மாணவர் போராட்டமும் ஐ.நா. தீர்மானமும் (கட்டுரை)
ஆச்சாரிApr 1, 2013
’இந்தியின் உயர்வுநிலையை எதிர்ப்பதில் சென்னை மாணவர்கள் தலைமை ஏற்றது தவிர்க்க இயலாதது. நாட்டின் அலுவல்மொழி இந்தி யா? ஆங்கிலமா? என்ற முடிவு மற்றவர்களைவிட அவர்களையே கூடுதலாகப் பாதிக்கிறது. இந்தி மட்டுமே அலுவல்மொழியாவதால் தெற்கின் மாணவர்களே மிகக் கூடுதலான இழப்பிற்கு உள்ளாகிறார்கள். – இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கம், பெப்புரவரி 6, 1965’ (http://ta.wikipedia.org/இந்தி_எதிர்ப்புப்_போராட்டம்)
1965-ஆம் ஆண்டு நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் 70-ற்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. எண்ணிக்கை பல மடங்கிருக்கும் என்றும் கருதப்படுகிறது. அன்றைய மொழிப்போராட்டப் போராளிகளின் உயிர் அர்ப்பணிப்பினால் இன்றும் இந்தி, தமிழகத்தில் கோலோச்சமுடியவில்லை. அங்குமிங்கும் இந்தித் திணிப்பு மீண்டும் மொட்டுவிடத் துவங்கியுள்ளது. இந்திய ஒற்றுமையைக் குலைக்கும் என்று தெரிந்தும் இந்திய ஆட்சியாளர்கள் மீண்டும் இத்தவறைச் செய்கிறார்கள். சில நேரங்களில் 1965-ல் நாமும் வாழ்ந்திருக்கலாமே எனத் தோன்றும், ஆனால் அக்கனவை இன்று நம் தம்பிகளும், தங்கைகளும் பூர்த்திசெய்திருக்கின்றனர். ‘தமிழர் தோளெழுந்தால் எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே’ என்று பாவலரேறு அய்யா அன்று முழங்கியதை இன்று செய்து காட்டியுள்ளனர் நமது மாணவத் தம்பி, தங்கைகள்.
அரசியல்வாதிகளால் இதுகாறும் செய்ய இயலாததை மாணவ மணிகள் ஒரு சில நாட்களில் சாதித்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், மிரளவும் வைத்துள்ளது. இருதுருவங்களிலிருக்கும் இருபெரும் தமிழகக் கட்சிகளுக்கு நெருக்கடி கொடுத்து அவர்கள் விரும்பாவிட்டாலும் ஈழத்தமிழர் நலன்பால் திரும்பவைத்தது மாணவர்களின் மாபெரும் வெற்றி. 2009-ல் இந்த எழுச்சியில்லாததற்கு முதன்மைக் காரணம் இப்பிரச்சினை தமிழகமெங்கும் பரவாததுதான். பரவாமல் பார்த்துக் கொண்டது அன்று ஆண்ட ஆட்சி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்றைய ஆட்சி மாணவர்களுக்கு ஆதரவானது என்றும் கூறமுடியாது. மக்களின் எழுச்சியைக் கண்டும் தேர்தலைக் கணக்கில் கொண்டும் இந்த ஆட்சியாளர்கள் சற்று நிதானத்துடன் நடந்து கொள்கின்றனர் என்பது தெளிவாகிறது. மேலும் 2009-ற்கு பின் ஈழப்பிரச்சினை பலருக்கும் சென்றடைந்திருப்பதும் ஒரு காரணம். மாணவர்கள் ஒன்றிணைந்தால் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தலாம் என்பதே இன்றைய எழுச்சிக்குக் காரணம், 1965-அம் ஆண்டை நினைவுப்படுத்துகிறது. மாணவப் போராட்டத்தின் மிகப்பெரிய வெற்றி ஈழப்பிரச்சினையைத் தமிழகத்திலுள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும், ஏன் பள்ளிகளுக்கும் எடுத்துச் சென்றதுதான். இதைச் சமூக இயக்கங்களும், தமிழ்த் தேசிய இயக்கங்களும் 2009-ல் எடுத்துச் சென்றிருந்தால் ஈழ மக்களுக்கு விடிவுகாலம் விரைவில் பிறந்திருக்கலாம். இருந்தாலும் இன்றாவது தமிழகம் எழுந்ததே என்பது நிம்மதியையும், நம்பிக்கையையும் தருகிறது.
