புலம் பெயர் தமிழர்களுக்கான அமைச்சகமும் அதன் அவசியமும்(கட்டுரை)
ஆச்சாரிMay 17, 2013
கி.மு. இரண்டாம் நூற்றாண்டில், கிழக்குக் கடற்கரையிலிருந்து காவிரிப்பூம்பட்டினம், கடல் மல்லை, கொற்கை, தொண்டி, மருங்கூர்ப்பட்டினம் (குடா பகுதியான அழியப்பட்ட துறைமுகம்) தமிழக வணிகர்கள் மலேயா (Malaysiya) பெயர்க்காரணமும் மலைப்பகுதிகளாய் இருப்பதனால் ஏற்பட்டதே (கடாரம் – Present Kedha), சாவகம், சுமத்ரம் தற்போதைய இந்தொனேசியா, சைகோன், தாய்லாந்து, காம்போசம் (கம்போடியா), சீனம், ஈழம் ஆகிய கிழக்கு நாடுகளிலும், அரிசி, தென்பாண்டிக் கடல் தந்த பாண்டி முத்து ஆகியவையும் மேற்கு நாடுகளான எகிப்து, ரோமாபுரி, கிரேக்கம், பாரசீகம், அரபு நாடுகளுக்கும் கலம் செலுத்திக் களம் அமைத்து வணிகம் செழிக்க வாழ்ந்தனர்.
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நகரத்தார் எனப்பட்ட தமிழ் வணிக மரபினர் தென் கிழக்கு நாடுகள் முழுதும் நீண்ட நெடிய வணிகத் தொடர்பும் கட்டமைப்பும் கி.பி. 1947 ம் ஆண்டு வரை கொண்டிருந்தனர். கீழ் கணக்கு நூல்களில் குறிப்பிடப்படும் நக்கவாரம் – அந்தமான் தீவுக் கூட்டங்கள் தமிழர்களின் கடலாடிக் கடலோடி வாழ்ந்த நெடிய வரலாற்றின் தடயப் பதிவாகவே இன்றளவும் உள்ளது. தென் கிழக்கு நாடுகள் தமிழ் வணிகர்களின் தொடர்ச்சியான தொடர்பில் இருந்ததும், அதன் காரணமாகப் பெரிய கப்பல்கள் செல்லும் போது இளைப்பறும் இடமாக இருந்ததும், தொடர் பதிவில் உள்ளதும், நக்கவாரம் தீவுக்கூட்டங்களுக்கும் – தமிழன் வைத்த பெயரே இன்றளவும் நிலைபெற்று உள்ளதும் அழியாத சான்று. (மனிதர்களை உண்பவர்களை நக்கவர் என்பது தமிழ் வழக்கு) ஆகவே நக்கவாரம் எனப்பெயர்பெற்றது.
இந்தத் தொடர் வணிகப் பரிமாற்றமே கி.பி. 9ம் நூற்றாண்டில் முதலாம் ராஜராஜ சோழனின் பேரெழுச்சியும் வடக்கில் ஆந்திரம், கலிங்கம், கங்கைப்புரம், நேபாளம், வங்கம், பர்மா என்ற தொடர் வெற்றியும் அதனையடுத்து எழுந்த மிகப்பெரிய கடல் வழி வெற்றிகளும் அதற்கான தொல்லியல் தடையங்களும் சான்றாக உள்ளன. பிற்காலச் சோழர்களின் காலத்தில் தற்போதைய வங்கக் குடா என்பது சோழப்பேரேறி என்றே பதிவு செய்யப்பட்டது.
2. இரண்டாம் கட்ட புலப்பெயர்வு :
இது கும்பெனி ஆளுகைக்கு முன்னால் கி.பி. 15-16ம் நூற்றாண்டுகளின் இடைப்பகுதியில் ஏற்பட்டது. இந்தக் கால கட்டங்களில் வணிகத்தொடர்பில் மிக அதிகமாகத் தமிழர்களின் குடியேற்றம் நடைபெற்றதால் தமிழரின் பண்பாட்டுப் பதிவு மிக ஆழமாகப் பதியும் வகையில் இவர்களது வணிகத் தொடர்பும், பின்னர் இவர்களுடனும் வணிகத் தொடர்பில் சென்ற தமிழர்களுடனும் மலாய் (Malaysiya) மக்களின் கலப்பில் மலாக்காச் செட்டிகள் என்ற ஒரு சிறுபான்மை இனம் உருவாகி இன்றும் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளுடன் வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே.
