மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மேலை எழுத்தும் தமிழ் எழுத்தும் – ஓர் இயலுமைத் தொடர்பு (பாகம்2)- கட்டுரை

ஆச்சாரி

Jun 1, 2013

கி.மு முதலாம் நூற்றாண்டு காலங்களில், கிரேக்கம், பொனீசியா, இசுரேல் ஆகிய பகுதிகளில் இருந்து முசிறிக்கு வர 90 நாள்கள் பிடித்திருக்கின்றன. எகிப்தின் அலெக்சாண்டிரியாவில் இருந்து 5000 கி.மீ தொலைவில் உள்ள முசிறி வர 70 நாள்கள் ஆகியிருக்கின்றன. இக்காலக் கட்டம் அவர்களின் கடலோட்டத்தில் வளர்ச்சி உண்டாகிய காலமாகும். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடலோடும் திறன்பெற்றிருந்த தமிழ் மூவேந்தர் நாடுகளுடன் , கி.மு 1000த்தைச் சேர்ந்த யூதப் பேரரசன் சாலமன் கொண்டிருந்த வணிகத் தொடர்பு உலகம் அறிந்த ஒன்றாகும்.

சாலமன் காலத்தில் நடுத்தரைக் கடற்பகுதியில் நடைபெற்ற எல்லா நாட்டு வணிகங்களிலும் பேரரசன் சாலமனுக்குப் பெரும் பங்கு கொடுத்தார்கள். அவரின் பேரரசு, யூத மாநிலமாகத் தனிச் செல்வாக்குடன் இருந்ததொடு, இசுரேலியக் குடியேற்ற நாடுகளாகப் பலவற்றை வைத்திருந்தும், யூதப் பகுதி தவிர்த்த தனது பேரரசை 12 மண்டலங்களாகப் பிரித்தும் ஆண்டிருக்கிறார். சாலமனுக்காக பலநாடுகளும் தாங்கள் வணிகஞ் செய்து சாலமனின் பங்கைக் கொடுத்துள்ளார்கள். பலநாடுகளைத் தனக்காக வணிகஞ் செய்யப் பணிக்கவும் செய்திருக்கிறார். சாலமனோடு நெருங்கிய நட்பு கொண்ட பொனீசிய அரசர் இராம்(Hiram)   , ஓபிருக்குத்(Ophir) தன் கப்பல்களைக் காவலொடு அனுப்பி 4,50,000 பவுண்டு எடையுள்ள தங்கத்தைக் கொண்டு வந்து சாலமனிடம் ஒப்படைத்து, தனது கூலியாக 1,20,000 பவுண்டு தங்கத்தைப் பெற்றுக் கொண்ட வரலாறு, முதல் “Book of Kings” என்ற ஆவணத்தில் இருப்பதை பிரகாசு சரண் பிரசாத்து  மேற்கோள் காட்டுவார்.

இது ஓபிர் என்ற இடத்தையும், சாலமனின் வணிக ஆளுமையின் தன்மையையும் செய்தியாகத் தருகிறது. “Gold Of Ophir to Beth-Horon…30 Shekels” என்ற சாலமனின் கல்வெட்டு ஓபிர் என்ற இடம் எது என்ற தேடலை ஆய்வுலகத்தில் ஏற்படுத்தி, அதன்பாலான உலகின் கருத்துகள் இன்னும் ஊகங்களாகவே இருக்கின்றன. ஓபிர் என்ற இடம் பற்றி மேலும் பார்க்கும் முன், விவிலியம் கூறுகின்ற “The king had a fleet of large ‘Tarshish’ ships along with Hiram’s fleet; once every three years the ‘Tarshish’ fleet came in, bringing gold, silver, ivory, apes and peacocks.” என்ற முக்கியமான வாக்கியத்தையும் ஆழ்ந்து பார்க்க வேண்டும்.

ஈழநாட்டின் வடமுனை பழங்காலத்தில் பலேசிமுண்டு (அ) பழைசிமுண்டு என்று அழைக்கப் பட்டிருக்கிறது(படம் பார்க்க). தொல்பழங்காலத்தை ஆராய்ந்த பல அறிஞர்களும் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். மெகத்தனீசின் குறிப்புகளில் இருந்து இவ்விடத்தில் “Paleogoni” என்ற பெயரில் குடிகள் இருந்தனர் என்று பிளினி கூறுகிறார். பிளினியின் குறிப்புகளில் இருந்து இந்தப் பழசிமுண்டு நகருக்கு அருகில், தெற்கு முகம் பார்த்த ஒரு பெரிய துறைமுகம், அதே பெயரிலேயே இருந்தது தெரியவருகிறது. ஈழத்தின் வடமுனையில் தமிழகம் நோக்கித் திரும்பியவாறு இருக்கும் நிலத்தில் இது இருந்திருப்பது தெரியவருகிறது. இந்தத் துறைமுகத்திற்கு அருகில் இருந்த அடுத்த துறைமுகம் தமிழகத்தின் கோடிக்கரை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது (கோடிக்கரை = Coliacum). பலேசிமுண்டு பல தீவுகளால் ஆனது என்று குறிப்பிடப்பட்டிருப்பது, இந்த விவரிப்பு அப்படியே இன்றைய யாழ்ப்பாணத்தை ஒத்திருக்கிறது. ஆகவே, யாழ்முனையில், கோடிக்கரை நோக்கி நீளுகின்ற நிலத்தில் பலேசிமுண்டு துறைமுகம் இருந்திருக்கிறது. (இந்தப் பலேசிமுண்டு என்பது இன்றைய பலாலி நகரத்தின் பெயரை நினைவூட்டுவது நோக்கத்தக்கது). பலேசிமுண்டு நகரத்தில், சாலமன் அவரின் முகவர்கள், வணிகர்கள், அலுவலர், ஊழியர்களுக்குத் தேவையான குடியிருப்பையும் அலுவலகத்தையும் அமைத்திருந்தார். தமிழ்நாட்டில் இருந்தும், வடக்கே கங்கைச் சமவெளியில் இருந்து கடல்வழியாகவும், கீழைச் சீன தேயங்களில் இருந்தும் வருகின்ற பொருள்களைச் சேர்த்து வைக்கும் இடமாகவும், மேலை உலகில் இருந்து வரும் பொருள்களை இப்பகுதிகளுக்குப் பிரித்து அனுப்பும் இடமாகவும் இது இருந்திருக்கிறது; கொள்முதல், விற்பனை, பண்டமாற்று மையமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. மேலே பாதை-3 முசிறிக்கும், அதே பாதை சற்று கீழே இறங்கி பலேசிமுண்டுவுக்கும் வருகிறதைக் காணலாம். அதொடு, பாதை-4, பாதை-5 ஆகியவற்றை இணைக்கும் மிகப்பெரிய மையமாக இது இருந்திருக்கிறது. இதற்கு ஒப்படி என்று பெயர்.

