தயவு செய்து இதைப் படிக்காதீர்கள் (செய்தியும் & சிந்தனையும்)
ஆச்சாரிMar 14, 2013
செய்தி : ராஜபக்சே தலையைய் கொண்டு வருவோருக்கு ரூ. 1 கோடி பரிசு மதுரை வழக்கறிஞர் சங்கம் அறிவிப்பு.
சிந்தனை: இது நீங்களும் வெல்லலாம் 1 கோடி போட்டி மாதிரி இல்லங்க உண்மையிலேயே நீங்கள் விரைவில் கோடீஸ்வரனாக அறிய வாய்ப்பு முந்துங்கள் இவ்வாய்ப்பு காசு உள்ளவரை மட்டுமே!
செய்தி : போலீசே… கைது செய், இல்லாவிட்டால் இலங்கைத் தூதரகம் நோக்கிப் போவோம் – மு.க ஸ்டாலின் கெஞ்சல்.
சிந்தனை: ஆமா… போலீசே! சீக்கிரமா அவரப் புடிச்சிருங்க, இல்லன்னா இதச்சாக்கா வச்சிக்கிட்டு தன்னோட பால்ய நண்பர்கள பாத்துட்டு வந்திருவாரு.
செய்தி : ஏற்கனவே திட்டமிட்டபடி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 15ம் தேதி மின் உற்பத்தி துவங்கும்.
- மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி.
சிந்தனை: திட்டமிட்டு இலங்கைத் தமிழன சாகடிச்சிட்டீங்க. இப்பென்ன இந்தியத் தமிழனா?
செய்தி : ‘ஓய் திஸ் கொலைவெறி’ பாடலுக்கு தனுஷ் எட்டுலட்சம் வாங்கினார்.
சிந்தனை: ஆமாமா… எட்டுக்கட்டையில பாடுனவருக்கு எட்டுலட்சம் கொடுத்திர வேண்டியதுதான்.
செய்தி : ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும், ஊழலற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்று வலியுறுத்தியும், கடலூரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இல.மணி தீக்குளித்து இறந்தார்.
சிந்தனை: தீக்குளிக்கிறதுக்குப் பதிலா களத்துல இறங்கிப் போராடுங்க போதும்.இதுபோல இனி எவரும் பண்ண வேணாம்.மணி அவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்.
செய்தி : செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து செங்கோட்டைக்கு ஜெயலலிதாவை அனுப்ப வேண்டும். -நாஞ்சில் சம்பத்.
சிந்தனை: ஒரு காலத்துல பாளையங்கோட்டைக்கு ஜெ. வை அனுப்பனும்னு சொன்ன வாய்தானே இது, சரி… சரி… ஊருக்குப் பேசலனாக் கூட கொடுத்த காருக்காவது பேசணும்ல.
செய்தி : நானும், மோடியும் என்றும் சேர்ந்தே இருப்போம்
- சுப்ரமணிய சுவாமி
சிந்தனை: இனம் இனத்தோடு தானே சேரும் அட அதுதானய்யா ஒலக வழக்கம்.
செய்தி : 33 நாள் மன உறுதியுடன் உண்ணாவிரம் இருந்த சசிபெருமாளை கைது செய்த போது கூட உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்தவர், ஒரே ஒருநாள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போனதும் உடனே உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
சிந்தனை: கொடிது கொடிது பட்டினி, அதனினும் கொடிது அரசு மருத்துவமனை.
செய்தி : அமைப்பினரின் “வள்ளுவர் கோட்டம்’’ முற்றுகை மாபெரும் வெற்றி. – மு கருணாநிதி
சிந்தனை: அலோ…. டெசோ கம்பெனி ஒனருங்களா? இலங்கைத் தூதரகத்த எப்ப சார் வள்ளுவர் கோட்டத்துக்கு மாத்தினிங்க.
செய்தி : நான் புத்த மதத்தைச் சார்ந்தவன், எனக்கு மனித நேயமும், மனிதர்களை மதிக்கும் உணர்வும் இருக்கிறது
- ராஜபக்சே,
சிந்தனை: யம்மாடி… இந்த வருசத்தோட சிறந்த காமெடி இதாண்டா சாமி…
செய்தி : டாஸ்மாக் விற்பனைக்கு ரூ 25 கோடி, மார்ச் இறுதிக்குள் விற்க அரசு முடிவு
சிந்தனை: ராப்பகலா ஊத்தி ஊத்தி கெடுத்துட்டாங்க பசங்கள, ரம்பா, சிம்ரன் படத்தக்காட்டி மறச்சுட்டாங்க நெசங்கள.