இவர்கள் இன்று மிக அருகிய சிறுபான்மையினராக மலாக்கா அருகில் உள்ள கம்பங்க் சிட்டி, கஜ பெராங்க் என்ற இடத்திலும், சிங்கப்பூரிலும் வாழ்ந்து வரும் அழிவின் விளிம்பில் உள்ள இனமாக அறியப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் சிங்கப்பூரிலும் இந்தோனேசிய பாலித்தீவுகளிலும் உள்ளனர்.
3. மூன்றாம் கட்டப் புலப்பெயர்வு :
கடந்து போன ஆயிரம் ஆண்டுகளில் இந்த மூன்றாவது கட்டம் தான் தமிழகம் மிகப்பெரிய மக்களின் இடப்பெயர்வினை சந்தித்தது. 19 ம் நூற்றாண்டின் தொடக்க கால கட்டத்தில் பிரஞ்சு மற்றும் கிழக்கு இந்திய கும்பெனியர் தங்கள் கலம் (கப்பல்) போன போக்கெல்லாம் தமிழர்களை விவசாயத்திற்கும், காடு கழனி சீர் திருத்தி உழுது பயிரிடவும் குடும்பத்துடன் குடி பெயர்த்துச் சென்றனர். இதற்கு அவர்களின் வேலைத்திறனும் (விவசாயம்) எளிதில் புதிய இடத்தில் தகவமைத்துக்கொள்ளும் மரபு வழிப்பழக்கமுமே காரணம்.
பிரஞ்சுக் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த மொரிசியசு, ஃபிஜி,குயானா, ட்ரினிடாட் போன்ற தீவுகளுக்கு கரும்பு சாகுபடிகளுக்கும், பிரித்தானிய ஆட்சியினரால் 1820களிலும் 1830களிலும் இலங்கை மலைப்பகுதிகளில் காடழித்துத் தேயிலை பயிரிட்டு ஒரு புதிய விளைபொருளுக்கு இடுபொருளாய் சென்றது. பஞ்சத்தால் ஏற்பட்ட பசி பட்டினிக்காக மட்டுமல்ல, தங்களின் அயராத உழைப்புத்திறனும், விவசாயப்பெருங்குடி மரபுமே வெள்ளையரை, புவியியல் சார்ந்த கடலோர நிலப்பகுதியில் இருந்த தமிழக மக்களைக் கொண்டு செல்ல வைத்தது. அதற்குச் சான்று கடல் சார் வாழ்விலும், விவசாயத்திலும் வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்வியலே.
” கலம் கிடக்குது கழுவாமல் ; நெல்லு கிடக்குது குத்தாமல் ” என்ற பழமொழி தமிழரின் வாழ்வியலின் விழுமியத்தைச் சான்று சொல்லும். பிரித்தானியர்களாலேயே மலேயா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, பர்மா போன்ற நாடுகளில் பெரிய அளவில் தமிழர்களின் வம்சாவழி மரபினர் இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர். பிரஞ்சுக் காலனியால் இடம் பெயரப்பட்ட தமிழர்கள் இன்றும் மொரிசியசு, ரீயூனியன், பிரஞ்சுக் கரீபியத் தீவுகளான மாரிடினியு, கௌடொல்பே ஆகிய இடங்களிலும் டச்சு ஆதிக்கத்தால் இந்தோனேசியாவிற்கும் 20ம் நூற்றாண்டில் குடியமர்த்தப்பட்டனர்.
4. நான்காம் கட்ட புலப்பெயர்வு :
20 ம் நூற்றாண்டு முற்பகுதியில் ஆங்கிலக் கும்பெனியிடமிருந்து முழுவதுமாகப் பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் கை மாறிய ஒருங்கிணைந்த பிரிட்டிசு இந்தியாவில் தமிழகம், கிழக்கு கடலின் விடிவெள்ளியாக விளங்கியது. தமிழர்களில் பொருள் படைத்தவர்கள் சட்டம் பயிலவும், வணிகம் பயிலவும் இலண்டன் , பாரீசு நகரங்களுக்கும், அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவம் சார்ந்த கல்விகளுக்கும் ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்கா முதலிய நாடுகளுக்கும், வணிகம் பொருட்டு ஏனைய ஐரோப்பிய நாடுகள் முழுவதற்கும் சென்றனர்.