தமிழில் ஒப்படி என்ற சொல், இரண்டு பொருள்களைத் தருகிறது. ஒன்று, “ஒதுங்கிய வளைகுடாவில் அமைந்த இயற்கைத் துறைமுகம்”; இரண்டாவது பொருள், கண்காணி, மேற்பார்வையிடும் பணி, அல்லது திரட்டுப்  பணியைக் குறிக்கிறது. துறைமுகம், அதனை ஒட்டிய நகரம், நகரத்தில் மிகப்பெரிய பன்னாட்டு வணிக மையம் இருந்திருக்கிற காட்சியைக் காணமுடிகிறது. ஆகவே, பலேசிமுண்டு அரசர், தமது நாட்டில், சாலமன் கூட்டணி நாடுகளுக்குத் தேவையான, குடியிருப்பு, வணிக, நாவாய் நுட்ப வசதிகளுக்காக, ஒப்புரவின் அடிப்படையில் தனியே இடம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார். அந்த இடம் “ஒப்படி” என்று அழைக்கப் பட்டிருக்கிறது. இன்றைக்கும் அடுப்படி, இரயிலடி போன்ற சொற்கள் புழக்கத்தில் உண்டு. அதைப் போன்றே இச்சொல் அமைந்திருக்கிறது.

துறைமுகம் சார்புடைய யவன, உரோம, பொனீசிய, எபிரேயர்களுக்கு அவர்களின் பழக்க வழக்கங்களுக்கு உகந்த மாதிரி, உள்ளூர்ப் பழக்க வழக்கங்களுக்கு ஊறு வராத வண்ணம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட தனி இடத்தை ஒப்படி என்று அழைத்திருக்கிறார்கள். இந்த ஒப்படியைத்தான், சாலமன், ஓபிர் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒப்படியின் திரிவாக, எபிரேய வழக்காக இந்த ஓபிர் என்ற சொல் முதன்முதலில் உருவாகியிருக்கிறது. அதற்கு முன் ஓபிர் என்ற சொல் எபிரேயத்தில் இல்லை. பிற்காலத்தில், உரோமர்கள், அதனை “ஒப்பிடம்” (Oppidum) என்று அழைத்திருக்கிறார்கள். சீசர் இச்சொல்லை கி.மு முதலாம் நூற்றாண்டில் உருவாக்கி யிருக்கிறார். ஒரு நாட்டின் சிறப்புக் குடியேற்றங்கள், நிருவாக வசதிகளுக்காக அமைக்கப்படும் பாதுகாப்பு கொண்ட இடங்களுக்கு ஒப்பிடம் என்ற பெயர் உரோமர்களால் வைக்கப் பட்டிருக்கிறது. ஐரோப்பாவின் பல இடங்களிலும் ஒப்பிடங்கள் கி.மு 200க்குப் பின்னர் உருவாக்கப் பட்டிருக்கின்றன. அந்தச் சொல்லையே “பலேசிமுண்டு ஒப்பிடம்” (மேலுள்ள படம் பார்க்க) என்று வரலாற்று ஆசிரியர்கள் குறித்திருக்கின்றனர். (பலேசிமுண்டு என்ற சொல், பலேசிமுடி என்று இப்படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பலேசி/பழசி, முண்டு, முடி என்ற சொற்கள் தனியே ஆயத்தக்கவை). இந்த ஒப்படியில் இருந்துதான் சாலமனுக்கு நாவாய் நாவாயாகத் தங்கமும் பல்வேறு பொருள்களும் சென்றிருக்கின்றன. அவை, பல்வேறு நாடுகளில் இருந்து திரட்டப்பட்டதாகும்.

ஒப்படியில், கீழை நாடுகள், தமிழகம், ஈழம், கங்கைவெளி போன்ற இடங்களில் இருந்து திரட்டப்பட்ட பொருள்கள், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை எபிரேயத்திற்குச் சென்றிருக்கின்றன. விவிலிய பழைய ஏற்பாட்டில் “once every three years the ‘Tarshish’ fleet came in, bringing gold, silver, ivory, apes and peacocks”  என்று குறிப்பிடப் பட்டிருப்பது மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. “சாலமன் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நாவாய்களை அனுப்பி, ஓபிரில் இருந்து செல்வம் கொண்டு வந்தான்” என்று பொருள் கொண்டு, ஒரு கடலோட்டத்திற்கு மூன்றாண்டுகள் பிடிக்கும் இடம் எதுவோ அதுதான் ஓபிர் என்று எங்கெங்கோ பலர் தேடிக்கொண்டிருக்கும் நிலை இந்தத் தவறான புரிதலால் ஏற்பட்டதுதான்.  “கங்கை வெளியைச் சார்ந்த அலகாபாத்தில் இருந்து, பொருள்கள், ஈழத்தின் (சிலோனின்) தலைநகரான பலேசிமுண்டுவிற்குக் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து பிற இடங்களுக்குச் சென்றது” என்ற  குறிப்பினை பிளினி கூறியிருக்கிறார். இக்குறிப்பு நேரடியாக கி.மு 1000 காலத்தைச் சேர்ந்த பயணத்தைக் குறிப்பிடாவிடிலும் பலேசிமுண்டுக்கும் அங்கிருந்த ஒப்படி எனப்பட்ட வர்த்தக/வணிக அமைப்பிற்கும் வலு சேர்ப்பதாக இருக்கிறது. Certain Indian commodities were imported into Babylon even in the days of Solomon c. 900 B. C. and they were known to the Greeks and others under their Indian names”   என்று கூறி, சாலமன் காலத்திலேயே தமிழகத்துடன் இருந்த தொடர்பு பற்றிக் கூறுகிறார் கௌரங்கநாத் பானர்சி. மேலும் “Gk. Oryza is identical with the Tamil, arisi or rice” என்று சொல்வதன் மூலம் அந்தத் தொடர்பு தமிழ் நிலங்களோடு இருந்தது உறுதியாகிறது.

