மனசாட்சி
ஆச்சாரிMar 14, 2013
பாலியல் புகார்கள்
பற்றி எரிகிற போதெல்லாம்
அரசியல்வாதிகள்
ஆளுக்கொரு மூலையிலே
பேருக்கொரு பேட்டி தருகிற
பொன்னான தருணமிது!
குற்றவாளிகள்
தூக்கிலிடப்பட வேண்டுமென
எதிர்கட்சிகள் கோசமிட;
கடும் நடவடிக்கைகள்
எடுக்கப்படுமென
ஆளும் கட்சி பதிலளிக்கிறது!!!
சாமானியனுக்கெதிராய்
பொங்கியெழும் – இந்தப்
போலி தேசபக்தர்கள்
காலித்தனம் செய்த
காவல் அதிகாரிகளுக்கும்,
கூலிப்படைக்கொத்த
அரசியல்வாதிகளுக்கும்
விலக்களித்ததேனோ…?
தூக்கொன்றுதான்
தீர்வென்றானால் – இங்கே
தூக்குக் கயிற்றின் தேவை
லகரத்தில் இருக்குமென்பதை
தெரிந்துகொள்க…
மாநில காவல் துறையால்
மானபங்கம் செய்யப்பட்டோர்;
சிறப்பு அதிரடிப்படையால்
சின்னாபின்னம் ஆக்கப்பட்டோர்;
தேடுதல் வேட்டையெனும் பேரில்
தீக்கிரையாக்கப்பட்டோர்;
தீவிரவாதத் தடுப்பெனும் பேரில்
தாலியறுக்கப்பட்டோர்;
இங்கு லட்சோப லட்சம்…
இறுதியில்
தலையற்ற முண்டமாய்
தேசம் தலைகுனிய நேரிடும்!!!
சரி…
சட்டமியற்றச்
சொல்லுகிறீர்களே…
அதை இயற்றுபவர்கள்
யாரென்று தெரியுமா…?
அவர்கள் யோக்கியதை
என்னவென்று புரியுமா…?
இந்தியாவிலுள்ள
42 சட்டமன்ற உறுப்பினர்கள்
2 பாராளுமன்ற உறுப்பினர்கள்
பெண்களுக்கெதிரான
குற்றசெயல்களில் ஈடுபட்டவர்கள்!
1448 பேர் மீது கிரிமினல்
வழக்குகள் பதிவாகியுள்ளன!!
குமாருக்கும்,
பீட்டருக்கும்,
முகமதுக்கும் வழங்கப்படும் நீதி
மாண்புமிகுக்களுக்கும் பொருந்துமா?
கடமையில் தவறும்
கயவர்களை – உங்கள்
கூட்டு மனசாட்சி
கேள்வி கேட்காதா…?
என்னே! உங்கள்
தேசபக்தி
என்னே! உங்கள்
மனசாட்சி
– ————————————-
குறிப்பு: ஜனநாயக சீர்திருத்தக் கழகம் (ADR)அளித்துள்ள அறிக்கையின் படி இந்தியாவிலுள்ள 4,835 எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-களில் 1,448 பேர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 42 எம்.எல்.ஏ-களும், 2 எம்.பி-களும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்கி இருப்பவர்கள்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மனசாட்சி”