அது மட்டுமல்லாமல் விடுதலைப்போரில் பிரித்தானியருக்கு மாற்று அணியில் இருக்கும் ஜெர்மனியுடன் உறவு கொள்ள வீரன் செண்பகராமனும், பின்னர் அண்ணல் சிதம்பரனாரும் அரசியல் முன்னெடுப்புகள் செய்தது வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட தொடர்பியலால் அயல் நாடு சென்று படித்து வந்தவர்கள் சிறந்த கல்விக்கழகங்களையும் உருவாக்கினர். கல்விக்கான சிறந்த கட்டமைப்பு அன்றைய இந்தியாவில் தமிழகத்தில் சிறப்பாகவே இருந்தது. ஆர்காடு இரட்டையர் (ஆற்காடு அல்ல) எனப்பட்ட சகோதரர்கள் சிறந்த கல்வியாளர்களாக உலகப்புகழ் பெற்றனர்.
விடுதலைபெற்ற இந்தியாவின் முதல் நிதியமைச்சர் கொங்கு நாட்டின் தங்கம் என்று போற்றப்பட்ட இரா. க சண்முகம் அவர்கள், ஐக்கிய அமெரிக்கா சென்று திரும்பிய பின் கொச்சின் ராஜதானியின் பிரதமராகப் பொறுப்பேற்று, பல நலத்திட்டங்களையும், வேலைவாய்ப்பு, கல்வி, நீர்ப்பாசனம் போன்ற கால்வாய்த் திட்டங்களையும் கேரளத்தில் நடைமுறைப்படுத்தினார். வள்ளல் அழகப்பரும் கொச்சி, திருவிதாங்கூர், எர்ணாகுளம் மன்னராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இக்கட்டான காலகட்டங்களில் தமது அறக்கொடையால் செழுமைப்படுத்தினார்.
வெள்ளையரின் ஆளுகைக்குப்பின், அனைவருக்கும் கல்வி தந்த பெருந்தகையாளர், பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நெறிமுறையால் ஒரு புதிய சமுதாயம் அடித்தட்டு மக்களில் இருந்து முகிழ்த்து நாங்கள் யாருக்கும் இளைத்தவர்கள் அல்ல என்று கல்வியில் சிறந்து விளங்கினர். மேலும் வெளி நாடுகள் சென்று உலகம் முழுதும் கணினி, அறிவியல், பொறியியல் போன்ற துறைகளில் வல்லுனர்களாகவும், அறிஞர்களாகவும் தலையெடுத்துப் புகழ் பரப்புகின்றனர்.
இதே காலகட்டத்தில் நீர்ப்பாசனம் இன்றி விவசாயம் பொய்த்த பின்பு குறைந்த கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவு கொண்ட (Semi skilled) ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வேலை தேடி மிகக் குறைந்த ஊதியத்திற்குப் புலம் பெயர்கின்றனர். இதில் பெரும்பாலோர் செல்லுமிடங்களில் சரியான தகவல்கள் இல்லாமல் ஏமாற்றத்திற்கும் வஞ்சகத்திற்கும் உள்ளாகின்றனர். இவற்றையெல்லாம் முறைமைப்படுத்தவும், தமிழர்கள் புலம்பெயர்வது (உள் நாட்டிலும் சரி வெளி நாடுகளிலும் சரி) முறையாகப் பதிவு செய்யப்பட்டு எதிர் காலத்தை செப்பம் செய்வதற்கு தமிழ் நாடு மாநில அரசாங்கத்தால் ” தமிழக புலம் பெயர் மக்களுக்கான அமைச்சகம் ” ஒன்றை உருவாக்க புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒரு முகமாய் முன்னெடுத்தால் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு விண்ணப்பம் செய்து நமக்கான எதிர்காலத்தை உறுதி செய்யலாம். இது வருங்கால சந்ததிக்கு நாம் செய்யும் கடமை மட்டும் அல்ல, தந்தை மகனுக்கு ஆற்றும் செயலும் கூட.
