மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இலங்கைக்கு எதிரான தமிழக மாணவர்கள் போராட்டம் – சிறப்பு கண்ணோட்டம் – 2

ஆச்சாரி

Mar 23, 2013

ஈழத்தமிழர் பிரச்னைக்கு ஆதரவாக லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய உண்ணாவிரதமானது இதே யேசு சபையினர் திருச்சியில் நடத்தும் புனித ஜோசப் கல்லூரி மாணவர்களையும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் போராடத் தூண்டியது. இதன் விளைவாகத் திருச்சி புனித ஜோசப் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

      அதே வேளையில், சென்னையில் நான்கு நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரியைச் சேர்ந்த அந்த எட்டு மாணவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் அவ்வப்போது உடற்பரிசொதனை செய்து வந்தனர். 11.3.2013 அதிகாலை 1.30 மணியளவில் அண்ணாநகர் துணை ஆணையர் (பொறுப்பு) மகேஷ்குமார் தலைமையில் போலீசார் இந்த மாணவர்கள் இருந்த உண்ணாவிரதப் பந்தலுக்கு சென்று உண்ணாவிரதம் இருந்த 8 மாணவர்ளையும் கைது செய்து , ராயபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

      மருத்துவமனையில் 3வது மாடியில் உள்ள ஆண்கள் மருத்துவப்பகுதி – 2 என்ற வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு முதற்கட்டமாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. இம்மாணவர்களின் குடும்பத்தினர், மற்றும் நண்பர்கள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டதால் அன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

      இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை முடித்து அன்று மாலை கல்லூரிக்கு 8 பேரும் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மாணவர்களுக்குக் கல்லூரி முதல்வர் போனிபஸ் ஜெயராஜ் பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். அப்போது இப்போராட்டத்திற்குத் தலைமை வகித்த மாணவர் ஜான் பிரிட்டோ கூறியதாவது, இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும், ஐ.நா. வில் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கேட்டுப்பு நடத்த வேண்டும் இந்த உணர்வை பிரதிபலிக்கவே நாங்கள் உண்ணாவிரதம் இருந்தோம்.

      இந்த போராட்டத்தின் நோக்கம், தமிழக கல்லூரி மாணவர்கள் அனைவரிடமும் இந்த போராட்ட உணர்வு பரவ வேண்டும் என்பது தான். இப்போது தமிழகம் முழுக்க இப்போராட்ட உணர்வு வெடித்துக் கிளம்பியுள்ளது.

      களம் இறங்கி இருக்கும் தமிழக மாணவர்கள் அனைவருக்கும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். இலங்கை அரசு மீது பொருளாதரத்தடையை விதிக்க வேண்டும் என ஏற்கனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளார். அதற்கேற்ப தமிழகத்தில் எழுச்சி பெற்று இருக்கும் மாணவர்களின் இந்த உணர்வுகளையும் , டெல்லியில் வலிமையோடு , தமிழக முதல்வர் பதிவு செய்ய வேண்டும்.

      தமிழகத்தில் உள்ள எல்லாக் கல்லூரி மாணவர்களும் இதற்காக ஏதேனும் ஒருவகையில் அறப்போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம். தமிழக மாணவர்களின் இந்தப் போராட்டத்திற்கு தமிழக அரசும் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகிறோம். வெற்றிகரமான ஒரு தொடக்கத்தைக் கொடுத்துவிட்டதால், இப்போதைக்கு காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்கிறோம். சூழலுக்கு ஏற்ப, எதிர்காலத்தில் இன்னும் தீவிரமான அறப்போராட்ட களத்தில் நிற்போம் என உறுதி கூறுகிறோம். என ஜான் பிரிட்டோ கூறினார்.

       முன்னதாக மாணவர்கள் கைது செய்யப்பட்ட போது எதிர்ப்பைத் தெரிவித்த ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா மற்றும் வேளச்சேரி மணிமாறன், திரை இயக்குனர் மு.களஞ்சியம், கவுதமன் மற்றும் பல தமிழ் ஆர்வலர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கோயம்பேட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் இவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

      சென்னையில் இம்மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த இந்த நேரத்தில், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதி விசாரணை நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சியினர் 11.3.2013 அன்று கோயம்புத்தூரில் உள்ள ஆர்.எஸ். புரம் தலைமைத் தபால் அலுவலகத்தைப்  பூட்டுப் போடும் போராட்டம் நடத்தினார்கள். இவர்கள் தபால் நிலையத்தின் வெளிக்கதவை பூட்டுப் போட்டுப் பூட்டினர். இதனால் உள்ளே இருந்த அதிகாரிகள், ஊழியர்கள் வெளியே வர முடியவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் அந்தப் பூட்டை உடைத்து அவர்களை மீட்டனர். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் சுமார் 33 பேர் கைது செய்யப்பட்டனர்.

                12.3.2013  அன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈழத்தமிழர் பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருந்து வந்த லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேரை நள்ளிரவில் கைது செய்ததற்குத் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், மத்திய அரசில் தி.மு.க அமைச்சர்கள் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க வெளியில் போராடுவது என்பது நம்பகத்தன்மைக்கு உரியது அல்ல. இந்திய அரசு உண்மையில் ஈழப்பிரச்சனைக்கு துரோகம் செய்கிறது எனக் கருணாநிதி உணர்வது உண்மையானால் அமைச்சரவையிலிருந்து தனது அமைச்சர்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டும், மத்திய ஆட்சிக்கு தி.மு.க அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டும் போராட வேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

      இவ்வாறான அரசியல் தலைவர்களின் கருத்துக்களும், கண்டனக் குரல்களும் ஒரு புறம் ஒலிக்க, மறுபுறத்தில் மாணவர்களின் போராட்டம் வரலாறு காணாத அளவிற்கு தமிழகமெங்கும் எழுச்சி பெற்றது அனைவராலும் எதிர்பார்க்க முடியாத செயலாகவே இருந்தது. 11.3.2013 அன்று திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் 10 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கினர். இலங்கையில் அப்பாவித் தமிழர்களைக் கொன்ற இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது இம்மாணவர்களின் முக்கிய கோரிக்கையாகும்.