சிலப்பதிகாரத்தில் “கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும், பயனறவு அறியா யவனர் இருக்கையும்” என்று இந்திரவிழவூரெடுத்த காதையில் வருகின்ற பாடல் அடிகள்(9,10)  சொல்லும் கருத்தும் இதுதான். அரேபிய நாடுகளில், தமது மக்களின் பழக்க வழக்கங்களில் இருந்து வேறுபடுகின்ற பிற நாட்டுக் குமுகத்தினருக்கு, தனியே குடியிருப்பு அமைத்துக் கொடுக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. தமது நாட்டின் சில பழக்க வழக்கக் கட்டுப்பாடுகள், அந்தக் குடியிருப்புகளில் செலுத்தப்படாது. இது பிறநாடுகளுடன் கொண்டிருந்த ஒப்புரவின் அடிப்படையில் பிறநாட்டு மக்கள் தம் நாட்டில் நீண்ட நாள்கள் இருந்து பணியாற்றும் வண்ணம் செய்யப்படும் ஏற்பாடாகும். இதைத்தான் அன்று தமிழர்கள் வெளிநாட்டாருக்குச் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்று இளங்கோவடிகளாரின் பாடல் வரிகள் காட்டுகின்றன. “கயவாய் மருங்கு என்றால் – துறைமுக (அ) ஆற்றுக் கழிமுகப் பகுதி; இப்பகுதியில் யவனர் இருக்கை இருக்கிறது. அது இடையறாது விழிப்புடன் இருக்கிறது. அப்பகுதி, உள்ளூர்க் குமுகத்திடம் இருந்து “தனித்து” இருத்தப்பட்டிருப்பதைத்தான் ‘காண்போர்த் தடுக்கும்’ என்ற சொல்லால் உணர்த்துகிறார் சிலம்பாசிரியர். அது ஒரு சுற்றரணுடன் கூடியதாக இருந்திருக்கலாம் என்பது கருதத்தக்கதே.

ஆகவே, Ophir என்ற இடம் பழம் யாழ்ப்பாணத்தின் பலேசிமுண்டு என்ற இடத்தில் இருந்த ஒப்படியே ஆகும். இது சாலமனால் Ophir என்ற அழைக்கப்பட்டு, பிற்காலங்களில் Oppidum என்ற இலத்தீனச் சொல்லை உருவாக்கியிருக்கிறது. அந்தப் பலேசிமுண்டும், ஒப்பிடமும் 18 ஆம் நூற்றாண்டு அறிஞர்களால் நிலப்படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. மிகப் பெரும் வணிக உறவை தமிழ்நிலங்கள் கொண்டிருந்த இந்தக் காலத்தில் பொனீசிய, கிரேக்க, எபிரேய வணிகர்கள் தமிழை நிறையப் புழங்கினார்கள். பொனீசியர்கள், கி.மு 1000ல் தமது நெடுங்கணக்கை உருவாக்கிய போது தமிழியையும் உள்வாங்கிக் கொண்டார்கள். அதன் விளைவாக தமிழி அகரம் அவர்களின் நெடுங்கணக்கில் நுழைந்தது. சாலமனுக்காக, பொனீசிய அரசர் இராம் ஒப்படிக்கு (Ophir) வந்து செல்வங்களைக் கொண்டு சென்றது  இதே காலக்கட்டத்தில் இருக்கலாம் என்பதையும் மேலே இக்கட்டுரை காட்டுகிறது. கிரேக்கர்கள், தமிழ் உயிரெழுத்துகளை, கி.மு.800 ஆண்டு காலத்தில் தம் மொழியை மாற்றிய போது புகுத்தினார்கள். அவர்கள் பொனீசியத்தை மட்டும் உள்வாங்கிக் கொள்ளவில்லை – தமிழியையும் உள்வாங்கிக் கொண்டார்கள் என்றும் ஓர்ந்து பார்க்கலாம். ஏற்கனவே தமிழி மேலைத்தேயத்தில் பரவியிருந்தாலும் உயிரெழுத்துகளை உணர்ந்து கிரேக்கம் உள்வாங்கிக் கொன்டது சாலமன் காலக்கட்டத்தில் மேலைதேயங்கள் தமிழகங்களோடு உறவு கொண்டிருந்த போது இருக்கலாம். தமிழ் நிலங்களில் நடந்த பெருவணிகம் மிக நெருங்கிய  மொழித் தொடர்புகளை ஏற்படுத்தியது என்பது தெளிவு.