அதே நேரத்தில் அமெரிக்காவில் நடந்த ‘Occupy Wall Street’ இயக்கம் போல் இவர்களது போராட்டமும் மாறிவிடுமோ? என்கிற அச்சமும் உள்ளது. எந்த ஒரு எழுச்சிப் போராட்டத்தையும் சிதைக்க நம் எதிரிகளும், துரோகிகளும் உழைத்துக் கொண்டுதான் இருப்பர். இந்தச் சுயநலமில்லாப் போராட்டத்தையும் சில தீயச்சக்திகள் குழப்பத் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது. இக்காலக்கட்டத்தில் தான் மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். நல்ல தெளிந்த அறிவும், அனுபவமும், உண்மையான தமிழ்ப் பற்றுமுள்ள அரசியல் சார்பற்றவரிடம் அறிவுரை பெறவேண்டும். அரசுப் பணியிலிருந்து ஓய்வுப்பெற்றவராகவும் இருப்பது நல்லது. அது போன்ற நல்லவர்களை இனம்கண்டு அவர்களிடம் தொடர்பில் இருக்க வேண்டும். ஒரு போராட்டம் விரிவடைவும்போது பல அமைப்புகளாக பிரிவது தவிர்க்க முடியாதது, ஆனாலும் ஒரே குரலுடன் ஒலிக்காவிட்டாலும் நமது இறுதி இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். நட்பு தொடரவேண்டும், தனி மனித தாக்குதல்கள் தவிர்க்கப்படவேண்டும். உடன்படாவிட்டாலும் மற்றவர்கள் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். நமது செயல்கள் வினைக்குத் தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும்.
இனி ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானத்திற்கு வருவதற்கு முன், தற்கால உண்மை நிலையைக் காண்போம். 2009 ஈழத்தமிழின அழிப்பில் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஈடுபட்டன என்பதை நன்கு அறிவோம். அதற்கு முன்பே இரனில் விக்ரமசிங்கே அரசு உலகெங்கும் சென்று புலிகள் மீது தடையைப் பெற்றது. புலிகள் அழிப்பிற்கு அடித்தளம் அமைத்தது. விக்ரமசிங்கே அரசு என்பதையும் நாம் மறக்கக் கூடாது. கருணாவை புலிகளிடமிருந்து பிரித்ததில் இந்திய அரசு முதன்மைக் காரணம் என்பதும் தெளிவு. அச்சதியில் ‘The Hindu’ முன்னாள் ஆசிரியர் ந. இராம் அவர்களும், இந்திய உளவுத்துறையும் (RAW) பெரும்பங்கு வகித்தது என்பதும் தெளிவு. காலம் காலமாக ஈழப்பிரச்சினையில் இந்திய RAW அமைப்பு செய்த பல பாதகச்செயல்களில் ஒன்றைக்காண சுட்டவும் http://www.sangam.org/2010/10/Dharmalingam.php அல்லது http://en.wikipedia.org/wiki/M._Alalasundaram . இந்த அமைப்பின் தலைவராகப் பல்லாண்டுகள் இருந்தவர் திரு. எம்.கே. நாராயணன் என்பதையும் நாம் இங்கு நினைவு கொள்ள வேண்டும். இந்திய நாட்டின் நலனைக் கருதாது தம் நலனை மட்டும் கருத்தில் கொண்டு முடிவு எடுத்ததால்தான் இந்த விளைவு. இந்திய அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், குறிப்பாக காங்கிரசு கட்சியையும்தான் நாம் இங்கு குறை காண வேண்டும். இந்திய மக்களிடம் நமக்கு எவ்வித பிணக்குமில்லை.