இந்திய நாட்டின் புலம் பெயர் குடிமக்களுக்கான மற்றும் இந்திய வம்சாவழி மக்கள் குறித்த வரையறையானது கூறப்பட்டுள்ளது.
NRI என்பது எந்த ஒரு இந்தியக் குடிமகனும் – இந்திய கடவுச் சீட்டு உடமையாளரும் (Passport) குறைந்தது ஆறு மாதங்கள் வேற்று நாட்டில் தங்கியிருத்தல் – குடியிருத்தல் என்றால் அவர்கள் புலம் பெயர் இந்தியர் (NRI) எனப்படுவர். இது தவிர PIO- என்பது இந்திய வம்சாவழி மக்கள். அதாவது ஒரு மனிதர் இந்திய துணைக்கண்டத்தில் பிறந்து (தற்போதைய வங்கதேசம், பாகிஸ்தானம் நீங்கலாக) அல்லது அவரது மூதாதையர் வரையறுக்கப்பட்ட இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து புலம் பெயர்ந்து தற்போதைய வாழ்விட நாட்டின் குடியுரிமை பெற்றவராக இருப்பின், இவர்கள் அனைவரும் ” PIO- இந்திய வம்சாவழி மக்கள் ” எனப்படுவர்.
மேற்சொன்ன புலம் பெயர் இந்தியக் குடியுரிமை மற்றும் இந்திய வழித் தோன்றல் இருசாரருக்கும் ஒருங்கிணைந்து இந்திய அரசாங்கத்தின் உதவிகள் சென்றடைய நடுவண் அரசு தனி ஒரு அமைச்சகத்தையும் உருவாக்கியுள்ளது.
இது தவிர அண்ணல் கந்தியடிகள் தென்னாபிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நாளில் ஆண்டு தோறும் (சனவரி-9, 1915) PIO - இந்திய வம்சாவழி மக்கள் இந்திய நாட்டிற்கு செய்த சேவையினைப் பாராட்டி பெருமைப்படுத்தும் விதமாகவும் கொண்டாடப்படுகின்றது.
மேற் சொன்ன வரையறையின் படி இந்தியப் புலம் பெயர் மக்களின் தொகை தோராயமாக 3 கோடிக்கும் அதிகமென புள்ளிவிவர அட்டவணை தெரிவிக்கின்றது. வரையறுக்கப்பட்ட இந்திய நாட்டின் (*வங்கதேசம், பாகிஸ்தானம் நீங்கலாக) புலம் பெயர் மக்கள் தொகையில் உள்ளவர்களில் பணி நிமித்தமாக வெளி நாடு சென்று பொருள் ஈட்டும் இந்தியத் தமிழர்களும் வரையறுக்கப்பட்ட இந்திய நாட்டின் தமிழகத்தில் இருந்து வம்சாவழி இந்தியர்களாக குறைந்தது இரண்டு தலைமுறைகளுக்கு முன் புலம் பெயர்ந்து அந்த நிலப்பகுதியின் குடியுரிமையுடன் வாழ்ந்து வரும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட PIO பிரிவில் வரும்மலேசியா, சிங்கப்பூர், இலங்கையின் தோட்டத் தொழிலாளர், மொரிசியசு, பிஜி,சிசேல்சு தீவுகளுக்குச் சென்ற கரும்புத் தோட்டத் தொழிலாளர்களும் அவர்கள் வம்சாவழியினரும், ட்ரினிடாட், சுரினாம்,கரிபீயப் பகுதிகளும் இது தவிர பர்மா, இந்தோனேசியா நாடுகளில் சோழர் காலம் தொட்டு குடியேறி வாழ்ந்து வரும் தமிழர்களும் இந்திய வம்சாவழி மக்கள் ஆகின்றனர்.
