ஸ்பெஷல் 26 – ஒருசிறந்த படம்
ஆச்சாரிMar 15, 2013
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்படும் திரைப்படங்கள் தமிழிலும் குறைவு. மற்ற மொழிகளிலும் குறைவு. அப்படி ஒரு ஆக்கத்தை உருவாக்கினாலும், அது ஒரு புத்திசாலித்தனமான படமாக மிளிர்வது அதனிலும் குறைவு. அக்குறைபாட்டை போக்கி இருக்கிறார், 40 வயதுக்கும் சற்றே குறைவான ஒரு இளம் இந்திப் பட இயக்குனர். அவர் பெயர் நீரஜ் பாண்டே. அவருடைய இரண்டாவது திரைப்படம் ஸ்பெஷல் 26. முதல் திரைப்படமும் நிஜத்தில் நடந்த ஒரு குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுத்ததுதான். அப்படத்தின் பெயர் “எ வெட்னேஸ் டே”. உன்னைப் போல் ஒருவன் என்று தமிழில் மறு ஆக்கம் செய்து கமல்ஹாசன் கல்லா கட்டினாரே, அந்த படம்தான்.
1987ம் ஆண்டு, மார்ச் 19ம் தேதி, 26 பேர் கொண்ட ஒரு குழு, சி.பி.ஐ. அதிகாரிகள் போல நடித்து, மும்பை நகரத்தின் பிரபல நகைக் கடையை கொள்ளை அடித்தனர். பல லட்சங்கள் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் கொள்ளை போயின. அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த சம்பவம் இப்போது ஒரு அருமையான திரைப் படமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. நேர்காணலில் தோல்வி அடைந்த புத்திக் கூர்மை கொண்ட இளைஞன் அக்சய் குமார். அவரது வயது முதிர்ந்த கூட்டாளியாக அனுபம் கேர் மற்றும் இருவர். இந்த நான்கு பேர் கொண்ட குழு, படு பந்தாவாக உடையணிந்து, தோரணையாக மிரட்டிப் பேசி, வருமான வரித்துறை அதிகாரிகள், சி.பி.ஐ. அதிகாரிகள் என்று புளுகி அரசியல்வாதிகளிடமும் தொழில் அதிபர்களிடமும் சர்வ சாதரணமாக கொள்ளை அடிக்கிறார்கள். புத்திசாலித்தனமாகத் தப்பிக்கிறார்கள். நிஜ சி.பி.ஐ அதிகாரியான மனோஜ் பாஜ்பாய் வசம் இந்த வழக்கு வருகிறது. அவரது விசாரணையில் குற்றவாளிகளை கிட்டத்தட்ட நெருங்கி, கையும் களவுமாக பிடிக்கும் நேரத்தில் அசத்தல் க்ளைமாக்ஸ். ஒரு புன்னகையுடன் நாம் திரையரங்க இருக்கையை விட்டு எழுகிறோம்.
இப்படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் நடந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும், அவர்களது உடல்மொழி ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. முகபாவனையை நன்கு காட்டக்கூடிய வகையில் கேமராக் கோணம். நல்ல ஆரோக்கியமான, குபீர் சிரிப்பை வரவழைக்கும் “பரோடி”(parody) வகை வசனங்கள். அக்சய் குமார் மற்றும் அனுபம் கேர் மற்றும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அந்த இரு சகாக்கள் என அனைவரின் நடிப்பும் படத்தைத் தாங்கிக் கொண்டு இருக்கிறது.
1980-களில் கதைக் களம் என்பதால், மிகுந்த கவனத்துடன் காட்சிகள் கையாளப்பட்டு இருப்பதைக் காண முடிகிறது. சாலைகளில் வரும் வாகனங்கள், அந்த காலத்திய கட்டிடங்கள் என அனைத்தும் அச்சு அசலாய் எண்பதுகளை ஞாபகப் படுத்துகின்றன.
படத்தில் மொத்தம் மூன்று ரெய்டுகள் நடக்கின்றன. ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருப்பதால் நன்றாக ரசிக்க முடிகிறது. ஒவ்வொரு ரெய்டின் போதும், தீவிரம் கலந்த நேர்மையான ஒரு அதிகாரியின் முகபாவனை – ரெய்டுக்குப் பிறகு பயம் கலந்த பதட்டமடைந்த முகம் என அனுபம் கேர், தனது திறமையை நன்கு வெளிக்காட்டி இருக்கிறார்.
சி.பி.ஐ க்கு ஆள் எடுப்பதற்காக போலியாக செய்தித்தாளில் விளம்பரம் செய்து நேர்காணல் நடத்துவது, ஆட்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கே தெரியாமல் அவர்களை ஒரு போலி ரெய்டுக்கு உட்படுத்துவது என படு சுவராசியமான காட்சிகள் நம்மை “அட” போட வைக்கின்றன.
45 கோடியில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வசூலில் நூறு கோடியை தாண்டிவிட்டது. “அன்றாடம் நாம் பார்க்கும் சம்பவங்களிலேயே நூறு கோடி கதைகள், திடுக்கிடும் திருப்பங்கள், நகைச்சுவை காட்சிகள் கொட்டிக் கிடைக்கின்றன. கதை எழுதுறோம் பேர்வழி என்று ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உட்கார்ந்து தின்று தீர்ப்பதை விட ஜன்னலை திறந்து வைத்து தெருவை அவதானித்தாலே நல்ல கதையை திரைப்படமாக எடுத்து காசு பார்க்க முடியும்”.
இது இத்திரைப்பட இயக்குனர் நீரஜ் பாண்டே சொன்னது. இதில் அர்த்தம் உள்ளது.
Whatever the problem, correct or avoid it before the real data collection http://justdomyhomework.com phase starts
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஸ்பெஷல் 26 – ஒருசிறந்த படம்”