இழப்பு- (சிறுகதை)
ஆச்சாரிMay 1, 2013
வேகமாகப் பள்ளிக்குள் நுழைந்த ஆசிரியை சுனிதாவைக் கண்டதும், “வந்துட்டீங்களா மிஸ் எங்க நீங்க வராம போயிடுவீங்களோனு பயந்துட்டோம்’’ என்றார் தலைமை ஆசிரியர். என்னங்க சார், என்ன விசயம்? என்று கேட்டவளிடம், திடீர்னு தொலைபேசி அழைப்பு வந்தது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பொதுத்தேர்வுக்கு மேற்பார்வையாளரை உங்க பள்ளியில் இருந்து அனுப்புங்கன்னு… எனக்கு என்ன பண்றதுனு புரியல. நீங்க கொஞ்சம் போனீங்கன்னா… என்றவரிடம், சரிங்க சார் நான் போறேன் என்று தனது பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் சுனிதா.
பள்ளியை விட்டு வெளிய வந்தவள் “ இவங்களுக்கு வேற வேலையே இல்ல! , இப்பதான் வந்து நுழைஞ்சேன். அதுக்குள்ளே கண்ணு பொறுக்கல! இங்க வேற ஆளா இல்ல… என்று சொல்லிக் கொண்டே பேருந்தில் ஏறி அரசுப் பள்ளியை அடைந்தாள். அங்கிருந்த மாணவர்களை கண்டதும் அதிர்ந்து போனாள். ஒருசில மாணவர்களை தவிர மற்ற அனைவரும் தேர்வு எழுதப்போகும் நினைப்பே இல்லாமல் அலட்சியமாக நின்றனர். மணி ஒலித்ததும் மாணவர்கள் தேர்வு எழுதும் அறைக்குச் சென்றனர், சுனிதாவும் தன்னுடைய தேர்வு அறைக்குள் நுழைந்து, தேர்வு எழுதும் முறைகளை விளக்கிய பின் விடைத்தாள்களை நீட்டினாள்.
சில மாணவர்கள் மரியாதையுடன் விடைத்தாளை வாங்கிக் கொண்டனர். ஒரே ஒரு மாணவன் மட்டும் வாயில் எதையோ வைத்து அசைபோட்டபடி இருந்தான். விடைத்தாளில் பதிவு எண் எழுதப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் வினாத்தாளும் கொடுக்கப்பட்டது. மாணவர்கள் எழுதத் தொடங்கினர். அந்த மாணவன் மட்டும் விடைத்தாளை மடித்துவிட்டு படுத்து உறங்கினான். ஆசிரியை மெதுவாக அவனருகில் சென்று தட்டி எழுப்பினாள். அவன் சுனிதாவை ஏளனமாக பார்த்துவிட்டு மீண்டும் உறங்கினான். மனதினுள் கோபம் வந்தாலும் சுனிதா அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
அமைதியாக தனது பணியைச் செய்தாள். அப்போது திடீரென்று ‘ பறக்கும் படையினர்’ வந்து தூங்கிய மாணவனை எழுப்பினர். எழுந்தவன் அவர்கள் சென்றதும் மீண்டும் படுத்துக் கொண்டான். சுனிதா மீண்டும் அவனை எழுப்ப அவன் கோபத்தை வெளிப்படுத்தினான். தேர்வு முடிய அரைமணி நேரமே இருந்தது எழுந்தவன் பேனாவால் வினாத்தாளில் எதையோ குறித்து, விடைத்தாளிலும் எதையோ எழுதினான். ஆசிரியை பொறுமையாக இருந்தாள். இன்னும் பத்து நிமிடங்களே உள்ளன. விடைத்தாளை சரிபாருங்கள் என்று சொல்லி முடித்து, திரும்பினாள் ஆசிரியை… அம்மாணவன் வேக, வேகமாக எழுதினான். நேரம் முடிந்ததும் மணி ஒலித்தது. அனைத்து ஆசிரியரும் சென்று விட்டனர். அந்த மாணவன் விடைத்தாளை தரவில்லை. ஆசிரியை கோபம் கொண்டு “கிடைக்கும் நேரத்தில் எழுதாமல்; நேரத்தை வீணடித்தாய், இப்பொழுது எழுதுகிறாயே… உன் விடைத்தாளை நீயே வைத்துக் கொள்’’ என்று சொல்லி வகுப்பறையை விட்டு வெளியேறினாள்.
மாணவன் ஆசிரியை பின்னால் ஓடிச் சென்று விடைத்தாளை கொடுத்து விட்டு சென்றான். விடைத் தாள்களை ஒப்படைத்து விட்டு வெளியே வந்தவள், அங்கு நின்றிருந்த அந்த மாணவனை அழைத்து இனி இப்படி செய்யாதே என்றாள், அவன் ஆசிரியை சுனிதாவை கேலி செய்தான். “வந்துட்டாங்க அட்வைஸ் பண்ண’’ என்றான் வந்த வேலை முடிந்ததால் பேருந்தில் ஏறி வீட்டிற்கு வர புறப்பட்டாள்… வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்ன ஆயிற்று? எனப் பார்த்த ஆசிரியைக்கு பேரதிர்ச்சி ! அதே மாணவன்! வண்டியில் இருந்து கீழே தவறி விழுந்ததாக அருகில் இருந்தவர்கள் கூற, உடனே சுனிதா பேருந்தில் இருந்து இறங்கி அவனுக்கு உதவி செய்தாள். மாணவனை கைத்தாங்கலாக அழைத்து ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி அளித்தாள். மாணவனோ தலை குனிந்து நின்றான். சுனிதா அவனைப் பார்த்து ‘இன்று உனக்கு எவ்வளவு இழப்பு பார்த்தாயா! எதிலும் அலட்சியம் வேண்டாம் பார்த்து நடந்து கொள், காலமும் நேரமும் திரும்பவும் வராது எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டவளிடம் என்ன மன்னிச்சிடுங்க டீச்சர், இனிமேல் இப்படி நடக்கமாட்டேன். என்றான் திருந்திய மனதோடு…
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “இழப்பு- (சிறுகதை)”