள் அல்ல, ஆனால் குறியீடுகள் எல்லாம் படிமங்களே. தங்கள் இயல்பான அர்த்தத்திற்கு அப்பால் செல்லக்கூடிய படிமங்களைக் குறியீடுகள் என்கிறோம். கதையின் குறிப்புப் பொருளை உணர்த்தக் குறியீடுகள் உதவுகின்றன.
4. வேறு சிறப்பான அணிசார் பயன்பாடுகள், வழக்கத்திற்குமாறான சொல்லாட்சி, தொடர மைப்பு போன்றவற்றை கவனியுங்கள். ஆசிரியரின் சிறப்பான, தனித்த சொல் பயன்பாடு சொல்லாட்சி (டிக்ஷன்) எனப்படுகிறது. இதேபோல் தனித்த தொடரமைப்புகளையும் கையாள லாம். இயல்புக்கு அப்பாற்பட்ட ஒப்புமைகளையோ, வருணனைகளையோ விளக்கங்களையோ ஆசிரியர் கையாளுவது ஒரு குறித்தநோக்கம் கருதியதுதான். அந்த நோக்கம் என்ன என்பதைக் கண்டறியுங்கள்.
கதையின் அர்த்தம்
1. கதையின் கருப்பொருள் என்ன, எப்படி அதை ஆசிரியர் வெளிப்படுத்துகிறார் என்பதைக் கண்டறியுங்கள். கதை வளரும்போதே கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி இறுதியில் வெளிப் படும் முக்கிய விஷயம்தான் கருப்பொருள் (தீம்). பெரும்பாலும் கருப்பொருள்கள் மறை வாகத்தான் இருக்கும். ஆனால் சில சமயங்களில் ஏதோ ஒரு கதைமாந்தரே அதை வெளிப் படையாகச் சொல்லிவிடுவதுபோலவும் அமைப்பதுண்டு. கதைமுழுதும் நிலைப்பாடுகள், மனப்பாங்குகள், மதிப்புகள், அக்கறைகள் போன்றவற்றைத் தொடர்ந்து வெளிப்படுத்துவதாக ஒரு கதாபாத்திரம் அமைந்தால் அதனை பாத்திரவேடம் (பெர்சோனா) என்று சொல்வது வழக்கம். படிமப்பாணிகள், குறியீடுகள், அமைவின் கூறுகள், கதாபாத்திரங்களின் பண்புகள் ஆகியவற்றாலும் கருப்பொருள்கள் விளக்கமாகும்.
2. மேற்கண்ட விஷயங்கள் எப்படிக் கருப்பொருளை வெளிப்படுத்துகின்றன என்பதை விவரியுங்கள். அதற்காகக் கதையின் குறித்த பகுதிகளைப் பயன்படுத்துவது நலம்.
3. பிரதிச்சூழற்கூறுகளான மேற்சுட்டுகள் (அல்யூஷன்கள்), குறியீடுகள், பிறகருவிகள் ஆகிய வற்றை கவனியுங்கள். இவை ஆசிரியரின் அனுபவம், வாழ்க்கை, வரலாறு அல்லது வேறுபிற எழுத்துகளுக்குக் கொண்டுசெல்வதாகஅமையலாம். கதாசிரியரின் வாழ்க்கை பற்றித் தெரிந்து கொள்வதும், அவருடைய பிற படைப்புகளைப் படிப்பதும் மேலும் கதையைப் புரிந்து கொள்ள வாய்ப்பளிப்பதாக அமையும்.