      இம்மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மற்ற மாணவர்களும் தங்களின் வகுப்புகளைப் புறக்கணித்தனர். இம்மாணவர்களை இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். இதுபோல ஈ.வே.ரா பெரியார் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்தவாறு கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து இலங்கைக்கு எதிரான கோசங்களை எழுப்பினார்கள்.

      அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் அனைவரும் ஒருநாள் வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டம் நடத்தினார்கள். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபல்சாமி அரசினர் கலைகல்லூரி மாணவ-மாணவிகள் தங்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினார்கள். அப்போது ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி சமீபத்தில் ராஜபக்சேவை சந்தித்து பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, சுப்பிரமணியசாமி உருவ பொம்மையை எரித்தனர். தஞ்சை அதிராம்பட்டினம் காதர் மொய்தீன் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம், மன்னம்பந்தல், செம்பனார் கோவில் ஆகிய இடங்களில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பூம்புகார் மேலையூரில் உள்ள தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறைச் சார்ந்த கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.

      மதுரை சட்டக்கல்லுரி மாணவர்கள் 50- க்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்தனர். தங்கள் கல்லூரி அருகே உள்ள வணிகவரித்துறை அலுவலக வளாக ஸ்டேட் வங்கி கிளைக்குள் மாணவர்களில் சிலர் புகுந்து கதவை மூடி கோசங்களை எழுப்பினர். இதனால் வங்கி ஊழியர்கள் செய்வதறியாது நின்றனர். அப்போது போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சிறிது நேரத்தில் அந்தப் போராட்டத்தைக் கைவிட்டு கோர்ட்டு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டுக் கலைந்து சென்றனர்.

      கோவை அரசு கல்லூரி மாணவர்கள் 11.3.2013 அன்று வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்திற்குள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் 11 பேர் மாநகர ம.தி.மு.க. அலுவலகத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினர். ஈரோடு கலைக்கல்லூரி, வாசவி கல்லூரி, விஜயமங்கலம் சசூரி என்ஜினியரிங் கல்லூரிகளில் நேற்று மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். வேலூர் ஊரீசு கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியபின் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

      சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் 600 பேர் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைகல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்ணதாசன் மணிமண்டபம் அருகே உண்ணாவிரதத்திலும் சிலர் ஈடுபட்டனர்.

       ராமநாதபுரம் சேதுபதி கலைக்கல்லூரி மாணவர்கள்  12 பேர் தொடர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் 12 மாணவர்கள் தொடர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்கள். பாளையங்கோட்டை சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி , சட்டக்கல்லூரி,  அம்பாசமுத்திரம் கல்லூரி ஆகியவற்றிலும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். அப்போது ராஜபக்சே உருவபொம்மை எரிக்கப்பட்டது.

      12.3.2013 அன்று 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் பூங்கா பாக்கியராஜ், தேவகுமார், மதிவாணன் ஆகியோர் தலைமையில் 5 மாணவர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்துப் பூங்கா பாக்கியராஜ் கூறியதாவது, இலங்கையில் நடந்த இனம் அழிப்பு படுகொலை குறித்து ஐ.நா. மனித உரிமை கமிசனில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும். தனி ஈழம் நாடு அமைய, பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

       ஐ.நா வும் , சர்வதேச சமூகமும் இலங்கையில் நடந்தது கொடூரமான  போர் குற்றம் என்று அறிவிக்க வேண்டும். தனித்தமிழ் ஈழம் அமைய தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமையுடன் போராடவேண்டும். இலங்கை ராணுவத்தில் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற 5  அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்களாகிய நாங்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்தக் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

      இதை அடுத்து போராட்டத்தைக் கைவிடும்படி மாணவர்களுடன் சட்டக்கல்லுரி முதல்வர் நாராயணன் பெருமாள், போலீசார் உதவி கமிசனர் முரளி, வக்கீல்கள் இரா.சிவசங்கர், ஜி.ராஜேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற முடியாது. இது தமிழக அரசுக்கு எதிரான  போராட்டம் அல்ல, மத்திய அரசுக்கு எதிரானது என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

      இந்நிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகத்தில்  படிக்கும் ஒரு மாணவி உட்பட 7 மாணவர்கள் 11.3.2013 அன்று மாலையில் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். மேலும் இலங்கைப் பிரச்னைக்கு சர்வதேச தீர்வு கோரி அரசுப்பணியாளர் சங்கம் சார்பில் சென்னையில் சேப்பாக்கம் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் சுமார் 200  பேர் கலந்து கொண்டனர் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் ந.தம்பிராஜா இந்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

-    போராட்டம் தொடரும்…

Reading skill, textbook marking, and course performance academic writing service from https://pro-academic-writers.com/

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இலங்கைக்கு எதிரான தமிழக மாணவர்கள் போராட்டம் – சிறப்பு கண்ணோட்டம் – 2”

அதிகம் படித்தது