குறிப்பு: ஓபிர் என்ற இடத்தைப் பற்றி தமிழறிஞர்களின் பிற இரண்டு கருத்துகள் இங்கு குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன. ஒன்று, அது தொன்மையான உவரித் துறைமுகம் என்பதாகும். (உவரி திருச்செந்தூருக்கு அருகிலிருந்து கூடங்குளம் போகும் வழியில் இன்றுள்ளது.) உவரி என்ற சொல்லில் உள்ள தமிழ் வகரம் மேலை மொழிகளிலும் பேச்சுகளிலும் மெலிந்த பகரமாவதை (உவரி>Ophir) மொழியியல் வழியாக அவர்கள் சுட்டிக்காட்டுவர். இரண்டாவது கருத்தை கே.டி.இராசசிங்கம் என்ற அறிஞர் எழுதியுள்ளார். அவரும் யாழ்முனைக்கு அருகிலேயே ஓபிர் இருந்ததாகச் சொல்கிறார். தற்போது அந்நகரம் கடலில் மூழ்கிவிட்டதாகவும் அவரின் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். நாகர்குலத்தின் ஒரு குடியான ஓவியர் குடி அங்கு வாழ்ந்ததென்றும் அதனாலேயே “ஓவியர் நாடு” என்பது ஓபிராக எபிரேயத்தில் திரிந்திருக்கிறதென்று அவர் வாதஞ் செய்வார். இவ்விரண்டு கருத்துகளுமே “ஒப்படி” என்ற இக்கட்டுரையின் கருத்தோடு ஒப்பாய்வு செய்யத்தக்கன என்பது எனது கருத்தாகும்..

இந்தப் பெருவணிகத்தில், பொனீசியர்கள், அரேபியர்கள், எகிப்தியர் போன்றோர் உரோமாபுரியின் செல்வம் மிகுந்த வாழ்க்கைக்குத் தேவையான  பொருள்களைத் தரும் இடைத்தரகராகப் பெரிதும் செயல்பட்டிருக்கிறார்கள். முசிறியில், ஒப்படியில் இருந்து கொண்டு சென்ற பொருள்கள் 28 மடங்கு அதிக விலைக்கு உரோமாபுரியில் விற்கப் பட்டிருக்கின்றன என்றால் தமிழகத் தொடர்பின் வலிமையை எப்படியிருந்திருக்கும் என்பதே தமிழியின் தாக்கத்திற்குச் சான்றாகும்.  வரலாற்றில் ஈழநாடு வணிகத்தில் சிறந்து விளங்கியிருக்கிறது. “Ceylon continued to be the common emporium of southern commerce for upwards of two thousand years” என்று “Asiatic Researches – Appendix xi” குறிப்பிடுவது, பலேசிமுண்டுவில் ஒப்படி இருந்திருக்கும் வாய்ப்பிற்கு வலு சேர்க்கிறது. Emporium என்றால் அதன் பொருள் “A market place or trading centre, particularly of an ancient city“ ஆகும். தமிழகம் பற்றிய செய்திகள் உலக வரலாற்று ஆய்வுகளில் இந்தியா என்ற பெயருக்குள் முடங்கிப் போகையில் சிலோன் என்கிற ஈழ நாடு பற்றிய ஆராய்ச்சிகள் தனித்து காணப்படுவது தமிழாராய்ச்சிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கிரேக்கத்தின் பெரிய தத்துவ ஞானியான பிளேட்டோ, கிரேக்க உரோம நெடுங்கணக்கைப் பற்றிச் சொல்லும்போது, “Whenever greeks take anything from foreigners, they eventually bring it to a greater perfection” என்கிறார். ஆக, கிரேக்கர்கள் எழுத்துகளை உருவாக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. அவர்கள் கடன்தான் வாங்கினார்கள் என்பது உலக முடிபு. பிளேட்டோவின் காலம் கி.மு 5ஆம் நூற்றாண்டாகும். கி.மு 8ஆம் நூற்றாண்டிலேயே எழுத்துகளைக் கிரேக்கர்கள் கடன் பெற்றுவிட்டார்கள். அக்கடன், பொனீசியர்களிடமிருந்து வாங்கியதாகவே உலகம் சொல்லிக் கொள்கிறது; தமிழிடம் பெற்றிருக்கலாமோ என்று நாம் ஐயுறுவதில் தவறுண்டா? உயிரெழுத்துகள் சென்ற பாதை செங்கடற்பாதையாகக் கூடாதா?. அதுமட்டுமல்ல பொனீசியா பற்றி மேலும் தேடினால் பல உண்மைகள் வெளிவரக் கூடும்.

”பொனீசியாவின் புகழ் பெற்ற விதயங்கள் என்னென்ன?” என்று பார்த்தால் அவற்றில் மூன்று விதயங்கள் முகன்மையாகச் சொல்லப்படுகின்றன.

  1. அவர்களின் மெய்யெழுத்து நெடுங்கணக்கை உலகிற்குத் தந்தது
  2. தொலைதூரக் கடலோட்டத்தை நடுத்தரைக்கடல், ஐரோப்பிய பகுதிகளுக்குக் கற்றுத் தந்தது (கி.மு.1500-1200).
  3. ”பர்ப்பிள்” என்று சொல்லப்படும் அவர்களின் செங்குவளை நிறச்சாயம்

மூன்றாவது விதயமான செங்குவளைச் சாயம், அவர்களின் அரச நிறம் என்று ஆய்வாளர் சொல்வர். அது மிக உயர்வாகக் கருதப்பட்ட நிறமாகும். அந்த நிறமுடைய உடுப்பணிந்தவர்கள் அவர்கள் குமுகாயத்திற் பெருஞ் செல்வந்தர்களாகக் கருதப்பட்டார்கள். பொனீசியாவிலும் அதன் ஆதிக்கம் மிகுந்த நாடுகளிலும், ஆங்கிலத்தில் “born with silver spoon” என்பதன் பொருள் என்னவோ, அதுவே “born in purple” என்பதற்கும் உண்டு. அந்தச் சாய ஏரணத்தை அவர்கள் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டு பெரும் பொருளும் ஈட்டினார்கள் என்பது வரலாறு. அந்த நிற உடைகளுக்காக மற்ற நாட்டு மக்கள் தங்கக் கட்டிகளை அள்ளிக் கொட்டியிருக்கிறார்கள். பொனீசியர்கள் எப்படி இந்நிறத்தை உருவாக்கினார்கள் என்பதை உலகம் வியந்து சொன்னதைப் பல நூல்களிற் காணமுடிகிறது. பொனீசியப் பகுதிக் கடற்கரையில் வாழ்ந்த ஒரு வகை நத்தையில் இருந்தே இந்நிறம் உருவாக்கப் பட்டது என்றும், அந்த நத்தை இப்போது “அழிந்துவிட்ட இனம்” என்பதும் ஆய்வுலகத்தின் முடிவு. ஆனால் அதை மீளாய்வு செய்தால் நன்றாயிருக்கும்.