செய்தி : கர்நாடகாவில் உள்ள மகாலிங்கேஸ்வரர் மகாபீடத்திற்கு நித்யானந்தாவை மடாதிபதியாக நியமிக்கக் கடும் எதிர்ப்பு.
சிந்தனை: அதென்னமோ தெரியலங்க… இவர் போற எடமெல்லாம் பக்தர்கள் இப்படித்தான் பொங்கியெழுறாங்க. கன்னிராசில இருந்த கண்டம் தான் இப்படி ஆட்டிப் படைக்குது போல.
செய்தி : தமிழ் சினிமாவிலுள்ள சென்சார் போர்டு ஒரு மாபியா கும்பல் போல செயல்படுகிறது
- இயக்குனர் அமீர்.
சிந்தனை: அப்போ இத்தன நாளா அமைதியா இருந்தது கும்பலுக்குப் பயந்தா? ஓடாத படத்துக்கு இப்படியும் ஒரு விளம்பரமா?
செய்தி : பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்துப் பாராளுமன்றத்தில் அமளி. இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு.
சிந்தனை: போடுங்க… போடுங்க நல்லா வாய்ச்சண்டை போடுங்க. மக்கள் வரிப்பணத்த இப்படி வேற வீணடிக்குறாங்க. அங்க நல்ல விசயத்தப் பேசினா யாருய்யா காது குடுத்துக் கேக்குறா?
ஜெ கடிதம்: இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்.
பிரதமர்: மிஸ்டர் பி.ஏ இங்க வாங்க இந்தாங்க… இந்த பேப்பர்ல வச்சு அந்த பாணியூரிய கொண்டுவாங்க.
செய்தி : அரசு சாரா வங்கிகளில் ரேசன் கார்டை மட்டும் காட்டி நீங்கள் வருடா வருடம் 2.57 லட்சம் ரூபாய் வாங்கிக் கொள்ளலாம்.ஆனால் இதைத் திருப்பித்தர வேண்டியதில்லை. இந்த வருட இறுதியில் வசூலிக்காத தொகை என்று பேங்கில் கணக்கெழுதி அதை அவர்களே தள்ளுபடி செய்துவிடுவார்கள். அடுத்த வருடம் திரும்பவும் புதிதாக இதே போல் நாம் கடன் வாங்கிக் கொள்ளலாம், நம் பாரதப் பிரதமர் பதவி ஏற்றத்திலிருந்தே புரட்சிகரமான இத்திட்டம் செயல்பாட்டில் இருப்பது பலருக்கு தெரிவதில்லை - ப. சிதம்பரம்.
சிந்தனை: அப்பாடா இந்தத் திட்டத்தில் ஏழைகள், விவசாயிகள், சிறுதொழில் செய்பவர்கள், பெண்கள் என்று பல கோடிப்பேர் பயனடைவார்கள் அப்படீன்னு நெனைகிறீங்களா? அதான் இல்ல. அம்பானி, டாடா, மிட்டல், எஸ்ஸார், விப்ரோ போன்ற பணக்கார எழைகளுக்காகவும், உலகப் பணக்காரங்க வரிசையில முன்னுக்கு வரத்துடிக்கும் புரட்சி மிக்க கார்ப்பரேட் முதலாளிகளுக்காக போடப்பட்ட ஸ்பெஷல் திட்டமாம், பணக்காரங்களுக்குப் பயன்படுற மாதிரி எப்படிப் பட்ஜெட் போடணும்ணு உங்களப் பாத்துதான் கத்துக்கணும் ப. சி .யே. ஒளிர்கிறது இந்தியா ஜெய் அம்பானி…. மன்னிக்கணும் ஜெய்ஹிந்த்!! நாடு வௌங்கிடும்!!!!
செய்தி: டில்லியில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி உயிரிழந்த மருத்துவ மாணவியின் துணிச்சலைக் கௌரவிக்கும் வகையில் விநோதினிக்கு “சர்வதேச வீரமங்கை’’ விருது வழங்கப்படுகிறது.
சிந்தனை: பாவம்… நமக்கு விருது கெடைக்கும்னு இறந்து போன வினோதினிக்கு தெரியாது.
இருந்தாலும் இறந்து போன வினோதினிக்கு விருது கொடுத்து கௌரவிக்கிற உங்கள பாராட்டியே ஆகணும். சரிங்க…. அதே நேரம் தமிழ்நாட்டுல சில தமிழச்சிகளும் இதே வன் புணர்வுக்கு ஆளாகி இறந்தாங்களே அவங்களுக்கு விருது ஏதும் இல்லையா?
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தயவு செய்து இதைப் படிக்காதீர்கள் (செய்தியும் & சிந்தனையும்)”