இதன் படி வரையறுக்கப்பட்ட இந்திய நாட்டின் வம்சாவழித் தோன்றல் அல்லாத ஈழம் என்பது, மண்ணின் மைந்தர்களாகவும் அவர்கள் சொந்த மண்ணிற்குரியவர்களாகவும் ( பிரித்தானிய காலனி ஆதிக்கத்தால் தோட்டத் தொழிலுக்கு இந்தியத் தமிழகத்தில் இருந்து 19ம் நூற்றாண்டின் தொடக்க கால கட்டத்தில் குடும்பங்களாகவே குடி பெயர்த்துக் கொண்டு செல்லப்பட்டவர்கள் அல்ல) கருதப்படுவர். இந்தியாவில் இருந்து பிரித்தானியர்களால் அண்டைத் தமிழக மண்ணில் இருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கும், நீரிணையால் பிரிக்கப்பட்ட புவியியல் சார்ந்த மண்ணின் மைந்தர்களுக்கும், அவர்களின் ஆதி வாழ்வுரிமை குறித்தும் தெளிவான புரிந்துணர்வு நம் நினைவில் கொள்ளவேண்டும். தவிர
இந்தச் சூழ்நிலையில், வரையறுக்கப்பட்ட இந்தியத் தமிழர்களின் புலம்பெயர் சமூகம் குறித்த பார்வையை நாம் நுணுகிப் பார்க்கவும், இன்று ஏனைய மொழிபேசும் இந்தியப் புலம்பெயர் மக்களின் மாநில அரசுகள் முனையும் முன்னெடுப்பும், அதற்கு இணையாக அதிக அன்னிய செலாவணி ஈட்டித்தரும் தமிழகப் புலம்பெயர் இந்தியர்களுக்கும் உள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் எடுத்துப்பார்ப்பதே இன்றைய காலம் தரும் பாடம்.
நாம் முன்னரே கூறியது போல் இந்தியப் புலம் பெயர் மக்களின் தொகை தோராயமாக 3 கோடிக்கும் அதிகமாகவும், இதில் பல்வேறு மாநிலத்தில் இருந்து செல்பவர்களுக்கும் நடுவண் அமைச்சகம் MOIA வாயிலாக நிர்வகிக்கப்படுகின்றது. இங்கு நாம் பார்க்க வேண்டிய ஒன்று இந்திய மாநிலங்களில் அதிக புலம் பெயர் தொழிலாளர்களையும் வணிகப் போக்குவரத்துகளையும் கொண்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. வரலாற்றுக் காலம் தொட்டு இதற்கான தரவுகள் உண்டு.
மாநில அளவில் அந்த, அந்த அரசுகளின் முன்னெடுப்பில் புலம் பெயர் மக்களுக்கான நலப்பணிகளை ஒருங்கிணைப்பதில் முன்னோடிகளாக மூன்று மாநிலங்கள் உள்ளன. அவைகள் முறையே கேரளம் ( NORKA), பஞ்சாப், குஜராத் ஆகியன. இந்த மாநிலங்கள் தங்கள் மொழி பேசும் மக்களுக்கான புலம்பெயர் அமைச்சகம் ஒன்றினை மாநில அளவில் ஏற்படுத்தி அதற்கான ஒரு அமைச்சரும், அவர் நடுவண் அரசின் புலம்பெயர் அமைச்சகத்துடன் MOIA தொடர்பு கொண்டு தொழில், பணி மற்றும் குடியேற்றம் குறித்த சேவைகளைத் துரிதப்படுத்துவதும் எளிமைப்படுத்துவதனையும், மேலும் அவர்களின் முதலீட்டினை முறைப்படுத்துவதும், மீள் குடியேற்றம், பணி செய்யும் நாட்டில் ஏற்படும் குடியேற்ற இடர்பாடு, ஆகியவற்றை நடுவண் அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு எளிமைப்படுத்துகின்றனர். மேலும் தங்கள் மாநிலத்திலிருந்து செல்லும் பணியாளர்களுக்கான கூட்டுறவு சங்கம், கடனுதவி, ஓய்விற்குப்பின் தொழிலாளரின் வைப்பு நிதியுடன் கூடிய ஓய்வூதியம், தொழிலாளர் வெளி நாட்டில் இறந்துவிட்டால் அவர்கள் உடல் தாயகம் திரும்ப (இந்திய தூதரகம் வாயிலாக) துரித உதவி, புலம்பெயர்ந்தவர்களுக்கான கலை, பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஆகியனவும் செம்மையாக நிறைவேற வழி வகை செய்கின்றனர்.