அந்தச் செங்குவளை (purple) நிறம் என்பது,  நீலம், சிவப்பு என்ற இரண்டு நிறங்களின் குறிப்பிட்ட வீதக் கலப்பே ஆகும். இதனை எந்த வேதியியல் மாணவரும் எளிதில் சொல்லுவர். இந்த நீலத்திற்கும் சிவப்பிற்கும் தேவையான இரண்டு மூலப்பொருள்களும் பொனீசியாவிற்குத் தமிழகத்திலிருந்தே ஏற்றுமதியாகின. நீலத்திற்கு மூலப்பொருள் அவுரிச்செடியாகும் (Indigo). சிவப்பிற்கு மூலப்பொருள் தம்பலப்பூச்சி(Cochineal) என்பதாகும். சிவந்த அழகான தம்பலப் பூச்சியை ”வெல்வெட்டுப் பூச்சி” என்று பேச்சு வழக்கிற் சொல்வது தமிழகத்தில் இன்றும் இருக்கிறது. அவுரிச் செடி தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய இடங்களில் பெருமளவு விளைந்திருக்கிறது. பிற இந்தியப் பகுதிகளில், கடப்பா, பூனா, வங்கம் ஆகிய இடங்களில் விளைந்திருக்கிறது; இவை ஒப்படிக்கு வந்து இங்கிருந்து பொனீசியா சென்றிருக்கின்றன. தம்பலப் பூச்சி தமிழகத்தின் உலர்காடுகளில் வளர்க்கப்பட்டு உலர்ந்த பூச்சிகளாக ஏற்றுமதியாயிருக்கின்றன. (தம்பலப் பூச்சி தரும் சிவப்பு நிறத்தை crimson red என்பர்). இந்த இரண்டிலும் இருந்து சாயம் இறக்கி, தக்க வீதத்தில் அவற்றைக் கலந்து உருவான செங்குவளைச் சாயம்தான் பொனீசியர்களின் புகழைப் பாடும் ”பர்ப்பிள்” நிறமாகும். ஆக, பொனீசியர்கள் கடன் கொடுத்தார்கள் என்று சொல்லும் அதே வேளையில், ”அவர்கள் எங்கிருந்து அதைப் பெற்றார்கள்?” என்ற தேடல் தமிழ்நாட்டைச் சேர்க்காமலேயே நடந்தால் எப்படி? ஊற்றுக்கண்ணைத் தேடாது போகலாமா? சாலமன் ஒப்படிக்கு பொனீசிய இராம் தலைமையிலான  வணிகப் படையை அனுப்பியது, பொனீசியாவிற்கு ஏற்கனவே இருக்கும் தமிழகத் தொடர்பின் பட்டறிவைப் பயன்படுத்திக் கொள்ளவேயாகும். பொனீசிய எழுத்துகளிலும், நிறத்திலும் தமிழ் நிலங்களுக்குப் பங்குண்டு என்பதற்கு ஆழ்ந்து ஓர்ந்தால் இதுவும் சான்றாகும்.

உலகில் படிக்கப்படாத முக்கியமான எழுத்துகளில் முந்து-இலாமித்து எழுத்துகள், சிந்துவெளி எழுத்துகள் ஆகிய இரண்டொடு, உரொங்கோரொங்கோ(Rongorongo)  எழுத்தும் முக்கிய இடம் பிடிக்கின்றது. உரொங்கொரொங்கோ, ஈசுடர் தீவில் (Easter Island)  உருவான எழுத்துமுறை. ஈசுடர் தீவு, தென்னமெரிக்காவுக்கும் ஆத்திரேலியாவிற்கும் இடையே, பசிபிக்குப் பெருங்கடலில் இருக்கின்ற சிறிய தீவாகும். இது சிலி நாட்டின் ஆளுமையில் இருக்கும் சிறப்புப் பகுதியாகும். கீழுள்ள படம் தமிழகத்திற்கும் ஈசுடர் தீவுக்கும் உள்ள தொலைவைக் காட்டுகிறது. தமிழகத்தில் இருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற தீவில் 24 மரப்பலகைகளில், அந்தத் தீவில் வாழ்ந்த தொல்பழங்குடி மக்களின் எழுத்துகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன.