விக்ரமசிங்கே, இந்திய மற்றும் மேற்கத்திய நாடுகளின் செல்லப் பிள்ளை என்பது நமக்குத் தெரிந்த உண்மை. பின்னர் ஆட்சியேற்ற இராசபக்சே அரசு பொறுப்பேற்றவுடனே தமிழின அழிப்பில் கவனம் செலுத்தியது. அதுவரை அமைதியாக இருந்த இந்தியக் காங்கிரசு அரசு, புலிகளை அழிக்க நல்ல காலம் என அறிந்து இராசபக்சேவிற்கு முழு உதவியும், ஒத்துழைப்பையும் அளித்தது. பின்னர் நடந்தது வரலாறு. 2009-இன் முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தேறி நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. ஆனால் சிங்களத்தின் தமிழின அழிப்புத் தொடர்கிறது. உலக நாடுகளும் கண்டும், காணாமல் சிங்களத்திற்கு ஆதரவு கொடுத்துவருவதும் கண்கூடு. புலிகளின் இழப்பால் தமிழினம் தன்னிடம் இருந்த ஒரே பலத்தையும் இழந்த நிலையில். புலம் பெயர்ந்தோர் தத்தம் நாட்டில், தத்தம் நாட்டின் சட்டத்திற்குட்பட்டு அமைதியான போராட்டத்தைத் துவக்கினர். அமெரிக்காவில் USTPAC, கனடாவில் CTC, இங்கிலாந்தில் BTF, ஆத்திரேலியாவின் ATC போன்ற பல அமைப்புகளின் முயற்சியால் GTF (உலகத் தமிழ்ப் பேரவை) என்கிற அமைப்பும் தோன்றிப் புலிகள் விட்டுச் சென்ற பணியைத் தொடர முடிவெடுத்தன. இவை தமது உழைப்பினாலும், அறிவு சார்ந்த செயல்பாட்டினாலும் அந்தந்த நாட்டின் அரசுகளுக்குத் தமிழர்களின் நியாயமான உரிமையை எடுத்துச் சொல்லி அந்த அரசுகளைத் தமிழர்களுக்குச் சார்பாக நீதி கிடைக்க வற்புறுத்தி வருகின்றன. இது தொடரும் பணி, பல்லாண்டுகள் ஆகலாம் முழுமையடைய. அதன் தொடர்ச்சிதான் கடந்த ஆண்டு (2012) அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம். அத்தீர்மானத்தை நீர்த்துச் செய்த பெருமை இந்தியாவைச் சாரும். உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்காவிட்டாலும் அத்தீர்மானத்தினால் இலங்கை ஐ.நா. மனித உரிமை அவையின் வரிசையில் வந்ததும், இலங்கை செய்த மனித அழிப்பு நடவடிக்கைகள் அங்கு விவாதத்திற்கு வந்ததும் நமக்குச் சிறு நிம்மதியைக் கொடுத்தது. அதே நேரத்தில் இங்கிலாந்து நாட்டின் Channel 4 என்கிற தொலைக்காட்சி தயாரித்த Sri Lanka Killing Fields என்கிற ஆவணப்படமும் ஈழப்பிரச்சினையின் மீதான விவாதத்தைத் விரிவுப்படுத்தியது. இந்திய அல்லது தமிழ் ஊடகங்கள் ஏதும் செய்யாததை மேலைநாட்டு ஊடகம் செய்தது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் இங்கு. அந்த தீர்மானத்தின் மற்றுமொரு நன்மை, மனித உரிமை அவையின் ஆணையர் திருமதி நவநீதப் பிள்ளை அவர்களின் அறிக்கை.
