என்னிடம் யாரும் குறை சொல்லாதீர்கள் (கவிதை)
ஆச்சாரிApr 1, 2013
ஒரு தலைக்காதல் தோல்வி
தலைக்கேறிய ஒருவனால் . . .
தெருமுனைத் திருப்பத்தில்
ஒரு அப்பாவிப் பெண் திராவகத்தால்
தாக்கப்பட்டாள் என்று ஒருபோதும்
என்னிடம் யாரும் குறை சொல்லாதீர்கள்.
பதினாறே வயதான சிறுப் பெண்ணை
ஆறு மாதங்கள்
சமூகத்தின் . . .
மேல்தட்டு மனிதர்களுக்கு இரையாக்கிவிட்டு
அது வன்புணர்ச்சி அல்ல
குழந்தை விபச்சாரம் என்று
கதைப்போரைப் பற்றி
என்னிடம் யாரும் குறை சொல்லாதீர்கள்.
நவநாகரீகத்தின் விளிம்பில்
தலைநகரத்தின் மத்தியில்
ஓடும் பேருந்தின் இருட்டு மூலையில்
இரும்புக் கிராதியால் தாக்கப்பட்ட பின்பு
ஒரு இளம்பெண் கற்பழிக்கப்பட்டாள் என்று
என்னிடம் யாரும் குறை சொல்லாதீர்கள்.
எனக்கு வெட்கமாகவும் கூடவே
பயமாகவும் இருக்கிறது.
இந்த ஒட்டுமொத்த சமுதாயத்தை
வெறுமனே குறை கூற!!
நான். . . நீங்கள். . .
மற்ற எல்லோரும் சேர்ந்தது தானே
இந்த சமுதாயம்
ஆதலால். . .
என்னிடம் யாரும் குறை சொல்லாதீர்கள்.
****************************************************************
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “என்னிடம் யாரும் குறை சொல்லாதீர்கள் (கவிதை)”