அங்கே இயல்பாக ஒரு எழுத்துமுறையும் மொழியும் உருவாகியிருந்ததை அறிஞர் கண்டு வியக்கின்றனர். இது பாலிநேசிய (Polynesia) தீவுகளில் ஒன்று. இந்த மொழிக்கு “இராப்நூய்” மொழி என்று பெயர். படத்தில் உள்ள உரொங்கோரொங்கோ எழுத்துகள் அங்கு கண்டுபிடிக்கப் பட்ட எழுத்துப் பொறிப்புகள் ஒன்றில் காணப்படுவதாகும். 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்ட இப்பொறிப்புகளை ஆராய்ந்த அங்கேரி நாட்டுப் பொறியாளர் கிலாமி டி எவிசி  (Guillaume De Hevesy), இவ்வெழுத்துகள் சிந்துவெளி எழுத்துகளுடன் கொண்டுள்ள வடிவ ஒப்புமையைக் உலகிற்கு நிறுவிக் காட்டினார்.  இவ்வெழுத்துகள், தென்கிழக்கு ஆசியாவில் இருந்தே வந்திருக்கின்றன என்றும் எவிசி கூறுகின்றார். அதொடு, “இத்தனைத் தொலைவில் காணப்படும் இவ்வெழுத்துகள், தற்செயலாக இங்கு வந்தவை அல்ல; சிந்துவெளி எழுத்துகளும், சிந்துவெளி எழுத்துகளைக் கொன்டுள்ள உரொங்கொரொங்கோவும் இன்னும் படிக்கப் படாமல் இருக்கின்ற முந்து-இலாமித்து மொழியுடன் பொதுத் தொடர்பை வைத்துள்ளன”  என்று அழுத்தமாக எடுத்துரைக்கிறார் எவிசி. இக்கட்டுரையில், முன்னைய பகுதிகளில் முந்து-இலாமித்து மொழி வடிவ ஒப்புமை கொண்டிருக்காவிடிலும், மொழி அமைப்பில் நெருக்கமாக உள்ளதை மெக் ஆல்ப்பின் அவர்களின் ஆய்வில் கண்டோம். ஏறத்தாழ அதே கருத்தை எவிசியிடமும் காணமுடிகிறது.  கீழே உள்ள படம், சிந்துவெளி எழுத்தையும், ஈசுடர் தீவு எழுத்தையும் ஒப்பிட்டு இவை ஒரே படவுரு எழுத்துகள்தான் என்று நிறுவுகின்ற படம் ஆகும்.

கிலாமி-டி-எவிசியின் இந்த ஆய்வு,  உலகுக்கு படத்தமிழியின் பரவலை மேலும் எடுத்துக் காட்டுகிறது. ஈசுடர் தீவுகள் எழுத்துகளில் கிட்டத்தட்ட  100 படவுருக்களில் இம்மாதிரியான ஒப்புமை இருப்பதாக எவிசியின் ஆய்வுகளில் இருந்து அறிய முடிகிறது. உரொங்கோ- ரொங்கோவில் பெட்ரோகிளிப்பு போன்ற வேறும் சில மொழிக் குடும்ப எழுத்துகள் கலந்திருப்பதாக அறிஞர்கள் கருதினாலும் படத்தமிழியின் பாரிய தாக்கம் தெள்ளெனத் தெரிவதொடு, தமிழிக்கு பெட்ரோகிளிப்பு, ஆத்திரேனிசிய, பாலிநேசிய (Austanesia, Polynesia) மொழிகளோடு இருக்கக் கூடிய தொடர்புகளை ஆயவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

ஆத்திரேனிசிய புலம்பெயர்வு (Austranesian Migration) ஏறத்தாழ கி.மு 3000த்தில் இருந்து தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்பது அறிஞர்களின் முடிபு. மடகாசுகர் தொடங்கி, கிழக்காக, மலேயா, தென்சீன, ஆத்திரேலிய பகுதிகளைக் கடந்து பசிபிக்குப் பெருங்கடல் தீவுகள் பலவற்றுக்கும் மக்கள் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து புலம்பெயர்ந்து வருவதை ஆத்திரனேசியப் புலம்பெயர்வு என்பர் அறிஞர். தென்னமெரிக்க மயன் நாகரிகத் தொடர்பை ஆராய வேண்டுமானால், அதன் அருகே இருக்கும் ஈசுடர் தீவு எழுத்துகளை ஆராய்வது அவசியமானது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. தமிழ் எழுத்துகளுக்கு, மயன் நாகரிகத்திற்கு அருகில் உள்ள ஈசுடர் தீவில் என்ன வேலை? என்ற தேடலை இது உருவாக்குகிறது. முந்து-தமிழ் வள்ளுவக் கணியர்கள் உருவாக்கிய தமிழ் வானியல், ஐந்திரம்/நாள்காட்டி பற்றி அறிஞர் குணாமிக விரிவாக எழுதியுள்ளார். ஆனால், அண்மையில், மயன் நாள்காட்டியைப் போல அதிகம் பேசப்பட்ட நாள்காட்டி வேறில்லை. அந்த மயன் நாகரிகத்திற்கும், ஈசுடர் தீவிற்கும் உள்ள தொடர்பை ஆழ்ந்து பார்க்கப்பட வேண்டிய தேவையை இது உருவாக்குகிறது என்றால் மிகையல்ல. ஆத்திரனேசிய புலம்பெயர்வு பற்றிய மேலாய்வு அதற்கு அடித்தளமாக அமையும் என்பது திண்ணம்.

நிறைவுரை:

இக்கட்டுரை கீழ்க்கண்ட கருத்துகளை முன்வைக்கிறது.

1)    தமிழி அகரம் பொனீசியர்களால் கைக்கொள்ளப்பட்டு நிறுத்தொலியாக பயன்பட்டிருக்கிறது. பின்னர் கிரேக்கர்கள் அதனைத் தங்கள் நெடுங்கணக்கில் உயிரெழுத்தாக சேர்த்துக் கொள்கின்றனர். இதுவே உரோம-A ஆக உருவெடுக்கிறது என்பதை நிறுவுகிறது.