இந்த ஆண்டு 2013, மனித உரிமை அவைக் கூட்டத்தில் அமெரிக்கா அதே தீர்மானத்துடன் மனித உரிமை அவையின் ஆணையர் திருமதி நவநீதப் பிள்ளை அவர்களின் அறிக்கையை வரவேற்றுப் ‘பன்னாட்டு விசாரணைக் குழு’ அமைக்க வேண்டும் என்பதையும் சேர்த்துத் தாக்கல் செய்தது. பன்னாட்டு விசாரணைக் குழு வேண்டும் என்பது நமது நீண்ட நாளைய கோரிக்கை. இத்தீர்மானத்தில் இதை அமெரிக்கா சேர்த்தது சிறிது நம்பிக்கையை என் போன்றோர்க்குத் தந்தது. இந்த விசாரணையின் முடிவில் நிச்சயமாக இலங்கையில் நடந்தது ஒரு மனித இனப்படுகொலை என்பது உலகம் அறிய வாய்ப்பிருந்தது. அமெரிக்கத் தீர்மானம் நமக்கு முழுத்திருப்தியைத் தந்ததா? என்றால், இல்லை என்பதுதான் விடை. ஆனால் இன்றைய நிலையில் ஈழப்பிரச்சினையை உலக அரங்கில் தொடரச்செய்வதற்கு இத்தீர்மானம் உதவும் என்பதால் புலம் பெயர்ந்தோர் அமைப்புகள் இதை எச்சரிக்கையுடனும், வலியுடனும் ஆதரித்தன. அமெரிக்கத் தீர்மானத்தை ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் தமிழக அமைப்புகள் ஒன்றை நினைவு கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு ஆதரவாகவோ, இலங்கைக்கு எதிராகவோ எந்த நாடும் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர முன்வராத நிலையில் அமெரிக்கா மீண்டும் கொண்டுவந்ததை நாம் தெளிவான நிலையில் சிந்திக்க வேண்டும். நான் இங்கு அமெரிக்கத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கப் பாடுபடுகிறது என்று கூறவில்லை. எந்த நாடும் நமக்கு ‘ஈழ விடுதலையைத்’ தாம்பாலத்தில் வைத்துக் கொடுக்கப் போவதில்லை. நம் விடுதலையை நாம் போராடித்தான் பெறவேண்டும். உலகில் எந்த நாடும் தான் எடுக்கும் முடிவில் தனக்கு என்ன சாதகம் இருக்கிறது என்று தெரிந்தபின்தான் அம்முடிவை எடுக்கும். அமெரிக்காவும் இதற்கு விதி விலக்கல்ல. ஆனால் ஒரு நாடும் முன்வாராத நிலையில் அமெரிக்கா, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவர முன்வந்தது தமிழர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாகத்தான் கருதவேண்டும். இலங்கையினால் அமெரிக்காவிற்கு என்ன இலாபம் என்பதையும் தோழர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அமெரிக்காவை எதிர்க்கும் இவர்கள் ஏன் கம்யூனிச நாடுகளான சீனாவும், கியூபாவும், வெனிசுலாவும், உருசியாவும் தமிழர்களுக்கு ஏதிராகவுள்ளன என்பதையும் சிந்திக்க வேண்டும். கடைசியில் என்ன நடந்தது? 2012-ல் அமெரிக்கா கொண்டுவந்தத் தீர்மானத்தை நீர்த்துப்போக வைத்தது போலவே, இந்த ஆண்டும் இந்தியா வலுவற்றதாக மாற்றித் தீர்மானத்தின் நோக்கத்தையே அழித்தது. தீர்மானத்தை தமிழர்களுக்கு, எவ்வித பயனும் தராததாக மாற்றிவிட்டு அதற்கு ஆதரவளிப்பது எவ்விதத்தில் நியாயம்? பல கோடித் தமிழர்களின் கோரிக்கையையும், அனைத்து தமிழ்க் கட்சிகளின் கோரிக்கையையும், தமிழக அரசின் கோரிக்கையையும் அவமதித்து, இலங்கையை இந்தியா காப்பாற்றியுள்ளது.
இந்தியாவின் இந்த இழிச் செயலை மனித உரிமை பேசும் அனைவராலும் வன்மையாகக் கண்டிக்கபட வேண்டிய செயல். பன்னாட்டு மன்னிப்பு அவை (Amnesty International) இச்செயலைக் கண்டித்தது நினைவில் கொள்ள வேண்டும். இத்தீர்மானத்தை இந்தியா அல்லவா கொண்டு வந்திருக்க வேண்டும்? அமெரிக்கா கொண்டு வந்த ஓரளவிற்கு பயன் தரும் தீர்மானத்தைக் கெடுத்து இலங்கையைக் காப்பதில் ஏன் இந்தியாவிற்கு இவ்வளவு அக்கறை? ஒருவேளை தமிழின அழிப்பில் இந்தியாவும் பங்கேற்றதாலோ? இந்த இன அழிப்பில் இந்திய அரசியல்வாதிகள், வெளியுறவுத்துறை அதிகாரிகளான, திரு. சிவசங்கர மேனன், திரு. நாரயணன், திருமதி. நிருபமா இராவ் போன்றோர்களின் பங்கு விசாரிக்கப் படவேண்டும். மேலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான திரு எம்.கே. நாராயணன், ஐ.நா செயலரின் ஆலோசகரான திரு. விஜய் நம்பியார் போன்றோர்களின் பங்கையும் விசாரிக்க வேண்டும்.