இன்றைய மீப்புனைகதைகளை எழுதுபவர்கள் அதிகமாக மேற்சுட்டுகளைக் கையாளு கிறார்கள். உதாரணமாகக் கோணங்கி. அதனால் அவர் எழுதும் கதைகள் புரியாமல் போய்விட வாய்ப்பிருக்கிறது. வாசக சமரசத்தை அக்கதைகள் முற்றிலும் மறுக்கின்றன. தமிழ்க் கதைசொல்லியை மீண்டும் கொண்டுவந்தவர் அவர் என்று நாகார்ஜ்§னன் போன்ற விமரிசகர்கள் புகழ்ந்தாலும், அவருடைய மேற்சுட்டுகளிலும் நிலைமாறும் உருவகங்களிலும் 99 சதவீதம் தமிழ்ப்பின்னணி சார்ந்தவை அல்ல. ஆலீஸ், டான் குவிக்சோட் என்று வெளிநாட்டுக் கதைகளிலிருந்தும் டேரட் போன்ற அயல் முறைகளிலிருந்தும் அவர் தமது மேற்சுட்டுகளை எடுக்கிறார். கண்ணகி பற்றியோ, மாதவி, மணிமேகலை பற்றியோ, சீவகன் பற்றியோ, தமிழ்விடுது£து பற்றியோ அவருடைய கதைகளில் மேற்சுட்டுகளைக் காண முடியாது. உலக இலக்கிய அகராதிகளில் காணப்படுகின்ற, பிறருக்குப் புரியாத- விஷயங்களைப் புகுத்துவதுதான் அவருடைய முறையாக இருக்கிறது. அவருடைய கதைசொல்லும் முறையும் வரன்முறையான தமிழ்மரபுக் கதைசொல்லல் அல்ல. முற்றிலுமாக ஸ்பானிய எழுத்து முறையிலிருந்தோ பிறவற்றிலிருந்தோ காப்பியடிக்கப்பட்ட எழுத்துமுறை. அவருடைய ஒரு கதையைப் படிக்க வெளி நாட்டு இலக்கியங்களில் வரும் ஆயிரம் சம்பவங்களைக் கவனிக்க வேண்டிவருகிறது. இவ்வாறு எழுதுவது சிறப்பற்றது. உண்மையில் தமிழ்முறைக் கதைசொல்லலையும் தமிழ் மேற்குறிப்புகளையும் கையாளுகின்ற ஒரு தமிழ்க் கதைசொல்லியாக இருந்திருந்தால் அவர் தமிழில் இன்று முக்கியமாகப் போற்றப்படும் கதாசிரியர் ஆகியிருப்பார்.

நல்ல சிறுகதைகளை ஒரு முறை படித்தால் போதாது. பலமுறையும் படிக்கவேண்டும். முதல் வாசிப்பில் பெரும்பாலும் நாம் ‘என்ன நடக்கிறது’ என்பதற்காகவே, கதைச் சம்பவங்களுக்காகவே வாசிக்கிறோம். அக்கதையின் அர்த்தம் என்ன என்று தெரிந்து கொள்ள இரண்டாவது முறை நிச்சயம் வாசிக்கவேண்டும்.

ஒரு கதையை ஒருமுறைக்கு மேலும் வாசிக்கவேண்டுமா என்று கண்டுகொள்ள ஒரு எளிய தேர்வு இருக்கிறது. “இந்த ஆசிரியரின் மொழித்திறன், எனது சிந்திக்கும்-உணரும்-அனுபவத் திறனை மேம்படுத்துவதாக இருக்கிறதா” என்று கேட்டுக்கொள்ளுங்கள். புனைகதை யில் மொழியின் வேலை, கதையைச் சொல்லுவது மட்டுமன்று; அதுதான் கதையின் முழு ஆக்கமுமே. கதைமொழிக்குச் சக்தியில்லை என்றால், அதை மறந்து விடுங்கள்.

ஆனால் சில சமயங்களில் படைப்பின் மொழி பயமுறுத்துவதாகவும் ஆகிவிடக்கூடும். மௌனியின் மொழி, கோணங்கியின் மொழி போல. இலக்கியத்தின் நோக்கம் குறித்து அவர் களுக்கு ஒரு தவறான எண்ணம் இருக்கிறது. “இதோபார், உனக்குப் புரியாமல் எழுதி உன்னை அச்சுறுத்துவதுதான் என் வேலை” என்பதுபோல அவர்கள் நடந்துகொள்கிறார்கள்.