இது போன்றதொரு மாநில அமைச்சகம் தமிழகத்தில் தமிழ் நாடு அரசாங்கத்தால் ஏற்படுத்தப்படவேண்டியது காலத்தின் அவசியம். அது மட்டுமல்ல நடுவண் அரசு முறைப்படுத்தும் புலம்பெயர் மக்களுக்கான நலத்திட்டங்களைத் துரிதமாக நம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் நமக்குரியவற்றை காலத்தே பெறுவது முன்னேற்றப்பாதைக்கு எடுத்துச் செல்லும்.
குறிப்பாக கேரளத்தின் மாநிலப் புலம்பெயர் அமைச்சகமான NORKA , கேரள மொழிபேசும் புலம்பெயர் மக்களைக் கீழ்காணும் வகையில் வரையறை செய்கின்றது.
கேரளப் புலம்பெயர் மக்கள் எனப்படுபவர்கள் :- ” கேரள மாநிலத்தை விட்டு அண்டை மா நிலங்களிலோ, அல்லது வேற்று நாடுகளிலோ பொருளீட்டவும் பணி நிமித்தமாகவும் குடிபெயர்ந்தாலோ அல்லது பணியில் இருந்தாலோ அவர்கள் கேரள புலம் பெயர்ந்தவர்கள் எனப்படுவர் “. இவர்கள் யாவரும் தங்களது மாநில புலம் பெயர் அமைச்சகத்தில் – வசிப்பிடம், பணியிடம்,முகவரி, படிப்பு, தகுதிச் சான்றிதழ்கள் படியினையும் கொடுத்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இது மாநில அமைச்சகத்திடம் தேதிவாரியாக புள்ளிவிவரங்கள் பதிவு செய்யப்பட்டு அமைச்சகத்தின் கண்காணிப்பிலும் தொடர்ச்சியான தொடர்பிலும் இருக்கும் வகையில் நிர்வாக அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இப்படிப்பட்டதொரு அமைப்பு, எதிர்கால வாழ்வை உறுதி செய்வதாகவும், தொடரோட்டம் தொய்வில்லாமல் நீட்சி பெறவும் வகை செய்யும்.
அமைச்சகத்தின் தேவையும் அவசியமும் :
இதுகாறும் நாம், நம் தமிழர்களின் தொடர்ச்சியான புலம் பெயர் வாழ்வும், அவர்களின் கடல் கடந்த நாடுகளில் ஏற்படுத்திக்கொண்ட வாணிபத் தொடர்பும், அதன் ஈடுபயனாக புலம்பெயர்ந்து குடியேறிய வம்சாவழித் தமிழர்களின் மக்கள் சமுதாயமும், மேலும் இன்றைய காலத்தில் பணி நிமித்தமாக புலம் பெயர்ந்து செல்லும் தமிழர்களுக்கும் தாய் நிலத்துடனான ஒரு தொடர்பும், அதற்கான துரித செயல்பாடுகளைக்கொண்ட தனித்த அமைச்சகமும் இன்றியமையாததாகின்றது என்பதனை உணரமுடியும்.
1.இந்திய நடுவண் அரசின் செயல் திட்டங்களை உடனுக்கு உடன் துரிதமாக தமிழகத்தின் மாவட்ட வாரியாக உள்ள பயனாளிகளுக்கு கொண்டு செல்வது.
2.முறைப்படுத்தப்பட்ட புலம் பெயர் தமிழர்களின் புள்ளி விவரங்களைச் சேகரித்து, அதன் தொடர்ச்சியாக நடுவண் அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் முதலியவற்றைப் பெற்றுத்தருவது.
3.தமிழக புலம்பெயர் மக்களுக்கான அமைச்சகம் என்பது, வரையறுக்கப்பட்ட மாநில எல்லையினைக் கடந்து அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் மக்களின் பட்டியல், விவரங்கள், காரணங்கள், முகவரி, கல்வித்தகுதி ஆகியவற்றையும், மேம்பட்ட புள்ளிவிவரங்களையும் சேகரித்தல். வெளி நாடுகளில் வேலைக்குச் செல்லும் பணியாளர்களின் அனைத்து விவரங்களையும் சேகரித்தல்,
4.NRTM – Non Resident Tamil Ministry என்பது மேற்சொன்னவற்றின் நடவடிக்கைகள் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் திட்டங்களையும் ஒருங்கிணைத்துப் பலன் பெறும் வகையிலும் செயல்படுவதும், அனைத்து புலம்பெயர் (உள் நாடு – வெளி நாடு வாழ் தமிழர்களின்) மக்களின் தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதும் அதன் முதன்மைப் பணியாகவும் இருக்கும்.