அமெரிக்காவில் ஈழத்தமிழர்களின் நலனுக்காகவும், விடுதலைக்காகவும் செயல்பட்டுவரும் USTPAC அமைப்பின் உழைப்பினால் 57 நாடாளுமன்ற உறுப்பினர்களும் (Congressmen/women) 20-ற்கும் மேலான மேலவை உறுப்பினர்களும் (Senators) நமக்கு ஆதரவாக வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி. இல்லரி கிளிண்டனுக்கும், குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா அவர்களுக்கும் கடிதம் எழுதினர். 2009-க்கு முன் எந்த ஒரு அரசியல்வாதியும் (ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர் நமக்கு ஆதரவாக இருந்தனர் என்பது உண்மை) நம்மைச் சந்திக்க முன் வராத நிலையிருந்தது. ஆனால் இன்று பெரும்பாலான உறுப்பினர்கள் நம்மைச் சந்திக்கின்றனர், நமது பிரச்சனைக்குச் செவி மடுக்கின்றனர். USTPAC-ன் பயணம் இலக்கை நோக்கி தொடரும். இன்றும் பல செனட்டர்கள் நமக்கு ஆதரவாகப் பேசிவருகின்றனர். இலங்கை மீதான அமெரிக்கக் கொள்கைகளை மாற்ற மேலும் உழைக்க வேண்டும். இது போலக் கனடா, இங்கிலாந்து, ஆத்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும், அந்தந்த நாட்டைச் சேர்ந்த தமிழர் அமைப்புகளும் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, அந்தந்த நாட்டை நமக்குச் சாதகமாக்கி வருகின்றன.
உலகநாடுகளின் ஆதரவு எவ்வளவு இருந்தாலும், ஈழ மக்களுக்கு விடிவுகாலம் வருவது தமிழகத் தமிழர்களின் கையில்தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஒருமுறை முன்னாள் இந்தியத் தலைமையமைச்சர், பெருமதிப்பிற்குறிய திரு. வி.பி. சிங் அவர்கள் கூறினார்கள், ”தமிழகம் எழுந்தால்தான் இந்தியா, தமிழர்களுக்கு ஆதரவாக மாறும்”. அது எவ்வளவு உண்மை என்பது இந்த மாணவர் போராட்டம் மூலம் நாம் அறிந்துள்ளோம். இப்பொழுது நம் போராட்டத்தின் அடுத்த நிலை என்ன? மாணவர்கள் தேர்விற்கு தயாராகிவிடுவார்கள், பின்பு விடுமுறை துவங்கிவிடும். போராட்டம் இத்துடன் முடிந்துவிடுமா? நிச்சயம் இல்லை! ஊட்டிய உணர்வு உறங்கப் போவதில்லை. ஆனால் அடுத்தக் கட்டப் போராட்டத்தை நிதானத்துடன் கூடி ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். 1965 போராட்டம் எப்படி ஒரு கட்சிக்கு மட்டும் பலன் தந்ததோ அது போலில்லாமல், இப்போராட்டத்தை எந்த ஒரு சமூக அமைப்பும், அரசியல் கட்சிகளும் கடத்திச் செல்லாமல் இருக்க வைப்பது மாணவர்களுக்கு மட்டும் இருக்கிற பொறுப்பல்ல, இப்பிரச்சனையில் ஈடுபட்டுவரும் நம்மைப் போன்றோர் அனைவருக்கும் இருக்கிற முதன்மைப் பொறுப்பு.
வெறுமனே அமெரிக்க எதிர்ப்பாக இப்போராட்டம் அமையக்கூடாது. மேற்கத்திய அல்லது அமெரிக்க எதிர்ப்பைக் காட்டும் போராட்டமாக இப்போராட்டம் அமைந்துவிடக்கூடாது. அமெரிக்கா அல்லது மேற்கத்திய நாடுகள் செய்த தவறைச் சுட்டுவதில் தவறில்லை. ஆனால் அதன் கொடியையோ, தீர்மானத்தையோ எரிப்பது, அந்த நாட்டை எதிர்ப்பது போன்ற தோற்றத்தை நம் எதிரிகள் விதைக்க நாம் இடம் கொடுத்து விடக்கூடாது. இந்தியாவிற்கும், தமிழக அரசிற்கும் நெருக்கடி கொடுக்கும் போராட்டமாக இது இருக்க வேண்டும். இலங்கை புறக்கணிப்புப் போராட்டமாக இது இருக்க வேண்டும். தமிழகத்திலிருந்து இலங்கைக்கு ஒரு பைசா செல்லக் கூடாது. இலங்கை நிறுவனங்கள் தமிழகத்தில் இருக்க விடக்கூடாது. இலங்கையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் கால்வைக்க விடக்கூடாது. இலங்கைத் துணைத்தூதரகம் அகற்றப்படவேண்டும். சென்னையில் இருப்பதனால்தான் இலங்கை அரசு தமிழகத்தின் அதிகாரிகளையும், ஊடக வியாபாரிகளையும் பெண்/பொன் மூலம் தன் கையில் வைத்துள்ளது.