2)    எகிப்திய எழுத்துகளை மூலமாகக் காட்டும், பொனீசிய, கிரேக்க எழுத்து இணவுகளில், எகிப்திய மூல எழுத்துகளுக்கும், பொனீசிய, கிரேக்க எழுத்துகளுக்கும் இடையே உள்ள இடைவெளிகளை, மற்ற 4 உரோம எழுத்துகள் பற்றிய கருத்துகளில் காட்டுகிறது. இந்த இடைவெளிகள் மீதி எழுத்துகளின் இணவுகளிலும் இருக்கிறது என்று உணர்த்துகிறது. பல்வேறு இடங்களில், இணவுகளின் வடிவ, ஒலி, மொழி போன்ற கூறுகள் தொடர்பற்று இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

3)    தமிழுக்கு முக்கியமான பிபிலோசு, இலாமித்து, சிந்துவெளி, உரொங்கொரொங்கோ ஆகிய நான்கு எழுத்துமுறைகளும் இன்னும் உடைக்கப் படாமல் இருப்பதையும், அதில் பொதிந்துள்ள தமிழ்க் கூறுகளையும் சான்றுகளுடன் எடுத்துக் காட்டுகிறது. இவை படிக்கப்படாமல் கிடப்பது எகிப்து-பொனீசிய-சுமேரியச் சார்புடையவர்கள் கருத்தை வலிமையடையவே செய்யும். ஆகவே, இவற்றின் மேலான ஆய்வுகள் தமிழகத்தில் பெருக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

4)    தமிழ்நாட்டின் தொல்லியல் துறை, கடந்த 50 ஆண்டுகளில், 35 பேர்களால் பணியாற்றப்பட்ட நிலையில் இருந்து தேய்ந்து, இன்றைக்கு 5 பேரால் மட்டுமே பணியாற்றப் படுகிறது. இது, மாநில தொல்லியல் துறையை, நடுவண் தொல்லியல் துறையின் அஞ்சல் துறையாய் ஆக்கிவிடும் முயற்சி என்பது தெளிவு. நடுவண் துறை கண்டுபிடிக்கின்ற அல்லது புகுத்த விரும்புகிற வரலாற்றுக் கருத்துகளை மட்டும் செய்வதற்கு வசதியாக ஆக்கிக் கொண்டுள்ளது என்பதையே காட்டுகிறது. கட்டுரையில் இது பற்றிப் பேசாவிடிலும், இந்நிலை, உலக அரங்கில் தமிழ் மொழியின் தொன்மையை நிறுவப் பயன்படாது என்ற கவலை அதிகரிப்பதைப் பதிவு செய்கிறது.

5)    Ophir என்ற இடம் யாழ்ப்பாணத்தின் பலேசிமுண்டுவில் மேலைநாட்டினர்க்கு அமைத்துக் கொடுக்கப் பட்ட “ஒப்படி” என்ற சிறப்பிடம் (அல்லது special settlement) என்று முன்வைக்கிறது. “ஒப்படி” என்ற சொல் பிற்காலத்தில் உரோமர்களால் Oppidum (ஒப்பிடம்) என்று மாறியதை எடுத்துக் காட்டி, அவற்றிற்குச் சான்றுகளை இணைக்கிறது.

6)    உரொங்கோரொங்கோ என்ற எழுத்துமுறை சிந்துவெளி எழுத்துமுறையைச் சேர்ந்தது என்ற அறிஞர்களின் கருத்தை மேற்கோள் காட்டுவதொடு, அதன் முக்கியத்துவத்தை முன்வைக்கிறது.

பின்னிணைப்பு 1: Byblos Inscription – Undeciphered

            பிபிலோசு நகரம் பொனீசியாவின் தலைநகரமாக இருந்தது. ஒரு காலத்தில் பொனீசியர்கள் தலைநகரத்தை டயர் என்ற நகரத்திற்கு மாற்றினார்கள். இன்றைய கடற்கரை லெபனான் பகுதியில் பிபிலோசு இருந்தது. கல்வெட்டுகள், பாண்டங்கள் போன்றவற்றில் இருந்து கிடைத்த எழுத்துகள் இவை.

பின்னிணைப்பு-2: Picto-Thamizhi a.k.a Indus Script – Undeciphered

இப்பின்னிணைப்பில் உள்ள படங்கள் சிந்துவெளியில் கிடைத்த படவுருக்களின் ஒரு பகுதி மட்டுமே. இப்பகுதி, முனைவர் இரா.மதிவாணன் அவர்களின் “திரவிட மக்களின் சிந்துவெளி எழுத்துகள்” என்ற நூலின் 36, 37 பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியாகும். இக்கட்டுரையில் சொல்லப்படும் படத்தமிழிக் குறியீடுகளிள் பல இதில் உண்டு.

சான்றாதாரங்கள்:

[1]        Chapter – “A, First and Best” – The Alphabet by David Sacks

[2]        Chapter – “B – Listed B” – The Alphabet by David Sacks

[3]        Chapter – “C of Troubles” – The Alphabet by David Sacks

[4]        Chapter – “Dependable D” – The Alphabet by David Sacks

[5]        Chapter – “Can’t Spell English without E” – The Alphabet  by David Sacks

[6]        Page-51 – The Alphabet – David Sacks

[7]        Undeciphered Byblos Inscription of BC 2000 – Page 35 – Lost Languages by Andrew Robinson – ( பின்னிணைப்பு-1 )

[8]        Page-89 – The Alphabet – David Sacks

[9]        சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி (Thamizh Lexicon)

[10]      Valari – An Unique Weapon of the Tamils – Dr.S.Jayabharathi http://tamilnation.co/heritage/weapon.htm

[11]      Letter Frequency – http://en.wikipedia.org/wiki/Letter_frequency

[12]      பின்னிணைப்பு-2: Picto-Thamizhi a.k.a Indus Script – Undeciphered – pictures from the book of Dr.Ira.Madhivanan

[13]      Byblos Syllabary – http://en.wikipedia.org/wiki/Byblos_syllabary

[14]      வரலாற்றுக்கு முந்தைய (கி.மு 600-500) கால உலகப்படம் – கி.பி 1794ல் வரைந்தது http://forumancientcoins.com/Articles/Maps/images/Map_Orbis_Veteribus_Notus_1900pix.jpg  -  Map Orbis Veteribus Notus