பணி நிமித்தமாக அண்டை மாநிலம் (உள் நாடு) அல்லது வெளி நாடுகள் செல்பவர்கள் இந்த அமைச்சகத்தில் தாங்களே முறையாகப்பதிவு செய்து கொள்வதும் தங்கள் விவரங்களைக் கொடுத்து அதனை தொடர்ச்சியாக புதுப்பித்தலும் செய்வது அமைச்சகத்திற்கும் எளிமையாக இருக்கும்.
5.இப்படிச் சேகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ளவர்களின், பணிக்கு பிந்தைய மீள் குடியமர்விற்கும், தொழில் முனைவிற்கும் உதவிகள் நல்குவது, அதற்கான உதவித் திட்டங்கள் மற்றும் ஓய்வூதியம், கடன்பெறும் வசதி என்பன போன்றவைகளையும் செயல்படுத்தும்.
6.புதிய வேலை வாய்ப்பிற்கான முகாம்களும், அதற்கான கருத்தரங்கங்கள்,வழிகாட்டும் அமர்வுகள் என்பன போன்றும் செயல்படுத்தும்.
7. இது தவிர இன்று செய்திகளில் வரும் பல துயரச் சம்பவங்கள் பலவற்றிற்கும் துரித நடவடிக்கை எடுக்கவும் முடியும். இதற்கு பஞ்சாப், குஜராத், கேரளம் ஆகிய மாநிலங்களே நல்ல சான்றாக இருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக :
தமிழக கடல் மாலுமிகள் பிணையக் கைதியாக வைக்கப்பட்டது,
ஆப்பிரிக்க நாடுகளில் வேலைக்குச் சென்ற தமிழர்கள் அங்குள்ள அரசியல் காரணங்களுக்காகப் பிணைக் கைதிகளாகச் சிறைபிடிக்கப்பட்டது,
வளைகுடா நாடுகளில் மீன்பிடிக்கும் பொழுது அமெரிக்க ராணுவத்தால் சுடப்பட்டது,
பணியிடத்தில் விபத்திலோ அல்லது இயற்கையாகவோ மரணமெய்தினால் பணியாளர்களின் உடலை அவர் தம் குடும்பத்தினர்க்கு கிடைக்கும்படிச் செய்வதில் தூதரக தொடர்பும், துரித உதவியும் கிடைக்கும்படியும் செய்வது.
மேலும் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும், தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களால் ஏமாற்றப்படுவதையும் பெருமளவு குறைக்கலாம்.
இது போன்று இன்னும் பல தொலைநோக்கு செயல்பாடுகளையும் நடைமுறைப்படுத்தி பலன் பெறலாம்.
ஆகவே மேற்கூறிய பல நன்மைகளைப் பெற நம் தமிழ் நாடு மாநில அரசாங்கத்தால் “தமிழக புலம்பெயர் மக்களுக்கான அமைச்சகம் “ ஒன்றை உருவாக்க புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒரு முகமாய் முன்னெடுத்தால் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு விண்ணப்பம் செய்து நமக்கான எதிர்காலத்தை உறுதி செய்யலாம். இது வருங்கால சந்ததிக்கு நாம் செய்யும் கடமை மட்டும் அல்ல, தந்தை மகனுக்கு ஆற்றும் செயலும் கூட. இதற்கான முன் முயற்சிகளை இனி வரும் காலத்தில் புலம் பெயர்ந்து பணிக்குச் செல்லும் புதிய தலைமுறையினருக்கு உதவும் வகையில் தமிழக மக்களும் நல்கலாம்.
இதற்கான ஒருங்கிணைப்பை சென்னையில் செயல்படும் உலகத்தமிழர் அமைப்பு (GTO) பொறுப்பேற்று செயலாற்றும். உலகம் அனைத்தும் உள்ள தமிழர் அமைப்புகள் இத்துடன் தொடர்பு கொண்டு இதற்கான பணிகளை முன்னெடுக்கலாம்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “புலம் பெயர் தமிழர்களுக்கான அமைச்சகமும் அதன் அவசியமும்(கட்டுரை)”