உலகத் தமிழர் அமைப்புகளுடன் தாய்த்தமிழக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும். நாம் அனைவரும் எல்லாச் செயல்களிலும் ஒத்துப்போக வேண்டியதில்லை. ஒற்றுமையாகச் செயல்படும் பணிகளில் நாம் ஒன்றுபட்டுச் செயல்படலாம். இந்திய அரசியல் நிலையும், மேலைநாட்டு அரசியல் நிலையும் வெவ்வேறு பாதையைக்கொண்டிருக்கலாம். ஆனால் நம் இறுதி நோக்கம் ‘தனித் தமிழீழம்’. அதை அடைய நாம் போகும் பாதை வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் இரயில் பாதைபோல் சிறிது தூரம் சென்று நிச்சயமாக ஓரிடத்தில் நாம் சந்திப்போம். அது வரை அந்தந்த நாடுகளின் சமூக, அரசியல் நிலையைப் பொறுத்து நமது போராட்டம் தொடரும். நிச்சயம் வெல்வோம்! தமிழீழம் காண்போம் !!
ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை, உள்ளத்தே
அற்றைத் தமிழ்த்தாயிங் காட்சி புரியும்வரை
எற்றைக்கும், எந்நிலத்தும், எந்த நிலையினிலும்
மற்றை இனத்தார்க்கே மண்டியிடான்; மண்டியிட்டால்
பெற்றவர்மேல் ஐயம்; பிறப்பின்மேல் ஐயமெனச்
சற்றும் தயக்கமின்றிச் சாற்று!
ஓய்ந்திடல் இல்லை, என் உள்ளமும் உணர்வும் உயிர்ச்செறிவும்!
தேய்ந்திடல் இல்லை, என் விரல்களும் தாளும்! திரிந்தலைந்து
சாய்ந்திடல் இல்லை, என் உடலும் எனவே சலிப்பிலனாய்
மாய்ந்திடல் வரையும் உழைப்பேன், உரைப்பேன், மக்களுக்கே!!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் (தென்மொழி, ஆகத்து 1990)
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
மிக்க நிதானத்துடனும், விவேகத்துடனும், பொறுப்புடனும் வரையப்பட்ட கட்டுரை. 2012 ஐ.நா.மனித உரிமை ஆணயத்தின் மென்போக்கான தீர்மானத்தால்தான், ஆணயர் நவ நீதம்பிள்ளையின் பன்னாட்டு சுயாதீன விசாரணையைப் பரிந்துரைத்த ஆவணம் வெளிக்கொணரப் பெற்றது.2013 தீர்மானம் நலிவான கண்டனச் சொற்பதங்களைப் பாவித்திருந்தாலும், பொருளிலும், வீச்சிலும்,பொறிமுறைகளிலும் கடந்த ஆண்டைவிட வலிவானதும் செறிவானதுமான உண்மை ஊன்றிப்படிப்பவர்க்குப் புலனாகும்.தமிழக மாணவச் செல்வங்கள் தங்கள் கல்விக்குக் குந்தகம் ஏற்படாமலும், நீண்ட கால அடிப்படையிலும் ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்தைத் தக்கவைக்குமாறு தங்கள் நடவடிக்கைகளை வடிவமைக்கவேண்டும்.
மாணவர் போராட்டம், இந்தக் கோடை தொடங்கி, கட்சியரசியலைத் தாண்டி பொதுமக்கள் போராட்டமாகப் பரவ வேண்டும். அறப் போராட்டங்கள் என்றைக்கும் நல்ல பலன்களைத் தரும்.