நமக்கும் ஒரு தவறான புரிதல் இருக்கிறது. மேட்டிமைத்தனமான, அல்லது நமக்குத் தெளிவாயிராத எந்த விஷயத்தைப் பற்றியும் நாமும் அச்சப்படுகிறோம். ஓவியம் சிற்பம் போன்ற கலைகள் என்றால் நமக்குப் புரியாததற்காக மன்னிப்புக் கேட்கவும் செய்கிறோம்.  ஆனால் அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் இலக்கியத்தில் ஆசிரியர்மீது குறைகாண்கிறோம். அறிவியல் துறையில் இப்படியில்லை. புரிந்துகொள்வதற்கு தனிப்பட்ட டியூஷன் ஆசிரியரை வைத்தேனும் முயற்சிசெய்கிறோம்.

சில சமயங்களில் வாசகர்கள் கதையைப் படித்துமுடித்தவுடனே கதைப்பின்னலை மனத்தில் உருவாக்கிக்கொண்டு அக்கதையால் பயனில்லை என்று முடிவுகட்டிவிடுகிறார்கள். முதன்முதலாக ஒரு கதையைப் படிக்கும்போது அது பெரும்பாலும் நேரடியாகவும் விளைவற் றதாகவும் இருந்தால் “அது ஒன்றும் கதை சொல்வதாக இல்லையே” என்று நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட கதைகளை இரண்டு மூன்றுமுறை படித்துப்பார்த்தால் அதன் கருப்பொருள் சிக்கலானதாக, நாம் கவனம் செலுத்த வேண்டியதாக அமைந்திருப்பது தெரியவரலாம்.

நாவல் காலவெளி அடிப்படையில் ஒழுங்கமைக்கப்படுவது போலச் சிறுகதை அமைக்கப்படுவதில்லை. நாவல்களைக் கதையமைப்பு, கதாபாத்திரங்கள் ஆகியவற்றிற்காகப் படிப்பதுபோலச் சிறுகதையைப் படிக்கக்கூடாது. இவையும் முக்கியம்தான். கதாபாத்திர வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறுகதைகள் பல இருக்கின்றன. என்றாலும் சிறுகதைகளில் மொழியமைப்பே பிரதானமானது.

ஒருவர் சிறுகதை எழுதக் கற்றுக்கொள்ள ஆவலாக இருந்தால், அவருக்கு நாம் சொல்லக்கூடிய அறிவுரை, ‘நிறையக் கதைகளைப் படியுங்கள்’ என்பதுதான். கொஞ்சகாலம் நிறையக் கதைகளைப் படித்தவுடன் நமக்குச் சிறுகதைவடிவம் பற்றிய ஒரு மனச்சித்திரம் பிறக்க ஆரம்பிக்கிறது. சிறுகதை என்றால் எப்படி இருக்கும் என்பது பற்றிய ‘இயற்கையான’ உணர்வு மனத்தில் தோன்றிவிடுகிறது. அது என்ன சாதிக்கிறது என்பது தெரிந்துவிடுகிறது. நல்ல கதைகள் எப்படி வேலை செய்கின்றன, ஏன் செய்கின்றன என்பது அச்சமில்லாமல் தெரிய ஆரம்பிக்கிறது.

பலபேர் இப்படி வாசிப்பதில்லை. அவர்கள் நுகர்வோர்களாக வாசிக்கிறார்களே அல்லாமல் தேர்ந்த வாசகர்களாகவோ ஆசிரியர்களாகவோ வாசிப்பதில்லை. எழுத்தாளனாக வாசிப்பது தனது திறமைகளை ஒருவன் வளர்த்துக்கொள்ளப் பயன்படும் வாசிப்பு. கல்வித் துறை சார்ந்த வாசிப்புகள் பெரும்பாலும் கதையின் விஷயத்தை மட்டும் நோக்குகின்ற வாசிப் புகளாக உள்ளன. எழுத்தாளனாக வாசிப்பது என்பது, கதைகளில் எதைத் தேடுவது என்பதைக் கண்டறியும் வாசிப்பு. எப்படிக் கதைகளில் சில பொதுவான அடிப்படைகள் கையாளப்படுகின்றன என்பதை உணரும் வாசிப்பு. அப்படிப்பட்ட வாசிப்பில் ஈடுபட்டபின், இவை உங்கள் மனத்தில் ‘இயல்பாகவே’ படிந்து விடுகின்றன. பிறகு நீங்கள் எழுதுவது எளிதாகிறது. நீங்கள் ‘இயல்பாகவே’ எழுதத் தொடங்குகிறீர்கள்.