[15]      தக்கணப்பாதை பற்றிய விளக்கங்கள் – 1) சிலம்பின் காலம் – முனைவர் இராம.கி

2) தில்லை-3 http://valavu.blogspot.in/2006/08/3.html  முனைவர் இராம.கி

[16]      The Commerce of India – B.A.Irwing

[17]      பிராகி மொழி, மக்கள் – http://en.wikipedia.org/wiki/Brahui_people

[18]      Elamite and Dravidian: Further Evidence of Relationship – David McAlpin http://www.kavehfarrokh.com/wp-content/uploads/2009/07/elamitedravidian.pdf

[19]      Dravidian Etymological Dictionary – Burrow and Emeneau

[20]      திரவிட மக்களின் சிந்துவெளி எழுத்துகள்  – முனைவர் இரா.மதிவாணன்

[21]      Page-275, Lost Languages – Andrew Robinson

[22]      The Decipherment of the Indus Script (1982) – S.R.Rao

[23]      Rome and the distant East – Raoul McLaughlin

[24]      Description of Taproban – IV – Pliny – Foreign Notices, – K.A.Neelakanta Sasthri

[25]      Foreign Trade And Commerce In Ancient India –  Prakash Charan Prasad

[26]      The Gold of Ophir Inscription

[27]      1 Kings 10:22 CJB – Complete Jewish Bible

[28]        பார்க்க [14]

[29]        Map Orbis Veteribus Notus – http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a4/1794_Anville_Map_of_the_Ancient_World_-_Geographicus_-_AncientWorld-anville-1794.jpg

[30]        Oppidum - http://en.wikipedia.org/wiki/Oppidum

[31]        Oppidum –  சொல்விளக்கம் – Archaelogy Wordsmith -http://www.archaeologywordsmith.com/lookup.php?category=&where=headword&terms=oppidum

[32]        The Commerce of India – B.A.Irving

 

[33]        Rongorongo – http://en.wikipedia.org/wiki/Rongorongo

[34]        Page 220 – Lost Languages, – Andrew Robinson

[35]        Shape resemblence of Rongorongo and Indus script – Page 221 – Lost Languages, – Andrew Robinson

[36]        Austranesian Peoples – http://en.wikipedia.org/wiki/Austronesian_peoples

[37]        “வள்ளுவமும் கணியமும்” – வள்ளுவத்தின் வீழ்ச்சி, இரண்டாம் பதிப்பு – குணா

[38]        Page-58, The Commerce of India – B.A.Irving

[39]        Locating ophir-The search for El dorado, – K.T.Rajasingham http://k.t.rajasingam.tripod.com/doro.htm

[40]        Connections of Tyrians – Pg 32 – The Commerce of India – B.A.Irwing

[41]        Page-38 – The Alphabet – David Sacks

[42]        http://chloemiriam.hubpages.com/hub/Origins-of-the-Alphabet

[43]        The Alphabet – David Sacks

[44]        http://www.radiocarbon.eu/carbon-dating-blog/767/porunthal-excavation/

[45]        http://tamilartsacademy.com/excavations.html

[46]        Ancient Signs: The Alphabet & the Origins if Writing by Andis Kaulins

[47]        Pg 124, “The Tamil Alphabet” – Tamil Studies (1914) – M.Srinivasa Iyengar

[48]        Quoted by B.A Irving in “The Commerce of India” – Page 73

[49]        http://en.wiktionary.org/wiki/emporium

[50]      http://www.etymonline.com

[51]        Quoted by B.A Irving in “The Commerce of India” – Page 85

[52]        India as known to the ancient world – Dr.Guaranganath Banerjeee

கட்டுரை நிறைவு……

Make it clear that you will be http://www.besttrackingapps.com/ monitoring their usage be straightforward about the fact that you will be monitoring their activity until you are sure they can handle it on their own

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “மேலை எழுத்தும் தமிழ் எழுத்தும் – ஓர் இயலுமைத் தொடர்பு (பாகம்2)- கட்டுரை”
  1. பின்னர், கி.மு 800க்கும் 740க்கும் இடைப்பட்ட 60 ஆண்டுகளில் பொனீசியர்களிடம் இருந்து கிரேக்கர்கள் பெற்றுக்கொண்டு உருவாக்கிய நெடுங்கணக்கில் இவ்வெழுத்து 180 பாகை திரும்பிக் காட்சியளிக்கிறது(அட்டவனை-1, பெட்டி-6). இது ஏனென்றால், கிரேக்கர்கள், பொனீசிய நெடுங்கணக்கை எடுத்துக்கொண்டு தமது நெடுங்கணக்கை உருவாக்கியபோது (கி.மு 800-740), தமது எழுதுமுறையையும் இட-வலமாக மாற்றிக்கொண்டார்கள் என்பதுதான். அதுவரை, வல-இடம், இட-வலம் என்ற இருமுறைகளையுமே பயன்படுத்தி வந்த கிரேக்கர்கள், நாளாவட்டத்தில் இட-வல முறையில் மட்டுமே நிலைத்து நிற்கும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இது தமிழி எழுதுமுறையை முழுவதும் ஒத்ததாகும். ஆகவே, பொனீசிய Aleph என்பது, வல-இட தமிழி அகரமே இருக்கக்கூடும் என்று ஓர் ஏரணங் காட்டி நம்மைச் சிந்திக்க வைக்கிறது. அதாவது, பொனீசியர்களால் கி.மு 1000ல் வல-இடமாக எழுதப்பட்டு, பின்னர் கி.மு 800-740ல் கிரேக்கர்களால் Alpha என இட-வலமாக எழுதப்பட்டது தமிழியெழுத்தின் தாக்கமாக இருக்கலாம். அடுத்த 20 ஆண்டுகளின் பின்னர், கிரேக்கத்திலும், கிரேக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், (எத்துருக்கன்) 90 பாகை திரும்பி, Alpha குத்தாக நிற்கும் மாற்றத்தினைப் பெற்று இறுதியில் உரோம-A ஆக நிலைபெற்றிருக்கிறது.

அதிகம் படித்தது