தேர்ந்த நிலையிலிருந்து வாசித்தால், உங்கள் ஆழ்ந்த அனுபவத்தை உங்களால் பிடிக்க முடியும். இப்படிப் பிடித்தால் நீங்களே எழுதும்போதும் உங்கள் வாசகர்கள் உங்கள் அனுப வத்தைப் பிடிக்குமாறு நீங்கள் செய்யமுடியும். ஆனால் அதற்குமுன்பாக எவ்வித உணர்வை வாசகர்களுக்கு நீங்கள் அளிக்க விரும்புகிறீர்கள் என்று ஏதோ ஒருவிதத்தில் தெரிந்து கொள் வது நல்லது. அதை உங்கள் மனத்திற்குள் சொல்லிப்பார்த்துக்கொள்ளவேண்டிய அவசிய மில்லை. ஒருவிதத்தில் அது மிக எளியதாகவும், ஃபார்முலாத்தன்மை கொண்டதாகவும் கூட இருக்கலாம். ஆனால் வாசகர்களுக்கு ஏதோ ஒருவித அனுபவத்தைத் தருவதை நீங்கள் பொறுப்போடு செய்கிறீர்கள்.

சிறுகதைகளின் பொதுவான குணாம்சங்களாக மோதல், நெருக்கடி, தீர்மானம் ஆகி யவை அமைகின்றன. தீர்மானம் என்பது ஒருவிதத்தில் தீர்வு என்று சொல்லலாம். (கூட்டத் தில் போடப்படும் தீர்மானங்கள் பற்றி நாம் பேசவில்லை. மாறாக, சங்கீதத்தில் தீர்மானம் என்பார்கள். அதற்கு ஒரு முடிவுக்குக் கொண்டுவருதல், முத்தாய்ப்பு என்று பொருள்.) ஒரு எழுத்தாளனாக வாசிப்பது என்றால் நிறைய விஷயங்களை எழுத்தில் கவனிக்க வேண்டி யிருக்கிறது. அந்த எழுத்தாளர் என்ன செய்கிறார், எப்படிச் செய்கிறார் என்பதை யெல்லாம் கவனிக்கவேண்டியிருக்கிறது. ஆனால், கடைசியாக, ஒரு கதை என்பது எப்போதுமே அதன் தனித்தனி பாகங்களைவிட உசத்தியானதுதான். வெறுமனே பாகங்களைப் பார்த்துக்கொண் டிருப்பது கதையின் ஆன்மா(!)வை உங்களுக்கு உணர்த்தாது. அது பகுதிகளுக்கெல்லாம் அப்பாலிருந்து வருகிறது. அதை உள்ளுணர்ச்சித் து£ண்டுதல் என்றோ, அதிர்ஷ்டம் என்றோ, அனுபவம் என்றோ, திறமை என்றோ, இல்லை-இவை எல்லாவற்றினுடைய ஒன்றுசேர்ந்த சேர்க்கை என்றோ சொல்லுங்கள். ஆனால் தனித்தனிப் பகுதிகளின் மீது கவனம் செலுத்தி வாசித்தல் என்பது உங்களால் உள்வாங்கப்பட்டிருந்தால், நீங்களே கதை எழுத உட்காரும் போது தானாக அவை வந்து உங்களுக்குக் கைகொடுக்கும். நீங்கள் அவற்றைக் கஷ்டப்பட்டுக் கற்றுக்கொண்டீர்கள் என்பது மறந்துவிடும்.

White the conjunction as introduces a clause, that is, academic writing for https://www.pro-academic-writers.com a construction containing its own subject and verb figurative language 297 the decay of society was praised by artists as the decay of a corpse is praised by worms

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இயல் 12 – கதை வாசிப்பு முறை”

அதிகம் படித்தது